பெருங்கடலின் அருஞ்சுவை வீரர்கள்
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
இராஜாளி விண்ணுக்கு ராஜா; இந்த சூப்பர் மீனோ கடலுக்கு ராணி! பளபளக்கும் சிற்றம்புகள் பாய்வதைப் போலவே இவை வேகமாகவும் ஸ்டைலாகவும் பெருங்கடலை கிழித்துக்கொண்டு பாயும். இவை ஓரிடத்தில் நிற்காமல் வலம் வந்துகொண்டே இருக்கும்; எப்போது பார்த்தாலும் உணவைத்தேடி தலைகால் தெரியாத வேகத்தில் நீந்திக் கொண்டிருக்கும். அதனால்தான் “வேகம்” என்ற பொருளுடைய துன்னஸ் தைன்னஸ் என்ற அறிவியல் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது! இந்த இனத்திற்கு மவுசு அதிகம். மார்லின்கள், ஈட்டிமீன்கள், ஓலைமீன்கள் எல்லாம் இதன் சொந்தபந்தங்களே. எது என்று இன்னும் புரியவில்லையா? கடல் நீரில் சாகசம்புரியும் சூரைமீன் (tuna) குடும்பமே இது! இக்குடும்பத்தைச் சேர்ந்த 13 வகைகள் இதன் பெயரைத் தாங்கியவையே.
இவ்வீரக் குடும்பத்தில், ஹீரோவாக திகழ்வது நீலத்துடுப்பு சூரை மீனே. நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே காணப்படும் தெற்கத்திய நீலத்துடுப்பு சூரை மீன், குறைந்தபட்சம் 200 சென்டிமீட்டர் நீளம் வரை வளருகிறது. எடையோ 200 கிலோ வரை! இதெல்லாம் என்ன ஒரு எடையா என்பீர்கள், இக்குடும்பத்து சாம்பியன்களின் எடையைக் கேட்டால்! வடக்கத்திய நீலத்துடுப்பு சூரை மீன்களே அவை. பெயருக்கேற்ப அவற்றை வட கோளார்த்தத்தில் காணலாம். அவற்றின் நீளம் 270 சென்டிமீட்டர். இதற்கு மேலாகவும் இருக்கலாம் (மீன்பிடிப்பு அதிகமாய் இருப்பதால் இப்போதெல்லாம் அரிது). எடையோ 700 கிலோவுக்கும் அதிகம்! எடையில் 75 சதவீதம் இவற்றின் சக்திவாய்ந்த தசைகளே. இவ்விரண்டு வகை மீன்களின் விசேஷம் என்னவென்றால், எடை அதிகமானாலும் இவற்றின் வேகம் கொஞ்சமும் குறைவதில்லை. இந்த விஐபிக்களே சூரை குடும்பத்தின் ஏவுகணைகள். ஏனெனில் இவை நினைத்த நேரத்தில் திடீரென்று மணிக்கு சுமார் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பாயும் திறனுடையவை.
அதிவேக ஓட்டத்திற்கும் மாரத்தான் ஓட்டத்திற்கும் ஏற்ற உடலமைப்பு
நீலத்துடுப்பு சூரை மீன்கள் அவ்வளவு வேகமாக நீந்துவது எப்படி? இதைப் பற்றி நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகை விளக்குகிறது: “முக்கால் பாகம் தசை, நீரியக்க ஆற்றலோ பிரமாதம், சக்திவாய்ந்த இதயம், ராம்ஜெட் எஞ்ஜினைப்போல பயன்படும் செவுள், உடலின் வெப்பநிலையை கதகதப்பாக வைத்துக்கொள்ளும் திறன், இன்னும் பிற மாற்றங்களைச் செய்யும் விசேஷ உடல் அமைப்பு என இவற்றையெல்லாம் ஒருசேர பெற்றுள்ளதால் இந்த நீலத்துடுப்பு சூரை மீன்கள் அதிவேகமாய் பாய்வதில் வியப்பில்லை.” இவற்றின் வலிமைவாய்ந்த இதயம் பிற மீன்களின் இதயத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரியது. இதைப் பார்த்தால் மீனின் இதயம் என்றே சொல்லமுடியாது, பாலூட்டியின் இதயத்தைப் போலவே இருக்கும்! மேலும், குளிர் இரத்த மீன்களிலிருந்து இவை வேறுபடுகின்றன. ஏனெனில் இவற்றின் இதயம் ஓரளவிற்கு வெதுவெதுப்பான இரத்தத்தை பம்ப் செய்கின்றன; அதற்கு ஏற்றாற்போல், இவற்றின் இரத்த ஓட்ட அமைப்புகள் அற்புதமாய் இயங்குகின்றன. இவ்வாறு, இவற்றின் இரத்தத்தின் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் உயரும்போது, தசைபலம் மூன்று மடங்கு அதிகரிப்பதால், எதிர்த்து நிற்க முடியாத கொலையாளி எனப் பெயர் பெற்றுள்ளது. ஏனெனில் மீன்கள், ஊசிக்கணவா, க்ரில் என்னும் கணுக்காலி ஆகியவற்றை உணவுக்காக வேட்டையாடுகிறது.
கானாங்கெளுத்தி மீன் போன்ற, தனக்குப் பிடித்த உணவு நீலத்துடுப்பு சூரை மீனின் கண்ணில் பட்டால்போதும், அரிவாள் போன்ற அதன் வால் படபடவென்று அடிக்கவே, ஒருசில வினாடிகளில் மீனுக்குள் ஒரு வேகம் பிறக்கிறது. இந்த வேகம் குறைந்துவிடாதிருக்க, அதன் மார்புத் துடுப்பும் இடுப்புத் துடுப்பும் அதன் இரும்பு-தேகத்தில் விசேஷமாய் அமைந்துள்ள இடுக்கில் உள்ளிழுக்கப்படுகின்றன. அந்தக் கானாங்கெளுத்தி மீன் என்னதான் வேகம்பிடிக்கட்டுமே, இதனிடமிருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் நீலத்துடுப்பு சூரை மீனின் கண்கள் இரண்டுமே சேர்ந்து ஒரே பொருளைப் பார்க்க வல்லவை. அதுமட்டுமா, அதற்கு இருப்பது ஊசிக் காது. போதாக்குறைக்கு, நீரிலுள்ள உணவுப்பொருட்களை சோதித்து அறியவல்ல வேதிப்பண்புடைய காணிகள் (chemical detectors) அதன் உடலில் அமைந்துள்ளன. நீலத்துடுப்பு சூரை மீன் இரையைப் பிடிக்கத் தாவும் சமயம் பார்த்து அந்த இரண்டு துடுப்புகளும் வெளியில் நீண்டுவிடுகின்றன. மீனின் உடல், மின்னல் வேகத்தில் திசையை மாற்ற வேண்டிய அவசியம் நேர்ந்தால் அவை உதவிக்கரம் நீட்டும். இதைத்தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் செவுள்களும் வாயும் திறக்கவே, அந்தக் கானாங்கெளுத்தி மீன் லபக்கென்று உள்ளிழுக்கப்படும். அந்தோ! அதற்குள் அந்த மீன் விழுங்கி ஏப்பம் விடப்பட்டதே!
அதிவேகத்தில் பாய்ந்த சூரை மீன் மீண்டும் சாதாரண நிலைக்கு வரும் வகையில் இவற்றின் சக்திவாய்ந்த இதயமும், ஓரளவிற்கு சூடான இரத்தமும், பெரிய செவுள்களும் ஈடுகொடுக்கின்றன. இதனால் மற்ற மீன்களைவிட பத்து மடங்கு சீக்கிரமாகவே இவை சாதாரண நிலைக்கு வந்துவிடுகின்றன. ஆனால், நார்மலாக சுவாசிப்பதற்கு ஓய்ந்திருக்கும்போதும், தூங்கும்போதும் இவை விடாமல் நீந்திக்கொண்டேதான் இருக்க வேண்டும். ஏனெனில் இவை நீரைவிட எடைமிகுந்தவை. மற்ற மீன்களுக்கு இருப்பதைப்போல் இவற்றுக்கு செவுள் பம்ப்புகள் இல்லாததால் முழு ஓய்வைப் பெற முடியாது. இதனால்தான் சுறா மீன்களைப் போல் சூரை மீன்களும் லேசாக வாயைத் திறந்து வைத்துக்கொண்டே நீந்துகின்றன. சூரை மீனைப் பற்றிய கல்லறை வாசகம் இப்படி எழுதப்பட்டிருக்கலாம்: “இதுதான், அவ்வப்போது அதிவேக ஓட்டத்தில் பறந்தும், பிறப்பிலிருந்து இறப்புவரை மாரத்தான் ஓட்டத்தில் ஓடியும் சாதனையை படைத்தது.”
இவ்வினத்து மீன்களிடையே அழகுப்போட்டி நடத்தினால் அவார்ட் வாங்குவது மஞ்சள் துடுப்பு சூரை மீன்தான். இவை கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளம் வரை வளரும். இவற்றின் மஞ்சள் வரிகளையும் மஞ்சள் துடுப்புகளையும், குறிப்பாக நீண்ட, பின்பக்கம் சரிந்த துடுப்புகளையும் வைத்துக்கொண்டு ‘பந்தாவாக’ நீரில் வலம் வரும். இவை கம்பீரமாக அலையைக் கிழித்துக்கொண்டு உலாவருவதை பார்க்க வேண்டுமே! அதுவும் இரவு நேரத்தில் பார்த்தால், நெருப்போடு ஜொலிக்கும் சிற்றம்புகளைப்போல் பளபளக்கும். அதனால்தானோ என்னவோ, ஹவாய் நாட்டு மக்கள் இவற்றை “நெருப்பு” என்ற அர்த்தத்துடன் ஆஹீ என அழைக்கின்றனர்.
வீரர்களுக்கு பேராபத்து
சூரை மீன் கடலுக்கு மட்டுமா ராணி? சாப்பாட்டு மேஜையிலும் சூப்பர்ஸ்டார் தான். இதற்குக் காரணம் இவற்றின் சிவந்த, நெய் வடியும் மாமிசமே. மீனை சுவைப்பதில் கரைகண்ட ஜப்பானியர்களின் பிரிய உணவான சாஷிமி, சுஷி போன்றவற்றில், நீலத்துடுப்பு சூரை மீனும் அடங்கும். ஜப்பானிய சந்தையில் விரும்பிக் கேட்டு உண்ணும் விலையுயர்ந்த உணவுவகைகளில் இதையும் சேர்த்துள்ளனர். சுஷி உணவகத்துக்கு வழக்கமாக செல்பவர்கள் கொஞ்சமாக வைக்கப்படும் சூரை மீனுக்கும் நிறைய பணத்தை தாராளமாக அளிக்கின்றனர். ஏலத்தில் விடப்படும் ஒரே ஒரு நீலத்துடுப்பு சூரை மீனின் விலையை நீங்கள் கேட்க நேர்ந்தால், ஏதோ ஒரு புத்தம் புதிய காரைத்தான் விலைபேசுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வீர்கள். ஏனெனில் 11,000 டாலருக்கும், ஏன் அதைக் காட்டிலும் இன்னும் அதிகத்துக்கும் ஏலம் விடுவது சகஜமே. சொல்லப்போனால், 324 கிலோ எடையுள்ள ஒரு நீலத்துடுப்பு சூரை மீன் 67,500 டாலருக்கு விற்றது! “பிரசித்திபெற்ற ஜெர்மன் தயாரிப்பான போர்ஷ் காரைப் போலவே பெரியது; போர்ஷ் காரைப் போலவே புயலாய்ப் பறப்பது; போர்ஷ் காரைப் போலவே விலை உயர்ந்தது” என்பதாக ஓர் அதிகாரி தெரிவித்தார்.
சூரை மீனுக்கு இருக்கும் மவுசு அதிகரிக்க அதிகரிக்க, அந்த மீனினமே குறைந்து வருகிறது. “பணம் பண்ணும் நோக்கில் அதிகம் பிடிக்கப்படுகின்றன; [அதுமட்டுமா,] வீணடிக்கவும் படுகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் இம்மீனின் எதிர்காலமே இருட்டாகிவிட்டதுபோல் தெரிகிறது” என்பதாக சால்ட்வாட்டர் கேம்ஃபிஷ்ஷிங் என்ற புத்தகம் கவலை தெரிவிக்கிறது. தற்கால தொழிற்கப்பல்களில் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது. இதில், வான்வெளி கண்காணிப்பும் அடங்கும். எங்கே மீன்கள் அதிகம் உள்ளன என்பதை இது கண்டறியும். உதாரணமாக, பர்ஸ் சீய்னர் என அழைக்கப்படும் ஒரு மீன்பிடிக்கும் கப்பல், சூரை மீன் கூட்டத்தைக் கண்டுபிடிக்கையில், சிறிய விசைப்படகு ஒன்றை இறக்குகிறது. அது பர்ஸ் சீய்ன் எனப்படும் ஒரு பெரிய வலைத்திரையை இழுத்துச் செல்கிறது. இந்த வலையை ஒரு சுருக்குப்பையைப்போல் உபயோகித்து மீன்கூட்டத்தை எல்லா பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்துவிடுகிறது. இதனால் அந்த மீன்கள் தப்பவே முடியாது. மறுபட்சத்தில், லாங்லைனர் என்றழைக்கப்படும் மீன்பிடிகலங்கள் சுமார் 130 கிலோமீட்டர் நீளமுள்ள கம்பி இழையை மீன்பிடிப்பதற்கு பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இம்முக்கிய இழையில் கிட்டத்தட்ட 2,200 சிறிய தூண்டில் கம்பிகள் இணைக்கப்பட்டு அவற்றிலுள்ள தூண்டில் கொக்கிகளில் மீன்களை சுண்டியிழுக்கும் இரை கோர்க்கப்பட்டிருக்கும். மீன்பிடி கப்பல் இவற்றை இழுத்துக்கொண்டு முன்னே நகர்ந்துகொண்டேயிருக்கும். இதுவே, சூரை மீனைப் பொருத்தவரை அதன் கொடுங்கனவு! பெரிய மீன்கள் கிடைத்தால் ரொம்ப குஷி என்பதால், படகுகளும் கண்டுபிடிக்கும் விமானங்களும் “ஓரிரு மீன்களை வேட்டையாடுவதற்காக வாரக்கணக்கில் செலவிடலாம்” என உலக வனவிலங்கு வாழ்வு நிதி நிறுவனம் கூறுகிறது.
சில நாடுகள், தங்கள் பிராந்திய அதிகாரத்துக்குட்பட்ட தண்ணீர்களில் மீன்பிடிக்க அனுமதியளிக்கையில் அதற்கென ஓர் அளவை நிர்ணயித்துள்ளன. ஆனால் நீரின் மேற்பரப்பில் உலா வரும் சூரை போன்ற மீனைப் பிடிக்கும் விஷயத்தில் பூதக் கண்ணாடி போட்டு கண்காணிப்பது எப்படி? (சீட்டு ஒன்றை அடையாளமாக கட்டி ஜப்பான் அருகே கடலில் விடப்பட்ட வடக்கத்திய நீலத்துடுப்பு சூரை மீன் மெக்ஸிகோவுக்கு அப்பால், அதாவது கிட்டத்தட்ட 11,000 கிலோமீட்டர் தூரத்தில் பிடிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!) இதுவரை, அவ்வாறு கண்காணிக்க முடியாது என்பதுதான் பதில். மீனின் எண்ணிக்கை குறைந்துவிடாத அளவில் மட்டும் மீன்பிடிக்க வேண்டி மீனவர்களுக்கு அனுமதியளிக்க ஐக்கிய நாட்டுச் சங்கத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒருபக்கம் முயலுகின்றன. மறுபக்கமோ, அந்நிறுவனங்களுக்கு எதிராக போட்டி போடும் வகையில் உனக்குப் பாதி எனக்குப் பாதி என்ற பாலிஸியில் மக்களின் பேராசை குறுக்கிடுகிறதே! இதைக் கண்காணிக்க சில நாடுகள் முயன்றபோதிலும், பயங்கர மோதல்களைத்தான் தூண்டியுள்ளது என்பதே உண்மை.
இந்த மீனவர்கள், இம்மீனின் சந்ததியே அற்றுப்போகும் அளவுக்கு தொடர்ந்து மீன்பிடித்துக்கொண்டே இருக்கின்றனர். இவ்வாறு பெருங்கடலின் சொத்தையும் தங்கள் சொந்த எதிர்காலத்தையும் இவர்கள் ஏன் அபாயத்திற்குள்ளாக்க வேண்டும் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகை கூறுகிறது: “[மீன்கள்] குறைந்துகொண்டே போனாலும், எங்களுக்கென்ன கவலை என்பதுபோலவே, சாதாரண படகுகளில் சென்று மீன்பிடிப்பவர்களும் எந்திரமயமாக்கப்பட்ட கலங்களில் சென்று எக்கச்சக்கமாக மீன்பிடிப்பவர்களும், மீனைப் பாதுகாக்க முன்வரப்போவதில்லை. அப்படி செய்வதால் அவர்களுக்கு லாபம் கிடைக்கப்போவதில்லை. இவர்கள், இப்படி செய்ய வேண்டாம் என்றிருந்தாலும் வேறொரு மீனவன் கையில் அந்த மீன் கிடைக்கத்தானே போகிறது! ஆகவே, மீனவர்கள் அனைவரும் வந்தது வரட்டும் என்று கண்மூடித்தனமாக மீன்பிடிக்கின்றனர்.”
அடையாளமிடுவதும் பண்ணை வளர்ப்பும் சூரை மீனை காப்பாற்றுமா?
தெற்கத்திய நீலத்துடுப்பு சூரை மீனை வைத்துத்தான் ஏராளமாக ஆராய்ச்சி நடத்திவருகின்றனர். சூரை மீன் கூட்டங்களின் ஆரோக்கியத்தையும் பழக்கவழக்கங்களையும் பற்றிய முக்கிய தகவலை வெளிக்காட்டும் அதிநவீன எலக்ட்ரானிக் அடையாளங்களைப் பயன்படுத்துவதும் அந்த ஆராய்ச்சியில் அடக்கம். இவ்வாறு பெறும் தகவல், எவ்வளவு மீனை பிடிக்கலாம் என்ற அளவை நிர்ணயிக்க உதவும்.
அதே சமயத்தில், சூரை மீன் உட்பட பண்ணை வளர்ப்பும் சில நாடுகளில் பிரபலமாகி வருகிறது. இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை, பெண்ணின நீலத்துடுப்பு சூரை மீன்கள் பண்ணையாளருக்கு லாபத்தை அள்ளி வழங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவை முட்டையிடும் காலத்தில் கிட்டத்தட்ட 1.5 கோடி முட்டையிடுகின்றன! சூரை மீன்களை பண்ணையில் வளர்ப்பது வெற்றியடைந்தால், தற்போதுள்ள பிரச்சினைக்கு—அதாவது, தலைப் பிழைக்க வேண்டி பம்மிப் பம்மி உலா வரும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள மீன்கள் தப்பிப்பதற்கு—வழி பிறக்கலாம். என்னதான் இருந்தாலும், உப்புநீரில் சாகசம் செய்யும் சூரை மீன் போன்ற கம்பீரமான வீரர்களின் இனம்—அதுவும் இக்குடும்பத்தின் சூப்பர்ஸ்டார் எனப்படும் நீலத்துடுப்பு சூரை மீன்களின் இனம்—அற்றுப்போவதைக் காண்பது அவலமல்லவா! நீலத்துடுப்பு மீன்கள் கண்ணுக்கு மட்டுமே விருந்தளிப்பதில்லை; வாய்க்கும் ருசியானவை.
[பக்கம் 16, 17-ன் படம்]
மஞ்சள் துடுப்பு சூரை மீன்
[படத்திற்கான நன்றி]
Innerspace Visions
[பக்கம் 18-ன் படம்]
நீலத்துடுப்பு சூரை மீன்
[படத்திற்கான நன்றி]
Innerspace Visions