உலகை கவனித்தல்
“பாபேல் கோபுரம்”
ஐரோப்பிய யூனியனில் (EU) அதிகாரப்பூர்வமாக 11 மொழிகள் வழக்கில் உள்ளன. இன்னும் 10 மொழிகள் சேர்க்கப்படலாம் என்பதாக பாரிஸ் செய்தித்தாளான இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் அறிக்கை செய்கிறது. தற்போது, ஐக்கிய நாட்டுச் சங்கத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகவும் விளக்கவுரையாளர்களாகவும் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானவர்களை EU-வின் செயற்குழுவான ஐரோப்பிய கமிஷன் பணியில் அமர்த்தியிருக்கிறது. ஐக்கிய நாட்டுச் சங்கத்தில் அதிகாரப்பூர்வமாக 5 மொழிகளே பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பாவை ஐக்கியப்படுத்தவும் EU செயல்பாடுகளை எளிதாக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், மொழியைப் பொறுத்தவரை அதற்கு மாறாகத்தான் நடந்துவருகிறது. ஏனெனில் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் அதனதன் மொழியைக் காக்கவே அரும்பாடு படுகின்றன. “பாபேல் கோபுரம் உருவாகிறது” என்று அந்த செய்தித்தாள் கூறுகிறது. மற்றொரு பிரச்சினையையும் இந்த கமிஷன் எதிர்கொள்கிறது. அதுதான் “யூரோஸ்பீக்” பிரச்சினை. அதாவது, கமிஷன் பயன்படுத்தும் எல்லாராலும் புரிந்துகொள்ள முடியாத தெளிவற்ற வார்த்தைகள் நிரம்பிய ஒரு மொழியே அது. “சுருக்கமாக சொன்னால், தெளிவாக பேசவேண்டாம் என்பதே குறிக்கோளாக” இருக்கையில், அரசியல்வாதிகளை தெளிவாக பேசவைப்பதே ஒரு சவாலாகிவிடுகிறது என்பதாக ஒரு மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார்.
வளர்ப்போம் பிராணியை, குறைப்போம் பிணியை!
“செல்லப் பிராணியின் மேல் அலாதி பிரியம் வைத்திருப்போருக்கு ஆஸ்பத்திரி செலவு குறைவே” என்கிறது த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள். கடந்த பத்தாண்டில், இது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவை காட்டுவது யாதெனில், “செல்லப் பிராணிகள் இருந்தாலே மனக்கவலை குறைகிறது, டாக்டரைப் பார்க்கச்செல்லும் நடை குறைகிறது, மாரடைப்பால் ஏற்படும் மரணமும் குறைகிறது. ஒரு பிராணி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தெம்பைப் பெறவும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கவலை தீரவும் உதவலாம்.” “பிராணிகள் மக்களுக்கு இதமூட்டுகின்றன. அவற்றைப் பார்த்தாலே தொடவும் பராமரிக்கவும் ஆசை பிறக்கும்.” இதுவே ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த இண்டியானாவில் பர்டூ பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பள்ளியில் பணியாற்றும் டாக்டர் ஆலன் பெக்கின் நம்பிக்கை. பிராணியை தங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்காவிட்டாலும் இது உண்மையாக இருக்கிறது. இதனால் “பிராணிகள் உதவியுடன் சிகிச்சை” என்ற முறை அதிகரித்துள்ளது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப் பிராணியுடன் கொஞ்ச நேரம் விளையாடும்படி சில மனநல மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ளனர். அதனால் நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.
வற்றும் நீரூற்றுகள்
“இப்போதெல்லாம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் நீர், 50 வருடங்களுக்கு முன்பு கிடைத்ததில் பாதியளவுக்கும் குறைவே” என த யுனெஸ்கோ கூரியர் பத்திரிகை குறிப்பிடுகிறது. உலகளவிலுள்ள நீரின் அளவும் குறைந்துகொண்டே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென்று இவ்வளவு குறைந்துவிட்டதிலிருந்து என்ன தெரிகிறது? ஜனத்தொகை அதிகரிப்பு, வேளாண்மை, தொழில்மயமாதல்—இவற்றின் காரணமாகத்தான் புழக்கத்திற்கு தேவையான சுத்தமான தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று தெரிகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டின் அடிப்படையில் பூகோள மேப் வரையும் விஞ்ஞானிகள் சில ஏரியாக்களை “படு மோசம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் அர்த்தம், “வறட்சி போன்ற நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால் ஜனங்களுக்கு திண்டாட்டம்தான்” என்றும், “50 வருடத்திற்கு முன்பெல்லாம் உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலும் இந்தளவுக்கு மோசமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை; இன்றோ, சுமார் 35 சதவீத மக்கள் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் வாடுகின்றனர்” என்றும் அந்த கூரியர் விவரிக்கிறது.
நடிக்கும் பிச்சைக்காரர்கள்
தம்பிடிக் காசுக்கு தினமும் தாளம்போடும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் சிலர் பார்ப்பதற்கு பிச்சைக்காரர்களாக இருந்தாலும் உண்மையில் அவர்கள் அவ்வாறு இல்லை; அவர்கள் வெறுமனே நடிக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும் என்பதாக இந்தியாவில் பிரசுரிக்கப்படும் த வீக் பத்திரிகை அறிக்கை செய்கிறது. இந்திய மாநிலமான மகாராஷ்ட்ராவில், கவட்டுக்கட்டைகளைத் தாங்கிய ஒரு பிச்சைக்காரன், சிக்னலில் நின்றிருந்த ஒரு காரினிடம் வந்தான். காரில் இருந்த இளைஞனோ பிச்சைக்காரனை சட்டை செய்யாமல் தன் கேர்ல்பிரண்ட்டிடம் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார். எனவே அந்த பிச்சைக்காரன் சத்தமிட்டு கத்த தொடங்கினான். இதனால் ஆத்திரமடைந்த அவர், காரின் ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு பிச்சைக்காரனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டார். அவன் வைத்திருந்த பாத்திரத்திலிருந்த காசு நாலாபக்கமும் சிதறியது. நொடியில் குணமாகிவிட்ட “நொண்டி” பிச்சைக்காரன், அந்த காரின் முன்பக்கக் கண்ணாடியை கவட்டுக்கட்டைகளால் ‘டம் டம்’ என்று அடித்து நொறுக்க ஆரம்பித்தான். “அக்கம்பக்கத்து வாகனங்களுக்கு அருகில் இருந்த, பிச்சைக்காரனின் கூட்டுக் களவாணிகளான, ‘குருடு,’ ‘நொண்டி,’ ‘முடம்’ போல நடித்த பிச்சைக்கார கும்பலும் அவனுக்கு உதவிக்கரம் நீட்டியது.” அவர்கள் எல்லாரும் சேர்ந்து கற்களை வீசி, கம்புகளாலும் கவட்டுக்கட்டைகளாலும் அடித்து நொறுக்கி, அந்த இளைஞனை காரிலிருந்து இழுக்க ஆரம்பித்தனர் என்பதாக த வீக் பத்திரிகை கூறியது. அந்த நேரம் பார்த்து, அங்கு ஒரு போலீஸ் வேன் வந்ததைக் கண்டதும் பறந்துவிட்டது அந்த பிச்சைக்கார கும்பல்!
உலகெங்கும் மோசம்போகும் பொடிசுகள்
உலகளவில் 4 கோடி சிறுபிள்ளைகள் மோசம்போக்கப்படுகின்றனர் என சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனம் (WHO) கணக்கிட்டுள்ளது. 19 நாடுகளிலுள்ள 14 வயதுக்குட்பட்ட இளசுகளை வைத்து நடத்திய ஆய்வுகளிலிருந்து பின்வரும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, அவர்களில் 29 சதவீத பையன்களும் 34 சதவீத பெண்பிள்ளைகளும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகியிருந்தனர் என்பதாக த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே சுமார் 20 லட்ச இளமொட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் கசக்கப்படுகின்றன என WHO குறிப்பிட்டது.
‘வளையாபதிகளுக்கு’ ஆபத்து
ஜெர்மனியில் 50,000 பணியாளர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. குனிந்து நிமிர்ந்து வேலைபார்ப்பவர்களைவிட, உடல் அலுங்காமல் குலுங்காமல் வேலைபார்ப்பவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் என்பதாக அந்த ஆய்விலிருந்து தெரிகிறது. “ஒரே மாதிரி வேலையையே செய்துவருபவர்களும் சுதந்திரமாக வேலைசெய்ய முடியாதவர்களும், மனநிறைவு தரும் கடினமான வேலையைச் செய்பவர்களைவிட இரண்டு மடங்கு கூடுதலாகவே நோய்க்குள்ளாகின்றனர்” என அவுக்ஸ்புர்ஜ ஆல்கமைனா செய்தித்தாள் குறிப்பிடுகிறது. உடல் வளையாமல் வேலை செய்வதால் அடிக்கடி லீவு எடுப்பதும் நீண்டநாள் லீவு எடுப்பதும் சகஜமாகிவிடுகிறது. இதுவே வேலை சம்பந்தமான எந்தவொரு பாதிப்பையும்விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த அறிக்கையின்படி, பொதுவாக வேலையில் சவாலை சந்திக்கும் அளவுக்கு சிரமம் எதுவுமில்லாமல் ஆடாமல் அசையாமல் சொகுசாக வேலை செய்வோருக்கே “உயர் இரத்த அழுத்தம், வயிற்றிலும் குடலிலும் கோளாறு, முதுகுவலி, மூட்டுவலி இவையெல்லாம் வரும்.”
தூங்கும் பறவையும் தூங்காத மூளையும்
பறவைகள் தூங்கும்போது அவ்வப்போது நைஸாக ஒரு கண்ணைத் திறந்து, சுற்றிமுற்றி பார்த்துக்கொள்கின்றன. இவ்வாறு பார்ப்பதால் கொடிய விலங்குகளிலிருந்து அவற்றால் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது என விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்பினர் என்பதாக டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில் வெளியான அறிக்கையொன்று குறிப்பிடுகிறது. அந்த ஒற்றைக்கண் எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதை வழிகாட்டுவதற்காக மூளையின் எல்லா பாகமும் விழித்திருக்க வேண்டுமா அல்லது பாதி பாகம் மட்டும் விழித்திருந்தால் போதுமா என்பதை அந்தப் பறவையே தீர்மானிக்கவும் முடியும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்டு வாத்துக்களை வைத்து நடத்திய ஆராய்ச்சியிலிருந்து பின்வரும் உண்மைகள் தெரியவருகின்றன. வரிசையாக வைக்கப்பட்ட காட்டு வாத்துக்கள் தூங்கின. கடைசியிலிருந்த பறவைகள், தங்களுடைய தூக்க நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரத்திற்கு, அவற்றின் மூளையில் பாதி பாகம் விழித்திருக்கும்படி வைத்துக்கொண்டன. நடுவிலிருந்தவை 12 சதவீத நேரத்திற்கு மட்டுமே அவற்றின் மூளையில் பாதி பாகம் விழித்திருக்கும்படி வைத்துக்கொண்டன. இதிலிருந்து, “ஆபத்து ஏற்படுவதற்குரிய சாத்தியம் ஏதாவது இருக்கையில், ரொம்ப நேரத்திற்கு மூளையின் பாதி பாகம் விழித்திருக்கும்படி பார்த்துக்கொள்வதாக தெரிகிறது” என இண்டியானா அரசு பல்கலைக்கழக பேராசிரியர் நில்ஸ் ராட்டன்பார்க் கூறுகிறார்.
ஊதுவதை குறைக்குமா ‘ஊதுவது’?
“புகைப்பவர்கள் ஒல்லியாவதில்லை” என கலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லி வெல்னஸ் லெட்டர் அறிக்கை செய்கிறது. “தங்கள் மேனி ‘சிக்கென்று’ ஒல்லியாகிவிடும் என்ற போலி நம்பிக்கையில், குறிப்பாக அநேக இளம் மங்கையர் புகைக்க ஆரம்பிக்கின்றனர்.” ஆனால் 18 முதல் 30 வயது வரையான 4,000 இளைஞர்களை வைத்து நடத்திய ஓர் ஆய்வின் முடிவு இதுதான்: “ஏழு வருட காலப்பகுதியில், இவர்கள் புகைத்தாலும் சரி, புகைக்காவிட்டாலும் சரி, (சராசரியாக வருடத்திற்கு அரை கிலோவுக்கும் அதிகம் என்ற கணக்கில்) எடை கூடத்தான் செய்தது.” “புகைப்பதனால் எடையைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் துளிகூட லாபமில்லை” என அந்தக் கட்டுரை இறுதியில் கூறியது.
ஹேம்ஸ்டர்களுக்கு சைக்கிள்
செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருட்களை தயாரிக்கும் ஹாங்காங் நிறுவனம், “செல்லப் பிராணியின் சைக்கிள்” ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. அந்த விளையாட்டு சைக்கிளின் முன்சக்கரம், உருளை போன்று இருக்கும். செல்லப்பிராணி அந்த உருளைக்குள் ஓட ஓட, சைக்கிள் முன்னோக்கி நகரும். என்றாலும் அதை வளர்ப்பவர், விலங்கிற்கு காயம் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தால், சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு லீவரை முடுக்கினால் போதும். அப்போது முன்சக்கரம் தரையிலிருந்து சற்று மேலே எழும்பும். இதனால் அந்த சைக்கிள் நின்றுவிடுகிறது; அந்த நிலையிலேயே விலங்கு அங்கும் இங்கும் ஓடும்போது, அதற்கு ஆபத்து ஒன்றும் நேரிடாது.
முதுகுவலி புறமுதுகு காட்ட
தீராத முதுகுவலியால் அவதிப்படுவோருக்கு, பயணம் செய்வதை நினைத்தாலே அலர்ஜி. இதைக் குறைப்பதற்கு, சில துணுக்குச் செய்திகளை த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் தருகிறது. நடந்துசெல்ல “ஹை-ஹீல்ஸ் உள்ள காலணிகளை அணிந்தால் நேராக நிற்க முடியாமல் முதுகெலும்பை அழுத்தும். ஆகையால் சாதாரண காலணிகளை அணியுங்கள். . . . காரில் பயணம் செய்தால், இடையிடையே நிறுத்தி கொஞ்சம் காலாற நடந்துவிட்டு அப்புறம் தொடர்ந்து பயணியுங்கள்.” . . உங்கள் சீட்டின் “பின்பக்கம் வசதியாக சாய்ந்துகொள்ள குட்டி குஷன் தலையணையை வாங்கிக்கொள்ளுங்கள்.” உட்கார்ந்திருக்கும் நிலையையும் அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள். லக்கேஜ்களை எளிதாக தூக்கிச்செல்ல, “இப்போதெல்லாம் வெவ்வேறு உருவிலும் அளவிலும் சூட்கேஸ்கள் மார்க்கெட்டில் கிடைப்பதால் முக்கித்தக்கி சிரமப்பட்டு தூக்கிச்செல்ல வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அவற்றின் கைப்பிடி இழுத்துச்செல்ல வசதியாக, நீளமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். லக்கேஜ்களை இழுத்துச்சென்றாலும், அவற்றின் கைப்பிடி குட்டையாய் இருந்தால் குனியவேண்டிவரும். ஆகவே இதனாலும் முதுகுவலி வரத்தான் செய்யும்” என ஸ்டார் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
சீறும் சீற்றம்
கனடாவின் நேஷனல் போஸ்ட் செய்தித்தாள் அறிக்கை செய்வதன்படி, “தன் கோபத்தை எதன்மீதாவது காட்டுவது—உதாரணமாக, தலையணையில் ஓங்கி அடிப்பது, குத்துச்சண்டை பயிற்சிக்குப் பயன்படுத்தும் பொதியை குத்துவது—வலிய வம்புக்குச் செல்லும் குணத்தை மாற்றுவதற்குப் பதிலாக வளர்க்கவே செய்யும்.” இது வடிகால் தேடுதல் என அழைக்கப்படுகிறது. இதுகுறித்து அயோவா அரசு பல்கலைக்கழக உளவியல் இணை பேராசிரியர் டாக்டர் பிராட் ஜே. புஷ்மன் குறிப்பிட்டதாவது: “வடிகால் தேடும் விஷயத்துக்கு, ஆய்வுசெய்து வெளிவந்துள்ள புத்தகங்களைவிட, பிரபலமாகிவரும் மீடியாக்கள் அதிக ஆதரவு தருகின்றன.” புத்தகங்களிலும் பிற கட்டுரைகளிலும் ‘வடிகால் தேடுதல்’ கோபத்தை வெல்வதற்குரிய சிறந்த வழி என்று சிபாரிசு செய்யப்பட்டாலும், உண்மையில் மக்கள் தங்கள் சுய கட்டுப்பாட்டில் பலவீனமடைய இடமளித்து பகைமையை பாலூட்டி வளர்க்கிறது” என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக போஸ்ட் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.