அயர்லாந்தின் வேட்டை நாயை சந்திப்போமா?
அயர்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
“நாய்கள் இனங்களிலேயே விசித்திரமான, அன்பான இராட்சத விலங்கு.” இவை ஐரிஷ் உல்ஃப்ஹவுண்டை வர்ணித்து சொல்லப்பட்ட வார்த்தைகள். இது ஒன்றும் சாதாரண நாய் அல்ல, இது பயங்கரமான ஓநாயையே வேட்டையாடிவிடும். இந்த அபூர்வமான விசேஷ தன்மைகளையுடைய நாயை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இப்போது அயர்லாந்தில் நீங்கள் என்னதான் தேடி பார்த்தாலும் ஒரு ஓநாயைக்கூட உங்களால் பார்க்கமுடியாது. ஆனால் முற்காலங்களில் அந்த இடம் ஓநாய்களின் சரணாலயமாக இருந்திருக்கிறது. அங்கு காட்டுப்பன்றிகளும் பயங்கரமான கடம்பை மான்களும்கூட இருந்திருக்கின்றன. ஆனால், அயர்லாந்தில் ஓநாய் வம்சத்தின் கடைசி ஜீவன் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கொல்லப்பட்டது என சொல்லப்படுகிறது. இவை அழிவதற்கு முன்பு, இந்த ஓநாய்கள் மற்றும் இதைப் போன்ற மற்ற பெரிய கொடிய மிருகங்களை வேட்டையாடுவதில் உல்ஃப்ஹவுண்டுகள் கில்லாடிகளாக திகழ்ந்துள்ளன. இந்த நாயைப் பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆசையாய் இருக்கிறதா? இவற்றின் திறமையை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு கதையே சமீப காலங்களில் சொல்லப்படுகிறது. அதாவது 1892-ல் ஒரு உல்ஃப்ஹவுண்ட், ஐக்கிய மாகாணங்களிலுள்ள ராக்கி மலைக்கு அனுப்பப்பட்டதாக அந்த கதை ஆரம்பிக்கிறது. “ஒரு பனிக்காலத்தின்போது அது தன்னந்தனியாக நாற்பது ஓநாய்களை கொன்றது” என்பதாக அக்கதை தொடர்கிறது. அடேயப்பா! எவ்வளவு பலம் அதற்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக நீங்கள் பயப்பட வேண்டியதில்லை, இது மனிதர்களுக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. அது வேட்டையாடுவது அல்லது கொல்வது மனிதர்களை அல்ல.
சில வரலாற்றாசிரியர்களின் பிரகாரம், அயர்லாந்தில் இந்த உல்ஃப்ஹவுண்ட் பொ.ச.மு. 500-ன் போது நன்கு அறியப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு கெல்ட் இனத்தவர் இந்த உல்ஃப்ஹவுண்டுகளை, வேட்டையாடுவதற்கு பயன்படுத்தியதோடு மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்தியிருக்கின்றனர். இவை அயர்லாந்தின் ராஜாக்களோடும் போர்வீரர்களோடும் போருக்கு சென்றதை புராணமும் வரலாறும் நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன.
இந்த உல்ஃப்ஹவுண்டின் அருமை பெருமைகள் அதாவது இவை ஒரு விசேஷ இனத்தை சேர்ந்தவை என்ற புகழ் உலகெங்கும் பரவியது. இந்த உல்ஃப்ஹவுண்டுகள் விசேஷமான அதிசய நாய்களாக இருந்ததால், இவற்றை அரங்கங்களில் காட்சிப்பொருளாக வைப்பதற்கு ரோமிற்கும் கொண்டு செல்லப்பட்டன. குவின்டஸ் ஆராலியெஸ் சைமேகஸ் என்ற ஒரு ரோம பிரதிநிதியைப் பற்றிய பதிவு இதைப் பற்றி சொல்கிறது. அதாவது ரோமிற்கு, ஏழு அயர்லாந்து உல்ஃப்ஹவுண்டுகளை அனுப்பியதற்காக தன்னுடைய சகோதரனுக்கு அவர் நன்றி சொல்லி பொ.ச. 393-ல் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த நாய்கள் ரோமர்களை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியது போல் தெரிகிறது. அவர் எழுதினார் “இவற்றை எல்லா ரோமர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள், இவ்விடத்திற்கு இவற்றை இரும்பு கூண்டுகளில் கொண்டுவந்தது வேடிக்கையாக இருந்திருக்கும்.”
ஒருவேளை இந்த நாய்களின் இராட்சத உருவம் இவற்றை இரும்பு கூண்டுகளில் எடுத்துவரும் யோசனையை கொடுத்திருக்கும். இவற்றின் ஆண் நாய்கள் சாதாரணமாக அதன் தோள்மட்டம் வரையில் சுமார் 86 செண்டிமீட்டர் உயரமிருக்கும், சில நாய்கள் இன்னும் அதிக உயரமாகவும் இருக்கும். சரித்திரத்திலேயே உயரமான உல்ஃப்ஹவுண்டின் தோள்மட்டம் 100 செண்டிமீட்டருக்கும் அதிகமாக இருந்தது. பெண் நாய்கள் ஆண் நாய்களைவிட 2-5 செண்டிமீட்டர் குள்ளமாக இருக்கும். அவை உயரமாய் இருப்பதனால் அவற்றுக்கு வரும் நன்மைகளுள் ஒன்று, கஷ்டப்படாமலேயே அதிகமான உணவை அது பெற்றுக்கொள்ளலாம். ஸ்காட்லாந்தின் நாவலாசிரியர் சர் வால்டர் ஸ்காட் தன்னுடைய நண்பரை, சாப்பிடும் சமயத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்தார். இல்லையென்றால், “மூக்கிலிருந்து வாலின் நுனிவரையிலும் இரண்டு மீட்டர் நீளமிருந்த அவருடைய உல்ஃப்ஹவுண்ட் தன் காலை மேஜைமீதோ சேர்மீதோ வைக்காமலே எந்தவித கஷ்டமும் இல்லாமலே சாப்பாட்டு தட்டை சுத்தமாக காலி செய்துவிடும்” என்றார்.
இந்த வேட்டை நாய்கள் சின்னஞ் சிறு குட்டிகளாகவே இந்த உலகத்தில் காலெடுத்து வைக்கின்றன. அவை பிறக்கும்போது அதன் எடை சுமார் 700 கிராம்களே—ஆனால் அவை வேகமாக வளர்ந்துவிடுகின்றன. மெய்சிலிர்த்துப்போன இந்த நாயின் சொந்தக்காரர் ஒருவர் சொல்லும்போது “இவை குட்டிகளாக இருக்கும்போது நம் மனதை கொள்ளைகொள்கின்றன,” பயங்கர அட்டகாசம் செய்யும் இந்த குட்டிகள் மளமளவென வளர்கின்றன. “அழகாக பொசுபொசுவென்றிருக்கும் வெல்வெட் பொம்மைகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்த குட்டிகள் பயங்கரமான இராட்சத உருவம் பெறுகின்றன, இவை பெரிய பெரிய நீளமான கால்களைக் கொண்டிருந்தாலும், இந்த நாய்கள் மென்மையான நல்ல விலங்குகளே.”
நாய்களிலேயே இவை வித்தியாசமானவை, இவை அதிகம் குரைப்பதில்லை. சாது மிரண்டால் காடும் கொள்ளாது என்பார்களே அது போல இவை அமைதியாக இருக்கும்; ஆனால் மிக வலிமை வாய்ந்தவை. இவை குரைத்தால் அச்சத்தம் காதில் நீங்காது ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு மனிதர் இந்த நாய் குரைப்பதை கேட்டுவிட்டு, “இதுவரை [அவர்] கேட்டதிலேயே அதிக ஆழமான, நெஞ்சை உறுக்கும் மென்மையான சோக இசையைப் போன்றது இந்த குரைப்பு” என்று சொன்னாராம்.
உங்கள் முதல் பார்வையிலேயே கைகால் வெலவெலத்து நடுநடுங்கி, அந்த இடத்தைவிட்டு ஓடிவிட நினைக்கும் அளவிற்கு, இந்த அயர்லாந்து உல்ஃப்ஹவுண்டுகள் “பயங்கரமான தோற்றமும், கூறிய பார்வையும், அடர்த்தியான புருவமும் கொண்ட கரும் சாம்பல் நிறத்திலுள்ள” விலங்கு என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் “ஒரு சின்னஞ்சிறிய குழந்தைகூட அதனுடன் தைரியமாகவும் சந்தோஷமாகவும் விளையாடும் அளவிற்கு பாசமுள்ளவை” என்பதாகவும் சொல்லப்படுகிறது. அவை “அளவுகடந்த பாசமுடையவை” என்றும் சொல்லலாம் என்பதாக இந்த நாயைப்பற்றி நன்கு தெரிந்த அதன் சொந்தக்காரர் ஒருவர் சொல்கிறார். அவை சாம்பல் நிறத்தில் மட்டுமில்லை. அவற்றில் சிலவற்றின் தோல் வெள்ளை, கோதுமை, சிகப்பு அல்லது கருப்பு நிறங்களிலும் இருக்கும்.
புகழ்பெற்ற எழுத்தாளரான ஆலிவர் கோல்ட்ஸ்மித்தே இவற்றை புகழ்ந்துதள்ளிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். “இந்த அயர்லாந்து வேட்டை நாயின் அழகிற்கும் கம்பீரத்திற்கும் இணையாக எதுவும் வரமுடியாது . . . , இந்த உலகத்தில் நாம் பார்க்கும் நாய் இனங்களிலேயே இது மிகச் சிறந்தது” என்கிறார் அவர். “அயர்லாந்திற்கே உரித்தான உண்மையான தோற்றம்” என்று அழைக்கப்பட்ட மீசை, கண் இமை முடி, புருவம் உட்பட அதன் அழகான கம்பீரமான தோற்றத்தைக்கண்டு அவர் வெகுவாக கவர்ந்திழுக்கப்பட்டார்.
இப்படியிருக்க, அந்த இனமே ஏன் அழிந்துவிடும் ஆபத்தான நிலையில் இருந்தது? அதன் புகழே அதற்கான ஒரு காரணம். அரசர்கள் போன்ற முக்கியமானவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க இதுவே சிறந்த ஒன்று என இவற்றின் அழகை ரசித்தவர்கள் நினைத்தனர். ஆகவே எல்லா நாய்களும் “வலை வீசி தேடப்பட்டன, கண்டுபிடிக்கப்பட்டவை உலகின் எல்லா இடங்களுக்கும் அனுப்பப்பட்டன.” இதன் விளைவு, சிறு சிறு எண்ணிக்கையில் எல்லா இடங்களுக்கும் இவை சிதறடிக்கப்பட்டன. அதோடு, ஓநாய்களை வேட்டையாடும் நாய்களாக அதன் வேலை முடிந்தபிறகு அயர்லாந்தின் அந்த அரிய இனத்தை பற்றி யாருமே கவலைப்படவில்லை.
1839-ல், ஒரு உல்ஃப்ஹவுண்ட் பிரியர் வருத்தத்துடன் இவ்வாறு எழுதினார்: “மெச்சத்தகுந்த தனிச்சிறப்பு வாய்ந்த இந்த நாய் இனம் வேகமாக அழிந்துவருகிறது என்று சொல்வதே வருத்தகரமான ஒரு விஷயம், இதை தவிர்ப்பதற்கு உடனடியாக ஏதாவது விசேஷ முயற்சிகள் எடுக்கவில்லை என்றால் ஒருசில வருடங்களில் இந்த இனம் இருந்த சுவடே இல்லாமல் பூண்டோடு அழிந்துவிடும்.” அங்கு ஒரு சில நாய்களே எஞ்சியிருந்ததால் இந்த நாய்களை வைத்திருந்த அனைவரும் தங்களிடம் இருந்ததுதான் “அந்த இனத்திலேயே கடைசி” நாய் என்று சொல்லும் அளவிற்கு நிலை மோசமாகியது. ஆனால் அவை ஒருவழியாக உயிர்பிழைத்தன!
ஜார்ஜ் எ. கிரஹாம் போன்றவர்களின் “விசேஷ முயற்சிக”ளினால் அந்த இனம் காப்பாற்றப்பட்டது. 1862-ல் இவற்றின் வேதனையான நிலையை அவர் கவனித்து கொதித்தெழுந்தார். அவரால் கண்டுபிடிக்க முடிந்த எல்லா மீதமான உல்ஃப்ஹவுண்டுகளையும் ஒன்று திரட்டினார். அவற்றை கவனமாக இனவிருத்தி செய்வதன் மூலம், இன்று இந்தளவுக்கு அவை வாழும் நிலைக்கு திரும்ப கொண்டுவருவதற்கான முதல் படியை அவர் எடுத்தார். அவரைப் பற்றி 1893-ல் ஒரு வரலாற்றாசிரியர் சொன்னார், அவர் மட்டும் இல்லை என்றால், “ஒரு வலிமைவாய்ந்த இனத்திற்கு அந்த நாயின் சின்னம்கூட இல்லாமல் இந்நேரம் அது அழிந்துவிட்டிருக்கும்.”
இந்த அயர்லாந்து உல்ஃப்ஹவுண்டுகளின் ரசிகர்களில் ஒருவரும், இவற்றை இனவிருத்தி செய்வதில் புகழ்பெற்றவருமான ஃபைலிஸ் கார்ட்னர் இவ்வாறு எழுதினார்: “இந்த உலகத்தில் எதுவுமே நிச்சயம் இல்லை, ஆனால், இந்த பயங்கர கொடுமைக்கு விதிவிலக்காக, இந்த அரிய, பெருமைக்குரிய இனம் அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது, இப்போது மீண்டும் புகழை படிப்படியாக எட்டிக்கொண்டிருக்கிறது.”
[பக்கம் 23-ன் படம்]
நான்கு வார உல்ஃப்ஹவுண்ட் குட்டிகள்
[பக்கம் 23-ன் படம்]
வடக்கு அயர்லாந்தின் நியூடௌனார்ட்ஸில், சாதுவான ஓர் உல்ஃப்ஹவுண்ட்