உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 11/22 பக். 8-10
  • தேவதூதர்களைப் பற்றிய உண்மை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவதூதர்களைப் பற்றிய உண்மை
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தேவதூதர்கள் நமக்கு எவ்விதம் உதவுவார்கள்
  • தூதர்கள் உங்களுக்கு எப்படி உதவுவார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • தேவதூதர்கள்—அவர்கள் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறார்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • தேவதூதர்கள் நமக்கு ஏதாவது செய்கிறார்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • கடவுளுடைய தூதர்களின் உதவி
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 11/22 பக். 8-10

தேவதூதர்களைப் பற்றிய உண்மை

தேவதூதர்களைப் பற்றிய பிரபலமான கருத்துக்களும், கதைகளும் பைபிள் போதனைகளோடு ஒருக்காலும் பொருந்தவில்லை என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். இப்படி இவை பைபிளோடு ஒத்துப்போகவில்லை என்றாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? தேவதூதர்களைப் பற்றி பிரபலமான நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவற்றை ஏற்றுக்கொள்வதில் ஏதேனும் அபாயம் உள்ளதா? ஆம் உள்ளது.

உதாரணத்திற்கு, “புதிய ஆன்மீகம்” தோற்றுவிக்கும் மனப்பான்மைகளை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். தேவதூதர்களைப் பற்றிய இக்காலத்து புத்தகங்கள் சிறுபிள்ளை தனத்தையே ஊக்குவிக்கின்றன. அறிவுத்திறனை உபயோகிப்பதை ஊக்குவிப்பதில்லை. பிரச்சினைகளின் தீர்வுகளை காண உழைக்கும்படி தேவதூதர்களின் புத்தகங்கள் அவற்றின் வாசகர்களை ஊக்குவிப்பதில்லை அல்லது பைபிளை புரிந்துகொள்வதையோ, கடவுளைப் பற்றிய அறிவை நாடுவதையோ ஊக்குவிப்பதில்லை. கனிவான, அன்பான தேவதூதன் நம் பக்கத்தில் நடந்துவர, எந்தவித ஆபத்தும் இன்றி நாம் வாழ்க்கை என்னும் பாதையில் நடைபோடுகிறோம் என்பதை அப்புத்தகங்கள் உறுதியளிக்கின்றன. ஏனென்றால் நாம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்வதால், எல்லாம் எப்படி எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே நடந்து வருவதாகவும் அப்புத்தகங்கள் கூறுகின்றன. நமக்கு பிரச்சினை வந்தால் நாம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. தேவதூதர்களே எல்லா வற்றையும் பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்காக நாம் காத்திருந்தால் போதும். சரி, எல்லாமே இவ்வளவு சுலபமாக இருக்கும்போது, “விசுவாசத்திற்காக . . . தைரியமாய்ப் போராடவேண்டுமென்று” ஏன் பைபிள் நம்மிடம் கூற வேண்டும்?​—⁠யூதா 3.

தேவதூதர்களைப் பற்றிய பல புத்தகங்கள் மனிதனின் கர்வத்திற்கும், வீண்பெருமைக்கும் தீனிப்போடுகின்றன. இவை தன்னலத்தையே தூண்டுகின்றன. இப்புத்தகங்களில் தோன்றும் நவீன தேவதூதர்கள், நாம் அபார அழகோடு ஜொலிக்கிறோம் என்பதை உணர வேண்டும் என்று விரும்புகின்றன. நம்மைப் பற்றி நல்லவிதமாக நினைப்பது நல்லதே. ஆனால், என்ன ஆனாலும் சரி, தன்னை மாத்திரம் நேசிக்கவேண்டும் என்பது “இந்தப் புதிய ஆன்மீகத்தின்” முக்கிய போதனை. “கடவுளாக உன்னையே நேசி.” இதுவே முதலாம், பிரதான கட்டளை என்கிறார் ஓர் ஆசிரியர். இவர் சொல்வது இயேசுவின் வார்த்தைகளுக்கு நேர்மாறாக உள்ளதே! இயேசு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.” (மத்தேயு 22:36-39) நாம் கடவுளுடைய அக்கறைகளுக்கு வாழ்க்கையில் முதலிடம் தந்தால், பேரானந்தம் அடைவோம்.

நம் முழு கவனத்தை தேவதூதர்களுக்கு தருவது ஒரு துருவம் என்றால், உண்மை கிறிஸ்தவமும் அதற்கு நேர் எதிர் துருவம். தேவதூதர்களுக்கு ஆராதனை செய்வதை அல்லது வழிபடுவதை அப்போஸ்தலன் பவுல் கண்டித்தார். (கொலோசெயர் 2:19) ஆராதனை என்பதன் அர்த்தம் “தெய்வத்தன்மை உள்ளவராக அல்லது அமானுஷ்ய சக்தி உள்ளவராகக் கருதி ஒருவருக்கு மரியாதை அல்லது பக்தி செலுத்துவது.” ஆம், தேவதூதர்களுக்கு மரியாதை செலுத்துவதை, பயபக்தி காட்டுவதை தேவதூதர்களைப் பற்றிய பிரபல புத்தகங்கள் பல வாசகர்களை ஊக்குவிக்கின்றன. சாத்தான் இயேசுவை நோக்கி, ஒரே ஒருதரம் தனக்கு ஆராதனை செய்யும்படி கூறியபோது இயேசு என்ன கூறினார் என்பதை ஞாபகப்படுத்திப்பாருங்கள். இயேசு அளித்த பதில்: “உன் தேவனாகிய யெகோவாவை மாத்திரம் வணங்குவாயாக, அவர் ஒருவருக்கே புனித சேவை செய்வாயாக.” (லூக்கா 4:⁠8, NW) அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு தேவதூதனின் காலில் விழுந்தபோது, அந்தத் தூதன் இவ்வாறு கூறினார்: “இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்.”​—⁠வெளிப்படுத்துதல் 19:⁠10.

தேவதூதர்கள் நமக்கு எவ்விதம் உதவுவார்கள்

நமக்கு வழிநடத்துதலும், உதவியும் தேவைப்படும்போது நாம் அணுக வேண்டியது கடவுளை. தேவதூதர்களை அல்ல. கடவுளுடைய நீதியான கோரிக்கைகளை யாரெல்லாம் பூர்த்திசெய்கிறார்களோ, அவர்கள்மீது அவர் மனமுவந்து, சந்தோஷமாக அன்பை பொழிகிறார். அப்போஸ்தலன் யோவான் தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடத்தில் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.​—⁠1 யோவான் 5:14, 15, பொ.மொ.

கடவுளுக்கு உண்மையாக இருக்கும் தேவதூதர்களைப் பற்றி நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் கடவுள் கட்டளையிடும் வேலையை செய்ய தயாராக இருக்கிறார்கள்; கடவுளுடைய நோக்கங்களுக்கு, வழிநடத்துதலுக்கு இசைவாக செயல்படுகிறார்கள் என்ற உண்மை மாத்திரம் நமக்குத் தெரியும். கடவுளைப் பற்றிய உண்மையை பரப்புவதில் அவர்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. (வெளிப்படுத்துதல் 14:6, 7) நாம் அவர்களை ஆராதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. நாம் அவர்களை பார்க்க முடியாததால், கடவுள் தம் மக்களின் அன்றாட அலுவல்களில் உதவிசெய்ய, எந்தளவுக்கு தேவதூதர்களை உபயோகிக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், யெகோவா தேவன் தம்முடைய மக்களை ஒரு குழுவாக பாதுகாப்பதோடு, வழிநடத்துகிறார் என்பது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை.

கடவுளுக்கு உண்மையுள்ள தேவதூதர்கள் நமக்கு முத்தான முன்மாதிரியை வைத்திருக்கிறார்களே! அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தி, போற்றி புகழ்கிறார்கள். (சங்கீதம் 148:2) அவர்கள் அறிவில் கரைகண்டவர்களாய், ஆன்மீக வலிமை பெற்றவர்களாய் இருந்தபோதிலும், யெகோவாவின் பேரரசுரிமைக்கு ஆழ்ந்த மதிப்பை காட்டுகிறார்கள். (யூதா 9) கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை சொல்லிமாளாது. (1 பேதுரு 1:11, 12) நாம் இந்த உண்மைகளை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் கற்றுக்கொள்கிறோம். தேவதூதர்களைப் பற்றிய உண்மைகளை நமக்கு சொல்லும் புத்தகம் பைபிளே!

[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]

கடவுளைப் பற்றிய உண்மையை பரப்புவதில் தேவதூதர்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு

[பக்கம் 8, 9-ன் படம்]

அப்போஸ்தலன் யோவான், தேவதூதனுக்கு ஆராதனை செலுத்த முயன்றபோது, அந்தத் தூதன் கூறியது: “இப்படிச் செய்யாதபடிக்குப் பார்”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்