எமது வாசகரிடமிருந்து
அவதிப்படும் அரும்புகள் “அவதிப்படும் அரும்புகள்—அரவணைப்பது யார்?” என்ற தலைப்பில் ஏப்ரல் 8, 1999 இதழில் வெளிவந்த தொடர்கட்டுரைகளுக்கு என்னுடைய பாராட்டு. குழந்தை துஷ்பிரயோகம் பற்றிய மனதைத் தொடும் இந்தக் கட்டுரை பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வூட்ட வேண்டும். வித்தியாசப்பட்ட பின்னணியிலுள்ள நம்முடைய பிள்ளைகளை பாதுகாப்பது நம் கடமை. உங்கள் நற்பணியைத் தொடர மனமார வாழ்த்துகிறேன்!
பி. பி., குழந்தைகளுக்கான கவுன்சிலர் அலுவலகம், ரோம் நகரம், இத்தாலி
21-ம் நூற்றாண்டின் நுழைவாயிலில் அடியெடுத்து வைக்கப்போகும் இத்தருணத்தில், அநேக குழந்தைகள் இன்னும் அடிமைகளாக வேலை செய்வதையும் மற்றவர்களை கொலைசெய்ய பயன்படுத்தப்படுவதையும் நினைத்தாலே அதிர்ச்சியாக உள்ளது. அவர்களில் அநேகர் வளமான வாழ்க்கைக்கான நம்பிக்கை இல்லாமல் இருப்பது அதைவிட ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. இந்த உலகில் குழந்தைகளின் அவல நிலையை விழித்தெழு! மறுபடியும் தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது.
எஸ். ஆர். பி., பிரேசில்
36 வருட மண வாழ்க்கைக்குப்பின் நான் இப்போது மணவிலக்கு செய்து கொண்டேன். என் கணவர் பல வருடங்களாகவே என் அருமை பெண் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்துவந்ததை நான் அறிந்தேன். (அவர் ஒரு கிறிஸ்தவர் அல்ல.) நான் இதைப் பற்றி அறிந்ததும் முற்றிலும் மனம் குழம்பிப்போனேன். பாலியல் துஷ்பிரயோகத்தின் பயங்கரத்தை அல்லது அப்பாவிகள் அவதிப்படும் சொல்லிமாளா வேதனையை எவருமே புரிந்து கொள்வதாக தெரியவில்லை. ஆகவே, கொள்ளைநோய் போல் பரவிவரும் இப்பிரச்சினையைப் பற்றி நீங்கள் எழுதியமைக்கு நான் யெகோவாவுக்கு நன்றி கூறுகிறேன்.
என். எம்., ஐக்கிய மாகாணங்கள்
முதியோரை பராமரித்தல் “உங்கள் அக்கறையை செயலில் காட்டுங்கள்” என்ற கட்டுரையை நான் உண்மையிலேயே பாராட்டினேன். (ஏப்ரல் 8, 1999) வயதான அநேகர் முதியோர் இல்லங்களில் தங்கள் குடும்பங்களால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் எங்களில் சிலர் பக்கத்திலுள்ள முதியோர் இல்லத்திலுள்ள சிலருடன் பைபிளைப் பற்றி பேசுவதற்கு தீர்மானித்தோம். நாங்கள் அவர்களுக்கு முதலில் பியானோ வாசித்துக் காட்டி அக்கறையைத் தூண்டிய பின்பு அவர்களிடம் பேசினோம். அவர்களை ஒழுங்காக சந்திப்பதற்கு நாங்கள் இப்பொழுது திட்டமிட்டிருக்கிறோம்.
கே. வி., ஐக்கிய மாகாணங்கள்
ஆப்பிரிக்க புயல் நான் 12 வயது சிறுவன், “புயலுக்கும் மழைக்கும் அஞ்சாத கிறிஸ்தவம்” என்ற உங்கள் கட்டுரைக்கு என் நன்றி. (மார்ச் 8, 1999) இக்கட்டில் இருந்தவர்களுக்கு உதவிய இந்தச் சகோதரர்கள் உண்மையிலேயே மெச்சத்தக்கவர்கள்! ஜப்பானில் உள்ள ஹான்ஷினில் நடந்த நிலநடுக்கத்திற்குப் பின் நம்முடைய சகோதரர்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவினார்கள் என்பதை இது எனக்கு நினைப்பூட்டியது. பயமின்றி மற்றவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்ய இந்தக் கட்டுரை என்னை ஊக்கப்படுத்தியது.
ஆர். கே., ஜப்பான்
தூங்கும் குழந்தைகள் “பாப்பாவை படுக்க வைப்பது எவ்வாறு?” என்ற கட்டுரைக்கு நன்றி. (மார்ச் 22, 1999) நான் என்னுடைய இரண்டரை மாத முதல் குழந்தையை மழலைகளின் திடீர் மரண நோய் (SIDS) காரணமாக இழந்தேன். முதலிலேயே இந்த தகவல் எனக்கு தெரியாமல் போய்விட்டதே! என்று வருந்துகிறேன். தற்போது எனக்கு அழகான இரண்டு பிள்ளைகள் இருந்தாலும், இன்னும் துக்கம் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.
ஏ. டி., இத்தாலி
SIDS நோய்க்குரிய முக்கிய ஆபத்தான காரணிகள் பல உள்ளன. (ஜனவரி 22, 1997 “விழித்தெழு!” இதழில் “உலகை கவனித்தல்” என்ற பகுதியைக் காண்க.) இன்னும் இந்த SIDS நோய் ஒரு மருத்துவ புதிராகவே தொடருகிறது. SIDS நோயினால் தங்கள் குழந்தையை இழந்த பெற்றோர் இந்த விசனகரமான சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பு என எண்ண வேண்டியதில்லை. ஜனவரி 22, 1988 இதழில் SIDS நோயைப் பற்றி ஆழமாக ஆராய்ந்திருப்பது துயரப்படும் அநேக பெற்றோருக்கு ஆறுதலளிப்பதாய் இருந்திருக்கிறது.—ED.
சிலியாக் நோய் எங்களுடைய ஆறு வயது குழந்தைக்கு இந்த நோய் இருப்பதை அறிந்துகொண்டதற்கு மூன்று மாதங்களுக்குப்பின் “சிலியாக்-வயிற்று கோளாறை சமாளித்தல்” (மார்ச் 22, 1999) என்ற கட்டுரையை நாங்கள் பெற்றோம். ரஷ்யாவில் டாக்டர்களுக்கும்கூட இந்த நோய் பற்றி தெரியாது. எங்களுடைய மகளுக்கு உணவு விஷயத்தில் ஏன் தனி கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் புரிந்து கொள்வார்கள் என்பது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது. இக்கட்டுரை எங்களை பலப்படுத்தியிருக்கிறது. யெகோவா எப்போதும் தம்முடைய ஜனங்களின் தேவைகளை கவனிக்கிறார் என்பதை குறித்து உறுதியும் அளிக்கிறது.
வி. பி. மற்றும் எல். பி., ரஷ்யா
ஆசைப்பட்டும் அடைய முடியாத பொருட்கள் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஆசைப்பட்டதெல்லாம் அடையவே முடியாதா?” (மார்ச் 22, 1999) என்ற கட்டுரையை நான் இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் ஆசைப்பட்டதெல்லாம் அடைய முடியாது என்பதை இந்தக் கட்டுரை உணர வைத்ததால் நான் இதற்கு நன்றி கூற விரும்புகிறேன். ஆனால் பைபிள் சொல்கிறபடி நம்முடைய தேவைகளை யெகோவா அறிவார். மேலும் எளிய வாழ்க்கை வாழ்வதில் நான் அதிக சந்தோஷப்படுகிறேன்.
சி. கே., கனடா