பாப்பாவை படுக்க வைப்பது எவ்வாறு?
உலகம் முழுவதும் மழலைகளின் திடீர் மரண நோய் (SIDS [Sudden Infant Death Syndrome]) அநேக சிறு குழந்தைகளின் உயிரை காவு கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு வயதிற்குட்பட்ட மழலைகள் வழக்கமாக இந்நோயால்தான் இறக்க நேரிடுகிறது. இந்த அபாயத்தை தவிர்க்க ஏதாவது வழி இருக்கிறதா? சிறு குழந்தைகள் குப்புறப் படுக்காமல், மல்லாக்கப் படுக்கும்போது இந்த ஆபத்து கணிசமான அளவு குறைவதாக ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன என்பதாக த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் (JAMA) குறிப்பிடுகிறது. மழலைகள் படுக்கும் முறைக்கும் இப்பிஞ்சுகளின் திடீர் மரணத்திற்கும் இடையே உள்ள தொடர்புகள் சம்பந்தமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இதைச் செய்வதற்கு அநேக நாடுகள் திட்டங்களை தீட்டியுள்ளன. குழந்தைகளை மல்லாக்க படுக்க வைக்க வேண்டும் என்பதாக பொதுவான விளம்பரங்கள் செய்யப்பட்டன. இப்படிப்பட்ட விளம்பரங்கள் செய்யப்பட்ட இரண்டு வருடத்திற்குள்ளாகவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டென்மார்க், நியூஜிலாந்து, நார்வே போன்ற நாடுகளில் மழலைகளின் திடீர் மரணம் கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி குறைந்து விட்டது.
பிஞ்சுகள் குப்புறப் படுப்பதற்கும் SIDS-க்கும் என்ன சம்பந்தம் என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. குழந்தைகள் குப்புறப் படுப்பதனால், அவர்கள் சுவாசித்த காற்றையே மீண்டுமாக சுவாசிக்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுடைய இரத்தத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரித்துவிடுகிறது என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும், குப்புறப் படுப்பதனால் அவர்களுடைய உடல், வெப்பம் வெளியேறாமல் அதிக சூடாகி விடுகிறது. மல்லாக்கவோ குப்புறவோ குழந்தைகள் படுக்கையில் எப்படி கிடத்தப்படுகிறார்களோ அப்படியே படுத்திருப்பார்கள். நார்மலான, ஆரோக்கியமான ஒரு குழந்தையை ஒருக்களித்து படுக்க வைப்பதை பார்க்கிலும் மல்லாக்க படுக்க வைப்பதே மிகவும் சிறந்தது என்பதாக ஆய்வுகள் சிபாரிசு செய்கின்றன.
குழந்தைகளை படுக்க வைப்பதில் தாய்மார்கள் ஒரு குறிப்பிட்ட முறையைப் பின்பற்றுவது ஏன்? அடிக்கடி தாய்க்குலங்கள் பாரம்பரியத்தை பின்பற்றுவதே இதற்கு காரணம் என்பதாக JAMA குறிப்பிடுகிறது. பாட்டிமார்களும், சமுதாயத்தில் உள்ளவர்களும் எப்படி குழந்தைகளை படுக்க வைக்கிறார்களோ அதையே இவர்களும் பின்பற்றுகின்றனர். அல்லது மருத்துவமனைகளில் எப்படிச் செய்கிறார்களோ அப்படியே இவர்களும் செய்கிறார்கள். ‘என்னோட கண்மணிக்கு இப்படிப் படுத்தாத்தான் தூக்கம் வரும்’ என்று குழந்தையை தூங்க வைப்பதில் குறிப்பிட்ட முறையைப் பின்பற்றும் தாய்மார்களும் உண்டு. பிறந்த முதல் மாதத்தில் குழந்தையை அநேகர் தொடர்ந்து மல்லாக்க படுக்க வைக்கின்றனர். அதற்கு பிறகு குப்புறப் படுக்க வைக்கின்றனர். “இப்படி செய்வது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் 2 முதல் 3 மாதக் குழந்தைகள் மத்தியில் SIDS உச்சளவில் இருக்கிறது” என்பதாக JAMA குறிப்பிடுகிறது. மழலைகள் திடீர் மரண நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் வழிமுறைகளை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த டாக்டர்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர். ஆரோக்கியமான குழந்தைகளை மல்லாக்க படுக்க வைக்கும் இவ்வழிமுறைகள் மிகவும் எளிதானவை, ஆனால் அதிக பயனுள்ளவை என்பதாகவும் டாக்டர்கள் சொல்லுகின்றனர். a
[அடிக்குறிப்புகள்]
a குழந்தைக்கு மூச்சுத்திணறல் சம்பந்தப்பட்ட நோய் அல்லது அளவுக்கு அதிகமாக ஜொள் வழிந்தால், படுக்க வைக்கும் முறையைப் பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.