உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 12/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அழிவை சந்திக்க ரெடியா?
  • எலியை சுண்டியிழுக்கும் பூக்கள்
  • கேன்சருக்கு வில்லன் தக்காளி
  • மனநோயால் அவதிப்படும் குட்டீஸ்
  • பறந்துவரும் ஆபத்துக்கள்
  • மறைந்துவரும் மத சுதந்திரம்
  • நிம்மதியா தூங்க முடியுதா?
  • பொடிசுகளின் அட்டகாசம்
  • புத்தம்புது பூமி
  • புற்றுநோயை நீங்கள் முறியடிக்க முடியுமா?
    விழித்தெழு!—1987
  • பேரழிவுகளுக்கு எதிராக மனிதனின் போராட்டம்
    விழித்தெழு!—1995
  • புற்றுநோய் என்பது என்ன? எதனால் அது வருகிறது?
    விழித்தெழு!—1987
  • உங்கள் உடம்புக்கு ஏன் தூக்கம் தேவை
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 12/22 பக். 28-29

உலகை கவனித்தல்

அழிவை சந்திக்க ரெடியா?

“பேரழிவுகளின் உலக அறிக்கை 1999 என்பதன் பிரகாரம், கடந்த ஆண்டு இயற்கை அழிவுகளால் ஏற்பட்ட சேதமே இதுவரை ஏற்பட்டிருக்கும் எல்லா அழிவுகளையும்விட மிகவும் மோசமாக இருந்தது” என செஞ்சிலுவை மற்றும் செம்பிறை (Red Crescent) சங்கங்களின் சர்வதேச ஃபெடரேஷனின் அறிக்கை ஒன்று கூறுகிறது. வறட்சி, மண் வளம் குறைவுபடுதல், வெள்ளப் பெருக்குகள், காடுகளின் அழிவு ஆகியவற்றின் காரணமாக 2.5 கோடி மக்கள் தங்கள் விவசாய நிலங்களை விட்டுவிட்டு நகரிலுள்ள புறம்போக்கு இடங்களில் புகலிடம் தேடி ஓடும் நிலை ஏற்படுகிறது; “போர், சண்டை ஆகியவற்றின் காரணமாக அகதிகளாகும் ஆட்களைவிட அதிகம் பேர் இதனால் அகதிகளாகிறார்கள்.” இதில் அதிகம் பாதிக்கப்படுவது உலகில் வளர்ந்துவரும் நாடுகள்தான். இங்கே 96 சதவீத மரணங்களுக்கு இயற்கை அழிவுகளே காரணம். கடந்த ஐந்து ஆண்டுகளாக மற்ற நாடுகளிலிருந்து வரும் உதவி ஏஜென்ஸி நிதி 40 சதவீதம் குறைந்திருக்கிறது. அழிவுக்கு தயாராக இருப்பதன் சம்பந்தமாக நமக்கிருக்கும் எண்ணத்தில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தும் வண்ணம் டிசாஸ்டர் பாலிஸியின் ஃபெடரேஷன் நிர்வாகி பீட்டர் வாக்கர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அழிவு ஏற்படுகையில் அவசர அவசரமாக நிவாரண உதவி செய்வது போதுமானதாக இல்லை. . . . ஒரு வீடு தீப்பற்றிக் கொள்ளும்வரை காத்திருந்துவிட்டு பின்னர் தீயணைப்பு துறைக்காக நாம் நிதி திரட்டுவதில்லை.”

எலியை சுண்டியிழுக்கும் பூக்கள்

வடகிழக்கு இந்தியாவின் பெரும்பகுதியில் மூங்கில் காடுகளைக் காணமுடியும். அங்கே மூங்கில் பூ பூக்க ஆரம்பித்தபோது மணிப்பூர் மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாழ்ந்த மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. ஏன்? ஏனென்றால் இந்த இடங்களில் வளரும் மாட்டாங் என்ற ஒரு வகை மூங்கில் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூ பூக்கிறது, இது எலிகளை கவர்ந்திழுக்கிறது. இந்தப் பூக்களைத் தின்னும் எலிகள் வேகமாக இனப்பெருக்கம் செய்து பயிர்களையும் நாசமாக்கிவிடுகின்றன. இதனால் பஞ்சம் ஏற்படுகிறது. த டைம்ஸ் ஆஃப் இண்டியா என்ற பத்திரிகையின்படி 1954/55 ஆண்டுகளில் மூங்கில் பூ பூத்த பின்பு 1957-⁠ல் பஞ்சம் ஏற்பட்டது. மற்றொரு பஞ்சம் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக மிசோரம் மாநில அரசு எலிகளை கொல்லும் முயற்சியில் இறங்கியது. ஒவ்வொரு எலி வாலுக்கும் ஒரு ரூபாய் தருவதாக அது அறிவித்தது. ஏப்ரல் வரை சுமார் 90,000 எலி வால்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன, இந்த எலி வேட்டையை தொடருவதற்காக நிதி கேட்கப்பட்டு வருகிறது.

கேன்சருக்கு வில்லன் தக்காளி

கேன்சர் ஆராய்ச்சிக்கான அமெரிக்கன் அசோஸியேஷன் சமர்ப்பித்திருக்கும் அண்மைக் கால ஆய்வுகள், தக்காளியில் பிராஸ்டேட் கேன்சரின் வளர்ச்சியைத் தடைசெய்யும் ஒரு பொருள் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றன. தக்காளியின் சிகப்பு நிறத்துக்குக் காரணமாயுள்ள லைக்கோபேன், பிராஸ்டேட்டில் வளரக்கூடிய கான்சர் உண்டாக்கும் கட்டியை கரைத்து உடலின் மற்ற திசுக்களுக்கு பரவாதபடி செய்கிறது. “தக்காளியும் அதிலிருந்து பெறப்படும் அனைத்தும் பிராஸ்டேட் புற்றுநோய்க்கு மட்டுமல்ல கணையம், நுரையீரல், பெருங்குடல் புற்றுநோய்க்கும்கூட நல்லது” என ஐ.மா. நேஷனல் கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

மனநோயால் அவதிப்படும் குட்டீஸ்

பிரிட்டன் நாட்டில் 20 வயதுக்குட்பட்ட ஐந்திலொரு பாகமான இளைஞர் மனது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவதிப்படுவதாக மென்டல் ஹெல்த் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. “அரசாங்கமும், நிபுணர்களும், செய்தித்துறையும், பிள்ளைகளின் தேக ஆரோக்கியத்தையும் கல்வி சாதனைகளையும் குறித்து முழு மூச்சாக அக்கறை காண்பிக்கின்றனர். ஆனால் உணர்ச்சிப்பூர்வமான அவர்களுடைய வளர்ச்சி மிகவும் குன்றிப்போயிருக்கிறது” என இந்த நிறுவனத்தின் நிர்வாகி ஜூன் மேக்கிரோ கூறுகிறார். இதற்கு பல காரணங்கள் இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. பிள்ளைகள் “மிகவும் சின்ன வயதிலிருந்தே தேர்வுகள், மதிப்பெண்கள் ஆகியவற்றின் மூலம் தங்களை அதே வயதிலுள்ள மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவதால்” பெரும்பாலான பிள்ளைகள் தாங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற எண்ணத்துடன்தான் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள். திறந்த வெளி விளையாட்டுகள், “சிந்தித்து முடிவெடுப்பதற்கும் அதிக தன்னம்பிக்கையையும் மன ஆற்றலையும் பெற்றுக்கொள்ளவும்” இளைஞருக்கு உதவியது, ஆனால் இன்று அதற்கு பதிலாக கம்ப்யூட்டர்களும் டெலிவிஷனும் வந்துவிட்டன. விளம்பரங்கள் “அவர்களிடம் இல்லாத பொருட்களை வாங்கவும் யாரையாவது போலிருக்கவும் ஆசையை தூண்டிவிடுகின்றன.” இது போதாதென்று மணவிலக்கு 50 சதவீதத்தை எட்டியிருப்பதாலும் அநேக பெற்றோர் வேலைக்கு போவதாலும் பிள்ளைகளின் மனக் கவலைகள் “அதிகரித்திருக்கின்றன. ஏனென்றால் தங்கள் குடும்பம் உணர்ச்சிப்பூர்வமாக உறுதியாக இருக்கும் என்பதற்கு அவர்களுக்கு உத்தரவாதமில்லை” என்று த டெய்லி டெலிகிராஃப் கூறுகிறது.

பறந்துவரும் ஆபத்துக்கள்

ஐக்கிய மாகாணங்களின் சில பகுதிகளிலும் பல லத்தீன் அமெரிக்க தேசங்களிலும் புத்தாண்டைக் கொண்டாடுபவர்கள் வானத்தை நோக்கி தங்கள் துப்பாக்கியால் சுட்டு அதை வரவேற்பது வழக்கம். ஆனால் அப்படி செய்யாதீர்கள் என்று போலீஸார் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள். போலீஸ் அதிகாரி வில்லி வில்லியம்ஸ் இவ்வாறு கூறினார்: “வானத்தை நோக்கி உங்கள் துப்பாக்கியால் சுடும்போது அந்த குண்டு ஏதாவது ஒரு இடத்தில் வந்து விழுகிறது.” அந்த ஏதாவது ஒரு இடம் யாரோ ஒருவரின் தலையாக இருக்கலாம். ஐக்கிய மாகாணங்களில் ஒரு சில ஆண்டுகளுக்குள் பன்னிரண்டுக்கும் அதிகமான ஆட்கள் இதனால் உயிரிழந்திருக்கிறார்கள். இதைத்தவிர சில சமயங்களில் பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்த துப்பாக்கிக் குண்டுகளால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கின்றனர், உடைமைகளும் நாசமடைந்திருக்கின்றன. வானத்தை நோக்கி சுடுகிறவர்கள் வானத்தில் அந்தக் குண்டுகள் சிதைந்துவிடும் என்றோ அவை கீழே விழும்போது யாருக்கும் எதுவும் ஏற்படாது என்றோ தவறாக நினைத்துவிடுகிறார்கள். ஆனால் மேல்நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு கீழே விழும்போது பயங்கர தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது “தோல் பிய்ந்துபோவதற்கு, கண்ணை குருடாக்குவதற்கு, ஒரு குழந்தையின் மண்டையோட்டின் மென்மையான பகுதிக்குள் ஊடுருவிச் செல்வதற்கு போதுமானது” என்பதாக ஃபிரட் கிங் என்ற ஹொஸ்டன் போலீஸ் இலாக்கா பிரதிநிதி கூறினார்.

மறைந்துவரும் மத சுதந்திரம்

மனித உரிமைகள் அமைப்பாகிய சர்வதேச ஹெல்சின்கி ஃபெடரேஷன் கருத்துப்படி, புதிய மதங்கள் என்றழைக்கப்படுகிற மதங்கள் ஐரோப்பாவில் “பல்வேறு விதங்களில் துன்புறுத்தப்படுகின்றன” என்பதாக கேத்தலிக் இன்டர்நேஷனல் அறிக்கை செய்கிறது. சிறுபான்மை மதங்களை தடைசெய்வதற்காக பல்வேறு அரசாங்கங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன, ஆனால் இவை மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்தை முன்னேற்றுவிக்க பாடுபடுவோம் என்று அவை எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறும் செயலாக இருக்கின்றன. ஆட்சேபணைக்குரிய பார்லிமென்ட் அறிக்கையும், பெல்ஜியம், பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் “ஆபத்தான கும்பல்கள்” என்று அழைக்கப்படும் பிரிவுகளுமே சகிப்புத்தன்மை குறைந்துவிட்டிருப்பதற்கும் தப்பெண்ணத்துக்கும் காரணம். ஆனால் பாகுபாடற்ற மனித உரிமைகளின் தலைவர் வில்லி ஃபோட்ரா என்பவர் இந்தச் சமய இயக்கங்களில் “சில” இயக்கங்கள் மாத்திரமே சமுதாயத்துக்கு ஆபத்தானவை, மேலும் இவை குறித்த பயங்கள் மிகைப்படுத்தப்பட்டவையே என்று கூறுகிறார். பழம் பெரும் மதங்களோவென்றால் இந்தச் சர்ச்சைகளில் “கட்சிக்காரர்களாகவும் அதே சமயம் நீதிபதிகளாகவும்” இருந்து, “பேசி தீர்த்துக்கொள்ளாமல்” “நேருக்கு நேர் மோதிக்கொண்டு” பிரச்சினையை பூதாகரமாக்கிவிட்டிருக்கின்றன.

நிம்மதியா தூங்க முடியுதா?

“பகலில் தூங்கும் பழக்கமுள்ளவர்கள், கூட்டங்கள் நடைபெறும்போது கோழித்தூக்கம் தூங்குபவர்கள், அல்லது கவனம் செலுத்த முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள்” போன்றவர்களுக்கு இரவில் போதுமான தூக்கம் கிடைப்பதில்லை என்று டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் கூறுகிறது. பகல் நேரத்தில் நன்றாக விழிப்போடு சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நிறைய பேருக்கு ஒவ்வொரு நாளும் இரவில் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூக்கம் அவசியம். இதைப் பெறுவதற்கு நிபுணர்கள் தரும் சில டிப்ஸ் இதோ: தூக்கத்துக்கு முக்கிய கவனம் செலுத்துங்கள். படுக்கப்போவதற்குமுன் மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். சாவகாசமாக கொஞ்ச தூரம் நடந்து செல்வது உதவியாக இருக்கும், ஆனால் தூங்கச் செல்வதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பு கஷ்டப்பட்டு செய்யும் எந்த உடற்பயிற்சியையும் தவிர்த்துவிடுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கச் சென்று ஒரே நேரத்தில் எழுந்திருப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரவில் கண்விழித்துக் கொண்டால் கவலைப்படவோ அல்லது பிரச்சினைகளைப் பற்றி யோசித்துக்கொண்டோ இராமல் மனதுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி எண்ணிப்பாருங்கள். அரை மணிநேரமாகியும் உங்களுக்குத் தூக்கம் வரவில்லையென்றால் எழுந்து உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் எதையாவது படியுங்கள். படுக்கப் போவதற்கு சற்று முன்னால் அளவுக்கு அதிகமாக சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம். அதே போல பசியோடு தூங்கப்போகவும் வேண்டாம்.

பொடிசுகளின் அட்டகாசம்

ஜெர்மனியில் கடந்த ஆண்டு இளைஞர் செய்த குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஹெஸிஸ்ஹா நீடசாக்ஸிஸ்ஹா அல்ஜிமைனா என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “மற்றவர்களின் உடலைக் காயப்படுத்தும் சிறுபிள்ளைகளின் எண்ணிக்கை” 14.1 சதவீதம் அதிகமாகியுள்ளது. குறிப்பாக கவனிக்கப்பட்டது என்னவென்றால், 14 வயதுக்குட்பட்ட 1,52,774 பேர், அதாவது 5.9 சதவீதமான பிள்ளைகள் இவற்றில் ஈடுபடுவதே. இது “மிகவும் ஆபத்தானது” என்று கூறும் உள்துறை அமைச்சர் ஓட்டோ ஷில்லி இதைத் தடுப்பதற்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறார். கல்வி, தொழில் ஆகிய துறைகளில் அரசாங்கத்தால் ஓரளவு உதவ முடிந்தாலும் குற்றச் செயல்களைத் தடுப்பதில் குடும்பமே முக்கிய பங்கை வகிக்கிறது என்று அவர் கூறினார்.

புத்தம்புது பூமி

ஏப்ரல் 1, 1999 அன்று நனவூட் என்ற வட பிராந்தியம் கனடாவின் பாகமாக மாறியுள்ளது. 1949-ல் நியூபெளண்ட்லாந்து கனடாவோடு சேர்க்கப்பட்ட பிறகு கனடாவின் நிலப்படம் மாறுவது இதுவே முதல் தடவை. நனவூட் கனடாவின் நிலப்பகுதியில் சுமார் ஐந்தில் ஒரு பாகமாக இருப்பதாக டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் அறிவிக்கிறது. தேசத்தின் மிகப் பெரிய மாகாணமாக இருந்த க்யூபெக்கைவிட இது பெரியது. மிகக் குறைந்த மக்கள்தொகை, அதுவும் இளைஞர் அதிகமாக வாழும் பிராந்தியம் என்ற சிறப்பும் இதற்குண்டு. சுமார் 27,000 ஆட்கள் இங்கே வாழ்கிறார்கள், இவர்களில் 56 சதவீதத்தினர் 25 வயதுக்குட்பட்டவர்கள். இனுக்டிடூட் என்ற அவர்களுடைய மொழியில் இப்பெயரின் பொருள் “எங்கள் பூமி.” ஆர்க்டிக் பகுதியிலுள்ள எஸ்கிமோ மக்களும் கூட்டரசு அரசாங்கமும் சேர்ந்து குடியிருப்பு பகுதி, பழங்குடியினரின் உரிமைகள் ஆகியவற்றின் சம்பந்தமாக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விளைவு இது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்