மாநகரங்களின் எதிர்காலம் என்ன?
“நம்முடைய மாநகரங்களை பார்த்தாலே நமது எதிர்காலம் தெளிவாக தெரியும்.” இவ்வாறு கூறியவர் உலக வங்கியைச் சேர்ந்த இஸ்மாயீல் செராகில்டீங். ஆனால், நாம் இதுவரை கவனித்தவற்றிலிருந்து மாநகரங்களின் எதிர்காலம் பிரகாசமானதாக தெரியவில்லை.
வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவிக்க அநேக நகரங்கள் பெரும் முயற்சி எடுப்பது பாராட்டத்தக்கது. நியூ யார்க்கிலுள்ள மான்ஹாட்டனில் அமைந்த டைம்ஸ் சதுக்கம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஆபாச நிறுவனங்கள், போதைப்பொருள் புழக்கம், குற்றச்செயல் போன்றவை அங்கு கொடிகட்டி பறந்தன. இப்பொழுதோ, சிறுசிறு கடைகளும் கலை அரங்கங்களும் அந்தத் தெருக்களில் நிறைந்திருப்பதால் ஆயிரக்கணக்கானோர் அங்கு கவர்ந்திழுக்கப்படுகின்றனர். ‘பகட்டிலும், அதிநவீனத்திலும் ஒரு காலத்தில் லண்டனுக்கும் பாரிஸுக்கும் சமமாக’ இருந்ததாக நேஷனல் ஜியோகிரஃபிக் பத்திரிகை வர்ணித்த இத்தாலியிலுள்ள நேபிள்ஸ், இரண்டாம் உலகப் போரின்போது முற்றிலும் சீரழிந்தது. குற்றச்செயலுக்கும் குழப்பத்திற்கும் மறுபெயராக நேபிள்ஸ் திகழ்ந்தது. ஆனால், 1994-ல் ஓர் அரசியல் மாநாடு நடத்த அந்த நகரம் தேர்வு செய்யப்பட்டதால் அது புதுப்பொலிவு பெற்றது; அப்போது அந்நகரின் மையப்பகுதி பெருமளவு புதுப்பிக்கப்பட்டது.
பாதுகாப்பான, சுத்தமான மாநகரங்களைப் பெற வேண்டுமென்றால் நாம் சிலவற்றை இழக்க நேரிடும். பலத்த பாதுகாப்பிற்கு அதிகமான போலீஸ் தேவை. நம் அந்தரங்கம் பறிபோவது மற்றொரு இழப்பாகும். சில பொது இடங்களில் எப்போதுமே டிவி காமிரா மற்றும் மஃப்டி போலீஸாரின் கழுகு கண்கள் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு பூங்காவிலுள்ள நீரூற்றுகள், சிலைகள் அல்லது மலர் பாத்திகளைக் கடந்து செல்கையில் உங்களை அறியாமலேயே பாதுகாப்பு செக்-பாயின்டுகளை நீங்கள் கடந்து செல்லலாம்.
சில சமயங்களில், முன்னேற்றங்களால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, ஒருகாலத்தில் ஏழைகள் வசித்த பகுதிகளில் இன்று செல்வச்செழிப்புள்ள குடும்பங்கள் குடியேறுவதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மாறிவரும் பொருளாதாரமே, அதாவது “உற்பத்தியைவிட சேவையையும், மனித திறமையைவிட தானியங்கிகளையும் அதிகம் சார்ந்திருக்க ஆரம்பிப்பதே” இதற்கு காரணம். (ஜென்ட்ரிஃபிகேஷன் ஆஃப் த சிட்டி, நீல் ஸ்மித் மற்றும் பீட்டர் வில்லியம்ஸ் பதிப்பித்தது) உடல் உழைப்பை தேவைப்படுத்தும் வேலைகள் குறைந்து, திறமைமிக்க, புரஃபஷனல் வேலையாட்களுக்கான தேவை அதிகரிக்கையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற நல்ல வீட்டுவசதிக்கான தேவையும் அதிகரிக்கிறது. அதிகம் சம்பாதிக்கும் இந்த புரஃபஷனல் வேலையாட்கள் தினமும் புறநகர் பகுதிகளுக்கு சென்று வருவதற்கு பதிலாக, ஓரளவுக்கு பாழடைந்த பகுதிகளிலுள்ள வீடுகளை புதுப்பிக்கவே விரும்புகின்றனர்.
இதன் காரணமாக அந்த சுற்றுப்புறம் வளர்ச்சியடைகிறது. ஆனால் சுற்றுப்புறங்கள் வளர்ச்சியடைகையில் இயல்பாகவே விலைவாசியும் உயருகிறது. ஆகவே, பல வருடங்களாக அதே இடத்தில் வாழ்ந்து, வேலை செய்துவந்த ஏழைகளுக்கு இனியும் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படுகிறது!
மாநகர் மடியுமா?
புதிய தொழில்நுட்பத்தால் ஏற்படும் மாற்றங்களை மாநகரங்கள் இப்போதுதான் சந்திக்க ஆரம்பித்துள்ளன. ஷாப்பிங் செய்வதற்கும் வியாபாரத்திற்கும் சுலபமான வழியாக இன்டர்நெட் பிரபலமாகையில் இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். புதிய தொழில்நுட்பங்களின் காரணமாக, ஏற்கெனவே அநேக வியாபார நிறுவனங்கள் தங்களோடு அநேக வேலையாட்களையும் இழுத்துக்கொண்டு புறநகர் பகுதிகளுக்கு சென்றுவிட்டன.
கம்ப்யூட்டர் மூலமாகவே ஷாப்பிங் செய்வதும் வேலை செய்வதும் இன்னும் பிரபலமாகையில், நெருக்கடி நிறைந்த வியாபார ஸ்தலங்களுக்கு பயணம் செய்யவே யாரும் விரும்பமாட்டார்கள். நாகரிகத்தில் நகரங்கள் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது: “வழக்கமாக வேலை செய்பவர்கள், அதிலும் குறிப்பாக பார்ட்-டைம் வேலை செய்பவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே அல்லது பக்கத்திலுள்ள கம்ப்யூட்டர் மையங்களிலிருந்தே வேலைசெய்ய ஆரம்பிப்பார்கள் என நாம் எதிர்பார்க்கலாம், ... இதனால் மொத்த போக்குவரத்தின் அளவு குறைந்துவிடும்.” கட்டடக்கலைஞர் மோஷா சாஃப்டீயும் இவ்வாறே ஊகிக்கிறார்: “இந்தப் புதிய சூழலில் லட்சக்கணக்கான கிராமங்கள் பூமி முழுவதிலும் சிதறிப்போகலாம். அவை கிராமப்புற வாழ்க்கையின் சௌகரியங்களையும் அதேசமயம் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் மூலம் சரித்திரப் புகழ்வாய்ந்த நகரங்களின் கலாச்சார செழுமையையும் தனிநபர்களுக்கு அளிக்கும்.”
மாநகரங்களின் எதிர்காலம் என்ன?
தொழில்நுட்பம் இல்லையென்றாலும், மாநகரங்களில் உள்ள சேவைகளும் நன்மைகளும் மக்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்றே அநேகர் நம்புகின்றனர். எதிர்காலம் எப்படியிருந்தாலும் சரி, இன்றைய மாநகரங்கள் இப்பொழுதே ஆபத்தில் உள்ளன! நகரங்களில் பெருகி வரும் கோடிக்கணக்கான ஏழைகளின் அதிகரித்து வரும் வீட்டுவசதி பிரச்சினைகளும், சுகாதார பிரச்சினைகளும் தீர்வதாக தெரியவில்லை. அதோடு, குற்றச்செயல், சுற்றுச்சூழல் சிதைவு, நகர்ப்புற தூய்மைக்கேடு போன்றவற்றை நீக்குவதற்கான வழியையும் யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
மாநகரங்களுக்காக அரசாங்கம் பணத்தை வாரியிறைக்க வேண்டும் என சிலர் வாதிடலாம். ஆனால் அரசாங்கங்கள் பணத்தை செலவுசெய்யும் விதத்தை நாம் அறிந்திருப்பதால், வெறுமனே அதிக பணமிருந்தாலே மாநகரங்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியுமென நினைப்பது நியாயமானதா? பல பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட மாபெரும் அமெரிக்க நகரங்களின் மரணமும் ஜீவனும் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறியது: “செலவு செய்ய இன்னும் அதிகமான பணம் இருந்தாலே போதும் இப்போதுள்ள சேரிகளை எல்லாம் நீக்கிவிடலாம் என்ற நப்பாசை தவறானது . . . ஏனெனில், ஏற்கெனவே பல நூறு கோடிகளை செலவுசெய்து நாம் எதை சாதித்திருக்கிறோம் பாருங்கள்: சேரிகளை அப்புறப்படுத்த குறைந்த வருவாய் பெறுபவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம். ஆனால் அவை நம்பிக்கையற்ற நிலை, அட்டூழியம், சட்டவிரோதம் போன்றவற்றின் பிறப்பிடமாகவே மாறியிருக்கின்றன.” இந்த வார்த்தைகள் இன்றும் உண்மையாய் உள்ளன அல்லவா?
இந்தப் பிரச்சினையை பணத்தால் தீர்க்க முடியாதென்றால் வேறு எது தீர்க்கும்? மாநகரங்களில் இருப்பது மக்களே, வெறும் கட்டடங்களும் தெருக்களும் மட்டுமல்ல என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே, நகர வாழ்க்கை முன்னேற வேண்டுமென்றால் அதில் வசிக்கும் மக்களே மாற வேண்டும். “மக்களை பேணிக்காத்து, முன்னேற்றமடைய செய்வதே ஒரு மாநகரின் மிகச் சிறந்த சொத்து” என லூயிஸ் மம்ஃபோர்டு எழுதிய சரித்திரத்தில் நகரம் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. போதைப்பொருள் துர்ப்பிரயோகம், வேசித்தனம், தூய்மைக்கேடு, சுற்றுப்புற சீர்குலைவு, சமுதாய ஏற்றத்தாழ்வுகள், அட்டூழியம், சுவர்களில் சுலோகன்களை கிறுக்குதல் போன்றவற்றை நீக்குவதற்கு வெறுமனே அதிகமான போலீஸாரோ கட்டடங்களுக்கு புதிதாக பெயின்ட் அடிப்பதோ போதாது. சிந்தனையிலும் செயலிலும் மாபெரும் மாற்றங்களைச் செய்ய மக்களுக்கு உதவிட வேண்டும்.
நிர்வாகத்தில் மாற்றம்
இப்படிப்பட்ட தலைகீழ் மாற்றங்களை மனிதனால் செய்ய முடியாதென்பது தெளிவாக இல்லையா? ஆகவே, இன்றைய மாநகரங்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வளவுதான் நல்ல மனதோடு முயற்சி செய்தாலும் பலனில்லாமல் போகும். ஆனால், பைபிளை ஆராய்பவர்கள் இன்றைய நகரங்களின் பிரச்சினைகளைக் கண்டு மனம் சோர்ந்துபோவதில்லை. ஏனெனில், மனிதனால் இந்த பூமியை நன்றாக கவனித்துக்கொள்ள முடியாது என்பதற்கு இது மற்றொரு அத்தாட்சியே என அவர்கள் அறிந்திருக்கின்றனர். இன்று விரிவடைந்து வரும் குழப்பம் நிறைந்த மாநகரங்கள், பைபிளில் எரேமியா 10:23-ல் (பொது மொழிபெயர்ப்பு) உள்ள வார்த்தைகளையே ஆணித்தரமாக நிரூபிக்கின்றன: “மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை; நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை.” மனிதன் தன்னைத்தானே ஆண்டுகொள்ள முயன்றதால்தான் பூதாகரமான பிரச்சினைகள் எங்கும் பரவியுள்ளன. அவை மாநகரங்களில் இன்னும் அதிகமாகிவிட்டன.
ஆகவே வெளிப்படுத்துதல் 11:18-ல் உள்ள பைபிளின் வாக்குறுதி, உலகமுழுவதிலும் உள்ள நகரவாசிகளுக்கு ஆறுதலான நம்பிக்கை அளிக்கிறது. அங்கே, ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கடவுள் அழித்துவிடுவார்’ என வாசிக்கிறோம். இது வருத்தம் ஏற்படுத்துவதற்கு பதிலாக மனிதனுக்கு சந்தோஷமான ஓர் எதிர்காலம் இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஓர் அரசாங்கம் அல்லது ராஜ்யத்தின் மூலம் இந்த பூமியின் நிர்வாகத்தை கடவுள் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்வார் என அது வாக்குறுதி அளிக்கிறது. (தானியேல் 2:44) இனியும் கோடிக்கணக்கானோர் கற்பனை செய்ய முடியாத ஏழ்மையில், நல்ல வீட்டுவசதியற்ற, அடிப்படை சுகாதாரமும் சுயமரியாதையும் அற்ற, நம்பிக்கையற்ற நிலையில் தவிக்கமாட்டார்கள். கடவுளுடைய ராஜ்யத்தில் வாழும் மக்கள் யாவரும் பொருளாதார செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும், அருமையான வீட்டுவசதியையும் அனுபவித்து மகிழ்வார்கள்.—ஏசாயா 33:24; 65:21-23.
இந்தப் புதிய உலகமே, இன்றைய மாநகரங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடைமுறையான, நம்பத்தக்க தீர்வு.(g01 4/8)
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
அநேக நகர்ப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவிக்க பெரும் முயற்சிகள் செய்யப்படுகின்றன
நேபிள்ஸ், இத்தாலி
நியூ யார்க் மாநகரம், அ.ஐ.மா.
சிட்னி, ஆஸ்திரேலியா
[படத்திற்கான நன்றி]
SuperStock
[பக்கம் 10-ன் படம்]
இன்றைய நகரவாசிகளின் பிரச்சினைகளுக்கு கடவுளுடைய புதிய உலகமே தீர்வு