அனைவருக்கும் நல் ஆரோக்கியம்—எட்டக்கூடிய இலக்கா?
நீங்களும் உங்களுடைய குடும்பமும் நல் ஆரோக்கியத்தோடு வாழ விரும்புகிறீர்களா? இதில் என்ன சந்தேகம், ஆரோக்கியமாக வாழவே விரும்புவீர்கள். ஆனால், நாம் எப்பொழுதாவது சிறுசிறு வியாதிகளால் அவதிப்படுகிறபோதிலும், லட்சோப லட்சம் பேருக்கு வியாதியே வாழ்க்கை என்ற கதியாகிவிட்டது.
என்றாலும், வியாதி எனும் கொடியவனின் கொட்டத்தை அடக்குவதற்கு பெரும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஐக்கிய நாட்டு சங்கத்தின் மேற்பார்வையில் செயல்படும் உலக சுகாதார நிறுவனத்தை (WHO) கவனியுங்கள். 1978-ல், WHO ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்திற்கு 134 நாடுகளிலிருந்தும் 67 ஐநா நிறுவனங்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஆரோக்கியம் என்பது ஏதோ வியாதியிலிருந்து விடுதலை பெறுவதை மட்டுமே அர்த்தப்படுத்தாது என்பதை ஒத்துக்கொண்டார்கள். ஆரோக்கியம் என்பது “சரீர, சமூக, மனோ ரீதியில் பூரண சுகத்தோடு இருக்கும் ஒரு நிலை” என அவர்கள் அறிவித்தார்கள். ஆரோக்கியம் என்பது “அடிப்படை மனித உரிமை” என அறிவிக்கும் அளவுக்கு அந்தப் பிரதிநிதிகள் தைரியமாக நடவடிக்கை எடுத்தார்கள்! இவ்வாறு, “உலகிலுள்ள அனைவருக்கும் போதுமான அளவு ஆரோக்கியத்தை” அடையும் இலக்கை WHO வைத்தது.
இப்படிப்பட்ட இலக்கு கவர்ச்சிகரமாகவும் உயர்ந்த இலட்சியமாகவுங்கூட இருக்கிறது. ஆனால் இதை என்றாவது அடையும் சாத்தியம் இருக்கிறதா? மனிதன் முயற்சி செய்யும் எல்லா துறைகளையும்விட, மருத்துவத் துறை நிச்சயமாகவே மிகவும் நம்பகமான துறையாக, வியந்து பாராட்டத்தக்க துறையாக விளங்குகிறது. தி ஈரோப்பியன் என்ற பிரிட்டிஷ் செய்தித்தாளின்படி, “‘அற்புத குணமளிக்கும்’ நிவாரணி, அதாவது ஒரு பிரச்சினைக்கு ஒரு மாத்திரை என்ற பாரம்பரிய மருத்துவ கொள்கைக்கு” மாறும் அளவுக்கு மேலை நாடுகளில் வாழும் மக்கள் முன்னேறியிருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், ஒவ்வொரு வியாதிக்கும், எளிமையான, நேரடியான நிவாரணியை மருத்துவம் தரும்படி நாம் எதிர்பார்க்கிறோம். இப்படிப்பட்ட இமாலய எதிர்பார்ப்பை மருத்துவ துறை உண்மையிலேயே நிறைவேற்றுமா?(g01 6/8)