பெற்றோரின் புறக்கணிப்பும்—ஆண்டவரின் அரவணைப்பும்
பர்னடெட் ஃபின் சொன்னபடி
எனக்கு நான்கு வயதுகூட முடியவில்லை. என் மூன்று அக்காமாருடன் என்னையும் கான்வென்ட்டில் சேர்த்துவிட்டனர். அப்போது பர்டீக்கு 12 வயது, ஃபிலஸுக்கு 8 வயது, அன்னமேக்கு 7 வயது. அப்பா அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தால் வாரக்கணக்கில் காட்டுக் கூச்சல் போட்டதை இவர்கள் மூவருமே இன்னும் சொல்லிக் காட்டுவார்கள். எங்களை ஏன் கான்வென்ட்டில் சேர்த்தனர்?
பெரிய கத்தோலிக்க குடும்பத்தில் 1936-ம் வருடம் மே 28 அன்று பிறந்தேன். சின்னப் பிள்ளைகளாய் இருந்த நாங்கள் அயர்லாந்தில் வெக்ஸ்ஃபர்ட் மாவட்டத்தைச் சேர்ந்த டன்கார்மிக் என்ற இடத்தில் ஒரு சிறிய வீட்டில் அப்பா அம்மாவுடன் வசித்து வந்தோம். எங்கள் வீட்டில் நான் எட்டாவது பிள்ளை; அண்ணன், அக்காமார் ஏழு பேருடனும் சேர்ந்து ஒரு பெரிய படுக்கையில் நான் படுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கடுத்து பிறந்த தம்பிக்கும் தங்கைக்கும் டிரெஸ்ஸிங் டேபிள் டிராயர்தான் படுக்கை.
எங்கள் அப்பா கடின உழைப்பாளி, பண்ணை தொழிலாளி. அவர் சம்பாதித்த பணமோ ரொம்ப கொஞ்சம்; ஆகவே எங்கள் குடும்பம் வயிற்றுப்பாட்டுக்கே திண்டாடியது. பள்ளிக்குச் சென்று வந்த என் அண்ணன்மாருக்கும் அக்காமாருக்கும் எப்பொழுதாவதுதான் அம்மா மதிய உணவை சிறிதளவில் கொடுத்தனுப்புவார்கள். அப்போது அயர்லாந்து நாடு முழுவதும் வறுமையில் வாடியதாலும் ஈவிரக்கமற்ற கத்தோலிக்க சர்ச்சின் ஆதிக்கத்தில் இருந்ததாலும் எங்கள் குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமாய் இருந்தது.
எங்கள் குடும்பத்தினர் தவறாமல் சர்ச்சுக்குப் போய்வந்தனர்; ஆனாலும் அம்மாவுக்கு ஆன்மீகத்தில் அந்தளவுக்கு ஆர்வமிருக்கவில்லை. என்றாலும் அவர்கள் கணப்படுப்பு முன் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில் மதசம்பந்தமான புத்தகம் எதையாவது வாசிப்பதைப் பார்த்த நினைவு என் அக்காமாருக்கு இருக்கிறது. அவ்வாறு வாசித்ததில் சிலவற்றை எங்களுக்கு சொல்லிக் கொடுக்க அம்மா முயலுவார்கள்.
“அம்மா எங்கே?”
என்னை கான்வென்ட்டில் சேர்த்த நாளை என்னால் மறக்கவே முடியாது. ஹாலில் நின்று அப்பாவும் அம்மாவும் ஒரு கன்னியாஸ்திரீயுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறியாத நான் அங்கிருந்த பிள்ளைகளோடு சேர்ந்து ஜாலியாக விளையாட ஆரம்பித்துவிட்டேன். திடீரென்று சுற்றும்முற்றும் பார்த்தபோது, அப்பாவையும் அம்மாவையும் காணவில்லை; எனக்கு திக்கென்றது. “அம்மா எங்கே?” என்று பதறினேன்; ஓவென்று கதறினேன். ஆரம்பத்தில் சொன்னபடி, இவ்வாறே ஏக்கத்தில் வாரக்கணக்காக அழுதேன்.
என் மூன்று அக்காமாராவது பக்கத்தில் இருந்தது எனக்கு கொஞ்சம் ஆறுதலைத் தந்தது. ஆனால் அவர்கள் கான்வென்ட்டிலேயே வேறொரு இடத்தில் இருந்தார்கள்; அதனால் அடிக்கடி அவர்களைப் பார்க்க முடியவில்லை. குட்டிப் பிள்ளைகளாகிய நாங்கள் எல்லாரும் தூங்கி இரண்டு மணிநேரம் கழித்துத்தான் அவர்கள் தூங்குவார்கள்; அதனால் அவர்கள் படுக்கப்போகும் சத்தம் கேட்கும்வரை நான் தூங்காமல் முழித்துக்கொண்டே இருந்தேன். அப்புறம் திருட்டுத்தனமாய் படுக்கையை விட்டு எழுந்து மேல் மாடிக்குப் போய், அவர்கள் கைகாட்டும் வரை அங்கேயே நின்றேன். அவ்வாறு கைகாட்டும் அந்த விசேஷமான நேரத்துக்காக நாளெல்லாம் காத்துக்கொண்டே இருந்தேன்.
பெற்றோரை பார்க்க கான்வென்ட்டில் அனுமதிப்பதாக தெரியவில்லை. ஆகவே எங்கள் பெற்றோரை பார்க்கவே முடியவில்லை. இந்தப் பிரிவு என்னை வாட்டியெடுத்தது. எனக்குத் தெரிந்து என் பெற்றோர் பார்க்க வந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்திலும்கூட நான் அவர்கள் பக்கத்தில் போகவில்லை, அவர்களும் எனக்கருகில் வரவில்லை. என்றாலும் அவர்கள் எங்களைப் பார்க்க வந்திருந்த வேறு சந்தர்ப்பங்களும் என் அக்காமாருக்கு நினைவிருக்கிறது.
கொஞ்ச நாள் கழித்து, என் குடும்பம், என் வீடு, என் உலகம் என எல்லாமே எனக்கு கான்வென்ட்தான் என்றானது. நான் அங்கிருந்த 12 வருடங்களில் இரண்டே இரண்டு தடவைதான் வெளி உலகத்தைப் பார்க்க எப்படியோ துணிந்து போய்விட்டேன். அருகிலிருந்த நாட்டுப்புறத்துக்கு இவ்வாறு சுற்றுலா போய் வந்தது அலாதி இன்பத்தைத் தந்தது, ஏனென்றால் அங்கு போனபோது மரங்களையும் மிருகங்களையும் பார்க்க முடிந்ததே. அவ்வாறு போயிருக்காவிட்டால், சிறுமிகளாகிய நாங்கள் கார்களையும் பஸ்களையும் கடைத் தெருவையும் எங்கே பார்த்திருக்க முடியும்; பாதிரியாரைத் தவிர வேறு ஆண்களையே பார்க்க எங்களுக்கு வாய்ப்பிருக்கவில்லை.
கான்வென்ட் வாழ்க்கை
கான்வென்ட் வாழ்க்கைக்கு சில நல்ல அம்சங்கள் இருந்தன, ஆனால் பல கெட்ட அம்சங்களும் இருந்தன. ஓர் அருமையான இளம் கன்னியாஸ்திரீ கடவுளைப் பற்றி தனக்குத் தெரிந்ததை எங்களுக்கு மிக நன்றாக சொல்லிக் கொடுத்தார்கள். அரவணைக்கும் ஓர் அன்புள்ள அப்பாதான் கடவுள் என்றார்கள். அது எனக்கு இதமாய் இருந்தது; அந்த நாள் முதலே கடவுளை என் அப்பாவாக ஏற்க முடிவு செய்தேன்; ஏனெனில் அவர் என்னைப் பெற்ற அப்பாவைவிட அன்பாகவும் தயவாகவும் இருந்தார். அப்போதிலிருந்து கடவுளிடம் ஒரு சிறுபிள்ளையைப் போல எளிமையாக ஜெபம் செய்தேன்; அவரிடம் எக்கச்சக்கமாய் பேசி மகிழ்ந்தேன். அந்த கன்னியாஸ்திரீ கான்வென்ட்டைவிட்டு போய்விட்டபோதோ மனமுடைந்து போனேன்.
திருப்தியான அடிப்படை கல்வி பயில வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். ஆனாலும் அன்றாடம் வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்த “டே கேர்ல்ஸ்” என்று அழைக்கப்பட்ட பிள்ளைகள் மட்டும் உசத்தியாக நடத்தப்பட்டது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. அவர்களெல்லாரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்; அவர்கள் வந்தவுடன் நாங்கள் எல்லாரும் வகுப்பறைகளை விட்டு வெளியேற வேண்டும். நாங்கள் எல்லாரும் அனாதைப் பிள்ளைகளே என்றும் எங்கள் நிலைக்குத் தக்கவாறுதான் நாங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கன்னியாஸ்திரீகள் அடிக்கடி எங்களுக்கு நினைப்பூட்டுவார்கள்.
கான்வென்ட்டில் விதிமுறைகளுக்கு பஞ்சமே இருக்கவில்லை. அவற்றில் சில நியாயமானவையாய் தோன்றின; அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் தேவைதான் என்று எங்களில் பலருக்குப் புரிந்தது. நடை உடை பாவனை சம்பந்தமாக நல்ல நல்ல பாடங்கள் புகட்டப்பட்டன. இவற்றையெல்லாம் நான் மறக்கவே இல்லை, அவை அனைத்தும் என் வாழ்க்கைக்கு நல்வழி காட்டியுள்ளன. ஆனால் சில விதிமுறைகளை நினைத்தால் அற்பமானவையாகவும் நியாயமற்றவையாகவும் தோன்றும்; மற்றவையோ குழப்பமூட்டும், அதிக வேதனை அளிக்கும். உதாரணமாக, இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தாலும் தண்டனை கிடைக்கும்; கழிப்பறைக்குச் செல்ல நேர்ந்தாலும் தண்டனை கிடைக்கும்.
ஒருநாள் படிக்கட்டில் ஏறும்போது என்னோடு சேர்ந்து ஏறின பிள்ளையிடம் நான் பேச்சை ஆரம்பித்தேன். அவ்வளவுதான், ஒரு கன்னியாஸ்திரீ என்னை கூப்பிட்டு தண்டனை கொடுத்தார்கள். தண்டனை என்னவென்று தெரியுமா? அயர்லாந்து நாட்டு கடுங்குளிர் காலம் முழுக்க வெயில் கால மெல்லிய உடையையே அணிய வேண்டியதாயிற்று! நானோ அடிக்கடி நோய்வாய்ப்படுபவள்; பெரும்பாலும் ஆஸ்துமாவாலும் டான்ஸிலைட்டிஸாலும் அவதியுற்றேன். என் உடல்நிலை படுமோசமாகி காசநோயால் (டிபி) பீடிக்கப்பட்டேன்; கான்வென்ட்டில் அநேக பிள்ளைகளுக்கு காசநோய் வந்துவிட்டது. எங்களை தனியே வேறு அறையில் தங்க வைத்தார்கள், ஆனால் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை; அதனால் சில பிள்ளைகள் இறந்துவிட்டார்கள், அதில் என் உயிர்த்தோழியும் ஒருத்தி.
விதிமுறைகளை துளி மீறிவிட்டாலும் எங்களில் சிலருக்கு செம்மையாக அடி கிடைத்தது. ஒருநாள் அஸெம்பிளி நேரத்தில் ஒரு பிள்ளை கன்னியாஸ்திரீயிடம் இரண்டு மணிநேரத்திற்கும் மேல் அடிவாங்கியதை நாங்கள் பார்த்தோம். எங்கள் எல்லாருக்கும் அழுகை வந்துவிட்டது. அதற்கென்று எல்லா கன்னியாஸ்திரீகளும் மோசமானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் இன்று வரை என்னில் எழும் கேள்வி என்னவென்றால், கேட்க நாதியற்ற பிள்ளைகளை அந்தளவுக்கு கொடுமையாய் யாராவது நடத்துவார்களா என்பதுதான். அதை இன்னமும் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறேன்.
பள்ளிப் படிப்பு முடிந்த பின்பு பர்டீயும் ஃபிலஸும் கான்வென்ட்டைவிட்டு வெளியேறினர்; அன்னமேயும் நானும் மட்டும் தனித்து விடப்பட்டோம். எனக்கு நீ உனக்கு நான் என்றே எங்கள் இருவருக்கும் தோன்றியது. அன்னமே என்னைப் பலவாறு தேற்றுவாள்; ஒருநாள் அப்பா அம்மா வந்து எங்களை அந்த கான்வென்ட்டிலிருந்து கண்காணாத இடத்திற்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள் என்றும் அப்போது இந்த கன்னியாஸ்திரீகளின் முகத்திலேயே விழிக்க வேண்டியதில்லை என்றும் சொல்லி கதையளப்பாள். அன்னமேயும் படிப்பை முடித்து கான்வென்ட்டை விட்டு வெளியேறினாளோ இல்லையோ, என் நெஞ்சம் கனத்துவிட்டது. அதன் பிறகு மூன்று வருடத்தை எப்படியோ தள்ளினேன்.
வெளி உலகில் வாழ்க்கை
கான்வென்ட்டை விட்டு 16 வயதில் வெளியேறியபோது எனக்குள் திகில் பரவியது. கான்வென்ட் சுவருக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே காலந்தள்ளிவிட்டேன்; அதனால் செய்வதறியாது திகைத்தேன். பஸ்ஸில் ஏறினபோது டிக்கெட்டிற்கு பணம் கேட்டார்கள்; எனக்கோ டிக்கெட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனாலும் என்னிடம் சல்லிக்காசுகூட இல்லாததால் அங்கேயே பஸ்ஸை நிறுத்தி இறக்கிவிட்டார்கள்; நான் போக வேண்டிய இடத்திற்கு நடந்தே செல்ல வேண்டியிருந்தது. மற்றொரு சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் ஏற விரும்பினேன்; ஆனால் பஸ் வரவில்லை. பஸ்ஸில் செல்வதற்கு பஸ் ஸ்டாப் போக வேண்டும் என்பதுகூட அப்போது எனக்குத் தெரியாது.
என்றாலும் தைரியசாலி போல காட்டிக்கொண்டு, நான் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் எப்படியோ மெல்ல மெல்ல கற்றுக்கொண்டேன். அங்குமிங்கும் தேடியலைந்து கடைசியில் ஒரு சின்ன வேலை எனக்கு கிடைத்தது. ஆனால் சில மாதங்கள் வேலை பார்த்த பிறகு, என் அம்மாவை பார்க்க முடிவு செய்து அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அங்குப் போனபோது, பிறந்ததிலிருந்தே பார்த்திராத என் தம்பி தங்கைகளையும் முதன்முறையாக பார்க்க நேர்ந்தது; ஆகமொத்தம் என் உடன்பிறந்தவர்கள் அப்போது 14 பேராகிவிட்டனர். அவர்களோடு சேர்ந்து தங்க வசதி இல்லாததால், வேல்ஸிலிருந்த என் அக்கா அன்னமேயுடன் நான் தங்கும்படி என் பெற்றோர் ஏற்பாடு செய்தார்கள்; என் அப்பா என்னை அங்கு கொண்டுபோய் விட்டுவிட்டு உடனே வீடு திரும்பிவிட்டார்.
கிட்டத்தட்ட நான் கைவிடப்பட்ட நிலைக்கு ஆளாகிவிட்டேன்; ஆனால் எப்படியோ சமாளித்துக் கொண்டேன். பின்பு, 1953-ல், இங்கிலாந்திலிருந்த லண்டனுக்குச் சென்றேன்; அங்கு லீஜன் ஆஃப் மேரி எனப்படும் பாமர ரோமன் கத்தோலிக்க நல அமைப்பில் சேர்ந்தேன். அவர்களோடு சேர்ந்து வேலை செய்தது எனக்கு திருப்தியளிக்கவில்லை. ஆன்மீக பசிக்கு உணவை எதிர்பார்த்தே அங்கு போய்ச் சேர்ந்தேன். ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேச மிகவும் ஆர்வமாய் இருந்தேன். ஆனால் அந்த அமைப்பினரோடு சேர்ந்து செய்த வேலையோ உலகப் பிரகாரமான இயல்புடையதாய் இருந்தது; அங்கு ஆன்மீக கலந்துரையாடலுக்கு நேரமேயில்லை என்றே தோன்றியது.
லண்டனில், என் அண்ணன்களின் நண்பரான பேட்ரிக்கை சந்தித்தேன். எங்களுக்குள் காதல் மலர்ந்து, 1961-ல் திருமணம் செய்துகொண்டோம். எங்களது முதல் இரண்டு பிள்ளைகளான அஞ்சலாவும் ஸ்டீவனும் அங்குதான் பிறந்தனர். அதற்குப் பிறகு 1967-ல் நாங்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்டோம்; எங்கள் மூன்றாவது குழந்தை ஆண்ட்ரூ அங்குதான் பிறந்தான். நாங்கள் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த பாம்பாலா என்ற நாட்டுப்புற டவுனில் குடியேறினோம்.
கடைசியில் ஆன்மீக உணவு
ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர்ந்த கொஞ்ச நாட்களில் பாம்பாலாவில் பில் லாய்ட் என்பவர் பைபிளை பற்றி பேசுவதற்காக எங்களிடம் வந்தார். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பைபிளிலிருந்து டாண் டாண் என்று பதில் கிடைத்தபோது சிலிர்த்துப் போனேன். பில் சொன்னவற்றிலிருந்து இதுதான் சத்தியம் என்பதை நான் புரிந்துகொண்டேன்; ஆனாலும் அவர் சீக்கிரம் போய்விடக்கூடாது என்பதற்காகவும், பைபிளைப் பற்றி இன்னும் அதிகமாய் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவரிடம் எக்கச்சக்கமாய் தர்க்கம் செய்தேன். பிறகு, நான் வாசிப்பதற்காக ஒரு பைபிளையும் சில பத்திரிகைகளையும் பில் எடுத்து வந்தார்.
அந்தப் பத்திரிகைகள் மிக நன்றாக இருந்தன; ஆனால் அவற்றை பிரசுரித்தவர்கள் திரித்துவத்தை நம்புவதில்லை என்பதை தெரிந்துகொண்ட போதோ அதிர்ச்சியடைந்தேன். அவற்றை வாசிப்பது பேட்ரிக்கின் விசுவாசத்திற்கு பங்கம் விளைவிக்குமோ என்று நினைத்து அவற்றை ஒளித்து வைத்துவிட்டேன். அடுத்து பில் வரும்போது அவற்றை அவரிடமே திருப்பி கொடுத்துவிட நினைத்திருந்தேன். அடுத்த முறை அவர் வந்தபோதோ, ஒரு கடவுளில் மூவர் என்ற கொள்கை பைபிள் போதனைகளுக்கு நேர் முரணானது என்பதற்கு ஆதாரம் காட்டினார். சீக்கிரத்திலேயே இயேசு கடவுளுடைய குமாரன் என்பதும், அவருடைய பிதாவாகிய யெகோவா தேவனால் அவர் படைக்கப்பட்டவர் என்பதும் எனக்கு தெளிவாகிவிட்டது; ஆகவே அவருக்கு ஓர் ஆரம்பம் இருந்தது, அதனால்தான் பிதா இயேசுவைவிட பெரியவர் என்று நன்றாக விளங்கிக் கொண்டேன்.—மத்தேயு 16:16; யோவான் 14:28; கொலோசெயர் 1:15; வெளிப்படுத்துதல் 3:14.
ஒரு கத்தோலிக்கப் பெண்ணாக நான் கற்றறிந்த மற்ற விஷயங்களும் தவறு என்று புரிந்துகொண்டேன். உதாரணமாக, மனிதருக்கு அழிவில்லாத ஓர் ஆத்துமா இருக்கிறது என்றோ வதைக்கும் ஓர் எரிநரகம் இருக்கிறது என்றோ பைபிள் கற்பிப்பதில்லை. (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) அவற்றை அறிந்தது என்னே ஓர் அற்புத நிம்மதியை அளித்தது! நான் நேசித்த, ஆனால் யாரென்றே அதுவரை தெரிந்திராத என் பிதாவை கண்டுபிடித்துவிட்டபோது எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை; தலைகால் புரியாமல் ஒருநாள் சமையலறையில் துள்ளிக் குதித்து நடனமே ஆடிவிட்டேன். எனக்கிருந்த ஆன்மீக பசிக்கு ஆகாரம் கிடைத்ததால் மெல்ல மெல்ல திருப்தி ஏற்பட்டது. புதிதாக கண்டடைந்த இந்த நம்பிக்கைகளில் பேட்ரிக்குக்கும் அளவிலா ஆர்வம் ஏற்படவே, என் சந்தோஷம் உச்சத்தை எட்டியது.
டமோரா என்ற மற்றொரு நாட்டுப்புற டவுனில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் ஒரு மாநாட்டிற்கு வரும்படி பில் எங்களை அழைத்தார். பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதிலும் அவரது அழைப்பிற்கு இணங்கி டமோரா டவுனுக்கு வெள்ளிக்கிழமை மாலை போய் சேர்ந்தோம். சனிக்கிழமை காலையில் வீட்டுக்கு வீடு பிரசங்க ஊழியத்திற்கென மாநாட்டு மன்றத்தில் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். கொஞ்ச நாளாகவே நாங்கள் இந்த ஊழியத்தில் கலந்துகொள்ள நினைத்திருந்ததால் அந்த எதிர்பார்ப்பு என்னையும் பேட்ரிக்கையும் பரவசமடையச் செய்தது. ஆனால், நாங்கள் இருவருமே புகைபிடித்து வந்ததால் அந்த பிரசங்க ஊழியத்தில் கலந்துகொள்ள முடியாது என்று பில் சொல்லிவிட்டார். என்றாலும், பில் அந்த இடத்தைவிட்டு சென்றதும் மற்றொரு தொகுதியுடன் சேர்ந்துகொண்டோம். அவர்களும் எங்களை சாட்சிகள் என்று நினைத்து தங்களோடு சேர்த்துக் கொண்டார்கள்.
ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டுமானால் சில வேதப்பூர்வமான தகுதிகளை பெற வேண்டும் என்பதை விரைவில் கற்றுக்கொண்டோம். (மத்தேயு 24:14) முடிவில் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டோம்; நானும் பேட்ரிக்கும் யெகோவா தேவனுக்கு எங்களை ஒப்புக்கொடுத்து, அக்டோபர் 1968-ல் தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றோம்.
எங்கள் விசுவாசத்திற்கு வந்த சோதனைகள்
பைபிள் அறிவில் நாங்கள் வளர வளர, யெகோவாவுடன் எங்கள் உறவும் பலப்பட்டது; கடவுளுடைய வாக்குறுதிகளில் எங்கள் நம்பிக்கையும் நங்கூரம்போல் உறுதியாக வேரூன்றியது. சிறிது காலத்திற்குப்பின், ஆஸ்திரேலியாவின் தலைநகரான கேன்பராவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளது சபை ஒன்றில் பேட்ரிக் ஒரு மூப்பராக நியமிக்கப்பட்டார். பிள்ளைகளை கர்த்தருக்கேற்ற சிட்சையில் வளர்ப்பதற்காக எங்களால் முடிந்ததைச் செய்தோம்; டீனேஜர்களை வளர்ப்பதில் சாதாரணமாக வரும் எல்லா சவால்களையும் சமாளித்து வந்தோம்.—எபேசியர் 6:4.
வருத்தகரமாக, 18 வயதில் எங்கள் மகன் ஸ்டீவன் கார் விபத்தில் இறந்துவிட்டான். துக்கம் ஒருபக்கம் இருந்தாலும், ஸ்டீவன் யெகோவாவின் வணக்கத்தானாக இருந்தது எங்களை நிஜமாகவே தேற்றியது. ஞாபகார்த்த கல்லறைகளில் உள்ளவர்களை யெகோவா உயிர்த்தெழுப்பும் நாளில் அவனைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம். (யோவான் 5:28, 29) அதற்கடுத்த வருடமான 1983-ல், எங்கள் மகள் அஞ்சலாவுடன் சேர்ந்து முழுநேர ஊழியத்தில் கலந்துகொண்டேன்; அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறேன். பைபிள் சார்ந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கு சொல்வது, வாழ்க்கையை நம்பிக்கையான கண்ணோட்டத்தில் காண எனக்கு உதவியிருக்கிறது; அதுவே என் இதயத்திலுள்ள வேதனையை போக்க உதவியிருக்கிறது. சமீபத்தில் என் அக்கா அன்னமே வேல்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளை படிக்க ஆரம்பித்திருப்பதை கேள்விப்பட்டபோது என் உள்ளமெல்லாம் குளிர்ந்தது.
பேட்ரிக்குக்கு 1984-ல் உடல்நல குறைவு ஏற்பட்டது; அவருக்கு வந்த நோய் என்னவென்றே யாருக்கும் பிடிபடாத காலம் அது. பிறகுதான் அது எப்பொழுதும் களைப்படையச் செய்யும் நோய் (CFS) என்று கண்டுபிடிக்கப்பட்டது. கடைசியில் அவர் பார்த்து வந்த வேலையை விட்டுவிடும் நிலை ஏற்பட்டது; அத்துடன் ஒரு கிறிஸ்தவ மூப்பராகவும் அவரால் சேவிக்க முடியவில்லை. மகிழ்ச்சிகரமாக, அந்நோயிலிருந்து ஓரளவு குணமடைந்துள்ளார்; இப்பொழுது மறுபடியும் சபையில் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராக சேவித்து வருகிறார்.
எனது பிள்ளைப் பருவம் கட்டுப்பாட்டையும் சுயதியாகத்தையும் எனக்கு கற்றுக்கொடுத்ததுடன், எளிய வாழ்க்கை வாழவும், உள்ளதை வைத்து திருப்தியுடன் வாழவும்கூட கற்றுக்கொடுத்தது. ஆனால், என் கூடப்பிறந்தவர் 11 பேரும் வீட்டிலேயே இருந்தபோது, பெண் பிள்ளைகளாகிய நாங்கள் 4 பேர் மட்டும் ஏன் கான்வென்ட்டில் விடப்பட்டோம் என்ற கேள்விதான் எப்பொழுதுமே என்னை துளைத்தெடுத்திருக்கிறது. என் பெற்றோர் இறந்துபோய் வருடக்கணக்காகிறது; என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத அவர்களது சூழ்நிலையில், ஆனமட்டும் மிகச் சிறந்ததை செய்தார்கள் என்று எண்ணி என்னையே தேற்றிக்கொள்கிறேன். அவையெல்லாம் கடினமான காலங்கள். எனவே கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டி இருந்திருக்கும். என்றாலும், என் பெற்றோருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; ஏனெனில் அவர்கள் உயிராகிய பரிசை எனக்கு கடத்தியவர்கள், அத்துடன் அவர்களுக்கு மிகச் சிறந்ததாக தோன்றிய வழியில் என்னை கவனித்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு அப்பாவாக இருந்து என்னை அன்புடன் அரவணைத்த யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். (g01 6/22)
[பக்கம் 16-ன் படம்]
திருமணமான புதிதில்
[பக்கம் 17-ன் படம்]
எங்கள் பிள்ளைகள் சிறுவராக இருந்தபோது
[பக்கம் 17-ன் படம்]
இன்று பேட்ரிக்குடன்