ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
பைபிள் சத்தியம் பொலிவியாவிலுள்ள ஒரு கன்னியாஸ்திரீயை விடுவிக்கிறது
அநேக நேர்மை இருதயமுள்ள ஆட்கள் பொய் மதத்திலிருந்து வெளியேறி, பைபிள் சத்தியத்தை கற்று, உண்மையான கடவுளாகிய யெகோவாவை வணங்குவதற்காக வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு கன்னியாஸ்திரீ உட்பட, பொலிவியாவில் 7,600-க்கும் மேற்பட்டவர்கள் இவ்விதமாகச் செய்திருக்கிறார்கள்.
ஒன்பது வயதாக மட்டுமே இருந்தபோது, M——-க்கு யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு முதலாவதாக தொடர்பு ஏற்பட்டது. அவளுடைய வீட்டுக்கு ஒரு சாட்சி வந்தபோது அவள் கதவருகே சென்று பார்த்தாள். முதல்முறையாக யெகோவா என்னும் கடவுளின் பெயர் உச்சரிக்கப்படுவதை அவள் கேட்டாள். பல வருடங்களாக இது அவள் மனதில் பதிந்திருந்தது.
குடும்பத்தில் அவள் ஒரே பெண்ணாக இருந்தபடியால், அவள் கன்னியாஸ்திரீயாக வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. “கடவுளின் சேவையில் நான் இருக்கப் போவதைக் குறித்து நான் அதிக மகிழ்ச்சியடைந்தேன். இப்படித்தான் நான் நினைத்தேன்,” என்று M—— கூறுகிறார். கன்னிமாடத்தில் அநீதியையும் பாரபட்சத்தையும் அவள் பார்த்த போது அவள் சந்தோஷம் ஏமாற்றமாக மாறியது. அவள் இவ்வாறு சொல்கிறாள்: “வேதனை அளிப்பதாக இருந்த சோர்வான காலத்தையும் சரீர மற்றும் ஆவிக்குரிய அடிகளையும் என்னால் மறக்கவே முடியாது. இது கடவுளை அன்புள்ள ஒருவராக கருதுவதற்குப் பதிலாக இரக்கவுணர்ச்சியே இல்லாத தண்டனை கொடுக்கும் ஒரு நபராக நோக்கவே என்னை செய்வித்தது.”
இவ்வாறு அவள் தொடர்கிறாள்: “ஒரு கன்னியாஸ்திரீயாக ஆன சமயம் வரை பைபிளில் யெகோவா என்னும் பெயரை கண்டுபிடிப்பதில் நான் வெற்றியடையவில்லை. ‘யாவே,’ என்பதை மட்டுமே நான் கண்டுபிடித்தேன். அது என்னை குழப்பியது. யெகோவாவை பற்றி பேசிய அந்த ஜனங்களைப் பார்ப்பதற்காக, ஒரு நாள் நான் வெளியேகூட சென்றேன். ஆனால், என்னால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
“காலம் சென்றது, ஒருநாள் என் குடும்பத்தினரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் நான் ‘யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றம்,’ என்ற அடையாளத்தை பார்த்தேன். அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள் என்று சொல்ல விரும்பினேன். ஆனால் மன்றத்தில் ஒருவரும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று திரும்பிவந்தேன். அங்கே கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கூடி இருந்தவர்கள் மத்தியில் முழு கன்னியாஸ்திரீயின் உடையில் ஒருவரைப் பார்ப்பது அநேகருக்கு ஆச்சரியமாயிருந்தது தெரிந்தது. கூட்டத்திற்குப் பிறகு வேகமாக வெளியே செல்ல முயற்சி செய்தேன். என்றபோதிலும் சாட்சிகளில் ஒருவர் எனக்கு வாழ்த்துச் சொன்னார். எனவே நான் அவளைக் கேட்டேன், ‘அந்தப் பெயரை தாங்குவதன் மூலம் பரிசுத்தமானவரை நீங்கள் ஏன் தூஷிக்கிறீர்கள்?’ என்னுடைய கேள்வி ஒரு பைபிள் கலந்தாலோசிப்புக்கு வழிநடத்தியது. என்னுடைய குடும்பத்தினரின் வீட்டில் என்னை சந்திக்கும்படி ஏற்பாடுகளை நான் செய்துகொண்டேன். என்னுடைய பெற்றோர் அவளை வெளியேற்றினார்கள். என்றபோதிலும், இரண்டு மாதங்கள் கழித்து நாங்கள் சந்தித்தோம். ஒரு பைபிள் படிப்புக்காக என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள். கடவுளின் பெயரை கிறிஸ்தவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் அவள் கொடுத்த தகவல் என் மனதில் பதிந்தது. கன்னியாஸ்திரீயாக எனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பிரயோஜனமில்லாத காரியங்களை விட்டுவிட இந்த அத்தாட்சி தேவையான பெலத்தை எனக்கு கொடுத்தது.
“கன்னிமாடத்தில் என் வாழ்க்கையில் நடந்த அநேக காரியங்களை நான் நினைவுகூருகிறேன். உதாரணமாக, ஒரு சமயம் சாப்பிடுவதற்காக எனக்கு அதிக உணவு தேவைப்பட்டது. கன்னிமாடத்தில் கடிதங்கள் தணிக்கைச் செய்யப்படுவதை அறியாமலேயே, கொஞ்சம் அனுப்பும்படி என் பெற்றோருக்கு எழுதி கேட்டேன். அடுத்த சாப்பாட்டின் போது என் முன் ரொட்டியும் ஜெல்லியும் அதிகமான அளவில் வைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் சாப்பிடுமாறு நான் வற்புறுத்தப்பட்டேன். இப்பொழுது எனக்கு அளவுக்கு அதிகமான உணவு இருந்தது. இதை என் நண்பர்களிடம் நான் கூறினேன். சாப்பிட முடியாத ரொட்டியை துண்டுதுண்டாக்கி தரையில் பரப்பிவிடுமாறு ஒருத்தி கூறினாள். அதை நான் செய்த போது, ஒரு கன்னியாஸ்திரீ உடனடியாக என்னை பிடித்து தரையில் தள்ளினாள். என்னுடைய நாக்கினாலே தரைமுழுவதையும் சுத்தமாக்கும்படி கண்டிப்பான உத்தரவு போட்டாள். இந்த அறை பெரியதாக இருந்தது. இந்த உத்தரவுக்கு நான் கீழ்ப்படிந்துகொண்டிருக்கையில் அதிகமான சிரிப்பு சத்தமும் கேலி சத்தமும் எனக்குக் கேட்டது. எவ்விதமான இரக்கமும் எனக்குக் காண்பிக்கப்படவில்லை.
“அவை அனைத்திலிருந்தும் விடுதலையாயிருப்பது எத்தனை அற்புதமாக இருக்கிறது என்பதை என்னால் இப்போது பார்க்க முடிகிறது. எதிர்பார்த்தவிதமாகவே, இந்த விடுதலை அநேக தியாகங்களை உட்படுத்தியது. ஒரு காரியம், என் தகப்பனார் என்னை வீட்டிலிருந்து வெளியேற்றினார். இருந்தாலும் கன்னிமாடத்தை விட்டு வெளிவருவதற்கு முன்பு, சத்தியத்தைக் கற்றுக்கொள்ள அநேக இளம் கன்னியாஸ்திரீகளுக்கு உதவிசெய்யும் மிகப்பெரிய சிலாக்கியம் எனக்கு இருந்தது. யெகோவா தேவனுக்கு எங்களில் சிலர் எங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கிறோம் என்பதை குறிப்பிட மகிழ்ச்சியடைகிறேன்!
“கன்னிமாடத்தை விட்டு வெளியேறின பின்பு நல்ல ஊதியம் கிடைக்கின்ற ஆனால் அதிக நேரத்தை உட்படுத்தும் வேலைகளை நான் ஏன் ஒதுக்கிவிட்டேன் என்பதை புரிந்துகொள்வது என் தந்தைக்கு கடினமாக இருந்தது. என்றபோதிலும், கடவுளின் சேவைக்காக, எனக்கு அதிக நேரம் தேவையாய் இருந்தது. இப்பொழுது நான் ஒழுங்கான பயனியராக சேவிக்கிறேன். சிக்கல் இல்லாத ஆனால் பலன்தரும் வேலை. என்னுடைய தாயும் என் அண்ணன்மாரும் யெகோவாவின் சேவையில் என்னுடன் சேர்ந்துகொண்டிருப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.”
உண்மையாகவே, இந்த உலகத்தின் பொய் மத ஒழுங்குமுறையிலிருந்து ஒருவரை பைபிள் சத்தியம் விடுதலையாக்குகிறது. அது நீடித்திருக்கும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருகிறது.—யோவான் 8:32.