உலகை கவனித்தல்
குரங்கு சேட்டை
நிறைய குரங்குகளிடம் நிறைய டைப் ரைட்டர்களை கொடுத்தால் இறுதியில் அவை ஷேக்ஸ்பியரின் புத்தகங்களை முழுமையாக டைப் செய்துவிடும் என்பது சிலரின் ஊகம். எனவே இங்கிலாந்திலுள்ள பிளைமெளத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மாதத்திற்கு ஆறு குரங்குகளிடம் ஒரு கம்ப்யூட்டரைத் தந்தார்கள். குரங்குகள் “ஒரேவொரு வார்த்தையைக்கூட டைப் செய்யவில்லை” என அறிக்கை செய்கிறது த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாள். இங்கிலாந்தின் தென்மேற்கிலுள்ள பேன்டன் மிருகக்காட்சி சாலையிலிருந்த அந்த ஆறு குரங்குகள் “ஐந்து பக்கங்களுக்கு மட்டுமே டைப் செய்தன”; முக்கியமாக ஆங்கில எழுத்தான s-ஐயே அதிகமாக டைப் செய்திருந்தன. அந்தத் தாளின் முடிவில் j, a, l, m ஆகிய எழுத்துக்களையும் கொஞ்சம் டைப் செய்திருந்தன. இந்தக் குரங்குகள் கம்ப்யூட்டர் கீ போர்டை தங்கள் டாய்லட்டாகவும் பயன்படுத்திக் கொண்டன.” (g04 01/22)
பாம்பு நச்சுக்கு எதிர் நச்சு கோழி முட்டையில்
“பாம்புக் கடிக்கு சிகிச்சை அளிக்க உதவும் மருந்தின் அடிப்படைப் பொருட்களை கோழி முட்டையிலிருந்து பெறலாம் என இந்திய அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என்று த டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தித்தாள் அறிவிக்கிறது. சுமார் 12 வார வயதுள்ள கோழிகளின் ‘தசைக்குள் உயிருக்கு ஆபத்தற்ற அளவில் நச்சு’ செலுத்தப்படுகிறது; இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு ஊக்கியாக அதே நச்சு மறுபடியும் செலுத்தப்படுகிறது. 21 வாரங்களுக்குப் பிறகு அவை எதிர் நச்சுள்ள, நோய் எதிர்ப்பு பொருள்கள் அடங்கிய முட்டைகளை இட ஆரம்பிக்கின்றன. குதிரைகளிலிருந்து எதிர் நச்சை பெறுவதற்கு பதிலாக அதை கோழி முட்டையிலிருந்து இப்போது பெற முடியுமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்; ஏனெனில் குதிரையிலிருந்து “பாம்புக் கடி நச்சு முறிவை சேகரிப்பதற்கு அவை வேதனை மிகுந்த பரிசோதனைகளை சகிக்க வேண்டியிருக்கிறது” என்கிறது த டைம்ஸ். மிருகங்களை வைத்து பரீட்சித்ததில் இந்தப் புதிய தொழில்நுட்பம் ஏற்கெனவே வெற்றி அளித்திருப்பதாக ஆஸ்திரேலியாவிலுள்ள அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். முட்டையிலிருந்து பெறப்படும் எதிர் நச்சு மனிதர்களுக்குப் பிரயோஜனமாக இருந்தால் அது இந்தியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்; ஏனெனில் வருடத்திற்கு 3,00,000 பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள். இவர்களில் 10 சதவீதத்தினர் இதற்குப் பலியாகிறார்கள். (g04 01/08)
வண்ணத்துப் பூச்சியெனும் விமானம்
“வண்ணத்துப் பூச்சிகளால் எப்படி லாவகமாக, அதாவது குறைந்த வேகத்தில் சிரமமே இல்லாமல் வானில் வட்டமிடவும் பின்பக்கமாகவோ பக்கவாட்டிலோ பறக்கவும் முடிகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு வருடக்கணக்கில் அறிவியலாளர்கள் முயன்று வந்திருக்கிறார்கள்” என சொல்கிறது லண்டனில் வெளியாகும் தி இன்டிபென்டன்ட் செய்தித்தாள். இந்த புரியா புதிருக்கு இறுதியில் விடை கண்டுவிட்டதாக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். விசேஷமாக வடிவமைக்கப்பட்ட காற்றுக் குழாயில் (wind tunnel) சிவந்த அட்மிரல் வண்ணத்துப் பூச்சிகளை பறக்க விட்டு காற்றோட்டத்தைக் கவனித்தார்கள்; அந்தக் காற்றோட்டம் தெளிவாக தெரிவதற்காக மெல்லிய புகையை குழாயில் செலுத்தினார்கள். காற்றுக் குழாயிலுள்ள செயற்கை மலர்களிடம் வசீகரிக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் முன்னும் பின்னும் பறப்பதை அதிவேக டிஜிட்டல் காமராக்களின் உதவியோடு கண்காணித்தார்கள்; அந்தக் காமராக்கள் அவற்றின் இறக்கைகளைச் சூழ்ந்த காற்றோட்டத்தை பதிவு செய்தன. “வண்ணத்துப் பூச்சிகள் ஏதோ குருட்டாம்போக்கில் மனம் போல பறப்பதில்லை, ஆனால் பல்வேறு ஏரோடைனமிக் வழிமுறைகளை திறமையாக கட்டுப்படுத்தியே பறக்கின்றன” என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்தக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, வெறும் பத்து சென்டிமீட்டர் நீளமுள்ள இறக்கைகள் கொண்ட ரிமோட் கன்ட்ரோல் விமானத்தை தயாரிக்க முடியுமென அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். இந்த விமானங்களில் காமராக்கள் பொருத்தப்பட்டால் உட்புக முடியாத இடங்களுக்கு எல்லாம் பறந்து போய் புகைப்படம் எடுக்க முடியும். (g04 01/08)
சட்டப்படி விற்பனையான தந்தம்
1979 முதல் 1989 வரையான பத்தே ஆண்டுக்குள் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை பாதிக்கும் கீழாக குறைந்துவிட்டது. அவற்றின் தந்தத்தால் செய்யப்படும் பொருட்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்ததே இதற்கு ஒரு காரணமாகும். அத்துமீறி வேட்டையாடியவர்களின் கைகளில் தானியங்கி ஆயுதங்கள் விளையாடியது அதற்கு மற்றொரு காரணமாகும். இதனால், 1989-ல் மறைந்து வரும் உயிரினங்களின் சர்வதேச விற்பனை பற்றிய மாநாடு (CITES) தந்தத்தின் விற்பனைக்கு முழுமையாக தடைவிதித்தது. எனினும், 60 டன் தந்தத்தை விற்க தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, நமிபியா ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் CITES ஒரேவொரு முறை அனுமதியளித்ததாக ஆப்பிரிக்க வனவாழ்க்கை என்ற ஆங்கில பத்திரிகை அறிக்கை செய்கிறது. இந்தத் தந்தம் அத்துமீறி வேட்டையாடியவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அல்லது இயற்கையாகவே இறந்த விலங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட தந்தமாகும். தந்தத்தை விற்பதற்கு வேறு இரண்டு நாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது; ஏனென்றால் “தந்தம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதை அவற்றால் தடுத்து நிறுத்த முடியும் என்பதற்கு போதுமான அத்தாட்சியை அவை அளிக்கவில்லை” என அந்தக் கட்டுரை சொன்னது. (g04 01/08)
மல்லுக்கட்டும் விவசாயிகள்
ஓர் அறிக்கையின்படி, “உலகின் பல பகுதிகளில் பண்ணைப் பொருட்களின் உற்பத்தியை அதிகளவு ஊக்குவித்த பசுமைப் புரட்சியால் ஓர் இழப்பு ஏற்பட்டது; உலகிலேயே அதிக வறுமையில் அல்லாடிய லட்சக்கணக்கான ஆப்பிரிக்க விவசாயிகள் இன்னும் பரம ஏழைகளானதே அந்த இழப்பு” என்கிறது நியு சைன்டிஸ்ட் பத்திரிகை. எப்படி? 1950-களின் பிற்பகுதியிலிருந்து, ஜனத்தொகையின் திடீர் பெருக்கத்தால் ஏற்படப்போகும் பஞ்சத்தை எதிர்பார்த்து அமோக விளைச்சலைத் தரும் கோதுமை, அரிசி வகைகள் உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை ஏராளமான தானியத்தை உற்பத்தி செய்ததால் அவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டது. “இந்தப் புதிய வகைகளை பயிர் செய்ய முடிந்த விவசாயிகள் விலையில் சரிவு ஏற்பட்டபோதும் அமோக விளைச்சலைக் கண்டதால் லாபம் பெற்றார்கள், ஆனால் அப்படி பயிர் செய்ய முடியாதவர்கள் நஷ்டத்தை சந்தித்தார்கள்” என்கிறது நியு சைன்டிஸ்ட். மேலும், ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் பயிர் செய்வதற்கு ஏற்ப அத்தானியங்கள் உருவாக்கப்பட்டிருந்ததால் இந்த ஆப்பிரிக்க சூழல் புதிய தானிய வகைகளுக்கு ஒத்துவரவில்லை. (g04 01/22)
எச்சரிக்கை! தூங்கி வழியும் ஓட்டுநர்கள்
“ஓட்டுநர் சோர்வாக அல்லது தூக்கக் கலக்கத்தில் இருப்பது எங்குமுள்ள மோசமான பிரச்சினையாக நம் சமுதாயத்தில் இருக்கிறது” என குறிப்பிடுகிறது மெடிக்கல் ஜர்னல் ஆஃப் ஆஸ்ட்ரேலியா (MJA) என்ற பத்திரிகையில் வெளிவந்த ஓர் ஆராய்ச்சி. ஆராய்ச்சியாளர்களின்படி, “ஓட்டுநர்கள் தூக்கக் கலக்கத்தில் ஓட்டுவதே 20%-க்கும் அதிகமான சாலை விபத்துக்களுக்கு காரணமென ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.” “தூக்கக் கலக்க விபத்து, ஓட்டுநர் தனியாக இரவு வேளையில் அல்லது கோழித் தூக்கம் போடும் மதிய வேளையில் படு வேகமாக ஓட்டுவதால் ஏற்படுகிறது. MVA [மோட்டார் வாகன விபத்துக்கள்] ஏற்படுவதற்கான மற்ற காரணங்களைப் போலவே, தூக்கக் கலக்கத்தால் ஏற்படும் விபத்துக்களும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மத்தியிலேயே சகஜமானவையாக இருக்கின்றன” என MJA-ல் அறிக்கை செய்யப்பட்ட ஆராய்ச்சி சொல்கிறது. சரியாக தூங்காத பழக்கம் (OSA) என அறியப்படும் பொதுவான தூக்கக் கோளாறினால் அவதிப்படுபவர்களே வாகனம் ஓட்டுகையில் தூங்கிவிடும் ஆபத்திலிருக்கிறார்கள். “நடுத்தர வயதிலுள்ள சுமார் 25% ஆண்களை” OSA கோளாறு பாதிப்பதாக அந்த ஜர்னல் குறிப்பிடுகிறது. OSA கோளாறு உள்ளவர்கள் ஓட்டுகையில் எவ்வளவு சீக்கிரத்தில் தூங்கிவிடுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாதிருக்கலாம். (g04 01/22)
உருகும் பனிப்பாறைகள்
பருவ மழை தாமதித்ததால் இந்தியா, பஞ்சாபிலுள்ள நீர்த் தேக்கங்களில் தண்ணீர் மட்டம் குறைந்த சமயத்தில், சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்ரா அணைக்கட்டில் நீர் மட்டம் கடந்த வருடத்தைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்தது. காரணம்? சட்லெஜ் நதியின் முக்கிய கிளை நதி, 89 பனிப்பாறைகள் இருக்கும் பகுதி வழியாக பாய்ந்தோடி வந்ததுதான் என டௌன் டு எர்த் என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. “பருவ மழை பொய்த்தது அநேக பனிப்பாறைகள் உருகி ஓடுவதில் விளைவடைந்திருக்கிறது. மேகங்கள் இல்லாததால் கடுமையான சூரிய வெப்பம் பனிப்பாறைகளை தாக்கியிருக்கிறது. இதனுடன் தாங்க முடியாத உஷ்ணமும் சேர்ந்து கொள்ள பனிப்பாறைகள் பெருமளவு உருகுவதற்கு காரணமாகியிருக்கிறது” என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பனிப்பாறைகளை கண்காணிக்கும் விஞ்ஞானியாகிய சையத் இக்பால் ஹஸ்னேன் விளக்குகிறார். இப்படி உருகுவது பனிப்பாறை குளங்கள் நிரம்பி வழியும்படி செய்யலாம் என நிபுணர்கள் நினைக்கிறார்கள். மேலும், இப்படி பனிப்பாறைகள் சிறுத்து வருவது, எதிர்காலத்தில் தண்ணீர் விநியோகத்தைக் குறைத்து விடலாம்; அதுமட்டுமின்றி ஆற்றல் உற்பத்தியையும் வேளாண்மையையும் பெரிதளவு பாதித்துவிடலாம். (g04 01/22)