“விசுவாசத்திற்காக சிறை வாசம்”
போலந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
ஆர்பைட் மாக்ட் ஃபிரை (வேலை விடுதலை அளிக்கும்). இந்த வார்த்தைகள் ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் இரும்பு வாயிற்கதவுகளில் இந்நாள்வரை காணப்படுகின்றன. இந்த முகாம் செக் நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில், போலந்தின் தென்பகுதியில் இருக்கிறது.a ஆனால் இந்த வார்த்தைகளுக்கும் 1940-லிருந்து 1945 வரை அந்த வாயிற்கதவுக்குள்ளே சென்ற அநேகர் நடத்தப்பட்ட விதத்திற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்த வருடங்களின்போது ஆஷ்விட்ஸ் முகாமில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் நாஸிக்களின் கைகளில் செத்துமடிந்தார்கள். ஆனால், ஒரேவொரு தொகுதியிலிருந்த ஆட்கள் மட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் விடுவிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆனால் தங்கள் விடுதலைக்கு அவர்கள் கொடுக்க வேண்டியிருந்த விலை என்ன? யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு நபர் தான் இனி ஒரு யெகோவாவின் சாட்சியல்ல என்று பத்திரத்தில் கையெழுத்திடுவதே அவர் கொடுக்க வேண்டியிருந்த விலை; அப்படி செய்தால் அவர் விடுதலை செய்யப்படுவார். ஆனால் சாட்சிகள் பெரும்பாலோர் என்ன செய்யத் தீர்மானித்தார்கள்? இஷ்ட்வான் டீயாக் என்ற சரித்திராசிரியர் சொல்கிறபடி, சாட்சிகள் “பூர்வகால கிறிஸ்தவர்களைப் போலிருக்கவே தீர்மானித்தார்கள். பூர்வகால கிறிஸ்தவர்கள், ரோமப் பேரரசரின் பலிபீடத்தில் ஒரு சிறிய பலியைக்கூடச் செலுத்துவதற்குப் பதிலாக, தாங்கள் சிங்கங்களுக்குப் பலியாவதற்கே தீர்மானித்தார்கள்.” அவர்களுடைய உறுதியான தீர்மானம் நிச்சயமாக நினைவுகூரப்பட வேண்டிய ஒன்று, நினைவுகூரப்பட்டும் இருக்கிறது.
செப்டம்பர் 21, 2004 தொடங்கி இரண்டு மாதங்களுக்கு ஆஷ்விட்ஸ்-பிர்கனாவு அரசு அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது, அது முழுக்க முழுக்க யெகோவாவின் சாட்சிகளை கௌரவிப்பதற்காகவே நடத்தப்பட்டது. அந்தக் கண்காட்சிக்கு ஏற்றவொரு தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் தலைப்பு: “விசுவாசத்திற்காக சிறை வாசம்—நாஸிக்களின் ஆட்சியில் யெகோவாவின் சாட்சிகள்.” சரித்திர சம்பவத்தைச் சித்தரிக்கும் 27 காட்சி பலகைகள் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நாஸிக்களின் ஆட்சியில் நடுநிலைமை வகிப்பதற்கு சாட்சிகள் உறுதியுடன் தீர்மானம் எடுத்ததை அவை சித்தரித்தன.
சிறையில் ஒரு பெண்மணி எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்து கண்காட்சிக்கு வந்திருந்த அநேகர் மனதுருகிப் போனார்கள். நெதர்லாந்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணியின் பெயர் டெலியானா ராடமாகர்ஸ். அவர் தன் குடும்பத்தினருக்கு இவ்வாறாகக் கடிதம் எழுதியிருந்தார்: “நான் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு தீர்மானம் எடுத்திருக்கிறேன் . . . . நீங்கள் தைரியமாக இருங்கள், பயப்படாதீர்கள். யெகோவா நம்மோடுகூட இருக்கிறார்.” 1942-ல், டெலியானா ஆஷ்விட்ஸ் முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு மூன்று வாரங்கள்கூட இருக்கவில்லை, அதற்குள் இறந்துவிட்டார்.
ஆஷ்விட்ஸ் முகாமில் கிட்டத்தட்ட 400 சாட்சிகள் இருந்தார்கள். அந்த முகாமிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களில் மூன்று பேர் கண்காட்சியின் திறப்பு விழாவிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது மட்டுமல்லாமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள். முகாமில் எதிர்ப்பட்ட கஷ்டங்களைச் சமாளித்தபோது இருந்த அதே மன உறுதி இப்போதும் அவர்களிடம் தெரிந்தது.
அரசு அருங்காட்சியகத்தில் ஆய்வாளராக வேலை செய்கிற தெரேஸா வான்டார்ட்ஸைஹி, விசுவாசத்திற்காக சிறை வாசம்—ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் யெகோவாவின் சாட்சிகள் என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “இந்தச் சிறு தொகுதியினரின் மன உறுதி, சிறையிலிருந்த மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. உறுதியாக இருப்பதற்கு அவர்கள் அனுதினமும் எடுத்த தீர்மானம், மற்றவர்கள்கூட தங்கள் நெறிகளில் எல்லா சமயங்களிலும் உறுதியாக இருக்க முடியுமென்ற நம்பிக்கையை அளித்தது.”
சொல்லப்போனால், இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு சிறைத் தண்டனையும் மரணமும் புதிதல்ல. ஏனென்றால், இயேசுவே கைது செய்யப்பட்டார், விசுவாசத்திற்காக கொலையும் செய்யப்பட்டார். (லூக்கா 22:54; 23:32, 33) அவருடைய சீஷரான யாக்கோபும் அதற்காகவே கொல்லப்பட்டார். அப்போஸ்தலனான பேதுருவும் சிறையில் அடைக்கப்பட்டார், அப்போஸ்தலன் பவுலும்கூட பல முறை அடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.—அப்போஸ்தலர் 12:2, 5; 16:22-25; 2 கொரிந்தியர் 11:23.
அதேவிதமாக, ஐரோப்பாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் 1930-களிலும் 1940-களிலும் கடவுள்மீது உறுதியான விசுவாசம் வைத்ததில் சிறந்த முன்மாதிரிகளாக விளங்கினார்கள். ஆஷ்விட்ஸ் அருங்காட்சியகம் இப்படிப்பட்டவர்களுடைய விசுவாசத்தை உண்மையென ஒப்புக்கொண்டது பாராட்டத்தக்கது.
[அடிக்குறிப்பு]
a ஆஷ்விட்ஸ் முகாமில் மொத்தம் மூன்று முக்கிய பிரிவுகள் இருந்தன. அவை, ஆஷ்விட்ஸ்—முதலாம் பிரிவு (தலைமை முகாம்), இரண்டாம் பிரிவு (பிர்கனாவு), மூன்றாம் பிரிவு (மோனோவிட்ஸ்). நினைத்தாலே கதிகலங்க வைக்கும் காஸ் சேம்பர்களில் பெரும்பாலானவை பிர்கனாவு முகாமில் இருந்தன.
[பக்கம் 10-ன் படம்]
ஆஷ்விட்ஸ் முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த மூன்று பேர் கண்காட்சியின் விளம்பரப் பலகையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்
[பக்கம் 11-ன் படங்கள்]
டெலியானா ராடமாகர்ஸ்; சிறையிலிருந்தபோது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதம்
[படத்திற்கான நன்றி]
உள்படங்கள்: Zdjęcie: Archiwum Państwowego Muzeum Auschwitz-Birkenau
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
டவர்: Dzięki uprzejmości Państwowego Muzeum Auschwitz-Birkenau