பயங்கரமான சோதனைகளின் மத்தியிலும் தாங்கி ஆதரிக்கப்பட்டேன்
ஏவா யூஸ்ப்ஸன் சொன்னபடி
ஹங்கேரி, புடாபெஸ்ட்டில் உள்ள உப்பெஷ்ட் மாநிலத்தில் கிறிஸ்தவ ஊழியத்திற்காக வெளியே செல்வதற்கு முன் ஒரு சுருக்கமான கூட்டத்துக்காக நாங்கள் ஒரு சிறு குழுவாக கூடினோம். அது இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு சிறிது காலத்துக்கு முன் 1939-ஆம் வருடம்; அப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை ஹங்கேரியில் தடைசெய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் பைபிளை வெளிப்படையாய் கற்பிப்பதில் பங்குபெற்றவர்கள் அடிக்கடி கைதுசெய்யப்பட்டனர்.
அப்போது நான் இந்த வேலையில் முதன் முறையாக பங்குபெற்றதால், பார்ப்பதற்கு சிறிது கவலையோடும் வெளிறிப்போயும் இருந்திருக்க வேண்டும். ஒரு வயதான கிறிஸ்தவ சகோதரர் என்னைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: “ஏவா, நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. யெகோவாவை சேவிப்பதே ஒருவருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பாக்கியம்.” அந்தக் கனிவான பலப்படுத்தும் வார்த்தைகள் அநேக பயங்கரமான சோதனைகளை தாங்கிக்கொள்ள எனக்கு உதவின.
யூத பின்னணி
ஐந்து பிள்ளைகள் அடங்கிய ஒரு யூத குடும்பத்தில் நான் மூத்தவள். என் அம்மாவுக்கு யூத மதத்தில் திருப்தியில்லை, ஆகையால் அவர்கள் மற்ற மதங்களை ஆராய ஆரம்பித்தார்கள். இப்படித்தான் பைபிள் சத்தியத்துக்காக தேடிக்கொண்டிருந்த எர்ஷெபெட் ஸ்லெசிங்கர் என்ற மற்றொரு யூத பெண்ணையும் சந்தித்தார்கள். எர்ஷெபெட், என் அம்மா யெகோவாவின் சாட்சிகளை சந்திக்கும்படி ஏற்பாடு செய்தார்கள்; அதன் காரணமாக நானும் பைபிள் போதனைகளில் அதிக ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்தேன். சீக்கிரத்தில், நான் கற்றுக்கொண்டவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன்.
1941-ஆம் ஆண்டு கோடையில் எனக்கு 18 வயதானபோது, யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்ததை டான்யூப் நதியில் முழுக்காட்டுதல் பெறுவதன் மூலம் அடையாளப்படுத்திக் காண்பித்தேன். என் அம்மாவும் அதே சமயத்தில் முழுக்காட்டுதல் பெற்றார்கள், ஆனால் அப்பாவோ நாங்கள் புதிதாக கண்டுபிடித்த கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்கவில்லை. நான் முழுக்காட்டுதல் பெற்றவுடனேயே முழுநேர ஊழியத்தில் பங்குகொள்ள, அதாவது பயனியர் ஊழியம் செய்ய திட்டமிட்டேன். ஆகையால் எனக்கு சைக்கிள் தேவைப்பட்டது, எனவே, நான் ஒரு பெரிய நெசவு தொழிற்சாலையின் ஆய்வுக்கூடத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன்.
சோதனைகளின் ஆரம்பம்
ஹங்கேரி நாசிக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது, நான் வேலை செய்துவந்த தொழிற்சாலை ஜெர்மன் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. ஒரு நாள், எல்லா வேலையாட்களும் நாசிக்களிடம் பற்றுறுதி பிரமாண உறுதிமொழி எடுப்பதற்காக மேற்பார்வையாளர்கள் முன் வரும்படி அழைக்கப்பட்டனர். இதை செய்ய தவறினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எங்களிடம் சொன்னார்கள். ஹிட்லரை வாழ்த்தி வணங்கும்படி உத்தரவிடப்பட்ட அந்தச் சடங்கின்போது மரியாதையோடு நின்றுகொண்டிருந்தேன், ஆனால் உத்தரவிட்ட செயலை செய்யவில்லை. அந்த நாளே என்னை அலுவலகத்துக்குள் அழைத்து, சம்பளம் கொடுத்து, வேலை நீக்கம் செய்தார்கள். வேலை கிடைப்பது அரிதாக இருந்தபடியால், பயனியர் செய்வதற்கான என் திட்டங்களுக்கு என்ன நேரிடுமோ என்று யோசித்தேன். ஆனால் அதற்கு அடுத்த நாள் அதைக் காட்டிலும் நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைத்தது.
இப்போது பயனியர் செய்வதற்கான என் விருப்பம் நிறைவேறியது. எனக்கு அநேக பயனியர் கூட்டாளிகள் இருந்தனர், அதில் யூலிஸ்கா அஸ்டலாஸ் கடைசி கூட்டாளியாக இருந்தார். எங்களிடம் அளிப்பதற்கு பிரசுரங்கள் இல்லாத காரணத்தால் ஊழியத்தில் நாங்கள் பைபிளை மட்டுமே உபயோகித்தோம். அக்கறை காண்பித்த ஆட்களை நாங்கள் சந்தித்தபோது, மறுசந்திப்புகள் செய்து பிரசுரங்களை இரவலாக கொடுத்தோம்.
நாங்கள் வேலை செய்துவந்த பிராந்தியத்தை நானும் யூலிஸ்காவும் அடிக்கடி மாற்ற வேண்டியதாயிருந்தது. இதற்குக் காரணம் ஒரு பாதிரி, நாங்கள் ‘அவருடைய ஆடுகளை’ சந்திப்பதாக கேள்விப்படும்போது, யெகோவாவின் சாட்சிகள் அவர்களை சந்தித்தால் அவரிடமோ அல்லது போலீஸாரிடமோ அதை அறிவிக்க வேண்டும் என்று அவர் சர்ச்சில் அறிவிப்பார். அப்படி அறிவிப்பு செய்வதை சிநேகப்பான்மையான ஜனங்கள் எங்களிடம் சொன்னால், நாங்கள் மற்றொரு பிராந்தியத்துக்கு சென்று விடுவோம்.
ஒரு நாள் யூலிஸ்காவும் நானும் அக்கறை காண்பித்த ஒரு வாலிபனை சந்தித்தோம். வாசிப்பதற்கு ஏதாவது ஒன்றை இரவலாக கொடுப்பதற்காக மறுபடியும் எப்போது வருவோம் என்பதை நாங்கள் சொல்லிவிட்டு வந்தோம். ஆனால் நாங்கள் திரும்பி சென்றபோதோ போலீஸ்காரர்கள் அங்கு காத்திருந்தார்கள், எங்களை கைதுசெய்து டன்அவெஷியில் இருந்த காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். எங்களை பிடிப்பதற்காக அந்தப் பையனை இரையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். நாங்கள் காவல் நிலையத்தை சென்றடைந்தபோது, அங்கு ஒரு பாதிரியை பார்த்தோம், அவரும் இதற்கு உடந்தை என்பதை அறிந்துகொண்டோம்.
என்னுடைய மோசமான சோதனை
அங்கே காவல் நிலையத்தில் என் முடியை எல்லாம் சவரம் செய்தார்கள், சுமார் ஒரு டஜன் போலீஸ்காரர்கள் முன் நிர்வாணமாய் நிற்க வேண்டியிருந்தது. அவர்கள் என்னை விசாரணை செய்து, ஹங்கேரியில் எங்கள் தலைவர் யார் என்பதை அறிந்துகொள்ள விரும்பினர். இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு தலைவர் எங்களுக்கு இல்லை என்று விளக்கினேன். பின்னர் அவர்கள் இரக்கமின்றி கொடூரமாய் குண்டாந்தடிகளில் என்னை அடித்தார்கள், ஆனால் நான் என் கிறிஸ்தவ சகோதரர்களை காட்டிக் கொடுக்கவில்லை.
அதற்குப் பிறகு அவர்கள் என் பாதங்களை ஒன்றாக சேர்த்து கட்டினார்கள், தலைக்கு மேல் என் கைகளை தூக்க வைத்து அதையும் ஒன்றாக சேர்த்து கட்டினார்கள். பின்னர், ஒரு போலீஸ்காரர் தவிர, மற்ற எல்லாரும் ஒருவர் மாறி ஒருவர் என்னை கற்பழித்தார்கள். நான் அவ்வளவு இறுக்கமாக கட்டப்பட்டிருந்ததால், மூன்று வருடங்களுக்குப் பிறகும்கூட என் மணிக்கட்டுகளில் தழும்புகள் இருந்தன. நான் அந்த அளவுக்கு மிருகத்தனமாய் நடத்தப்பட்டதால் மிகவும் மோசமாயிருந்த என் காயங்கள் ஓரளவு குணமடையும்வரை கட்டடத்தின் அடித்தளத்தில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தேன்.
துயர் தீர்க்கும் காலப்பகுதி
பின்னர், அநேக யெகோவாவின் சாட்சிகள் இருந்த நஜ்கொனிஸோ சிறைக்கு என்னை மாற்றினார்கள். அதைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு வருடங்களை சிறையில் கழித்தபோதிலும் நாங்கள் கொஞ்சம் சந்தோஷமாய் இருந்தோம். கூட்டங்கள் எல்லாவற்றையும் இரகசியமாய் நடத்தினோம், ஏறக்குறைய ஒரு சபையைப் போல் நாங்கள் செயல்பட்டு வந்தோம். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கும்கூட எங்களுக்கு அநேக வாய்ப்புகள் கிடைத்தன. இந்தச் சிறையில்தானே எனக்கும் என் அம்மாவுக்கும் பைபிள் சத்தியத்தை அறிமுகப்படுத்திய எர்ஷெபெட் ஸ்லெசிங்கரின் சொந்த சகோதரியான ஆல்கா ஸ்லெசிங்கரை சந்தித்தேன்.
1944-க்குள் ஹங்கேரிய நாசிக்கள் மற்ற குடியிருப்பு பிராந்தியங்களில் இருந்த ஹங்கேரிய யூதர்களை முறையாக திட்டமிட்டு கொலை செய்தது போலவே இங்கேயும் அவர்களை அழிப்பதற்கு தீர்மானமாயிருந்தனர். ஒரு நாள் அவர்கள் என்னையும் ஆல்காவையும் தேடி வந்தனர். எங்களை கால்நடைகளுக்காக ஒதுக்கியிருந்த இரயில் பெட்டிகளில் அடைத்து வைத்தனர், செக்கோஸ்லோவாக்கியா வழியாய் மிகவும் கஷ்டப்பட்டு பயணம் செய்த பிறகு, நாங்கள் சேரவேண்டிய தெற்கு போலாந்திலிருந்த ஆஷ்விட்ஸ் மரண முகாமை அடைந்தோம்.
ஆஷ்விட்ஸில் உயிர்வாழ்தல்
நான் ஆல்காவோடு இருந்தபோது பாதுகாப்பாய் உணர்ந்தேன். தாங்கமுடியாத கடினமான சூழ்நிலைகளிலும்கூட அவள் நகைச்சுவையோடு பேசுவாள். நாங்கள் ஆஷ்விட்ஸுக்கு வந்து சேர்ந்தபோது, கெட்டவர் என பெயரெடுத்த டாக்டர் மெங்கலேவுக்கு முன் கொண்டுவரப்பட்டோம். வேலைக்கு தகுதியில்லாத புதிதாக வந்தவர்களை திடமானவர்களிலிருந்து பிரிப்பதே அவருடைய வேலை. புதிதாக வந்தவர்களை விஷவாயுவால் கொல்லப்பட காஸ் சேம்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். எங்களுடைய முறை வந்தபோது, மெங்கலே ஆல்காவை பார்த்து, “உன் வயது என்ன?” என்று கேட்டார்.
அவள் தைரியமாய் சிரித்துக்கொண்டே பளிச்சென்று கண் சிமிட்டி “20” என்று பதிலளித்தாள். உண்மையில் அவளுடைய வயது சொன்னதைவிட இரண்டு மடங்கு அதிகமாயிருந்தது. ஆனால் மெங்கலே சிரித்துக்கொண்டே அவளை வலது பக்கம் போக அனுமதித்து உயிர் வாழும்படி விட்டுவிட்டார்.
ஆஷ்விட்ஸில் இருந்த எல்லா சிறைவாசிகளின் யூனிஃபாம்களிலும் சின்னங்கள் வைத்து அடையாளப்படுத்தி இருந்தார்கள்—யூதர்களுக்கு தாவீதின் நட்சத்திரமும் யெகோவாவின் சாட்சிகளுக்கு கருஞ்சிவப்பு முக்கோணமும். எங்கள் உடைகளில் தாவீதின் நட்சத்திரத்தை தைக்க அவர்கள் விரும்பியபோது, நாங்கள் யெகோவாவின் சாட்சிகள், எங்களுக்கு கருஞ்சிவப்பு முக்கோணம்தான் வேண்டும் என்று விளக்கினோம். நாங்கள் எங்கள் யூத பரம்பரையைக் குறித்து வெட்கப்பட்டதால் அல்ல, ஆனால் இப்போது யெகோவாவின் சாட்சிகளாய் இருப்பதால் அவ்வாறு கேட்டோம். எங்களை அடித்து உதைத்து யூதர்களின் சின்னத்தை ஏற்க கட்டாயப்படுத்தினர். ஆனால் அவர்கள் எங்களை யெகோவாவின் சாட்சிகள் என்று ஒப்புக்கொள்ளும் வரை நாங்கள் விடாப்பிடியாக நிலைத்திருந்தோம்.
காலப்போக்கில், என்னைவிட மூன்று வயது இளையவளாயிருந்த என் தங்கை அல்வீராவை எதிர்பாராதவிதமாய் சந்தித்தேன். ஏழு பேர் அடங்கிய எங்கள் முழு குடும்பத்தையும் ஆஷ்விட்ஸுக்கு அழைத்து சென்றனர். நானும் அல்வீராவும் மட்டுமே வேலை செய்ய தகுதியுள்ளவர்களாக அங்கீகாரம் பெற்றோம். என் அப்பாவும், அம்மாவும், எங்கள் உடன்பிறப்புகளில் மூவரும் காஸ் சேம்பர்களில் இறந்து போனார்கள். அல்வீரா அப்போது சாட்சியாக இல்லை, நாங்கள் முகாமின் ஒரே பகுதியில் தங்கியிருக்கவில்லை. அவள் தப்பிப்பிழைத்து, ஐக்கிய மாகாணங்களுக்கு சென்று குடியேறி, பென்ஸில்வேனியா, பிட்ஸ்பர்கில் இருக்கையில் சாட்சியாக ஆனாள், பின்னர் 1973-ல் அங்கே இறந்து போனாள்.
மற்ற முகாம்களில் உயிர்வாழ்தல்
1944/45 குளிர்காலத்தில் ரஷ்யர்கள் நெருங்கி வந்த காரணத்தால் ஆஷ்விட்ஸிலிருந்து வெளியேற்றுவதற்கு ஜெர்மானியர்கள் தீர்மானித்தனர். ஆகையால் எங்களை ஜெர்மனியின் வடபாகத்திலுள்ள பெர்கன்-பெல்சனுக்கு மாற்றினார்கள். நாங்கள் அங்கு சென்றவுடனேயே, என்னையும் ஆல்காவையும் பிரான்ஷ்விக்குக்கு அனுப்பினார்கள். இங்கு நாங்கள் நேசநாடுகளுடைய படைகளின் தீவிரமான குண்டுவெடிப்பு பகுதிகளில் உள்ள குப்பைகளை நீக்குவதற்கு உதவும்படி எதிர்பார்க்கப்பட்டோம். நானும் ஆல்காவும் இந்த விஷயத்தைக் குறித்து கலந்து பேசினோம். இந்த வேலையை செய்வது எங்கள் நடுநிலை வகிப்பை மீறுவதாக இருக்குமோ என்பதைக் குறித்து நாங்கள் நிச்சயமின்றி இருந்ததால், அதை செய்ய வேண்டாமென நாங்கள் இருவரும் தீர்மானித்தோம்.
எங்கள் தீர்மானம் குழப்பத்தை அதிகரித்தது. எங்களை தோல் சாட்டைகளால் அடித்தனர், அதற்குப் பிறகு குறிபார்த்து சுடும் குழுவின் முன்னால் நிற்க வைத்தனர். எங்கள் மனதை மாற்றிக்கொள்வதற்கு ஒரு நிமிடம் கொடுத்தார்கள், நாங்கள் எங்கள் முடிவில் தீர்மானமாயிருந்தால் எங்களை சுடப்போவதாக சொன்னார்கள். அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்க எங்களுக்கு நேரம் தேவையில்லை, ஏனெனில் நாங்கள் ஏற்கெனவே புறப்பட்டுப் போக தீர்மானித்து விட்டோம் என்று சொன்னோம். இருப்பினும், அந்த முகாமின் கமாண்டர் அங்கு இல்லாத காரணத்தாலும், அவர் ஒருவர் மட்டுமே மரண தண்டனைக்கான கட்டளை கொடுப்பதற்கு அதிகாரம் பெற்றிருந்ததாலும் எங்கள் மரண தண்டனையில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் நாள் முழுவதும் முகாமின் முற்றத்தில் நிற்கும்படி எங்களை கட்டாயப்படுத்தினார்கள். இரண்டு மணிநேரங்களுக்கு ஒரு முறை இரண்டு ஆயுதம் தரித்த இராணுவ வீரர்கள் மாறி மாறி எங்களை காவல் காத்தனர். எங்களுக்கு எந்த உணவும் கொடுக்கவில்லை, அது பிப்ரவரி மாதமாக இருந்ததால் கடும் குளிரால் நாங்கள் கஷ்டப்பட்டோம். இவ்விதமாய் கழிந்தது ஒரு வாரம், ஆனால் கமாண்டரோ வரவேயில்லை. ஆகையால் எங்களை ஒரு டிரக்கின் பின்புறத்தில் ஏற்றினார்கள், ஆச்சரியம் தரும் விதத்தில் எங்களை மறுபடியும் பெர்கன்-பெல்சனுக்கு அனுப்பினார்கள்.
அதற்குள் எங்கள் இருவரின் நிலையும் மோசமாக இருந்தது. என் முடியெல்லாம் கொட்டிப் போய்விட்டது. காய்ச்சலும் கொதித்தது. பெரும் முயற்சி எடுத்தால் மட்டுமே என்னால் கொஞ்சம் வேலையாவது செய்ய முடிந்தது. ஒவ்வொரு நாளும் சாப்பிட்ட சத்துக்குறைவான கோஸ் சூப்பும் ஒரு சிறு துண்டு ரொட்டியும் போதவில்லை. ஆனால் நாங்கள் வேலை செய்வது அவசியமாயிருந்தது, ஏனெனில் வேலை செய்ய முடியாதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டார்கள். என்னோடு சமையல் அறையில் வேலை செய்த ஜெர்மன் சகோதரிகள் நான் கொஞ்சம் ஓய்வு எடுக்க எனக்கு உதவி செய்தார்கள். காவலாளிகள் மேற்பார்வை செய்வதற்காக வரும்போது, அந்தச் சகோதரிகள் என்னை எச்சரிப்பார்கள். அப்போது நான் வேலை செய்யும் பெஞ்சின் அருகே நின்றுகொண்டு, கடினமாய் வேலை செய்வது போல் நடிப்பேன்.
ஒரு நாள் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல ஆல்காவுக்கு தெம்பே இல்லை, அதற்குப் பிறகு நாங்கள் அவளை பார்க்கவேயில்லை. முகாம்களில் தங்கியிருந்த அந்தக் கஷ்டமான மாதங்களின்போது எனக்கு பெரும் உதவியாயிருந்த ஒரு தைரியமான சிநேகிதியையும் கூட்டாளியையும் இழந்து விட்டேன். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, அபிஷேகம் செய்யப்பட்டவராயிருந்த அவள் உடனடியாக தன் பரலோக வெகுமதியை அடைந்திருக்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 14:13.
விடுதலையும் அதற்குப் பிறகு வாழ்க்கையும்
மே 1945-ல் போர் முடிவடைந்து விடுதலை கிடைத்தபோது நான் அதிக பலவீனமாய் இருந்த காரணத்தால் என்னை ஒடுக்கியவர்களின் நுகத்தடி கடைசியில் நொறுக்கப்பட்டதைக் குறித்து என்னால் சந்தோஷப்படக்கூட முடியவில்லை; விடுவிக்கப்பட்டவர்களை ஏற்க விரும்பிய தேசங்களுக்கு பாதுகாப்புடன் சென்ற வண்டிகளில் என்னால் செல்ல முடியவில்லை. நான் மறுபடியும் பலம் பெறுவதற்காக ஒரு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். அதற்குப் பிறகு என்னை ஸ்வீடனுக்கு அழைத்துச் சென்றனர், அதுவே என் புதிய வீடாக ஆனது. உடனடியாக நான் என் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடு தொடர்புகொண்டேன், உரியகாலத்தில் மிகவும் அருமையான பொக்கிஷமாகிய வெளி ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தேன்.
நான் 1949-ல், பல வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணியாய் சேவித்து வந்த லெனர்ட் யூஸ்ப்ஸன் என்பவரை திருமணம் செய்துகொண்டேன். இரண்டாம் உலகப்போரின் போது அவரும்கூட தன் விசுவாசத்தின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நாங்கள் இருவரும் செப்டம்பர் 1, 1949-ல் பயனியர்களாக எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம், பொராஸ் பட்டணத்தில் சேவிக்கும்படி நியமிக்கப்பட்டோம். நாங்கள் அங்கு ஆரம்பத்தில் கழித்த ஆண்டுகளின்போது, பத்து பைபிள் படிப்புகளை ஒவ்வொரு வாரமும் அக்கறை காண்பித்த ஆட்களோடு தவறாமல் நடத்தினோம். ஒன்பது வருடங்களுக்குள்ளாக பொராஸில் இருந்த சபை மூன்று சபைகளாக ஆவதை காணும் சந்தோஷத்தை நாங்கள் பெற்றோம், இப்போது அங்கு ஐந்து சபைகள் உள்ளன.
நீண்ட காலமாக ஒரு பயனியராக நிலைத்திருக்க என்னால் முடியவில்லை, ஏனெனில் 1950-ல் எங்களுக்கு ஒரு மகளும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு மகனும் பிறந்ததால் பெற்றோரானோம். இவ்வாறு வெறும் 16 வயதாக இருக்கையில், ஹங்கேரியில் இருந்த அன்பான சகோதரர் எனக்கு கற்பித்த அருமையான சத்தியத்தை எங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் மகிழ்ச்சி தரும் சிலாக்கியத்தை பெற்றேன்: “யெகோவாவை சேவிப்பதே ஒருவருக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.”
கடந்துசென்ற என் வாழ்க்கையை சிந்தித்துப் பார்க்கையில், யோபுவின் சகிப்புத்தன்மையைக் குறித்து நமக்கு நினைப்பூட்டுகையில் சீஷனாகிய யாக்கோபு எழுதிய உண்மையை நான் அனுபவித்திருப்பதை உணருகிறேன்: “கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” (யாக்கோபு 5:11) நானும்கூட பயங்கரமான சோதனைகளை அனுபவித்திருந்தபோதிலும், யெகோவாவை வணங்கும் இரண்டு பிள்ளைகள், அவர்களுடைய துணைவர்கள், ஆறு பேரப்பிள்ளைகள் ஆகியோரால் மிகவும் அபரிமிதமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமன்றி, எனக்கு அநேக ஆவிக்குரிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருக்கின்றனர், அவர்களில் சிலர் பயனியர்களாகவும் மிஷனரிகளாகவும் சேவை செய்து வருகின்றனர். மரணத்தில் உறங்கும் அன்பான நபர்களை சந்தித்து, அவர்கள் ஞாபகார்த்த கல்லறைகளிலிருந்து எழுந்து வருகையில் அவர்களைத் தழுவிக்கொள்வதே இப்போது நான் பெற்றிருக்கும் பெரும் நம்பிக்கை.—யோவான் 5:28, 29.
[பக்கம் 31-ன் படம்]
இரண்டாம் உலக யுத்தத்தைப் பின்தொடர்ந்து ஸ்வீடனில் ஊழியம்
[பக்கம் 31-ன் படம்]
என் கணவரோடு