பிள்ளைகள் திகிலில்
மாலை மயங்கும் வேளையில், வடக்கு உகாண்டாவின் சாலைகளில் ஆயிரமாயிரம் பிள்ளைகள் வெறும் கால்களில் நடந்து செல்வதை நீங்கள் பார்க்கலாம். பொழுதுசாயும் முன்பே தங்கள் சிறுகிராமங்களிலிருந்து பெருநகரங்களை நோக்கி—கூலூ, கிட்கூம், லீரா போன்ற பெருநகரங்களை நோக்கி—செல்கிறார்கள். அங்கே சென்றவுடன், கட்டடங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் பூங்காக்களுக்கும் வளாகங்களுக்கும் கலைந்து செல்கிறார்கள். பொழுது விடிந்தவுடன், மீண்டும் தங்களுடைய வீடுகளை நோக்கி நடையைக் கட்டுவதைக் நீங்கள் காணலாம். அவர்கள் இப்படி வித்தியாசமாக நடந்துகொள்வதற்குக் காரணம்?
“இராப் பயணிகள்” என சிலர் இவர்களை அழைக்கிறார்கள். இவர்கள் ‘நைட் ஷிஃப்ட்’ வேலைக்குச் செல்லும் பிள்ளைகள் அல்ல. இருள் கவிந்தபின் வீட்டில் இருந்தால் ஆபத்து என்பதால் அந்திசாயும் வேளையில் வீட்டைவிட்டு கிளம்பிவிடுகிறார்கள்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, கொரில்லா படையினர் கிராமப்புறங்களுக்குள் புகுந்து பிள்ளைகளைக் கடத்தி வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியரை களவாடிக்கொண்டு அடர்ந்த காட்டுக்குள் தலைமறைவாகி விடுகிறார்கள். பெரும்பாலும் இரவிலே பிள்ளைகளைக் கடத்திச் சென்று கலகக்கார கும்பல்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்; இந்தப் பிள்ளைகளை இவர்கள் இளம் போராளிகளாகவும் சுமை சுமப்பவர்களாகவும் செக்ஸ் அடிமைகளாகவும் பயன்படுத்துகிறார்கள். இவர்களிடம் மாட்டிக்கொண்ட பிள்ளைகள் ஒத்துழைக்க மறுத்தால், அவர்களுடைய மூக்கையோ உதடுகளையோ அறுத்துவிடுவார்கள். தப்பிச் செல்ல முயலும் பிள்ளைகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள், அந்தக் கொடூரத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது.
தீவிரவாதத்திற்குப் பலியாகும் பிள்ளைகள் இன்னும் பலர் இருக்கிறார்கள். சியர்ரா லியோனில், தீவிரவாதிகளின் அட்டூழியங்களுக்கு இரையான டீனேஜர்கள் பலர் முடமாக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். இவர்கள் தளர்நடை போடும் குழந்தைகளாக இருந்தபோதே, பட்டாக்கத்திகளுடன் திரியும் கயவர்கள் இவர்களுடைய கை, கால்களை வெட்டிவிட்டார்கள். ஆப்கானிஸ்தானில், சிறுவர் சிறுமியர் கண்கவர் பொம்மை பட்டாம்பூச்சிகளை வைத்து விளையாடினார்கள்; இவை வெடித்து சிதறி, கண்களையும் கைவிரல்களையும் பறித்த பிறகே இவை கண்ணிவெடிகள் என்பதைத் தெரிந்துகொண்டார்கள்.
தீவிரவாத தாக்குதலில் சில பிள்ளைகள் வேறு விதமான முடிவை சந்தித்திருக்கிறார்கள். உதாரணமாக, 1995-ல் அமெரிக்காவிலுள்ள ஓக்லகாமா நகரத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது, கொல்லப்பட்ட 168 பேரில் 19 பேர் சிறுபிள்ளைகள், இவர்களில் சிலர் பால் மணம் மாறா பிஞ்சுக்குழந்தைகள். சுடர்விட ஆரம்பித்த மெழுகுவர்த்திகளைச் சூறைக்காற்று அடித்து அணைத்ததுபோல், வெடிகுண்டு அந்தச் சின்னஞ்சிறு உயிர்களை சடுதியில் வாரிக்கொண்டது. அந்த இளந்தளிர்கள் தங்களுடைய பிள்ளைப்பருவத்தை அனுபவித்து மகிழும் உரிமையை, அதாவது ஓடியாடி, சிரித்து விளையாடி, பெற்றோரின் பாசக் கரங்களில் தவழ்ந்து மகிழும் உரிமையைத் தீவிரவாதிகள் பறித்துவிட்டார்கள்.
இவையெல்லாம் சமீப கால சம்பவங்கள். ஆனால், தீவிரவாதிகளின் வன்முறைகள் காலங்காலமாகவே மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வந்திருக்கின்றன. இதைத்தான் அடுத்து வரும் கட்டுரைகளில் காணப் போகிறோம்.
[பக்கம் 3-ன் பெட்டி]
பிள்ளைகளைப் பறிகொடுக்க தயாராகும் பெற்றோர்
எழுத்தாளர் டேவிட் க்ரோஸ்மன் தன்னுடைய ஊரில் நடக்கிற வன்முறையைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “இன்று காலையில் என்னுடைய பதினோரு வயது மகன் தூங்கி எழுந்ததும் கேட்டது இதுதான்: ‘இன்னைக்குத் தீவிரவாதிகள் வந்து “அட்டாக்” செய்துட்டு போயிட்டாங்களா அப்பா?’” “என் மகன் ரொம்ப பயந்துபோயிருக்கிறான்” என்று அவர் சொன்னார்.
சமீப காலங்களில் தீவிரவாத தாக்குதலுக்கு இரையாகும் பிள்ளைகளின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருக்கிறது. இதனால் தங்களுடைய பிள்ளைகளில் ஒன்று இவ்வாறு உயிரிழந்தால் அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதை சில பெற்றோர்கள் முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். “ஓர் இளம் ஜோடி தங்களுடைய வருங்கால திட்டங்களைப் பற்றி என்னிடம் சொன்னதை என்னால் மறக்கவே முடியாது. அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு மூன்று பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வார்களாம். இரண்டு அல்ல, மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளை இறந்துவிட்டாலும் இன்னும் இரண்டு பிள்ளைகள் இருப்பார்களே என்பது அவர்கள் எண்ணம்” என்று க்ரோஸ்மன் எழுதினார்.
தங்களுடைய இரண்டு பிள்ளைகள் இறந்துவிட்டால், அல்லது மூன்று பிள்ளைகளுமே இறந்துவிட்டால் என்ன செய்வார்கள் என அவர்கள் சொல்லவில்லை.a
[அடிக்குறிப்பு]
a இதிலுள்ள மேற்கோள்கள் டேவிட் க்ரோஸ்மன் எழுதிய மரணம் வாழ்க்கையின் அங்கம் என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
© Sven Torfinn/ Panos Pictures