கடவுளின் பெயர் பிரபலமடைந்தது எப்படி?
‘தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதிப்பேன்’ என்று பைபிள் கவிஞரான தாவீது பாடினார். கடவுளுடைய பெயரை அவர் அறிந்திருந்தார். ஒரு பாடலில் அவர் பின்வருமாறு வலியுறுத்தினார்: ‘யெகோவாவுக்கு . . . ஸ்தோத்திரமுண்டாவதாக . . . அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு . . . ஸ்தோத்திரமுண்டாவதாக.’ (சங்கீதம் 69:30; 72:18, 19) கடவுளுடைய பெயர் தமிழில் பொதுவாக யெகோவா என்பதாக உச்சரிக்கப்படுகிறது. அது יהוה என்ற எபிரெய வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். இந்தப் பெயர் மூலமொழி பைபிளில் சுமார் 7,000 தடவை காணப்படுகிறது.
சமீப நூற்றாண்டுகளில், பைபிள் தவிர பிற இடங்களிலும் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட தங்க நாணயங்களில், பெனெடிக்டுஸ் சிட் யெஹோவா டியுஸ் என்ற லத்தீன் வார்த்தைகள் காணப்பட்டன. இதன் அர்த்தம், “யெகோவா தேவன் துதிக்கப்படுவாராக” என்பதே [1]. சொல்லப்போனால், கடந்த சில நூற்றாண்டுகளுக்குள்ளாக, ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்வேறு வகை நாணயங்களிலும் நாணயங்களைப் போன்று பயன்படுத்தப்பட்ட டோக்கன்களிலும் பதக்கங்களிலும் மாற்று நாணயங்களிலும் கடவுளுடைய பெயர் எபிரெயு, லத்தீன் மொழிகளில் காணப்பட்டிருக்கிறது.
இந்தப் பக்கத்திலும் அடுத்த பக்கத்திலும் காணப்படும் உதாரணங்களைப் பார்க்கையில், கடவுளுடைய பெயர் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. இதற்குக் காரணம் என்ன?
கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டது ஏன்?
பதினாறாம் நூற்றாண்டு முதற்கொண்டு, மேற்கு ஐரோப்பா முழுவதிலும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகளுக்கும் இடையில் மத போர்கள் மூண்டன. ஸ்பெயினைச் சேர்ந்த பல மாகாணங்கள், முக்கிய மதமாக இருந்த ரோமன் கத்தோலிக்க சர்ச்சைவிட்டு விலகி சீர்திருத்த சர்ச்சை ஆதரிக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக, மத ரீதியான உள்நாட்டு போர் ஏற்பட்டது. கடவுள் தங்களை ஆதரிக்கிறார் என்பதைக் காட்டுவதற்காக போரில் இரு தரப்பினரும் நாணயங்களையும் அதிலுள்ள படங்களையும் பயன்படுத்தினார்கள்.
கடவுளுடைய பெயர் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?
நாணயங்களைச் செய்வோர், பரிசுத்த நான்கெழுத்துகள் என்று அழைக்கப்படும் நான்கு எபிரெய எழுத்துகளில் கடவுளுடைய பெயரான யெகோவா என்பதை அச்சிட்டார்கள். ஆங்கிலத்தில் அவை JHVH என்றோ YHWH என்றோ எழுத்துப்பெயர்ப்பு செய்யப்படுகின்றன. பொதுவாக, நாணயங்களை அச்சிடுவோருக்கும்சரி, பொதுமக்களுக்கும்சரி எபிரெய மொழியை வாசிக்க தெரியாது. ஆகவே, இந்தப் பரிசுத்த நான்கெழுத்துகளை பல்வேறு ஆட்கள் திரும்பவும் திரும்பவும் நகல் எடுத்தபோது, அவை வித்தியாசமான விதங்களில் எழுதப்பட்டன.
1568 வாக்கில் ஸ்வீடன் நாடு, கடவுளுடைய பெயர் தாங்கிய நாணயத்தை அச்சிட்டது [2]. 1591 வாக்கில் ஸ்காட்லாந்தும் இதையே செய்தது. 1600-ஆம் ஆண்டு வாக்கில், ஸ்வீடனின் அரசரான ஒன்பதாம் சார்ல்ஸ், கடவுளுடைய பெயரை நாணயங்களில் பொறித்தார்; அவற்றில், ஹிஹோவா, இஹோவா, இஹோவாஹ் போன்ற பல உச்சரிப்புகள் காணப்பட்டன [3]. அவர் ஒருவகை தங்க நாணயத்தைத் தயாரிக்கச் செய்தார். கூலித் தொழிலாளி ஒருவரின் நான்கு மாத சம்பளத் தொகையைவிட அதிக மதிப்புள்ள, தனிச்சிறப்புமிக்க காட்சிப்பொருளாக அது இருந்தது.
டென்மார்க்கையும் நார்வேயையும் 1588-லிருந்து 1648 வரை அரசாண்ட நான்காம் கிறிஸ்டியனின் ஆட்சிக் காலம் முதற்கொண்டு, கடவுளுடைய பெயர் காணப்படும் 60-க்கும் மேற்பட்ட வித்தியாசமான நாணயங்கள் பிரபலமாயின. இவை “யெகோவா நாணயங்கள்” என்று அழைக்கப்பட்டன. 17-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில் இந்த “யெகோவா நாணயங்கள்” போலந்திலும் சுவிட்சர்லாந்திலும்கூட அச்சிடப்பட்டன. அதேபோல, ஜெர்மனியிலும் அவை தயாராயின.
முதலில் மத போராக ஆரம்பித்து, 1618 முதல் 1648 வரை நடந்த முப்பது ஆண்டு போரில் இதுபோன்ற நாணயங்கள் அதிகமதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. 1631-ல் ஸ்வீடனின் அரசரான இரண்டாம் குட்ஸவ் அடால்ப், பிரைட்டன்பெல்ட் போரில் வெற்றி வாகைசூடிய பிறகு, பரிசுத்த நான்கெழுத்துகள் உள்ள நாணயங்களை அச்சிட்டார் [4]. இவை எர்ஃபர்ட், ப்யூர்ட், மைன்ட்ஸ், வர்ட்ஸ்பர்க் போன்ற நகரங்களில் தயாரிக்கப்பட்டன. கிட்டத்தட்ட அதே சமயத்தில், ஸ்வீடனுடன் கூட்டுச்சேர்ந்திருந்த நாடுகளும் கடவுளுடைய பெயர் உள்ள நாணயங்களைத் தயாரிக்க ஆரம்பித்தன.
படுபயங்கரமான அந்த முப்பது ஆண்டு போர் முடிந்த பிறகு, சுமார் 150 வருடங்கள் வரை, கடவுளுடைய பெயர் நாணயங்களிலும் பதக்கங்களிலும் டோக்கன்களிலும் தொடர்ந்து பொறிக்கப்பட்டது. ஆஸ்திரியா, பிரான்சு, மெக்சிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளிலும், இன்னும் பிற நாடுகளிலும் அப்படிப்பட்ட நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. என்றாலும், 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், கடவுளுடைய பெயர் இந்த விதத்தில் பயன்படுத்தப்படுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. காலப்போக்கில், அது நாணயங்களை அச்சிடும் இயந்திரங்களில் இல்லாமலே போயிற்று.
கடவுளுடைய பெயரைப் பிரபலப்படுத்துதல்
இன்றைய நாணயங்களில் கடவுளுடைய பெயர் காணப்படாமல் இருக்கலாம். ஆனால், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அது எங்கும் அறிவிக்கப்படுகிறது. தமக்குச் சேவை செய்வதற்காக கடவுள் ஒரு ஜனத்தைத் தேர்ந்தெடுத்து, “நானே தேவன் . . . நீங்கள் எனக்குச் சாட்சிகள்” என்று அவர்களிடம் கூறினார். (ஏசாயா 43:12) இந்த முக்கியப் பொறுப்பை எந்த நாணயத்தாலும் நிறைவேற்ற முடியாது. சொல்லப்போனால், கடவுளுடைய பெயரை நாணயங்களில் பயன்படுத்தியவர்கள் அவரைப்பற்றி தவறான கருத்தையே பரப்பினார்கள். அதாவது, இரத்தவெறிபிடித்த தங்களுடைய போர்களை அவர் ஆதரித்ததாக சொல்லிக்கொண்டார்கள். ஆனால், இன்று சில மனிதர்கள் கடவுளுடைய பெயரை அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் எல்லாருக்கும் அறிவிக்கிறார்கள்.
உண்மைக் கடவுளாகிய யெகோவாவையும் அவருடைய பெயரின் அர்த்தத்தையும்பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ளும்படி யெகோவாவின் சாட்சிகள் உங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அவரைக் குறித்து கவிஞர் ஒருவர் பைபிளில் இவ்வாறு கூறினார்: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர’ வேண்டும். (சங்கீதம் 83:17) யெகோவாவைப்பற்றி அறிந்துகொள்வது அவசியம். இதைத்தான் தம் ஜெபத்தில் அவருடைய அருமையான மகன் தெரியப்படுத்தினார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3.
[பக்கம் 20, 21-ன் படம்]
நாணயங்களை அச்சிடுவோர் பயன்படுத்திய கருவிகள்
[பக்கம் 20-ன் படங்களுக்கான நன்றி]
நாணயம் 1-ம் கருவிகளும்: Hans-Peter-Marquardt.net; நாணயம் 2: Mit freundlicher Genehmigung Sammlung Julius Hagander
[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]
நாணயங்கள் 3-ம் 4-ம்: Mit freundlicher Genehmigung Sammlung Julius Hagander