குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுகள்
உலகெங்கும் நடக்கிற பிரசங்க வேலையை நாம் ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஒரு முக்கிய வழி நன்கொடை வழங்குவதாகும். ஆனால், நாம் ஏழைகளாக இருந்தால் என்ன செய்வது?
ஓர் ஏழை விதவை மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுகளை ஆலயத்தில் இருந்த காணிக்கைப் பெட்டியில் போடுவதை இயேசு ஒருசமயம் பார்த்தார். யெகோவா தேவன் மீதிருந்த அன்பினால்தான் “தனக்குத் தேவையிருந்தும், தன்னிடமிருந்த அனைத்தையுமே, தன் பிழைப்புக்கு வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்.” (மாற். 12:41-44) இயேசு இதைக் குறிப்பிட்டுச் சொன்னதிலிருந்து, கடவுள் அவளுடைய காணிக்கையை உயர்வாய் மதித்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களும் நன்கொடை அளிப்பதை பாக்கியமாகக் கருதினார்கள். ஏழைகளும் சரி பணக்காரர்களும் சரி, தங்களால் முடிந்ததைக் கொடுத்தார்கள். மக்கெதோனியாவில் இருந்த கிறிஸ்தவர்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: அவர்கள் “கொடிய வறுமையில் வாடியபோதிலும் . . . நிவாரணத் தொகை வழங்கி சேவை செய்கிற பாக்கியத்தைத் தர வேண்டுமென அவர்களாகவே வந்து திரும்பத்திரும்ப எங்களைக் கெஞ்சிக் கேட்டார்கள்.”—2 கொ. 8:1-4.
எனவே, ‘குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுகளை’ மட்டுமே நம்மால் வழங்க முடிந்தாலும்கூட சிறு துளி பெரு வெள்ளமாகும் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைக்கலாம். நாம் மனப்பூர்வமாகக் கொடுப்பதைப் பார்த்து தாராள குணம் படைத்த நம் பரலோக அப்பா மகிழ்ச்சி அடைவார்; ஏனென்றால் “சந்தோஷமாகக் கொடுப்பவரையே கடவுள் நேசிக்கிறார்.”—2 கொ. 9:7.