விழித்தெழு! சிசுவின் உயிரைக் காப்பாற்றுகிறது
● மெக்சிகோவைச் சேர்ந்த அனிதா என்பவருக்கு ஏற்கெனவே மூன்று பிள்ளைகள் இருக்க மறுபடியும் கர்ப்பமானார்.a தனக்கு இன்னொரு குழந்தை வேண்டாம் என்றும் அதைக் கலைக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராய் இருப்பதாகவும் தன் கணவரிடம் சொன்னார். ஏன், தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும்கூட மிரட்டினார்! அந்தச் சமயத்தில், அனிதா யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்துக் கொண்டிருந்தார்; ஆனால், பெரிதாக மாற்றம் எதுவும் செய்யவில்லை. “நான் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டேன், அதுதான் என் சுபாவம்” என்கிறார் அனிதா.
கருக்கலைப்பு சம்பந்தப்பட்ட பைபிள் நியமங்களை அனிதாவுக்கு பைபிள் படிப்பு நடத்திய சாட்சி விளக்கினார். கருவில் உள்ள குழந்தையும் கடவுளுடைய கண்ணில் மதிப்புள்ளது என்பதை அவருக்குக் காட்டினார். பூர்வ இஸ்ரவேலில், கர்ப்பமாயிருந்த ஒரு பெண்ணை யாராவது தாக்கியதால் அவளோ பிறவாத அவள் குழந்தையோ இறந்துவிட்டால் தாக்கியவர் கொலையாளியாகக் கருதப்பட வேண்டும் என்று கடவுளுடைய சட்டம் குறிப்பிட்டது. (யாத்திராகமம் 21:22, 23)b ஆனால், இந்த விஷயங்கள் எதையும் அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவர் தீர்மானத்தில் உறுதியாக இருந்தார்.
“ஒரு மருந்தை ஊசி வழியாக ஏற்றிக்கொண்டால் உடனடியாகக் கரு கலைந்துவிடும் என்று ஒருவர் சொன்னார். அதனால் அதை வாங்கி வந்து ஒரு நண்பரிடம் கொடுத்து எனக்கு ஏற்றும்படி சொன்னேன். ஆனால் அவர் ஏற்றியும் ஒன்றும் ஆகவில்லை. இந்தக் குற்றத்தைச் செய்வதில் கூட்டுசேர அவருக்கு மனமில்லாததால் அந்த மருந்துக்குப் பதில் தண்ணீரை எனக்கு ஏற்றினார் என்பது பின்புதான் தெரிய வந்தது” என்கிறார் அனிதா.
இருந்தாலும், அனிதா விடுவதாய் இல்லை. நான்காவது மாதத்தில், அவர் ஒரு மருத்துவரைச் சந்தித்தார். கருவைக் கலைக்க அவர் ஒத்துக்கொண்டார். மருத்துவரிடம் போவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, மே 22, 1980 தேதியிட்ட விழித்தெழு! இதழில் வெளிவந்த “பிறவாத குழந்தையின் டைரி” (தமிழில் பிரசுரிக்கப்படவில்லை) என்ற கட்டுரையை அனிதாவுக்கு அந்த சாட்சி கொடுத்தார். “இன்று என் அம்மா என்னைக் கொன்றுவிட்டார்” என்ற வார்த்தைகளோடு அந்த “டைரி” முடிவடைந்தது. இந்த வார்த்தைகள் அனிதாவின் மனதில் அம்பாய் பாய்ந்ததால் அவர் பல மணிநேரம் அழுதார். “கடைசியில், இந்தக் கட்டுரை என் கண்களைத் திறந்துவிட்டது” என்கிறார்.
பின்னர், ஓர் ஆரோக்கியமான குழந்தையை அனிதா பெற்றெடுத்தார். “யெகோவாவைத் தெரிந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது, அவரை நான் மனதார நேசிக்கிறேன்” என்கிறார் அவர். தன் மகளும் யெகோவாவை நேசிக்க வேண்டும் என்பதற்காக அனிதா பைபிளைப் பற்றி தன் மகளுக்கு கற்பிக்கிறார். ‘யெகோவாவால்தான் இன்று நான் உயிரோடு இருக்கிறேன்’ என்று அந்தச் சிறுமி வாயார சொல்கிறாள். அவர் உயிரின் ஊற்றுமூலர் என்பதால் மட்டுமல்ல விழித்தெழு!-விலுள்ள பைபிளின் போதனைகள் அவளுடைய உயிரைக் காப்பாற்றியதாலும் அவள் அப்படி உணர்கிறாள். (g10-E 02)
[அடிக்குறிப்புகள்]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
b மூல மொழியில் இருந்த சொல்லமைப்பு, தாய் அல்லது சேயின் மரணத்தைக் குறிப்பிட்டது.