பைபிளின் கருத்து
அறிவியலும் பைபிளும் ஒன்றோடொன்று ஒத்துப்போகிறதா?
“நான் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது, ‘இதை கடவுள் இப்படித்தான் படைத்திருக்கிறாரா’ என மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்வேன். அப்போது, நான் அறிந்துவைத்திருக்கிற அறிவியலுக்கு அர்த்தமும் எனக்கு சந்தோஷமும் கிடைக்கிறது.” —ஹென்றி ஷாஃபர், வேதியியல் பேராசிரியர்.
இயற்கையை நன்கு புரிந்துகொள்ள அறிவியல் நமக்குப் பேருதவியாக இருக்கிறது. இயற்கையிலுள்ள ஒழுங்கையும் துல்லியத்தையும் நுணுக்கத்தையும் கவனிக்கும் சிலர், இதற்கு பின்னால் எல்லையில்லா புத்திக்கூர்மையும் சக்தியும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை அறிவியல் என்பது, இயற்கையைப் பிரதிபலிக்கிற கண்ணாடியாக மட்டுமல்ல கடவுளுடைய மனதைப் பிரதிபலிக்கிற கண்ணாடியாகவும் இருக்கிறது.
இந்தக் கருத்தை பைபிளும் ஆணித்தரமாக ஒத்துக்கொள்கிறது. உதாரணத்திற்கு ரோமர் 1:20 சொல்கிறது: “காணமுடியாத [கடவுளுடைய] பண்புகள், அதாவது நித்திய வல்லமை, கடவுள்தன்மை ஆகியவை, உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன.” அதேபோல் சங்கீதம் 19:1, 2 சொல்கிறது: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.” இயற்கையில் ஏராளமான அற்புதங்கள் ஒளிந்திருந்தாலும் அது படைப்பாளரைப் பற்றி கடுகளவே கற்பிக்கிறது.
அறிவியலுக்கு உள்ள வரம்புகள்
கடவுளைப் பற்றிய முக்கியமான உண்மைகளை அறிவியல் மூலமாக தெரிந்துகொள்ளவே முடியாது. இதைக் கொஞ்சம் கவனியுங்கள்: ஒரு ‘சாக்லேட் கேக்கின்’ ஒவ்வொரு மூலக்கூறையும் ஒரு விஞ்ஞானியால் விவரிக்க முடியும்; ஆனால் அந்த ‘கேக்’ ஏன் செய்யப்பட்டது, யாருக்காகச் செய்யப்பட்டது, போன்ற கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியாது. என்றாலும், நிறையப் பேர் இந்தக் கேள்விகளுக்குத்தான் முக்கியமாகப் பதில் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். எனவே, இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க அந்த விஞ்ஞானி, ‘கேக்’ செய்தவரிடம்தான் கேட்க வேண்டும்.
அதேபோல் அறிவியலும் “பல விஷயங்களைப் பற்றி துல்லியமான தகவல்களைத் தருகிறது, . . . ஆனால் நாம் தெரிந்துகொள்ள விரும்பும் மிக முக்கியமான கேள்விகளுக்கு . . . உதாரணத்திற்கு, கடவுளையும் நித்தியத்தையும் பற்றிய கேள்விகளுக்கு அது கனத்த மௌனம் சாதிக்கிறது” என ஆஸ்திரியாவைச் சேர்ந்த இயற்பியலாளரும் நோபல் பரிசைப் பெற்றவருமான இர்வின் ஷ்ராடிங்கர் எழுதினார். அப்படியென்றால், பின்வரும் கேள்விகளுக்கு கடவுளால் மட்டுமே பதில் சொல்ல முடியும்: இந்தப் பிரபஞ்சம் ஏன் படைக்கப்பட்டது? பூமியில் மனிதர்கள் உட்பட எண்ணற்ற உயிரினங்கள் இருப்பதற்குக் காரணம் என்ன? கடவுள் உண்மையிலேயே சர்வ சக்தி படைத்தவராக இருந்தால் அவர் ஏன் கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்காமல் இருக்கிறார்? இறந்த பின் வாழ்க்கை உண்டா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கடவுள் பதில் அளித்திருக்கிறாரா? ஆம், பைபிளில் பதில் அளித்திருக்கிறார். (2 தீமோத்தேயு 3:16) ஆனால், ‘பைபிள் உண்மையில் கடவுள் தந்த புத்தகம் என்று நான் எப்படி நம்புவது?’ என நீங்கள் கேட்கலாம். கடவுளுடைய படைப்புகளைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்கள் அறிவியல்பூர்வமாக உண்மையாய் இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளுடைய படைப்புக்கும் அவர் தந்த புத்தகமான பைபிளுக்கும் இடையே எந்த முரண்பாடும் இருக்கக் கூடாது. சரி, இது உண்மையாக இருக்கிறதா என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
அறிவியலுக்கு முன்பே பைபிள் தெரியப்படுத்தியது
இந்தப் பிரபஞ்சத்தில் பல்வேறு கடவுட்கள் வசிப்பதாக பைபிள் காலத்தில் வாழ்ந்த அநேகர் நம்பினார்கள்; அதோடு சூரியன், சந்திரன், வானிலை, விளைச்சல், போன்றவற்றை அந்தக் கடவுட்களே கட்டுப்படுத்துகின்றன, இயற்கை சட்டங்கள் அல்ல என்பதாகவும் அவர்கள் நம்பினார்கள். ஆனால், உண்மைக் கடவுளை வணங்கிய பூர்வ கால எபிரெய தீர்க்கதரிசிகள் அப்படி நம்பவில்லை. யெகோவா தேவனால் இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், சில சந்தர்ப்பங்களில் அவர் அவற்றைக் கட்டுப்படுத்தினார் என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள். (யோசுவா 10:12-14; 2 இராஜாக்கள் 20:9-11) இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியரான ஜான் லெனாக்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: இந்தத் தீர்க்கதரிசிகளுக்கு “இப்பிரபஞ்சம் [புராணக் கடவுட்களின்] கட்டுப்பாட்டில் உள்ளதென்ற நம்பிக்கையைக் கைவிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. . . . ஏனென்றால், அப்படிப்பட்ட கடவுட்கள் இருக்கிறார்கள் என்றே அவர்கள் முதலாவதாக நம்பவில்லை. வானத்தையும் பூமியையும் படைத்த ஒரே உண்மைக் கடவுள்மீது அவர்கள் நம்பிக்கை வைத்தார்கள்; இந்த நம்பிக்கைதான், புராணக் கடவுட்கள் இப்பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்ற மூடநம்பிக்கையில் சிக்காமல் அவர்களைப் பாதுகாத்தது.”
சரி, அந்த நம்பிக்கை அவர்களை எப்படிப் பாதுகாத்தது? இயற்கைச் சட்டங்கள் அல்லது விதிகள் மூலமாக இந்தப் பிரபஞ்சத்தை தாம் கட்டுப்படுத்தி வருவதாக உண்மைக் கடவுள் அவர்களுக்குத் தெரிவித்திருந்தார். உதாரணமாக, 3,500-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு, தம்முடைய ஊழியரான யோபுவிடம் யெகோவா தேவன் “வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா?” என்று கேட்டார். (யோபு 38:33, ஈஸி டு ரீட் வர்ஷன்) கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரேமியா தீர்க்கதரிசி, “வானத்திற்கும் பூமிக்குமுள்ள சட்டங்களை” பற்றி எழுதினார்.—எரேமியா 33:25, ERV.
எனவே, பைபிள் கால தீர்க்கதரிசிகள் எழுதியவற்றில் நம்பிக்கை வைத்திருந்த பூர்வ மக்கள் எல்லாரும் இதை அறிந்திருந்தார்கள்: இந்தப் பிரபஞ்சத்தைப் புராண கால கடவுட்கள், கோபமே உருவான கடவுட்கள் கட்டுப்படுத்துவதில்லை, ஆனால் மனிதர்களால் புரிந்துகொள்ள முடிந்த இயற்கைச் சட்டங்களே கட்டுப்படுத்துகின்றன. அதனால்தான் கடவுள் பயமுள்ள அந்த மக்கள் படைப்புகளான சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை வழிபடவும் இல்லை, அவற்றைப் பற்றிய எந்த மூடநம்பிக்கைகளையும் கொண்டிருக்கவில்லை. (உபாகமம் 4:15-19) அதற்குப் பதிலாக, இந்தப் படைப்புகளை உற்று கவனித்து அதிலிருந்து கடவுளைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டார்கள், அதாவது அவருடைய ஞானம், சக்தி போன்ற குணங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டார்கள்.—சங்கீதம் 8:3-9; நீதிமொழிகள் 3:19, 20.
இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் இருக்கிறது என இன்று அநேக விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள். இதைத்தான் அன்று வாழ்ந்த எபிரேயர்களும் நம்பினார்கள். “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என ஆதியாகமம் 1:1 சொல்கிறது. அதோடு, ஏறக்குறைய 3,500 வருடங்களுக்குமுன் யோபுவிடம், ‘பூமியை அந்தரத்திலே தொங்கவைத்ததாக’ கடவுள் தெரியப்படுத்தினார். (யோபு 26:7) அதோடு, 2,500-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி, பூமி உருண்டையாக, வட்டவடிவில் உள்ளதென எழுதினார்.—ஏசாயா 40:22.a
ஆம், கடவுளுடைய படைப்புகளைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்கள் அறிவியல்பூர்வமாக உண்மையாய் இருக்கின்றன. தகவல் சுரங்கங்களாக விளங்கும் இந்த இரண்டு துறைகளுமே கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள இன்றியமையாததாக இருக்கின்றன. இவை இரண்டுமே இரு கண்களைப் போன்றவை. எனவே, கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள இவை இரண்டுமே முக்கியம்.—சங்கீதம் 119:105; ஏசாயா 40:26. (g11-E 02)
[அடிக்குறிப்பு]
a கடவுளைப் பற்றியும் பைபிளின் நம்பகத்தன்மையைப் பற்றியும் கூடுதலாகத் தெரிந்துகொள்ள உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தில் அதிகாரம் 17-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
உங்கள் பதில்?
● கடவுளைப் பற்றிப் படைப்பு என்ன சொல்கிறது?—ரோமர் 1:20.
● கடவுளைப் பற்றிய என்ன உண்மைகளை அறிவியலால் விளக்க முடியவில்லை?—2 தீமோத்தேயு 3:16.
● பூர்வ காலத்தில் வாழ்ந்த உண்மைக் கடவுளுடைய தீர்க்கதரிசிகளுக்கு படைப்பைப் பற்றிய மூடநம்பிக்கைகள் ஏன் இருக்கவில்லை?—எரேமியா 33:25.
[பக்கம் 19-ன் சிறுகுறிப்பு]
இந்தப் பிரபஞ்சத்தை, ‘வானத்திற்கும் பூமிக்குமுள்ள சட்டங்கள்,’ அதாவது இயற்கை விதிகள் கட்டுப்படுத்துகின்றன.—எரேமியா 33:25, ERV