டிப்ஸ் 1 ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள்
“சாப்பாடு சாப்பிடுங்கள். அளவாகச் சாப்பிடுங்கள். பச்சைக் காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.” எழுத்தாளர் மைக்கேல் போலன் உதிர்த்த வார்த்தைகள் இவை; ரத்தின சுருக்கமான வார்த்தைகளில் எளிமையான, மிகச் சிறந்த உணவுத் திட்டத்தை அவர் சொன்னார். அவர் சொன்னதை விலாவாரியாகச் சிந்திப்போமா?
‘ரெடிமேட்’ உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். காலங்காலமாக மக்கள் ரசித்து ருசித்து சாப்பிடுகிற சத்தான, ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள். நவீன யுகத்தின் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். ‘பாக்கெட்’, ‘டின்’ போன்றவற்றில் அடைக்கப்பட்ட உணவுகளில் அல்லது ‘ஃபாஸ்ட்ஃபுட்’ உணவு வகைகளில் இனிப்பு, உப்பு, கொழுப்பு அதிக அளவில் உள்ளன; இப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், இதய நோய், புற்றுநோய் மற்றும் இதர கொடிய நோய்கள் வரலாம். உணவுப் பொருள்களை எண்ணெய்யில் வறுத்தெடுப்பதற்குப் பதிலாக, ஆவியில் வேக வையுங்கள், ‘மைக்ரோவேவ் அவனில்’ சமையுங்கள், நெருப்பில் வாட்டியெடுங்கள். உப்பைக் குறைக்க கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்ற மருத்துவ குணமுள்ள பொருள்களையும், மசாலாப் பொருள்களையும் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். இறைச்சியை நன்றாக வேகவைத்துச் சாப்பிடுங்கள்; கெட்டுப்போன உணவுப் பதார்த்தங்களை ஒருபோதும் சாப்பிடாதீர்கள்.
அளவாகச் சாப்பிடுங்கள். குண்டாகவும், எடை அதிகமாகவும் உள்ளவர்களின் எண்ணிக்கை உலகெங்கும் கிடுகிடுவென அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு பகீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம்? அளவுக்கு மீறி சாப்பிடுவதே. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், “போஷாக்குக் குறைவான பிள்ளைகளைவிட குண்டுப் பிள்ளைகளே அதிகம்” என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. குண்டுப் பிள்ளைகளுக்கு இப்போதும் சரி பெரியவர்களாகும்போதும் சரி, நீரிழிவு நோய் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, பெற்றோர்களே, நீங்கள் அளவாகச் சாப்பிட்டால் உங்கள் பிள்ளைகள் அதைப் பார்த்துக் கற்றுக்கொள்வார்கள்.
பச்சைக் காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சமச்சீரான உணவை சாப்பிட வேண்டுமென விரும்பினால் பழவகைகள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்வற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சியையும் மாவுச் சத்துள்ள பொருள்களையும் குறைத்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஓரிரு முறை இறைச்சிக்குப் பதிலாக மீன் சாப்பிடுங்கள். ரொட்டி, பன் போன்று மைதாவில் செய்யப்பட்ட உணவுகளையும், ‘பாலிஷ்’ செய்யப்பட்ட அரிசி வகைகளையும் குறைத்துவிடுங்கள்; ஏனென்றால், இவற்றைச் சுத்திகரிக்கும்போது சத்துகள் குறைந்துவிடுகின்றன. அநேகர் விரும்பி சாப்பிடுகிற, உடம்புக்குக் கெடுதலான உணவுவகைகளையும் தவிர்த்துவிடுங்கள். பெற்றோர்களே, உங்கள் பிள்ளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விரும்புகிறீர்களா? ஆரோக்கியமான உணவுமீது ருசியை வளர்த்துக்கொள்ள உதவுங்கள். உதாரணமாக, சிப்ஸ், சாக்லேட் போன்ற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக, பட்டாணி, நிலக்கடலை, பாதாம் போன்ற கொட்டைகளை, நன்றாகக் கழுவப்பட்ட பச்சைக் காய்கறிகளை, பழங்களைக் கொடுங்கள்.
நிறையத் தண்ணீர் குடியுங்கள். பிள்ளைகள், பெரியவர்கள் என எல்லாருமே தினமும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்; அதோடு, இனிப்பு சேர்க்காத பானங்களையும் குடிக்க வேண்டும். வெயில் கொளுத்துகிறபோது, வேர்க்க விறுவிறுக்க வேலை செய்கிறபோது, உடற்பயிற்சி செய்கிறபோது, இவற்றை நிறையக் குடிக்க வேண்டும். இவை ஜீரணத்துக்கு உதவும், உடலிலிருந்து நச்சுப்பொருள்களை வெளியேற்றிவிடும்; சருமத்தைப் பொலிவாக்கும், உடல் எடை குறைய உதவும். அதோடு, உங்கள் தோற்றமும் அழகாகும், நீங்களும் சந்தோஷமாக இருப்பீர்கள். மதுபானங்களையும், குளிர்பானங்களையும் அளவுக்குமீறி அருந்தாதீர்கள். தினமும் குளிர்பானம் குடித்துவந்தால் ஒரு வருடத்தில் நம் எடை 6.8 கிலோ அதிகமாகும்.
சில நாடுகளில், சுத்தமான தண்ணீர் கிடைப்பது திண்டாட்டமாக இருக்கிறது. அதோடு, அதை எக்கச்சக்கமாகக் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. அதற்காக, தண்ணீர் குடிக்காமல் விட்டுவிடாதீர்கள். கலங்கலான தண்ணீரைக் கொதிக்க வைத்தோ சுத்திகரித்தோ குடியுங்கள். போர்களிலோ, பூமியதிர்ச்சிகளிலோ சாகிறவர்களின் எண்ணிக்கையைவிட அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் சாகிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஓர் அறிக்கை காட்டுகிறது; ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 4,000 பிள்ளைகளின் உயிரை அது குடித்துவிடுகிறது என்றும் அது காட்டுகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வெறுமனே தாய்ப்பால் கொடுக்க வேண்டும், அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வயதுவரை தாய்ப்பாலோடு சேர்த்து இதர உணவுகளையும் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. (g11-E 03)