இளைஞர் கேட்கின்றனர்
நான் எடையைக் குறைப்பது எப்படி?
“பருவ வயது பையன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் மிகக் கொடுமையான ஒரு காரியம் பருமனாக இருத்தல் ஆகும்.” இவ்வாறு ஜட் என்ற ஒரு பருவ வயது பையன் புலம்பினான். நீங்கள் அளவுக்குமீறின எடையுள்ளவராக இருந்தால், அவன் எப்படி உணர்கிறான் என்பதை நன்றாகவே அறியலாம்.
எனினும், கூடுதலான உடல் கொழுப்பு உங்கள் தோற்றத்தை மட்டும் பாதிப்பதைவிட அதிக பாதிப்பைக் கொடுக்கும். தடியாக இருத்தல், அநேக உடல் நலக் கோளாறுகளை, மூட்டு வலிகள், சுவாச நோய்கள், நீரிழிவுநோய், மேலுமாக வாழ்க்கையின் பிற்காலத்தில் உங்களைத் தொல்லைப்படுத்தும் இருதய நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவை பெறும் அபாயத்தில் உங்களை வைக்கக்கூடும்.a
ஒருவேளை, கொஞ்சம் தடியான ஒருவராக இருந்தால், நீங்கள் எடையைக் குறைக்கவே வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. நம்மில் சிலர் பெருத்துப்போயிருக்கும் உடலமைப்பை வெறுமனே சுதந்தரித்திருக்கிறோம்; நம்முடைய சராசரி எடையிலும்கூட நாம் விரும்பியதைவிட குண்டானவர்களாகக் காணப்படுகிறோம்.b ஆனால் உங்களுடைய மருத்துவர் நீங்கள் ஆரோக்கியத்திற்குத் தேவையான அளவைவிட, அதிகமான கொழுப்பை உடையவராக இருக்கிறீர்கள் என்று சொன்னால், பல அம்சங்கள் அதில் உட்பட்டிருக்கக்கூடும். தி ஹெல்த்தி அடலெசன்ட் என்ற புத்தகம் சொல்கிறது: “கணயம், தைராய்டு, அண்ணீரகம் போன்ற நாளமில்லா சுரப்பிகளின் கோளாறு சிலர் தடியாவதோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.”
பெருந்திண்டியும் உடற்பயிற்சியின்மையும்
பலருடைய காரியங்களில், தடியாக இருத்தலுக்கான காரணம் போதாத சத்துணவு பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை போன்றவையாகும். இளம் ஜட் நினைவுகூருகிறார்: “எங்களைப் பராமரிப்பதற்காக என் அம்மா வேலைக்குப் போகவேண்டியதிருந்ததால், என் சகோதரரும், நானும் . . . நாங்களாகவே உணவு சாப்பிட்டோம். பொட்டலங்கள் நிறைய இனிப்புத் தின்பண்டங்களைச் சாப்பிட்டு, இரண்டு லிட்டர் புட்டிகளில் [சோடா] குடித்தோம்.” கேள்விப்பட்டதுமாதிரி இருக்கிறதா?
மற்ற இளைஞருக்கு சாப்பிடுவதென்பது பசியோடு அந்தளவுக்குச் சம்பந்தப்பட்டிருப்பதைவிட பேணுதல் மற்றும் ஆதரவின் தேவையைப் பூர்த்திசெய்வதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர், பெற்றோரின் மணவிலக்கு, ஓர் அன்பானவரின் சாவு, அல்லது மன அதிர்ச்சி போன்ற மன இறுக்கத்தைக் குறைப்பதற்காகத் தவறான வழியில் நடத்தப்பட்டு, அளவுக்கதிகமாக சாப்பிடுகின்றனர்.
பெருந்திண்டி பெரும்பாலும் உடற்பயிற்சியின்மையால் மேலும் மோசமாக்கப்படுகிறது. சீரற்ற உணவுப்பழக்கங்களுக்கும் தடித்துவிடுவதற்குமான பெற்றோரின் வழிகாட்டி (A Parent’s Guide to Eating Disorders and Obesity) இவ்வாறு கணிக்கிறது: “தொலைக்காட்சி, உடல் சார்ந்த செயலற்ற தன்மையைத் தேவைப்படுத்துவதோடு, அதன் நிகழ்ச்சிநிரல்களும் விளம்பரங்களும்கூட சாப்பிடுதலை . . . சாப்பிடுதலை . . . மேலும் இன்னும் சாப்பிடுதலையே ஊக்கப்படுத்துகின்றன.”
பட்டினியாக இருக்கும் உணவுக் கட்டுப்பாடு பழக்கத்தின் கண்ணி
ஒவ்வொரு 4 அமெரிக்கர்களுக்கு 1 நபர் ஏதோவொரு வகையான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறதாக சிலர் வாதாடுகின்றனர். எனினும், உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து எடையைக் குறைத்தவர்களில் 90-க்கும் மேற்பட்ட சதவிகிதத்தினர் மீண்டும் எடையைப் பெற்றனர். அப்படியென்றால், எங்குப் பிரச்னை?
உங்கள் உடல் ஒரு கொதிகலம்மாதிரி; உங்கள் மூளை வெப்பநிலைக் காப்பகம் (thermostat). நீங்கள் சாப்பிடும்போது, உங்கள் வளர்சிதை வினை மாற்றம் (metabolism) உணவை எரித்து, அதன் ஆற்றலை வெளியிடுகிறது. உடலுக்குத் தேவையானதைவிட அதிகமான உணவு எடுக்கப்படும்போது, அது கொழுப்பாகச் சேகரிக்கப்படுகிறது. இப்போது, எடையைக் குறைப்பதற்கு நீங்கள் பட்டினியாக இருந்தால், ஆரம்பத்தில் எடை குறையும். ஆனால் உங்கள் உடல் விரைவாக ‘இக்கட்டு நிலைக்கு’ மாறி, உங்கள் வளர்சிதை வினை மாற்றத்தை மெதுவாக்குவதன்மூலம் உங்கள் சூட்டைக் குறைக்கிறது. நீங்கள் பட்டினியாக இருக்கும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினபோதும், மறுபடியும் நீங்கள் எடைகூட ஆரம்பித்துவிடுகிறீர்கள். நீங்கள் சாப்பிடுவதில் அநேகம் கொழுப்பாகச் சேகரிக்கப்படுகிறது. நீங்கள் இழந்த ஒவ்வொரு கிலோவையும் மறுபடியும் பெற்றுவிடுகிறீர்கள், பின்னர் இன்னும் கொஞ்சம் அதிகமும்கூட. கவலையுற்று மீண்டும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதிகம் இழந்தால், அதிகம் பெறுகிறீர்கள்.
எனவே, தந்திரமான உணவுக் கட்டுப்பாட்டு திட்டங்கள் ஏன் பயனளிப்பதில்லை என்பதை நீங்கள் காணமுடியும். பசியுணர்வைக் குறைக்கும் மாத்திரைகள், சிறிது காலத்திற்கு உங்கள் பசியுணர்வை அடக்கக்கூடும். ஆனால் உடல் அவற்றிற்கு ஏற்ப விரைவாக மாறிக்கொள்கிறது, உங்கள் பசி திரும்பிவந்துவிடுகிறது. அல்லது உங்கள் வளர்சிதை வினை மாற்றம் மெதுவாக நடைபெறுவதால், உங்கள் எடை எப்படியோ அதிகரித்துவிடுகிறது. கிறுகிறுப்பு, உயர் இரத்த அழுத்தம், ஏக்கநோய், பழக்கத்திற்கு அடிமையாதல் போன்ற சில பக்கப்பாதிப்புகளையும் சொல்லவா வேண்டும். நீரை அகற்றும் அல்லது உங்கள் வளர்சிதை வினை மாற்றத்தை அதிகரிக்கும் மாத்திரைகளைப் பற்றியும் இதையே சொல்லலாம். மருத்துவர் லாரன்ஸ் லேம் நேரடியாக இவ்வாறு சொல்கிறார்: “உடல் கொழுப்பை இழக்கும்படி செய்யும் ஒரு பாதுகாப்பான, பயன்தரத்தக்க மாத்திரை ஏதும் இல்லை.”
இளைஞராக, உங்கள் உடலுக்கு ஒவ்வொரு நாளும் கணிசமான அளவு கலோரிகளும் ஊட்டச்சத்துக்களும் தேவை. பட்டினிபோடும் உணவுக் கட்டுப்பாட்டுமுறை சொல்லர்த்தமாகவே உங்கள் வளர்ச்சியைக் குறைக்கக்கூடும். சவுல் ராஜாவைப் பற்றி பைபிள் 1 சாமுவேல் 28:20-ல் என்ன சொல்கிறது என்பதையும் சிந்தியுங்கள்: “அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.” அதைப்போலவே, ஒரு மருத்துவர் சொல்கிறபடி, தங்களைத் தாங்களே பட்டினிபோட முயற்சிசெய்யும் இளைஞர், “களைப்பு, . . . மனச்சோர்வு, குளிர்ச்சி, பள்ளிப் படிப்பில் மந்தமடைதல், மலச்சிக்கல், கவலை, மாதவிடாயின்மை [மாதவிடாய் வழக்கத்திற்கு மாறாக நின்றுவிடுதல் அல்லது இல்லாதிருத்தல்], மூளை மந்தம்,” போன்றவற்றால் அவதியுறுகின்றனர்.
பாதுகாப்பான எடை குறைப்பு
எடையைக் குறைப்பதற்குப் பாதுகாப்பான வழி, உங்கள் குடும்ப மருத்துவரால் ஒரு முழுமையான சோதனையோடு ஆரம்பிக்கிறது. ஒரு சாதாரண உணவுக் கட்டுப்பாட்டு திட்டத்தை முறியடிக்கும் எந்த உடல்நல பிரச்னைகளையும் அவர் சோதிக்கக்கூடும். நீங்கள் ஒரு நடைமுறையான எடைக் குறைப்பு இலக்கை வைத்து, அந்த இலக்கை நடைமுறையான காலக்கட்டத்துக்குள் பெற ஒரு திட்டமிடுவதற்கு அவர் உங்களுக்கு உதவக்கூடும்.
பைபிள் சொல்கிறது: “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை.” (பிரசங்கி 2:24) ஆகவே, சாப்பிடுவதால் வரும் மகிழ்ச்சியை உங்களிடமிருந்து நீக்கும் ஓர் உணவுக் கட்டுப்பாட்டுமுறை நீண்ட காலத்திற்கு பலனளிப்பதில்லை. மேலும், பெருந்திண்டியைத்தான் பைபிள் கண்டனம்செய்கிறது. (நீதிமொழிகள் 23:20, 21) “பழக்கங்களில் மட்டளவில்,” இருக்க உங்களுக்கு உதவுவதற்கு ஒருசில ஆலோசனைகள் இதோ இங்கு கொடுக்கப்படுகின்றன.—1 தீமோத்தேயு 3:11, NW.
காலை உணவைத் தவறவிடாதீர்கள்! “பசியும், காயப்போட்ட உணர்வும் உங்களை மேற்கொள்ளும்,” என்று தி நியூ டீனேஜ் பாடி புக் எச்சரிக்கிறது. “நாளின் பிற்பகுதியில் அதிகமான உணவை—கலோரியை—சாப்பிடும்படி தூண்டப்படக்கூடும்.”
ஒவ்வொரு சாப்பாட்டு சமயத்திற்கு முன்பும் அதிகமான அளவு தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் வயிறை நிரப்பிவிடும். அதிகமான அளவு தண்ணீர் பருகுதல், உடல் கொழுப்பு சேருவதைக் குறைப்பதிலும், ஒரு பாகத்தை வகிப்பதாகத் தெரிகிறது. எனவே, மருத்துவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டுக் கோப்பைகள் (glasses) தண்ணீராவது குடிக்கவேண்டும் என்று சிபாரிசுசெய்கின்றனர்.
சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்க்காதீர்கள். மருத்துவர் சீமோர் ஐசன்பர்க் சொல்கிறார்: “நீங்கள் டிவியை மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போது . . . , ஓர் எந்திரம்போல் சாப்பிட ஆரம்பித்துவிடுகிறீர்கள்[விடக்கூடும்].”
நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு ஜெபியுங்கள். ‘விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் [போஜனங்களைப்] படைத்தார்’ என்பதை நினைவில் வையுங்கள். (1 தீமோத்தேயு 4:3) சிருஷ்டிகரோடு தன் நெருங்கிய உறவை மனதில் வைத்தவனாக இருக்கும் கடவுள் பயமுள்ள இளைஞன், தன்னையே எண்ணத்திலும் செயலிலும் சோம்பேறியாக ஆக்குமளவிற்கு அதிகமாகச் சாப்பிடும் பழக்கத்துக்கு இடங்கொடுக்க விரும்பமாட்டான். போதுமானளவு சாப்பிடவேண்டும் என்ற உங்கள் தீர்மானத்தை ஜெபம் உறுதிப்படுத்தும்.
மெதுவாகச் சாப்பிடுங்கள். வயிறு நிரம்பிவிட்டது என்று அது மூளைக்கு செய்தியனுப்புவதற்கு ஏறக்குறைய 20 நிமிடங்கள் எடுக்கிறது. எனவே மெதுவாகச் சாப்பிடுவது, ‘திருப்திபட சாப்பிடுவதற்கு’ உங்களுக்கு உதவிசெய்யும், ஆனால் அதற்கு மேலாக அல்ல!—லேவியராகமம் 25:19.
சாப்பிடுவதற்குப் பதிலாக நல்ல மாற்றுவழிகளைக் கண்டுபிடியுங்கள்—விசேஷமாக நீங்கள் விரக்தியடைந்தோ, உணர்ச்சிவசப்பட்டோ, தனியாகவோ, மனச்சோர்வுற்றோ இருக்கும்போதெல்லாம் சாப்பிடும் பழக்கத்தை உடையவராக இருந்தால் இதைச் செய்யுங்கள். உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரோடு பேசுங்கள். உலாவச் செல்லுங்கள் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். பிடித்த பொழுதுபோக்கு பழக்கத்தில் ஈடுபடுங்கள். இசை கேளுங்கள். இன்னும் மேம்பட்டதாக, உங்களுடைய ஆவிக்குரிய பசியைத் திருப்திப்படுத்த முயற்சிசெய்யுங்கள். (1 பேதுரு 2:3) என்னதான் இருந்தாலும், உணவு விசுவாசத்தை அதிகரிப்பதில்லை. (எபிரெயர் 13:9-ஐ ஒப்பிடுக.) ஆனால் பைபிளை வாசிப்பது அவ்வாறு செய்கிறது. மேலும் உங்களுடைய பசியார்வத்திலிருந்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப இது உதவலாம்.
உங்கள் திட்ட உணவையும் வாழ்க்கை-பாணியையும் மாற்றுதல்
நீங்கள் என்ன சாப்பிட்டுவருகிறீர்கள் என்பதிலும் மாற்றங்கள் செய்யப்படவேண்டியதிருக்கலாம். மோசேயின் நியாயப்பிரமாணம் கொழுப்பு சாப்பிடுவதைத் தடைசெய்தது. (லேவியராகமம் 3:16, 17) இது மதச் சம்பந்தமான காரணங்களுக்காக இருந்தாலும், கொழுப்பு நிறைந்த உணவுகளை—பாலாடைக்கட்டி சான்ட்விச் அல்லது கொழுப்பில் வறுக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை—தவிர்ப்பது புத்திக்கூர்மையான நல்ல உணவுக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. இதுபோலவே, இனிப்பான குளிர்பானங்கள், மற்றும் மாப் பலகார வகைகள் போன்றவை ஊட்டச்சத்தில் குறைவுபட்டும், கலோரியில் அதிகமாயும் இருக்கின்றன. கொழுப்புக் குறைவான மாட்டுக்கறித் துண்டில் அதிகமான உப்பைப் போட்டு சாப்பிடுவது மிகச் சுவையாக இருந்தாலும், அது உங்கள் உடல் தண்ணீரை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவிசெய்கிறது.
உங்களுக்குப் பிரியமான உணவுப் பதார்த்தங்களை அவ்வப்போது சிறியளவில் அனுபவிப்பது உங்களைப் பாதிக்கப்போவதில்லை என்று அநேக உணவுமுறை வல்லுநர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே எடையைக் குறைக்க விரும்பினால், பழங்கள், கொட்டைகள், முழுத்தானியங்கள், காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளுக்கு ஒரு சுவையார்வத்தை வளர்க்கவேண்டும். “சலிப்படைந்துவிடாதபடிக்கு வேறுபட்ட வகையான உணவுகளைச் சாப்பிடுங்கள்,” என்று உணவுமுறை வல்லுநர் ஒருவர் சொல்கிறார். உங்கள் குடும்பத்தில் நீங்கள் சமைப்பதில்லையென்றால், உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், அவர்கள் உதவிசெய்யக்கூடும். நிஜமாகவே, தினசரி உணவுப் பட்டியலில் நல்ல மாற்றங்கள் செய்யப்பட்டால் முழுக்குடும்பமும் பலனடையும்.
சரியானதைச் சாப்பிடுவது முக்கியமானது என்றாலும், உங்கள் மூளையின் “வெப்பநிலைக் காப்பகத்தை” பயன்படுத்தவில்லையென்றால், கிலோக்களைக் குறைக்கமுடியாது. எப்படி? வாரத்திற்கு மூன்று முறையாவது ஏறக்குறைய 20 நிமிடத்திற்கு மிதமான ஏரோபிக் (aerobic) உடற்பயிற்சியைச் செய்வதன்மூலம். (1 தீமோத்தேயு 4:8) சுறுசுறுப்பான நடை அல்லது படிக்கட்டில் ஏறுதல் போன்ற ஏதேனும் எளிய செயல் போதுமானது. உங்கள் எடையோ உடல்வாகோ என்னவாக இருந்தாலும், உடற்பயிற்சி உங்களை, காண்பதற்கு மெலிந்தவராகவும் நல்ல உடல்வடிவத்தை உடையவராகவும் இருப்பதற்கு உதவிசெய்கிறது. உங்கள் வளர்சிதை வினை மாற்ற உலையை அது முடுக்கிவிடும்போது, நீங்கள் கலோரிகளை எரித்து, கொழுப்பையும் எரிக்கிறீர்கள். உடற்பயிற்சிமூலம் நீங்கள் உங்கள் உடலின் வேதியியலை மாற்றமுடியும். உங்கள் தசையளவை நீங்கள் அதிகரிக்கலாம். நீங்கள் தூங்கும்போதும்கூட, தசைகள் கலோரிகளை எரிக்கின்றன!
உறுதியோடும், தீர்மானத்தோடும் அதிகமான எடையை எதிர்த்துப் போராடும் உங்கள் போராட்டத்தில் வெற்றியடையலாம்.c சில கிலோ எடையை இழப்பது உங்கள் பிரச்னைகள் எல்லாவற்றையும் தீர்க்கப்போவதில்லை என்பது உண்மை. ஆனால் நீங்கள் மேம்பட்ட தோற்றமளித்து, நன்றாக உணர்வீர்கள். உங்களைப் பற்றி நீங்களேயுங்கூட சிறப்பாக உணர ஆரம்பித்துவிடுவீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
a தடித்த இளைஞரில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் வயதானபோதும் தடித்தவர்களாகத் தொடர்ந்திருக்கின்றனர்.
b “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் இவ்வளவு தடியாக இருக்கிறேன்?” என்ற கட்டுரையை விழித்தெழு! ஏப்ரல் 22, 1994, இதழில் காணவும்.
c வினைமையான சீரற்ற உணவுப்பழக்கங்களை உடையவர்கள் தங்கள் தளர்ச்சியைச் சமாளிக்க வல்லுநர்களின் உதவியை நாடவேண்டியதிருக்கலாம்.
[பக்கம் 21-ன் படம்]
உடற்பயிற்சியும் திட்டமிட்ட ஊட்டச்சத்துமிக்க சாப்பாடுகளும் பாதுகாப்பான எடைக் குறைப்புக்கு அடிப்படை அம்சமாகும்