நான் எடையைக் குறைத்தால் யார்வேண்டுமானாலும்
குறைக்கமுடியும்!
உங்கள் குளியலறையிலுள்ள எடை கருவியை நீங்கள் வெறுக்கிறீர்களா? நான் வெறுத்தேன். கடந்த வருடம் எடைக்கருவியின் முகப்பு மற்றொரு புதிய உச்சநிலையான—கிட்டத்தட்ட 110 கிலோகிராமுக்கு ஏறியபோது வெறுப்புணர்ச்சியுடன் நான் முறைத்துப்பார்த்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘உலக அதிகன குத்துச் சண்டை வீரனைவிடவும் அமெரிக்க தொழில்முறை கால்பந்தாட்டக்காரர்கள் பலரைவிடவும் நான் அதிக கனமாயிருக்கிறேன். இது கேவலத்திலும் கேவலம். இது ஆபத்தாகிக்கொண்டிருக்கிறது!’ என்று நான் எனக்குள்ளே நினைத்துக்கொண்டேன்.
ஒருவேளை நீங்கள் என்னைப்போல யாரோ ஒருவரை அறிந்திருக்கலாம். நான் அலுவலகத்தில் பணிசெய்யும் நடுத்தரவயதின் தொடக்கத்திலிருக்கும் ஓர் ஆண். இளமையில் சரீரப்பிரகாரமாக சுறுசுறுப்பாக இருந்தேன். ஆனால் இப்போதோ நீண்டநேரம் செய்தித்தாள் படிக்காத சமயத்தில் விட்டு விட்டு உடற்பயிற்சி செய்துவருகிறேன். என் இரத்த அழுத்தம் அதிகளவின் வரம்புக்கோட்டில் உள்ளது, நிணநீர் கொழுப்பினி (Serum cholesterol) “ஓரளவு” அதிகம், என்னுடைய எடையில் 20 கிலோகிராம் அதிகம் இருக்கிறது, இருப்பினும் பிரச்னை அவ்வளவு ஆபத்தானதல்ல என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.
சரி, பிரச்னை வினைமையானதாகவே இருக்கிறது. என்னைப்போலுள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் மாரடைப்பால் மரிக்கின்றனர்—அதிக ஜனங்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அளவுக்குமீறியுள்ள ஒவ்வொரு கிலோகிராமின் அபாயத்தையும்பற்றிய புள்ளிவிவரங்களை என்னால் காண்பிக்கமுடியும். ஆனால் புள்ளிவிவரங்கள் பிரச்னையல்ல. வெளிப்படையாக சொல்லவேண்டுமானால், விதவைகளும் அனாதை பிள்ளைகளுமே பிரச்னை. என்னுடைய இரண்டு பெண் குழந்தைகளைப்போலுள்ள பிள்ளைகள், அவர்களுடைய தகப்பனில்லாமல் வளர்வதே பிரச்னையாகும்.
அப்பாமார்களே, அதைப்பற்றி நினைத்துப்பாருங்கள்.
ஒருகாலத்தில் நான் எடையைக் குறைக்கவேண்டுமென தீர்மானித்தேன். மே 22, 1989 (ஆங்கிலம்) விழித்தெழு! பத்திரிகையின் “எடைகுறைப்பது ஒரு தோற்றுப்போகும் போராட்டமா?” என்ற தொடர் கட்டுரைகளிலுள்ள மிகச்சிறந்த தகவல்கள் எனக்கு ஞாபகம் இருந்தன. முக்கியமாக அதில் கொடுக்கப்பட்டிருந்த எடைக்குறைப்புப் போராட்டத்தில் “வெற்றி பெறுவதற்கு நான்கு வழிகள்” எனக்கு நினைவில் இருந்தன. (1) சரியான உணவு, (2) சரியான நேரத்தில், (3) சரியான அளவில், (4) சரியான உடற்பயிற்சியுடன் என்பவையே கொடுக்கப்பட்ட அந்த நான்கு வழிகள்.
அந்த வழிமுறைகள் பலன் தருகின்றன! அவற்றைப் பின்பற்றியதால் என்னால் 30 கிலோகிராம் குறைக்கமுடிந்தது, நீங்களும் உங்களுடைய எடையைக் குறைக்கமுடியும். இதைச் செய்யும்போது ஒருசில காரியங்களைக் கற்றுக்கொண்டேன். அவை உங்களுக்கு உதவியளிப்பவையாக நீங்கள் காணலாம்.
எடைக்குறைவு உங்கள் எண்ணத்தோடு தொடங்குகிறது
அளவுக்குமீறிய கனமுள்ள நம்மில் அநேகர், பெரும்பாலும் நம்முடைய 30-களில் தொடங்கி, ஒரு வருடத்திற்குச் சில கிலோகிராம் என்ற வீதத்தில் சிறிது சிறிதாக எடை அதிகரிக்கப்பெற்றோம். அவ்வப்போது திட்ட உணவை (Diet) மேற்கொண்டு ஒரு சில கிலோகிராமைக் குறைப்போம். பிறகு அவற்றை வட்டியோடு திரும்பப் பெறுவோம். இவ்வாறு எனக்கு ஏற்பட்டபோது, அது ஒரு வகையான பழக்கத்தில் ஏற்படும் ஒரு காரியமாக ஆயிற்று. அதாவது, ஒரு பலனும் விளைவதில்லை, பிறகு முயற்சி செய்வானேன் என்ற ஓர் உணர்ச்சி.
பழக்கத்தினால் ஏற்படும் இந்தச் சுழற்சியை முறியடிப்பதற்கான வழி திட்ட உணவைத் தொடங்குவதாகும். உங்களுடைய வயிற்றிலிருந்தல்ல, ஆனால் உங்களுடைய எண்ணத்தோடு தொடங்குங்கள். அதாவது உணவைப்பற்றிய உங்களுடைய எண்ணத்தை நீங்கள் மாற்றுங்கள். இது உங்களோடு இரக்கமின்றி நேர்மையாயிருப்பதையுங்கூட வற்புறுத்தலாம். ஆனால் இது இல்லாமல் உங்களுடைய திட்ட உணவு தொடக்கத்திலிருந்தே ஒருவேளை பலனற்றதாய் போய்விடலாம்.
என்னுடைய விஷயத்தில், ஒரு வாரத்திற்கு நான் என்னென்னெல்லாம் புசித்துக் குடித்தேனோ அவை எல்லாவற்றையும் குறித்துவைத்திருப்பது அறிவு புகட்டுவதாய் இருந்தது. நான் உணவு வேளைகளில் வழக்கமாகவே மிதமாக உட்கொண்டேன் என்பது உண்மையே. ஆனால், மாலையில் இடைவிடாது உட்கொண்ட நொறுக்குத் தீனி, அந்த நாள் முழுவதும் தன்னடக்கத்தால் என்னெல்லாம் நன்மைகள் விளைந்தனவோ அவற்றையெல்லாம் அழித்தது. இரவு உணவுக்குப் பிறகு நான் உட்கொண்ட பாலாடைக் கட்டி, கொட்டைகள், நிலக்கடலை வெண்ணெய், இனிப்புஅப்பவகை போன்றவற்றின் கலோரிகளைக் கூட்டிப்பார்த்தபோது நான் திகைத்துப்போனேன். அதிலும் மோசம், அந்த நொறுக்குத் தீனிகள் கொழுப்பினாலும் சர்க்கரையாலும் நிறைந்திருந்தன. அந்த மாலைநேர நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்காவிடில் எனக்கு எந்தத் திட்ட உணவும் பலனளிக்கப்போவதாயில்லை. உங்களுடைய பிரச்னையும் இதேதானா?
எனக்கு வேதனை தந்த அடுத்த உணர்வு, என்னுடைய உணவிலிருந்து எல்லா மதுபானங்களையும் தவிர்த்தாலொழிய, எடையைக் குறைத்துக் காத்துக்கொள்ளமுடியாது என்பதே. மது அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் எளிதில் கொழுப்பாக மாறுகிறது என்பதுமட்டுமல்லாமல், என்னுடைய தன்னடக்கத்தையும் நொறுக்குத் தீனி உண்ணாமலிருப்பதற்கான என்னுடைய தீர்மானத்தையும் பலவீனமாக்க நான் மாலையில் குடிக்கும் ஒரு கப் ஒயின் மட்டுமே போதும். ஒரு கப் ஒயின் என்பது வெறுமனே ஒரு கப் ஒயின் அல்ல. சொல்லப்போனால் நான், அதோடுகூட ஆறு இனிப்புஅப்பமும் ஒரு கிண்ணம் கொட்டைகளும் சாப்பிட்டுவிடுவேன்! மூலிகைக் கஷாயங்கள் அதற்கு மிகச்சிறந்த மாற்றுப்பொருட்களாக இருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடித்தேன். இப்போது, நான் விரும்பிய எடையை அடைந்த பிறகுங்கூட, முன்பு குடித்ததைவிட குறைந்த அளவு மதுவையே குடிக்கிறேன்.
இந்த நேர்மையான மதிப்பீடுகள், என்னுடைய எடைக்குறைப்புக் கால திட்ட உணவின்போது இரண்டு வழிமுறைகளின் மதிப்பை உறுதிப்படுத்தின.
1. மாலையில் எல்லா நொறுக்குத் தீனிகளையும் தவிர்த்துவிடுங்கள்.
2. எல்லா மதுபானங்களையும் தவிர்த்துவிடுங்கள்.
உங்கள் திட்ட உணவின் எதிராளிகளை அறிந்துகொள்ளுங்கள்!
என் மேன்ஸான் லாப்பட்டி வையன் என்றொரு பிரெஞ்சு பழஞ்சொல் இருக்கிறது. இதன் அர்த்தம் எவ்வளவதிகம் சாப்பிடுகிறீர்களோ அவ்வளவதிகம் பசியடைகிறீர்கள் என்பதாகும். நம்மில் அநேகருடைய விஷயத்தில் இது சொல்லர்த்தமாக உண்மையாய் இருக்கிறது. நாம் நமக்குப் பிடித்த உணவுக்காக உட்காரும்போது பசியில்லாமல் இருக்கலாம். ஆனால் சாப்பிடத் தொடங்கியதும் ஒரு திடீர் மாற்றம். திடீரென கடும்பசி நம்மை ஆட்கொள்கிறது. அவ்வளவுதான், முன்வைத்திருக்கும் எல்லா உணவும் தீர்ந்துபோகும்வரை அளவுக்குமீறி சாப்பிட்டுவிடுகிறோம். அல்லது, நான்கு முறை விளம்பின பிறகு வேதனை அனுபவிக்கும் நமது வயிறு தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறது. என்ன ஆகிவிட்டது?
என்னுடைய விஷயத்தில் பிரச்னை ரொட்டியாக, குறிப்பாக வீட்டில் உண்டாக்கின ரொட்டியாக இருந்தது. ருசியான ரொட்டி சுடும், நீண்ட பொறுமையுள்ள என் மனைவி ஒருசில காலம் ரொட்டி சுடுவதை நிறுத்தவேண்டி வந்தது. ஒரு மனிதன் இவ்வளவுதான் தாக்குப்பிடிக்கமுடியும்! உங்களுக்குச் சாக்லட் அல்லது வேறு ஏதோவொன்று பிரச்னையாக இருக்கலாம். விஷயம் என்னவென்றால், உங்ளுடைய எதிரியை அறிந்துகொள்ளுங்கள். எந்த உணவுகள் நீங்கள் அவற்றைச் சாப்பிடும்போது பசியுண்டாக்குகிறதோ அந்த உணவுகளின் ஒரு பட்டியலைத் தயாரித்து அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். அவற்றைவிட வேறு அதிக வகையான உணவுகள் இருக்கின்றன. பச்சை காய்கறிகளும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளும் நல்ல ருசியாய் இருப்பதையும் அளவுக்குமீறிய உணவுக்கான வாஞ்சையைத் தூண்டிவிடாமல் வயிற்றை நிரப்புவதையும் கண்டேன்.
சிக்கலான கட்டத்தைக் கடத்தல்
யோ-யோ திட்ட உணவு, எடையைக் குறைத்துவிட்டுத் திரும்பப் பெறுவதென்பது எளிதில் ஏமாற்றமடையும் ஓர் அனுபவமற்றவரின் விளையாட்டாகும். இது பெரும்பாலான வளர்ந்த மேலைநாடுகளிலுள்ள எடைக்குறைப்பு ஆலோசகர்களை வளமுறவைப்பதைவிட வேறு எந்த நோக்கத்தையும் நிறைவேற்றுவது கிடையாது. யோ-யோ திட்ட உணவை மேற்கொள்வதில் என்னுடைய பங்கை நிறைவேற்றிய பிறகு, இந்த முறை அது வித்தியாசமாக இருக்கும் என்று நான் தீர்மானித்தேன். ஆனால் எப்படி?
உதவி கேட்பதற்கு வெட்கப்படாதீர்கள். உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். ஒவ்வொரு வாரமும் அந்தக் கிலோகிராம் குறைந்துகொண்டேவரும்போது உங்களைப் புகழ்ந்து, பரிசளிக்கக்கூடிய ஆட்களைக் கண்டுபிடியுங்கள். இது திட்ட உணவை மேற்கொள்ளும் வேறொரு நண்பனாகவோ ஒரு குடும்ப அங்கத்தினராகவோ அல்லது நன்கு அறியப்பட்ட ஓர் எடைக்குறைப்பு மருத்துவமனையாகவோ இருக்கலாம். குழுவாக சேர்ந்து செய்யும் முயற்சி, வலுவூட்டுதல் போன்றவை, முன்பு உங்களுடைய எடைக்குறைப்பு முயற்சிகள் எந்தக் கட்டத்தில் முறியடிக்கப்பட்டதோ அந்தக் கட்டத்தை நீங்கள் கடந்து செல்ல உதவும். இந்தச் சமயத்தில் நல்ல முன்னேற்றத்தை உணர்வீர்கள். இதே சமயத்தில் உங்கள் தோற்றத்தைக் கண்டு ஆட்கள் பாராட்டுகளைத் தெரிவிப்பார்கள். அந்தக் கட்டத்திலிருந்து, மனச்சம்பந்தமான காரியங்கள் உங்களுக்கு எதிராக அல்ல ஆனால் சாதகமாக வேலைசெய்கின்றன.
சிக்கலான கட்டத்தைக் கடப்பதற்கான மற்றொரு திறவுகோல், பட்டினிகிடந்து எதையோ இழந்திருக்கிறீர்கள் என்று உங்களை உணரவைக்காத ஒரு மிதமான உணவைக் கொண்டிருப்பதாகும். நான் பெற்ற மிகச்சிறந்த உணவுத்திட்ட ஆலோசனை, வெறுமனே மே 22, 1989, (ஆங்கிலம்) விழித்தெழு! பத்திரிகையில் சரியான உணவுகளைப்பற்றி கொடுக்கப்பட்ட குறிப்புகளை விவரித்தது என்று கண்டேன். எடைக்குறைப்புக்கான என்னுடைய திட்ட உணவு, கொழுப்புச் சக்தி குறைந்த தானிய வகை அல்லது ஓர் அப்பவகை மற்றும் பாதியளவு திராட்சைப்பழம் போன்றவற்றால் ஆகிய காலை உணவையும், தாராளமான பச்சை காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள ஆகாரங்கள் போன்றவற்றைக் கொண்ட மதிய உணவையும், ரொட்டியோ சாப்பாட்டிற்குப் பிறகு உண்ண பழங்களோ இனிப்போ இல்லாமல், நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் கொழுப்புக் குறைந்த மாம்சங்கள் மட்டும் அடங்கிய இரவு உணவையும் கொண்டதாகும். நாள் ஒன்றுக்கு 1,200 முதல் 1,500 கலோரிகள் என்ற அளவில் அந்தத் திட்ட உணவு கண்டிப்பானதுதான் ஆனால் கடுமையானதல்ல. இடைவேளையில் ஓர் ஆப்பிள் சிற்றிடை உணவாகிறது. பசி வேதனையை அசட்டை செய்ய முடியாத அந்த அரிய சந்தர்ப்பங்களில், எப்போதும் நான் எனது ரகசிய கருவிகளில் ஒன்றைப் பயன்படுத்துகிறேன். அது நீங்களும் அறிந்துகொள்ளவேண்டிய, திட்ட உணவை மேற்கொள்வோரின் ஆச்சரியமான ஒரு ரகசியம்.
இரகசிய கருவிகள்
அந்த ரகசியம் என்ன? அது உங்களுக்கு நன்மை பயக்கும், அநேகமாக உடனடியாக நிரப்பக்கூடிய, கலோரிகள் இல்லாத, மலிவான ஒரு பொருளாகும்! தண்ணீர். உங்களுடைய திட்ட உணவை வெற்றிகரமாக ஆக்குவதற்கு உதவும் ஆறு முதல் எட்டு டம்ளர் தண்ணீர் செய்யும் காரியம் வியக்கத்தக்கது. பசியின் வேதனைகளுக்கு ஒரு டம்ளர் தண்ணீர்தான் உங்களின் தீர்மானமான பிரதிபலிப்பு என்று உங்களுடைய உடம்பு அறிந்துகொண்டால், அவை மறைந்துபோக ஆரம்பிக்கின்றன. என்னுடைய வாழ்நாள் முழுவதும் பிரச்னையாயிருந்த மாலைநேர நொறுக்குத்தீனி பழக்கத்தை மேற்கொள்ள வேறு எதையும்விட தண்ணீர்தான் அதிகம் உதவிசெய்தது.
நீண்டநாள் எடைக்கட்டுப்பாட்டுக்கான மற்றொரு ரகசிய கருவி ஒழுங்கான உடற்பயிற்சியாக இருக்கிறது. சந்தேகமின்றி, உடற்பயிற்சி உடம்பைக் குறைக்க உதவிசெய்கிறதென்று அனைவரும் கேட்டிருக்கிறோம், எனவே அதில் என்ன ரகசியம் இருக்கிறது? இந்த விஷயத்தில், நீங்கள் நன்றாக உணருவதிலிருந்தும் நன்றாக தோன்றுவதிலிருந்தும் கிடைக்கக்கூடிய வியக்கத்தக்க மனநிலை முன்னேற்றம். அந்த ஊக்கம் விலக்கிவிட்ட குறிப்பிட்ட உணவுப் பண்டங்களின் நஷ்டத்துக்கு அதிகமாகவே ஈடுசெய்கிறது. நீங்கள் வெறும் திராட்சைப்பழம் சாப்பிடும்போது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சாக்லட் பதார்த்தம் சாப்பிட்டாலும் அதற்காக வருத்தப்படாமல்கூட இதே நிலையில் நீங்கள் தொடர்ந்திருக்க அது உதவுகிறது.
திட்ட உணவும் உடற்பயிற்சியும் பரிபூரணமாக இணைந்து செயல்படுகின்றன. எடையைக் குறைப்பதென்பது நீங்கள் நோயாளியைப்போல் தோன்றவேண்டுமென்று அர்த்தப்படாது. ஒழுங்கான உடற்பயிற்சி உங்கள் முகத்திற்கு ஓர் ஒளிமிக்க தோற்றத்தைக் கொடுப்பதோடு உங்கள் தசைகளை வலிமைபெறவும் செய்கிறது. உண்மையில், முன்னேற்றுவிக்கப்பட்ட என் தசைகளின் வடிவம் நான் உண்மையில் இழந்துகொண்டிருந்த எடையைவிட அதிகத்தை இழந்துகொண்டிருந்தேன் என்ற தவறான எண்ணத்தை மற்றவர்களுக்குத் தந்தது! மற்றவரோடு விளையாடி மகிழும் டென்னிஸ் போன்ற ஆட்டங்களும் எந்த நேரத்திலும் நான் தனியாக செய்துகொள்ளும் பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளும் இணைந்த ஒரு கூட்டு எனக்குத் தேவைப்பட்டதை நான் கண்டேன். உடற்பயிற்சி திட்ட உணவை அதிக பலனுள்ளதாகத் தோன்றவைப்பதுபோலவே, பத்து வருடங்களாக தொங்கிக்கொண்டிருந்த சதைகளுக்குக் கீழ் மறைந்து கிடந்த தசைகளை வெளிக்கொண்டுவருவதன் மூலம் திட்ட உணவும் உடற்பயிற்சியை அதிக பலனுள்ளதாகத் தோன்றச் செய்தது. என்னுடைய எடை 110 கிலோகிராமிலிருந்து 80-க்கு குறைந்ததால், ஆரோக்கியமான சில உள்ளூர் இளைஞரோடு உடற்பயிற்சி நிகழ்ச்சிகளுக்குச் சென்று அவர்கள் எனக்கு நிகராக செய்கிறார்களா என்று பார்ப்பதை நான் எதிர்நோக்கியிருக்கிறேன்!
நான் எவ்வளவு காலம் அளவுக்குமீறிய கனமுள்ளவனாயிருந்தேனோ அவ்வளவு காலம் நீங்களும் அளவுக்குமீறி கனமுள்ளவராய் இருந்திருந்தால், காலில் ஏதோ பாரத்தைக் கட்டிக்கொண்டு இருப்பதைப்போலவும், ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும்போது சோர்வாய் உணருவதும், நாள் முழுவதும் மந்தமாயிருப்பதும், இரவில் சாய்நாற்காலியில் சாய்ந்தவண்ணம் சோம்பிக்கிடப்பதும் உங்களுக்குப் பழக்கப்பட்டதாய் இருக்கும். அதிகமாக 20 அல்லது 30 கிலோகிராமைச் சுமந்துகொண்டிருப்பது காலில் ஓர் இரும்புக்கல்லையும் சங்கிலியையும் கட்டிக்கொண்டு வாழ்க்கை நடத்துவதுபோலாகும்! காலையில் எழுந்திருக்க ஆவலாய் படுக்கையைவிட்டுக் குதித்தெழுந்திருந்து, அந்த நாள் முழுவதும் செலவு செய்ய சக்தியைக்கொண்டிருப்பது எப்படி இருக்கும் என்பதைச் சொல்லர்த்தமாகவே நான் மறந்துவிட்டேன். இப்பொழுது எனக்குத் தெரிகிறது.
ஒருபோதும் ஓயாத யுத்தம்
உங்களுடைய இலக்கு எடையை அடைவது ஒரு நீண்ட போரில் வெற்றிபெறுவது போலாகும். முதலாவது போர் முடிந்துவிட்டிருக்கும்போது, உண்மையான போர் இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது. நம்மில் நடுத்தர வயதினராயிருந்து உட்கார்ந்த இடத்திலேயே செய்யும் வேலைகளைக் கொண்டிருப்பவர்கள், நாம் போராடி குறைத்த எடையைத் தொடர்ந்து தவிர்க்கவேண்டுமானால், என்ன வகையான உணவை உண்கிறோம் என்பதை நாம் எப்போதும் கவனிக்கவேண்டும். உங்களுடைய திட்ட உணவை ஒரு வாழ்நாள் திட்டமாகக் கருதுவதுதான் அதனுடைய திறவுகோலாகும். எடைக்குறைத்தல் என்பதற்குப் பதிலாக எடைக்காத்தல் என்று மாற்றிக்கொள்ளலாம், ஆனால் உண்மையில் அது ஒருபோதும் முடிவடைவதில்லை. உங்களுடைய பழைய உணவு பழக்கங்களுக்குத் திரும்பிப் போவீர்களானால் உங்களுடைய எடையும் உங்களிடம் திரும்பிவந்துவிடும்.
உங்களுடைய இலக்கு எடையை அடைந்ததும், புதிய துணிமணிகளை வாங்கி ஏன் கொண்டாடக்கூடாது? பிறகு பழைய துணிமணிகளைக் களைவதுபற்றி யோசியுங்கள். மீண்டும் அளவுக்குமீறிய எடையைத் திரும்பிப் பெறுவதற்கான சாத்தியத்தோடு அந்தப் பழைய துணிகளை வைத்திருப்பது தோல்விக்காகத் திட்டமிடுவது போல் ஆகிறது. அதிகம் தொள-தொளவென்று இல்லாத உடைகளை அணியுங்கள். தேவைக்குமீறிய அந்தச் சென்டிமீட்டர்கள் திரும்பிவரும்போது அவை உடனடியாக உங்களுக்கு எச்சரிப்பூட்டும். உங்களுடைய எடைக்காப்புத் திட்ட உணவு, எடைக்குறைப்புத் திட்ட உணவைவிட பல்சுவையானதாக இருந்தபோதிலும், வாழ்நாள் முழுவதும் கொழுப்பு, சர்க்கரை, போன்றவை குறைந்தளவுள்ள உணவுகளை உட்கொள்ள உறுதியாய் இருங்கள். உங்களுடைய ஒழுங்கான உடற்பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள். நலமுடன் வாழ்வதற்கு அது ஒரு திறவுகோலாக இருக்கிறது.—அளிக்கப்பட்டது. (g93 1/22)