உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwyp கட்டுரை 93
  • என்னுடைய எடையைக் குறைப்பது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என்னுடைய எடையைக் குறைப்பது எப்படி?
  • இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நான் உண்மையிலேயே உடம்பை குறைக்க வேண்டுமா?
  • உடம்பைக் குறைப்பதற்கு சிறந்த வழி என்ன?
  • என்ன செய்யலாம்?
  • நான் எடையைக் குறைப்பது எப்படி?
    விழித்தெழு!—1994
  • உடல் பருமன் தீர்வு என்ன?
    விழித்தெழு!—2004
  • நான் எடையைக் குறைத்தால் யார்வேண்டுமானாலும்
    விழித்தெழு!—1993
  • குண்டாக இருப்பது நலம் தராதபோது
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
ijwyp கட்டுரை 93
ஒரு டீனேஜ் பையன் கண்ணாடியில் தன் வயிற்றைப் பார்க்கிறான்

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

என்னுடைய எடையைக் குறைப்பது எப்படி?

  • நான் உண்மையிலேயே உடம்பை குறைக்க வேண்டுமா?

  • உடம்பைக் குறைப்பதற்கு சிறந்த வழி என்ன?

  • என்ன செய்யலாம்?

  • உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

நான் உண்மையிலேயே உடம்பை குறைக்க வேண்டுமா?

சில டீனேஜர்கள் ஸ்லிம்மாக இருக்கத் துடிக்கிறார்கள். ஆனால் . . .

  • அவர்கள் அழகைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள், ஆரோக்கியத்தைப் பற்றி அல்ல. வேகமாக இளைப்பதற்காக சிலர் அவ்வப்போது பட்டினி கிடக்கிறார்கள் அல்லது எடையைக் குறைக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் செய்வது பொதுவாக பலன் தருவதில்லை. சிலசமயம், ஆபத்தாகக்கூட இருக்கின்றன.

    “சில பொண்ணுங்க, நினைச்சவுடனே இளைச்சிடணும்னு கனவு காண்றாங்க. அதனால சாப்பிடாம பட்டினி கிடக்கிறாங்க. இதனால அவங்களோட உடம்புதான் கெட்டுப்போகுது. மறுபடியும் நல்லாகறதுக்கு ரொம்ப நாள் ஆகுது.”—ஹேலி.

  • நிறைய பேர் தேவையில்லாமல் கவலைப்படுகிறார்கள். அவர்கள் உண்மையில் குண்டாக இருக்க மாட்டார்கள். ஆனால், மற்ற இளைஞர்களை அல்லது மீடியாக்களில் வரும் மாடல்களைப் பார்த்துவிட்டுத் தாங்கள் ரொம்ப குண்டாக இருப்பதுபோல் நினைத்துக்கொள்கிறார்கள்.

    “13 வயசுல, என்னோட ஃப்ரெண்ட்சுக்கு பக்கத்துல நான் ரொம்ப கேவலமா இருக்குறதா நினைச்சேன். நானும் குச்சி மாதிரி இருந்தாதான் அவங்களுக்கு என்னை பிடிக்கும்னு நினைச்சேன்.”—பௌலா.

ஆனால், சில இளைஞர்கள் உண்மையிலேயே தங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டியிருக்கிறது. உலக சுகாதார அமைப்புடைய அறிக்கையின்படி . . .

  • உலகம் முழுவதும் 5-லிருந்து 19 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 34 கோடி பிள்ளைகள் ஓவர் வெயிட்டாக இருக்கிறார்கள்.

  • 1975-ல், 5-லிருந்து 19 வயதுக்கு உட்பட்டவர்களில் 4 சதவீதத்தினர் மட்டும்தான் குண்டாக இருந்தார்கள். ஆனால் 2016-க்குள், அந்த எண்ணிக்கை 18 சதவீதம் அதிகமாகிவிட்டது.

  • பெரும்பாலான நாடுகளில், எடை குறைவாக இருப்பவர்களைவிட எடை அதிகமாக இருப்பவர்கள்தான் நிறைய பேர்.

  • ஏழ்மை நாடுகளில்கூட உடல் பருமன் பொதுவான ஒரு பிரச்சினையாக இருக்கிறது; ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களின் குடும்பத்தில்கூட குண்டாக இருக்கும் நபர்களைப் பார்க்க முடிகிறது.

உடம்பைக் குறைப்பதற்கு சிறந்த வழி என்ன?

இந்த மூன்றில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

  1. அவ்வப்போது பட்டினி கிடப்பது.

  2. உடற்பயிற்சி செய்வதும், சத்துள்ள உணவை சாப்பிடுவதும்.

  3. எடையைக் குறைக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது.

சரியான பதில்: 2. உடற்பயிற்சி செய்வதும், சத்துள்ள உணவை சாப்பிடுவதும்.

அவ்வப்போது பட்டினி கிடந்தால் அல்லது சில வகையான உணவுகளைத் தவிர்த்தால் சீக்கிரமாக இளைக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், அப்படிச் செய்வது ஆரோக்கியமானது கிடையாது. எப்போதும்போல் நீங்கள் சாப்பிட ஆரம்பித்தவுடன் மறுபடியும் குண்டாகிவிடுவீர்கள்.

ஆரோக்கியமாக இருப்பது உங்கள் குறிக்கோளாக இருந்தால், உங்கள் உடலும் மனமும் களையோடு இருக்கும். “உங்கள் உடல் எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த வழி . . . வாழ்நாளெல்லாம் கடைப்பிடிக்க முடிந்த நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொண்டு அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதுதான்” என்று எழுதுகிறார் டாக்டர் மைக்கேல் ப்ராட்லி.a அப்படியென்றால், ஒல்லியாவதற்கு சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று மட்டும் யோசிக்காமல், உங்கள் பழக்கவழக்கங்களை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்றும் யோசியுங்கள்.

என்ன செய்யலாம்?

நாம் “பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாக” இருக்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது; உணவு பழக்கங்களையும் சேர்த்துத்தான் அது சொல்கிறது. (1 தீமோத்தேயு 3:11) அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்றுகூட அது சொல்கிறது. (நீதிமொழிகள் 23:20; லூக்கா 21:34) இந்த ஆலோசனைகளை மனதில் வைத்துக்கொண்டு, ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதையெல்லாம் செய்து பாருங்கள்:

  • ஒரு டீனேஜ் பையன் ஏதோவொரு உணவைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறான்

    நல்ல உணவுப் பழக்கம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

    எப்போது பார்த்தாலும் சத்துள்ள சாப்பாட்டைப் பற்றியே யோசிக்க வேண்டும் என்பதில்லை. ஊட்டச்சத்துகளைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டாலே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள முடியும். இதுதான், எடையை அளவோடு வைத்துக்கொள்வதற்கு சிறந்த வழி.

  • ஒரு டீனேஜ் பையன் சுறுசுறுப்பாக வாக்கிங் போகிறான்

    தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

    சுறுசுறுப்பாக இருப்பதற்குத் தினமும் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசியுங்கள். உதாரணத்துக்கு, லிஃப்ட்டில் போவதற்குப் பதிலாக படிக்கட்டில் ஏறிப் போங்கள். வீடியோ கேம்ஸ் விளையாடும் நேரத்திலிருந்து அரை மணிநேரத்தை எடுத்து வாக்கிங் போவதற்கு பயன்படுத்துங்கள்.

  • ஒரு டீனேஜ் பையன் சத்தில்லாத உணவுக்குப் பதிலாக சத்துள்ள உணவைத் தேர்ந்தெடுக்கிறான்

    நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

    சோஃபியா என்ற டீனேஜ் பெண் இப்படிச் சொல்கிறார்: “காய்கறி, பழங்கள் மாதிரி சத்துள்ள ஐட்டங்கள எப்பவும் என்ன சுத்தி வெச்சுக்குறேன். அதனால நொறுக்குத்தீனி சாப்பிட அவ்வளவா தோணுறது இல்ல.”

  • ஒரு டீனேஜ் பையன் இரண்டாவது தடவை பரிமாறப்படும் உணவை வேண்டாமென்று சொல்லிவிடுகிறான்

    மெதுவாக சாப்பிடுங்கள்.

    சிலர் வேக வேகமாக சாப்பிடுவதால் வயிறு நிரம்பிவிட்டதைக்கூட அவர்களால் உணர முடிவதில்லை. அதனால், மெதுவாக சாப்பிடுங்கள். இன்னொரு தடவை போட்டு சாப்பிடுவதற்கு முன்பு கொஞ்சம் காத்திருங்கள். நீங்கள் உண்மையிலேயே கொள்ளை பசியில் இல்லை என்பதை அப்போது உங்களால் உணர முடியும்.

  • ஒரு டீனேஜ் பையன் லேபிளைப் பார்த்து ஊட்டச்சத்துகளின் அளவைத் தெரிந்துகொள்கிறான்

    எவ்வளவு கலோரிகள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று கவனியுங்கள்.

    நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருள்களில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றன என்பதை லேபிள்களில் பாருங்கள். க்ளூ: இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றில் நிறைய கலோரிகள் இருக்கும். அவற்றை சாப்பிட்டால் எடை கூடும்.

  • ஒரு டீனேஜ் பையன் பந்து விளையாடிய பிறகு ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறான்

    சமநிலையோடு இருங்கள்.

    “நான் ஒரு சமயத்துல எப்ப பாத்தாலும் கலோரிகளையே எண்ணிட்டு இருப்பேன். அதனால, என் தட்டை பாத்தா, சாப்பாடுக்கு பதிலா வெறும் நம்பர்கள்தான் என் கண்ணுக்கு தெரியும்” என்று 16 வயது சாரா சொல்கிறார். எப்போது பார்த்தாலும் கலோரிகளையே எண்ணிக்கொண்டு இருக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்த உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதில் தவறில்லை.

டிப்ஸ்: உங்கள் எடையைப் பற்றி உங்கள் டாக்டரிடம் பேசுங்கள். உங்களுடைய உடல்நிலையையும் சூழ்நிலையையும் பொறுத்து, உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள அவர் உங்களுக்கு உதவுவார்.

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...

நிக்கி

“மீடியாவுல வர்றவங்கள ரசிச்சு பார்த்துட்டு, அப்புறம் நம்மள கண்ணாடில பார்க்குறப்போ வெறுத்துப்போயிடும். ஆனா, எல்லாரோட உடற்கட்டும் ஒரே மாதிரி இருக்காது. ஆரோக்கியமா இருக்குறதுக்கு முயற்சி செஞ்சா போதும், அப்புறம் நாம எப்படியிருந்தாலும் நம்மள பார்த்து சந்தோஷப்பட்டுக்கணும்.”—நிக்கி.

லாரென்சோ

“நான் என்ன சாப்பிடணும்னு முன்னாடியே ப்ளான் பண்ணலனா, ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டுடறேன். அது உடம்புக்கு நல்லதே இல, விலையும் ஜாஸ்தி. அதே மாதிரி, நல்லா வேர்த்து விறுவிறுக்க எக்ஸர்சைஸ் பண்ண எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனா, அதுக்கு அப்புறம் சுறுசுறுப்பா இருப்பேன். ஆனா, முன்னாடியே ப்ளான் பண்ணலனா அதுக்கு பதிலா வேற எதையாவது செஞ்சிடுவேன்.”—லாரென்சோ.

சுருக்கம்: என்னுடைய எடையைக் குறைப்பது எப்படி?

சாப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று மட்டும் யோசிக்காமல், உங்கள் பழக்கவழக்கங்களை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்றும் யோசியுங்கள். இதையெல்லாம் செய்து பாருங்கள்:

  • நல்ல உணவுப் பழக்கம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஊட்டச்சத்துகளைப் பற்றி ஓரளவு தெரிந்துகொண்டாலே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள முடியும்.

  • தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். சுறுசுறுப்பாக இருப்பதற்குத் தினமும் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசியுங்கள்.

  • நொறுக்குத்தீனிகளுக்குப் பதிலாக சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள். சத்துள்ள உணவுகளை எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான், நொறுக்குத்தீனிகளைத் தவிர்ப்பீர்கள்.

  • மெதுவாக சாப்பிடுங்கள். அவசர அவசரமாக சாப்பிடாதீர்கள். மறுபடியும் போட்டு சாப்பிடுவதற்கு முன்பு கொஞ்சம் காத்திருங்கள். வயிறு நிரம்பிவிட்டதை அப்போது நீங்கள் உணரலாம்.

  • எவ்வளவு கலோரிகள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று கவனியுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருள்களில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றன என்பதை லேபிள்களில் பாருங்கள்.

  • சமநிலையோடு இருங்கள். எப்போது பார்த்தாலும் கலோரிகளையே எண்ணிக்கொண்டு இருக்காதீர்கள்.

a வென் திங்க்ஸ் கெட் கிரேசி வித் யூவர் டீன் என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்