அட்டைப்பட கட்டுரை | ஏன் வாழ வேண்டும்?
1 சூழ்நிலை மாறும்
“நாங்கள் எல்லா விதத்திலும் நெருக்கப்படுகிறோம், ஆனால் முடங்கிப்போவதில்லை; குழம்பித் தவிக்கிறோம், ஆனால் வழி தெரியாமல் திண்டாடுவதில்லை.”—2 கொரிந்தியர் 4:8.
தற்கொலை என்பது “தற்காலிக பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. எவ்வளவு மோசமான பிரச்சினையாக இருந்தாலும் சரி, அது தற்காலிகமானதே. சிலசமயம், பிரச்சினைகளைச் சரிசெய்யவே முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் சூழ்நிலை திடீரென மாறலாம்.—“அவர்களுடைய சூழ்நிலை மாறியது” என்ற கீழேயுள்ள தகவலைப் பாருங்கள்.
ஒருவேளை உங்கள் சூழ்நிலை மாறாவிட்டால் என்ன செய்வது? ஒரே சமயத்தில் எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்ய நினைக்காமல், அந்தந்த நாளுக்கான பிரச்சினையைச் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 6:34.
ஆனால், உங்கள் சூழ்நிலை மாறவே மாறாது என்றால் என்ன செய்வது? ஒருவேளை, நீங்கள் குணப்படுத்த முடியாத நோயால் கஷ்டப்பட்டால், உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டால் அல்லது உங்கள் பாசத்துக்குரியவர் இறந்துவிட்டால் என்ன செய்வது?
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்களால் ஒன்றை மாற்ற முடியும். அதாவது, பிரச்சினையை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்ற முடியும். உங்களால் சில விஷயங்களை மாற்ற முடியாதபோது அதை ஏற்றுக்கொள்ளுங்கள், நம்பிக்கையாக இருங்கள். (நீதிமொழிகள் 15:15) அப்போது விபரீதமான முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக பிரச்சினையைச் சமாளிப்பதற்கு வழி தேடுவீர்கள். இதன் விளைவு? உங்கள் சூழ்நிலை கைமீறி போய்விட்டது என நினைக்க மாட்டீர்கள், அதைச் சமாளிக்க முடியும் என்று நினைப்பீர்கள்.—யோபு 2:10.
யோசித்து பாருங்கள்: ஒரே எட்டில் ஒரு பெரிய மலையைத் தாண்ட முடியாது; ஒவ்வொரு படியாக எடுத்து வைத்தால்தான் முடியும். அதேபோல் உங்கள் சூழ்நிலை மலைபோல் தெரிந்தாலும் அதை உங்களால் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்ய முடியும்.
இன்று நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் சூழ்நிலையைப் பற்றி நண்பரிடம் அல்லது குடும்பத்தில் இருக்கும் ஒருவரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். பிரச்சினையை எதார்த்தமாகப் பார்க்க அவர் உங்களுக்கு உதவலாம்.—நீதிமொழிகள் 11:14.