அட்டைப்படக் கட்டுரை | ஆவிகளோடு தொடர்பு - மறைந்திருக்கும் ஆபத்துகள்!
பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வமா?
‘புராணக் கதைகள் மட்டுமல்லாமல், பேய் கதைகளும் பெண்கள் பாம்பாக மாறும் கதைகளும் டிவி நிகழ்ச்சிகளில் அதிகமாக வருகின்றன.’ —பிபிசி ஹிந்தி.
திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ், புத்தகங்கள் என எல்லாவற்றிலும் மந்திரவாதிகள், கவர்ச்சியான சூனியக்காரிகள், அழகாக காட்டப்படும் ரத்தக் காட்டேரிகள் போன்றவை சர்வ சாதாரணமாக வருகின்றன. அவை எந்தளவு பிரபலமாகி இருக்கின்றன என்று இப்போது பார்க்கலாம்.
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற செய்தித்தாள் இப்படிச் சொல்கிறது: சில வருஷங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின்படி 46 சதவீத இந்தியர்கள் பேய்கள் இருப்பதாக நம்பினார்கள். ஆனால், சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இந்த சதவீதம் 56 ஆக அதிகரித்திருக்கிறது. இதேபோன்ற ஒரு கருத்தை சமூகவியல் பேராசிரியர் க்லாட் ஃபிஷர் சொல்கிறார்: “அமெரிக்காவில் இருக்கும் பெரியவர்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக இளைஞர்கள்தான் ஆவியுலகத்தோடு தொடர்பு வைத்திருக்கிறார்கள். பேய்கள் மற்றும் பேய் வீடுகள் இருப்பதை நம்புகிறார்கள்.”
மனிதர்கள் உடம்பில் பேய்கள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை ஒருகாலத்தில் பிரபலமாக இருந்தது. அந்த நம்பிக்கை திரும்பவும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. “சோம்பி [அதாவது, சடலங்கள் உயிரோடு நடமாடுவது], ஓநாய் மனிதர்கள் மற்றும் ரத்தக் காட்டேரிகள் பற்றி சித்தரிக்கும் சினிமாக்கள் கடந்த பத்தாண்டுகளில் அதிகமாக வெளிவந்திருக்கின்றன. அதன் விளைவாக, பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது” என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் மைக்கல் கேலியா என்பவர் எழுதினார்.
“உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் தொகையில் 25-50 சதவீதம் மக்கள் பேய்கள் இருப்பதை நம்புகிறார்கள். அதோடு, நிறைய கலாச்சாரங்களில் இருக்கும் புத்தகங்கள் பேய்களைப் பற்றி அதிகம் சொல்கின்றன” என்று ஒரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியைப் பற்றி சமூகவியல் பேராசிரியர்களான கிறிஸ்டோபர் பேடர் மற்றும் கார்சன் மென்கன் இப்படிச் சொன்னார்கள்: “70-80 சதவீத அமெரிக்கர்கள் ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பழக்கத்தில் பலமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.”
விளையாட்டுக்காக அல்லது பொழுதுபோக்குக்காக நாம் ஆவியுலகத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ளலாமா?