ஒழுக்கநெறிகள், நம்பகமான திசைகாட்டிபோல் இருக்கின்றன; சரியான வழியைத் தெரிந்துகொள்ள அவை உங்கள் பிள்ளைகளுக்கு உதவும்
பெற்றோர்களுக்கு
7 ஒழுக்கநெறிகள்
இதன் அர்த்தம் என்ன?
ஒழுக்கநெறிகள் என்பது வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடிக்க விரும்புகிற சில தராதரங்களைக் குறிக்கின்றன. உதாரணத்துக்கு, ஒரு பெற்றோராக எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியென்றால், இதே ஒழுக்கநெறியை உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க நினைப்பீர்கள்.
ஒழுக்கநெறிகள் நல்ல பழக்கங்களையும் குறிக்கிறது. உதாரணத்துக்கு, நல்ல பழக்கங்கள் இருக்கும் ஒருவர் சுறுசுறுப்பானவராக, நியாயமானவராக, மற்றவர்கள்மேல் அக்கறையுள்ளவராக இருப்பார். இந்த நல்ல குணங்களை அவர் சிறு வயதிலிருந்தே வளர்த்திருப்பார்.
பைபிள் நியமம்: “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு. வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.”—நீதிமொழிகள் 22:6.
இது ஏன் முக்கியம்?
இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், ஒழுக்கநெறிகள் ரொம்பவே அவசியம். “எந்த நேரத்துலயும் செல்ஃபோன்ல கெட்ட விஷயங்கள பார்க்க முடியும் . . . நம்ம பிள்ளைங்க நம்ம பக்கத்துலயே உட்கார்ந்துகிட்டுகூட அசிங்கமான படங்கள பார்க்க முடியும்!” என்று அம்மாவாக இருக்கும் கேரன் சொல்கிறார்.
பைபிள் நியமம்: ‘முதிர்ச்சியுள்ளவர்கள், சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்கிறார்கள்.’—எபிரெயர் 5:14.
நல்ல பழக்கங்களும் அவசியம். ‘நன்றி,’ ‘தயவுசெய்து’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், மற்றவர்களிடம் கரிசனையாக நடந்துகொள்வதும் இதில் அடங்கும். இன்று, இதுபோன்ற நல்ல பழக்கங்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது; ஏனென்றால், ஜனங்களை அல்ல, எலக்ட்ரானிக் கருவிகளையே மக்கள் அதிகமாக நேசிக்கிறார்கள்.
பைபிள் நியமம்: “மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—லூக்கா 6:31.
நீங்கள் என்ன செய்யலாம்?
உங்கள் ஒழுக்கநெறிகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உதாரணமாக, கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது தவறு என்று பெற்றோர்களால் கற்பிக்கப்படும் டீனேஜ் பிள்ளைகள் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதில்லை என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
டிப்ஸ்: சமீப செய்தி ஒன்றைச் சொல்லி, ஒழுக்கநெறிகளைப் பற்றிப் பேச ஆரம்பியுங்கள். உதாரணத்துக்கு, ஒரு படுகொலையைப் பற்றிய செய்தி வெளிவந்திருந்தால், நீங்கள் இப்படிப் பேச ஆரம்பிக்கலாம்: “சிலர் இந்த மாதிரி கோபத்த காட்டுறது குலைநடுங்க வைக்குதில்ல? அவங்க இவ்ளோ கோபக்காரங்களா ஆகுறதுக்கு என்ன காரணம்னு நினைக்குற?”
“நல்லது எது கெட்டது எதுன்னு பிள்ளைங்களுக்கு தெரியலன்னா, நல்லத செய்யறதா, கெட்டத செய்யறதான்னு அவங்களால தீர்மானிக்க முடியாம போயிடும்.”—ப்ரான்டன்.
நல்ல பழக்கங்களைச் சொல்லிக்கொடுங்கள். “தயவுசெய்து,” “நன்றி” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கும், மற்றவர்களை மதிப்பதற்கும் சின்னப் பிள்ளைகளால்கூட கற்றுக்கொள்ள முடியும். “பிள்ளைகள் தங்களைத் தனி நபர்களாகப் பார்க்காமல், ஒரு குடும்பத்தின் பாகமாக, ஒரு பள்ளியின் பாகமாக அல்லது ஒரு சமுதாயத்தின் பாகமாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் மற்றவர்களிடம் கரிசனையோடு நடந்துகொள்வார்கள்; தங்களுக்குப் பிரயோஜனமான விஷயங்களை மட்டுமே செய்யாமல் மற்றவர்களுக்குப் பிரயோஜனமான விஷயங்களைச் செய்யப் பழகிக்கொள்வார்கள்” என்று பேரென்டிங் வித்தவுட் பார்டர்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது.
டிப்ஸ்: வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லி பிள்ளைகளிடம் சொல்லுங்கள்; இதன் மூலம், மற்றவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் பழகிக்கொள்வார்கள்.
“பிள்ளைங்க வீட்டு வேலைகள செய்ய இப்போவே கத்துக்கிட்டா, சொந்தக் கால்ல நிக்க ஆரம்பிக்கும்போது அதயெல்லாம் செய்றதுக்கு கஷ்டப்பட மாட்டாங்க. பொறுப்புகள நிறைவேத்துறதுக்கு பழகியிருப்பாங்க.”—டேரா.