மாறிவரும் நெறிகளால் தத்தளிக்கும் உலகம்
டயஜனிஸ் என்ற ஒரு தத்துவஞானி பொது சகாப்தத்திற்கு முன் நான்காம் நூற்றாண்டில் ஏதன்ஸ் நகரில் வாழ்ந்து வந்தார். அவர் பட்டப்பகலில் அரிக்கன் விளக்கைத் தூக்கிக்கொண்டு, ஒழுக்கசீலர் ஒருவரையாவது கண்டுபிடித்தே தீர்வது என்ற முடிவோடு அலைந்து திரிந்ததாகவும், ஆனால் அப்படிப்பட்ட எவரையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாகவும் பிரசித்திபெற்ற ஒரு பழங்கதை சொல்கிறது.
அந்தப் பழங்கதை எந்தளவுக்கு உண்மை என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது. இருந்தாலும், இன்று டயஜனிஸ் உயிரோடு இருந்திருந்தால், ஒழுக்கசீலர்களைக் கண்டுபிடிப்பது அவருக்கு இன்னும் கடினமாய் இருந்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. வரையறுக்கப்பட்ட ஒழுக்க நெறிமுறைகளையே மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்ற கருத்தை அநேகர் ஒதுக்கித் தள்ளுவதாகத் தெரிகிறது. அந்தரங்க வாழ்க்கையில், அரசாங்கத்தில், தொழில்களில், போட்டி விளையாட்டுகளில், வர்த்தக உலகில், இன்னும் பிற அம்சங்களில் நிகழ்கிற ஒழுக்கச் சீர்கேடுகளை மீடியாக்கள் திரும்பத் திரும்ப நம் கண்முன் நிறுத்துகின்றன. ஒரு காலத்தில் பொன்னெனப் போற்றப்பட்டு வந்த நெறிகள் பல இப்போது பாதங்களின்கீழ் மிதிபடுகின்றன. காலங்காலமாகக் கட்டிக்காக்கப்பட்டு வந்த சமுதாய நியதிகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன. இன்னும் சில நெறிகளோ, அநேகரால் போற்றிப் புகழப்பட்டாலும், அவை ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கின்றன.
“ஒழுக்க நியதிகளைப் பொதுவில் எல்லாரும் ஏற்றுக்கொண்ட காலம் மலையேறிவிட்டது” எனக் கூறுகிறார் மத சமூகவியலாளர் ஆலன் உல்ஃப். “ஒழுக்க ரீதியான வழிநடத்துதலைப் பெற பாரம்பரியங்களையும் சமுதாய அமைப்புகளையும் நம்பிப் பிரயோஜனமில்லை என்ற பொதுவான கருத்து சரித்திரம் காணாத அளவுக்கு இன்று மேலோங்கி இருக்கிறது” என்றும் அவர் சொன்னார். கடந்த 100 ஆண்டுகளை வைத்துப் பார்க்கையில், உலகமே வன்முறைக்குள் இறங்கிவிட்டதற்கு முக்கியக் காரணம், மதத்தின் வீழ்ச்சியும் பொதுப்படையான ஒழுக்க நியதிகள் சீர்குலைந்து விட்டதும்தான் என்று தத்துவஞானி ஜானதன் க்ளோவர் கருத்து தெரிவித்ததாக லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிகள் சம்பந்தமாக இத்தகைய தெளிவற்ற கருத்துகள் இருந்தாலும், அடிப்படை ஒழுக்க நெறிகளை சிலர் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். “முன்பைவிட இப்போதுதான் நன்னெறிகளைப்பற்றி மக்கள் மிகவும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என யுனெஸ்கோவின் முன்னாள் தலைமை இயக்குநர் ஃபேடேரீகோ மாயோர் சில ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டார். ஆனால், சரியான நெறிகளை உலகம் உதறித்தள்ளிவிட்டது என்பதற்காக, கடைப்பிடிக்க முடிந்ததும் கடைப்பிடிக்க வேண்டியதுமான சிறந்த நெறிகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது.
இருந்தாலும், இன்னின்ன ஒழுக்க நியதிகளைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதை எல்லாரும் ஒருமனதாய் ஒத்துக்கொள்வார்களா? கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள். எது சரி, எது தவறு என்பதை நிர்ணயிக்கும் நியதிகள் இல்லையெனில், எந்தவொரு நெறியும் சரியானதுதானா என்பதை ஒருவரால் எப்படி மதிப்பிட முடியும்? அவரவருடைய விருப்பப்படி ஒழுக்க நெறிகளை வகுத்துக்கொள்வது இன்று பிரபலமாகிவிட்டது. இருந்தாலும், இந்த மனப்பான்மை மக்களுடைய ஒழுக்கத்தை எந்த விதத்திலும் மேம்படுத்தவில்லை என்பதை நீங்களே காணலாம்.
அவரவருடைய விருப்பப்படி ஒழுக்க நெறிகளை வகுத்துக்கொள்ளும் இந்தத் தத்துவம், 20-ஆம் நூற்றாண்டின் உதயத்திற்கு முன் மக்களிடையே இருந்துவந்த உணர்வுகளைப் பெரிதும் பாதித்திருக்கிறது என்பதை பிரிட்டிஷ் சரித்திராசிரியரான பால் ஜான்சன் ஆணித்தரமாக நம்புகிறார். “தங்களுடைய செயல்களுக்குத் தாங்களே பொறுப்பு என்ற உயரிய உணர்வையும், எவரும் மறுக்கமுடியாத, நிலையான ஒழுக்க நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற கடமை உணர்வையும் . . . [இது] படிப்படியாக மரத்துப்போக” செய்திருக்கிறது என அவர் குறிப்பிடுகிறார்.
அப்படியானால், ‘எவரும் மறுக்கமுடியாத ஒழுக்க நியதிகளை’ கண்டுபிடிப்பதும், ‘பொதுப்படையான ஒழுக்க நியதிகளின்படி’ வாழ்வதும் சாத்தியமா? நம் வாழ்க்கையைக் கட்டுக்கோப்பாக வைக்கவும், எதிர்கால நம்பிக்கையை அளிக்கவும் உதவுகிற நெறிகளை—காலத்தால் அழியாத, மாறாத நெறிகளை—வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற ஒருவர் இருக்கிறாரா? இக்கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் காணலாம்.