உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g19 எண் 2 பக். 4-5
  • சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது
  • விழித்தெழு!—2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சுயக்கட்டுப்பாடு என்றால் என்ன?
  • சுயக்கட்டுப்பாடு ஏன் முக்கியம்?
  • சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக்கொடுப்பது எப்படி?
  • பிள்ளைகள் சுய கட்டுப்பாட்டை வளர்க்க...
    விழித்தெழு!—2015
  • தன்னடக்கத்தின் கனியை வளர்த்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • பரிசைப் பெற தன்னடக்கத்தைக் காட்டுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—2019
g19 எண் 2 பக். 4-5
கடையில் சாக்லேட்டை எடுக்கப்போகும் தன் குழந்தையைத் தடுக்கிறார் ஒரு அம்மா

பாடம் 1

சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது

சுயக்கட்டுப்பாடு என்றால் என்ன?

சுயக்கட்டுப்பாடு என்றால்...

  • ஆசைப்பட்டது கிடைக்கும்வரை பொறுமையாகக் காத்திருப்பது

  • எதையுமே அவசரப்பட்டுச் செய்யாமல் நிதானமாக யோசித்து செய்வது

  • பிடிக்காத வேலைகளைக்கூடச் செய்து முடிப்பது

  • தன்னைவிட அடுத்தவர்களை உயர்வாக நினைப்பது

சுயக்கட்டுப்பாடு ஏன் முக்கியம்?

சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும் பிள்ளைகளால் கெட்ட ஆசைகளை அடக்க முடியும். கெட்ட காரியங்களைச் செய்தால் அப்போதைக்குச் சந்தோஷம் கிடைக்கும் என்றால்கூட அவர்கள் அவற்றைச் செய்யாமல் இருப்பார்கள். ஆனால், சுயக்கட்டுப்பாட்டைக் காட்டாத பிள்ளைகள்...

  • முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள்

  • மனச்சோர்வினால் அவதிப்படுவார்கள்

  • சிகரெட், மதுபானம், போதைப்பொருள் போன்றவற்றுக்கு அடிமையாவார்கள்

  • கண்டதையெல்லாம் சாப்பிடும் பழக்கத்துக்கு ஆளாவார்கள்

ஒரு ஆராய்ச்சியின்படி, சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும் பிள்ளைகளுக்குப் பிற்காலத்தில் உடல்நலப் பிரச்சினைகளும், பணக் கவலைகளும் அவ்வளவாக வருவதில்லை, அவர்கள் சட்டத்தை மீறுவதும் இல்லை. அதனால், “எவ்வளவு சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொண்டாலும் அது நல்லதுதான்” என்ற முடிவுக்கு வருகிறார், பென்ஸில்வேனியாவின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை ஆன்ஜலா டக்வர்த்.

சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக்கொடுப்பது எப்படி?

‘முடியாது’ என்று சொல்லப் பழகிக்கொள்ளுங்கள்

பைபிள் ஆலோசனை: “நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்.”—மத்தேயு 5:37.

பெற்றோர் ‘முடியாது’ என்று சொல்லும்போது, வாண்டுகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யலாம். மற்றவர்கள் முன்பாகக்கூட அவர்கள் விழுந்து புரண்டு அழலாம். ஆனால், பெற்றோர் மட்டும் அவர்களுக்கு இடம்கொடுத்துவிட்டால், அடம் பிடித்தே காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்துக்கொள்வார்கள்.

பெற்றோர் கடைசிவரை ‘முடியாது’ என்றே உறுதியாகச் சொல்லும்போது, ஆசைப்படுவதெல்லாம் நமக்குக் கிடைத்துவிடாது என்ற முக்கியமான உண்மையைப் பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள். “வேடிக்கை என்னவென்றால், ஆசைப்பட்டதை அனுபவிக்கிறவர்களைவிட இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்கிறவர்கள்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள்” என்று எழுதினார் டாக்டர் டேவிட் வால்ஷ். “ஆசைப்பட்டதெல்லாம் இந்த உலகத்தில் கிடைக்கும் என்று நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்றும் அவர் எழுதினார்.a

இப்போது நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் ‘முடியாது’ என்று சொன்னால், பிற்காலத்தில் அவர்கள் தங்களுக்குத் தாங்களே சில விஷயங்களில் ‘முடியாது’ என்று சொல்லப் பழகிக்கொள்வார்கள். உதாரணத்துக்கு, போதைப்பொருள் எடுத்துக்கொள்ளவோ, திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளவோ, மற்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபடவோ ஆசை வரும்போது ‘முடியாது’ என்று சொல்லப் பழகிக்கொள்வார்கள்.

பின்விளைவுகளைப் புரிந்துகொள்ள உதவுங்கள்.

பைபிள் ஆலோசனை: “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.

ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவுகள் உண்டு என்பதை உங்கள் பிள்ளை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, சுயக்கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொண்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, அவன் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறான் என்றால், மற்றவர்கள் அவனைவிட்டு எட்டு அடி தள்ளியே இருப்பார்கள். ஆனால், மற்றவர்கள் அவனுடைய கோபத்தைக் கிளறும்போதும் அவன் அமைதியாகவும் பொறுமையாகவும் நடந்துகொண்டால், எல்லாரும் அவனிடம் ஆசையாகப் பழகுவார்கள். அதனால், சுயக்கட்டுப்பாடு நிறைய பலன்களைத் தரும் என்பதை உங்கள் பிள்ளையின் மனதில் பதிய வையுங்கள்.

எது முக்கியம் என்று முடிவுசெய்ய உதவுங்கள்.

பைபிள் ஆலோசனை: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”—பிலிப்பியர் 1:10.

தப்பு செய்யாமல் இருப்பது மட்டுமே சுயக்கட்டுப்பாடு கிடையாது. செய்ய வேண்டியதைச் செய்து முடிப்பதும் சுயக்கட்டுப்பாடுதான், அது நமக்குப் பிடிக்கவில்லை என்றால்கூட! அதனால், எது முக்கியம் என்பதை முடிவு செய்யவும் அதில் உறுதியாக இருக்கவும் உங்கள் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுங்கள். உதாரணத்துக்கு, விளையாட்டைவிட ஹோம்வர்க் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள உதவுங்கள்.

நல்ல உதாரணமாக இருங்கள்.

பைபிள் ஆலோசனை: “நான் உங்களுக்குச் செய்தது போலவே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்.”—யோவான் 13:15.

உங்களுக்குக் கோபம் வரும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகள் கவனிப்பார்கள். சுயக்கட்டுப்பாட்டைக் காட்டினால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை உங்கள் முன்மாதிரியின் மூலம் அவர்களுக்குப் புரிய வையுங்கள். உதாரணத்துக்கு, உங்கள் பிள்ளை உங்களுடைய பொறுமையைச் சோதிக்கும்போது, கோபத்தில் வெடிக்காமல் அமைதியாகவும் சாந்தமாகவும் நடந்துகொள்ளுங்கள்.

a அவர் எழுதிய ஆங்கில புத்தகத்தின் பெயர்: No: Why Kids​—of All Ages—Need to Hear It and Ways Parents Can Say It.

கடையில் சாக்லேட்டை எடுக்கப்போகும் தன் குழந்தையைத் தடுக்கிறார் ஒரு அம்மா

இப்போதே பழக்குங்கள்

இப்போதே பிள்ளைகளிடம் ‘முடியாது’ என்று நீங்கள் சொன்னால், பிற்காலத்தில் கெட்ட ஆசை வரும்போது தங்களுக்குத் தாங்களே ‘முடியாது’ என்று சொல்ல அவர்கள் பழகிக்கொள்வார்கள்

வாழ்ந்து காட்டுங்கள்

  • எரிச்சல் வரும்போதுகூட நான் எப்படிப் பொறுமையாக நடந்துகொள்கிறேன் என்பதை என் பிள்ளையால் பார்க்க முடிகிறதா?

  • நான் ஏன் அப்படிப் பொறுமையாக நடந்துகொள்கிறேன் என்பதை என் பிள்ளையிடம் சொல்லியிருக்கிறேனா?

  • என்னைப் பற்றி என் பிள்ளை என்ன சொல்வான்? நான் அவசரப்படுகிறவர், கோபப்படுகிறவர் என்று சொல்வானா அல்லது சுயக்கட்டுப்பாட்டோடும் தன்னடக்கத்தோடும் நடந்துகொள்கிறவர் என்று சொல்வானா?

எங்கள் அனுபவம் . . .

“கோவப்படவே கூடாதுன்னு நாங்க எங்க பொண்ணுகிட்ட சொல்லல. எவ்ளோ கோவமா இருந்தாலும் சுத்தியிருக்கிறவங்கள எரிச்சல்படுத்துற மாதிரி நடந்துக்க கூடாதுன்னுதான் சொன்னோம். மத்தவங்க முன்னாடி அவளால கோவத்த அடக்க முடியலன்னா, தனியா கூட்டிட்டு போய் விட்டுட்டு, கோவம் போனதுக்கு அப்புறம்தான் வரணும்னு சொல்லிடுவோம்.”​—தெரீசா.

“எங்க பிள்ளைங்க சமத்தா நடந்துகிட்டா அவங்கள பாராட்டணும்னு நானும் என் மனைவியும் தீர்மானமா இருந்தோம். அதுவும், சிரமமான சூழ்நிலையிலகூட அவங்க அமைதியா நடந்துகிட்டப்போ, அவங்கள பார்த்து ரொம்ப பெருமைப்படறதா சொன்னோம்.”​—வேய்ன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்