பரிசைப் பெற தன்னடக்கத்தைக் காட்டுங்கள்!
“போட்டியில் ஈடுபடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் தன்னடக்கமாய் இருப்பார்கள்.” —1 கொரிந்தியர் 9:25, Nw.
1. எபேசியர் 4:22-24-க்கு இசைவாக, எவ்வாறு லட்சக்கணக்கானோர் யெகோவாவுக்கு ‘ஆம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்?
யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக நீங்கள் முழுக்காட்டப்பட்டபோது, நித்திய ஜீவனை பரிசாக பெறும் ஒரு போராட்டத்தில் ஈடுபட மனமுள்ளவர்களாக இருந்ததை வெளியரங்கமாய் தெரிவித்தீர்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு ‘ஆம்’ என்று ஒப்புக்கொண்டீர்கள். நம்முடைய ஒப்புக்கொடுத்தல் அர்த்தமுள்ளதாயும் கடவுளுக்கு ஏற்கத் தகுந்ததாயும் இருப்பதற்கு நம்மில் அநேகர் பெரும் மாற்றங்களை அதற்கு முன் செய்ய வேண்டியிருந்தது. “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, . . . மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் தந்த அறிவுரையைப் பின்பற்றினோம். (எபேசியர் 4:22-24) வேறு வார்த்தைகளில் சொன்னால், கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு ‘ஆம்’ என சொல்லும் முன், ஏற்கத்தகாத முந்தின வாழ்க்கை முறைக்கு ‘வேண்டாம்’ என சொல்ல வேண்டியிருந்தது.
2, 3. கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற இரண்டு வகை மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று 1 கொரிந்தியர் 6:9-12 எவ்வாறு காட்டுகிறது?
2 யெகோவாவின் சாட்சிகளாய் ஆகப்போகிறவர்கள் விட்டொழிக்க வேண்டிய பழைய சுபாவங்களில் சில, கடவுளுடைய வார்த்தை நேரடியாக கண்டனம் செய்பவை. கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் இவற்றில் சிலவற்றை பவுல் குறிப்பிட்டார்: “வேசி மார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” தேவையான மாற்றத்தை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் செய்ததாக எடுத்துரைத்து, “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாக இருந்தீர்கள்” என்றார். இதில் இருக்கிறீர்கள் என்றல்ல, இருந்தீர்கள் என்று அவர் சொன்னதைக் கவனியுங்கள்.—1 கொரிந்தியர் 6:9-11.
3 கூடுதலான மாற்றங்கள் செய்வதன் அவசியத்தையும் பவுல் தெரிவித்தார்: “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது.” (1 கொரிந்தியர் 6:12) ஆகவே, சில காரியங்கள் சட்டத்தின்படி சரியாயிருந்தாலும் அவை பயனற்றதாகவும் நிரந்தர மதிப்பற்றதாகவும் இருப்பதால் அவற்றை வேண்டாம் என்று சொல்வதன் அவசியத்தை யெகோவாவின் சாட்சிகளாயிருக்க விரும்புகிற பலர் உணருகிறார்கள். இவை நேரத்தை வீணாக்கி, அதிமுக்கியமான காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்பிவிடலாம்.
4. பவுல் சொன்ன எந்த விஷயத்தை ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்?
4 கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பது என்பது மனப்பூர்வமாய் செய்யப்படும் ஒன்று, ஏதோ பெரும் தியாகம் உட்பட்டிருப்பது போல் வேண்டா வெறுப்புடன் செய்யப்படும் ஒன்றல்ல. கிறிஸ்துவைப் பின்பற்ற ஆரம்பித்த பின் பவுல் என்ன சொன்னாரோ அதையே ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்; அதாவது, “அவருக்காக [இயேசுவுக்காக] எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” என பவுல் சொன்னதை ஒத்துக்கொள்கிறார்கள். (பிலிப்பியர் 3:11) கடவுளுடைய சித்தத்தை செய்ய ‘ஆம்’ என்று தொடர்ந்து சொல்வதற்காக மதிப்பற்ற காரியங்களுக்கு ‘வேண்டாம்’ என பவுல் மகிழ்ச்சியுடன் சொன்னார்.
5. எந்த வகையான ஓட்டத்தை பவுல் வெற்றிகரமாய் ஓடினார், அதேபோல நாமும் எவ்வாறு ஓட முடியும்?
5 பவுல் தன் ஆவிக்குரிய ஓட்டத்தில் தன்னடக்கத்தைக் காட்டினார், அதனால் முடிவில் இவ்வாறு அவரால் சொல்ல முடிந்தது: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.” (2 தீமோத்தேயு 4:7, 8) நாமும் ஒருநாள் இவ்வாறு சொல்ல முடியுமா? முடியும், கிறிஸ்தவ ஓட்டத்தில் விசுவாசத்துடன் தன்னடக்கத்தைக் காண்பித்து இறுதி வரை தளராமல் ஓடினால் அவ்வாறு சொல்ல முடியும்.
நன்மை செய்ய தன்னடக்கம் தேவை
6. தன்னடக்கம் என்பது என்ன, அதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டு வழிகள் யாவை?
6 “தன்னடக்கம்” என்று பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய மற்றும் கிரேக்கச் சொற்கள், ஒருவருக்குத் தன்மீதே வல்லமை அல்லது கட்டுப்பாடு இருப்பதை சொல்லர்த்தமாய் குறிப்பிடுகின்றன. கெட்ட காரியங்களைச் செய்வதிலிருந்து தன்னைக் கட்டுப்படுத்தி வைக்கும் கருத்தை அவை பெரும்பாலும் தெரிவிக்கின்றன. ஆனால் நல்ல காரியங்களுக்காக நமது சரீரத்தை பயன்படுத்துவதற்கும்கூட ஓரளவு தன்னடக்கம் தேவை என்பதும் தெளிவாக இருக்கிறது. தவறு செய்வதே அபூரண மனிதர்களின் சுபாவமாக இருப்பதால் நமக்கு இரட்டிப்பான போராட்டம் இருக்கிறது. (பிரசங்கி 7:29; 8:11) கெட்ட காரியங்களைச் செய்யாமல் இருப்பதற்கும் நாம் போராட வேண்டும், அதேசமயத்தில் நல்ல காரியங்களைச் செய்வதற்கும் கடுமையாக பிரயாசப்பட வேண்டும். சொல்லப்போனால், நல்ல காரியங்களைச் செய்வதற்கு நமது சரீரத்தை அடக்குவதுதான், கெட்ட காரியங்களை தவிர்ப்பதற்கு மிகச் சிறந்த ஒரு வழி.
7. (அ) தாவீதைப் போல நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்? (ஆ) எதைப் பற்றி தியானிப்பது அதிகமாய் தன்னடக்கத்தைக் காட்ட நமக்கு உதவும்?
7 கடவுளுக்கு நம் ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்ற தன்னடக்கம் இன்றியமையாதது என்பது தெளிவாக உள்ளது. தாவீதைப் போல் நாம் ஜெபிக்க வேண்டும்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” (சங்கீதம் 51:10) ஒழுக்க ரீதியில் தவறான அல்லது உடல் ரீதியில் பலவீனமாக்கும் காரியங்களைத் தவிர்ப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி நாம் தியானிக்கலாம். இவற்றைத் தவிர்க்கத் தவறுவதால் உண்டாகும் பாதிப்புகளை நினைத்துப் பாருங்கள். மோசமான உடல்நிலை, உறவுகள் முறிவடைதல், அகால மரணம் போன்ற விளைவுகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மறுபட்சத்தில், யெகோவா நமக்காக வகுத்துள்ள வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதால் உண்டாகும் பல அனுகூலங்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஆனால் நம்முடைய இருதயம் வஞ்சகம் நிறைந்ததாய் இருக்கிறது என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. (எரேமியா 17:9, பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவின் தராதரங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை குறைத்துப்போட உங்கள் இருதயத்தில் அறவே இடம் கொடுத்து விடாதீர்கள்.
8. எந்த உண்மையை அனுபவம் நமக்கு கற்பிக்கிறது? உதாரணம் தருக.
8 நல்லது செய்ய வேண்டுமென்ற நம் ஆர்வத்தை, மாம்ச பலவீனங்கள் தணித்துப் போடுவதை நம்மில் அநேகர் அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கிறோம். உதாரணமாக, ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை எடுத்துக்கொள்ளுங்கள். ஜீவனளிக்கும் இந்த ஊழியத்தில் பங்குகொள்ள மனிதர் விருப்பம் காட்டுகையில் யெகோவா மகிழ்ச்சியடைகிறார். (சங்கீதம் 110:3; மத்தேயு 24:14) எல்லார் முன்னிலையில் வெளிப்படையாய் பிரசங்கிக்க கற்றுக்கொள்வது நம்மில் பெரும்பாலோருக்கு எளிதாக இருக்கவில்லை. அது நம் ‘சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துவதைத்’ தேவைப்படுத்தியது—ஒருவேளை இன்னமும் தேவைப்படுவதாக இருக்கலாம். ஊழியத்துக்குப் போக வேண்டாம் என்று நம் சரீரம் முரண்டுபிடித்தாலும் நாம் போகாமல் இருந்து விடுவதில்லை.—1 கொரிந்தியர் 9:16, 27; 1 தெசலோனிக்கேயர் 2:2.
‘எல்லாவற்றிலேயுமா’?
9, 10. ‘எல்லாவற்றிலும் தன்னடக்கமாயிருப்பது’ எதை உட்படுத்துகிறது?
9 ‘எல்லாவற்றிலேயும் தன்னடக்கமாயிருக்க’ வேண்டும் என்ற பைபிள் அறிவுரை, கோபத்தை அடக்குவதும் ஒழுக்கக்கேடான நடத்தையை தவிர்ப்பதும் மட்டுமே போதாது என்பதைக் காட்டுகிறது. அந்தக் காரியங்களில் ஏற்கெனவே நமக்கு தன்னடக்கம் இருப்பதாக ஒருவேளை நாம் நினைக்கலாம், அப்படியானால் நிச்சயமாகவே நாம் அதற்காக சந்தோஷப்படலாம். இருந்தாலும், வேறுசில சூழ்நிலைகளில் தன்னடக்கத்தின் அவசியம் நமக்கு சட்டென்று புலப்படாமல் இருக்கலாம், அப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் பற்றியென்ன? உதாரணத்திற்கு, எல்லா வித வசதிவாய்ப்புகளை உடைய பணக்கார நாட்டில் நாம் வசிக்கிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையிலும் அனாவசிய செலவுகளுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லக் கற்றுக்கொள்வது எவ்வளவு ஞானமாயிருக்கும் அல்லவா? ஏதோவொன்று கிடைக்கிறது, பார்ப்பதற்கு நன்றாயிருக்கிறது, அல்லது கையில் காசு இருக்கிறது என்பதற்காக கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கக் கூடாதென்று பிள்ளைகளுக்குப் பெற்றோர் கற்பிப்பது நல்லது. ஆனால், அத்தகைய அறிவுரை பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், பெற்றோர் தகுந்த முன்மாதிரி வைப்பது அவசியம்.—லூக்கா 10:38-42.
10 நமக்குத் தேவையான ஒன்று இல்லாமலேயே சமாளிக்கக் கற்றுக்கொள்வது நம்முடைய மனவுறுதியை பலப்படுத்தும். அதோடு, நம்மிடமுள்ள பொருட்கள் மீது நமது போற்றுதலை அதிகரிக்கச் செய்யும். மேலும், விருப்பப்பட்டு அல்ல ஆனால் வேறு வழியின்றி கொஞ்ச பொருட்களை மட்டுமே வைத்து காலத்தை ஓட்டுபவர்களிடம் அதிக கரிசனையுடன் இருக்கும்படியும் நம்மை தூண்டும். “உங்கள் ஆசைக்கு அணைபோட வேண்டாம்” அல்லது “நம்பர் 1 ஐட்டம் உங்களுக்கே” போன்ற பிரபல விளம்பரங்களுக்கு நேர்மாறானதே அடக்கமான வாழ்க்கை பாணி. ஆசைப்பட்டதையெல்லாம் உடனுக்குடன் அடைவதையே இந்த விளம்பர உலகம் ஊக்குவிக்கிறது, ஆனால் சொந்த இலாபத்திற்காகவே இப்படி செய்கிறது. இது, தன்னடக்கத்தைக் காட்டுவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளைக் கெடுத்துப்போடலாம். செல்வச் செழிப்பான ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை சமீபத்தில் இவ்வாறு குறிப்பிட்டது: “தகாத ஆசைகளை கட்டுப்படுத்துவது, வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருப்பவர்களுக்கு பெரும் போராட்டமாக இருக்கிறதென்றால், பாலும் தேனும் ஓடுகிற வளமான நாடுகளில் வாழ்கிறவர்களுக்கு அது இன்னும் எப்பேர்ப்பட்ட போராட்டமாக இருக்கும்!”
11. தேவையான ஒன்று இல்லாமல் வாழக் கற்றுக்கொள்வது ஏன் நன்மையானது, ஆனால் இதைக் கடினமாக்குவது எது?
11 நம்முடைய ஆசைக்கும் தேவைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காண்பது கடினமாயிருந்தால், நாம் பொறுப்பற்ற முறையில் நடக்காமலிருக்க நடவடிக்கைகள் எடுப்பது ஒருவேளை உதவலாம். உதாரணமாக, அளவுக்கு மீறி செலவு செய்வதை கட்டுப்படுத்த விரும்பினால், பொருட்களை கடனுக்கு வாங்கக் கூடாதென தீர்மானிக்கலாம் அல்லது கடைக்குச் செல்லும்போது பணத்தை அளவாக எடுத்துச் செல்லலாம். “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என பவுல் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர் இவ்வாறு நியாயம் காட்டினார்: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” (1 தீமோத்தேயு 6:6-8) நாம் அவ்வாறு இருக்கிறோமா? ஆசைப்படுவதையெல்லாம்—அது எதுவாக இருந்தாலும்சரி—அடைவதற்காக தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்காமல் எளிய வாழ்க்கை நடத்த கற்றுக்கொள்வதற்கு மனவுறுதியும் தன்னடக்கமும் தேவைப்படுகிறது. என்றாலும், இது எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்.
12, 13. (அ) கிறிஸ்தவ கூட்டங்களில் எந்தெந்த விதத்தில் தன்னடக்கத்தை காண்பிக்க வேண்டும்? (ஆ) நாம் தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய வேறுசில அம்சங்கள் யாவை?
12 கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் அசெம்பிளிகளுக்கும் மாநாடுகளுக்கும் ஆஜராவதிலும் ஒரு வகை தன்னடக்கம் உட்பட்டுள்ளது. உதாரணமாக, நிகழ்ச்சி நடைபெறும்போது நம்முடைய மனதை அலையவிடாமல் வைப்பதற்கு இந்தப் பண்பு அவசியம். (நீதிமொழிகள் 1:5) பேச்சாளருக்கு நம்முடைய முழு கவனத்தையும் செலுத்துவதற்குப் பதிலாக, நமக்கு அருகில் அமர்ந்திருப்போரிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும்; இதைத் தவிர்ப்பதற்கு நமக்கு தன்னடக்கம் தேவைப்படலாம். சரியான நேரத்தில் வந்து சேருவதற்கு நம் அட்டவணையை சரிசெய்ய தன்னடக்கம் தேவைப்படலாம். மேலும், கூட்டங்களுக்குத் தயாரிக்க நேரத்தை ஒதுக்குவதற்கும், பின்பு அவற்றில் பங்குகொள்வதற்கும் தன்னடக்கம் தேவைப்படலாம்.
13 சிறிய காரியங்களில் தன்னடக்கத்தைக் காட்டினால்தான் பெரிய காரியங்களிலும் நாம் அதைக் காட்ட முடியும். (லூக்கா 16:10) ஆகவே, கடவுளுடைய வார்த்தையையும் பைபிள் பிரசுரங்களையும் தவறாமல் வாசிப்பதற்கும் படிப்பதற்கும் தியானிப்பதற்கும் நம் மனதைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு நல்லது! நமக்கு ஒத்துவராத வேலைகள், நட்புகள், மனப்பான்மைகள், தனிப்பட்ட பழக்கங்கள் ஆகியவற்றைக் குறித்ததில் நம் மனதைக் கட்டுப்படுத்துவது, அல்லது கடவுளுடைய சேவை செய்வதற்குரிய அருமையான நேரத்தை பறித்துப்போடுகிற காரியங்களுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்ல நம் மனதைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு ஞானமானது! யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் நிலைத்திருந்தால்தான், யெகோவாவின் உலகளாவிய அமைப்பின் ஆவிக்குரிய பரதீஸிலிருந்து நம்மைத் தூரமாய் விலகிப்போகச் செய்யும் எந்தக் காரியங்களிடமிருந்தும் நமக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.
தன்னடக்கத்தின் மூலம் முழு வளர்ச்சி அடையுங்கள்
14. (அ) பிள்ளைகள் எவ்வாறு தன்னடக்கத்தைக் காட்ட கற்றுக்கொள்ள வேண்டும்? (ஆ) இத்தகைய பாடங்களை பிள்ளைகள் சிறுவயதிலேயே கற்றுக்கொள்கையில் என்ன பலன்கள் கிடைக்கலாம்?
14 புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தன்னடக்கம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. பிள்ளைகளின் சுபாவத்தை ஆராயும் நிபுணர்கள் பிரசுரித்த ஒரு துண்டுப்பிரதியில் இவ்வாறு விளக்கப்பட்டிருந்தது: “தன்னடக்கம் தானாக அல்லது திடீரென உண்டாவதில்லை. தன்னடக்கத்தைக் கற்பதற்கு குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பெற்றோரின் வழிநடத்துதலும் ஆதரவும் தேவை. . . . பெற்றோர் இவ்வாறு வழிநடத்தி வருகையில், அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் தன்னடக்கத்தை அதிகமதிகமாய் கற்றுக்கொண்டே வரும்.” நான்கு வயது பிள்ளைகளை வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி, ஓரளவு தன்னடக்கத்தைக் காட்டுவதற்குக் கற்றிருந்த பிள்ளைகள் “சூழ்நிலைக்கேற்ப நன்றாக அனுசரித்துப் போகிறவர்களாகவும், பிரபலமானவர்களாகவும், சாதனை படைப்பவர்களாகவும், நம்பிக்கை நிறைந்தவர்களாகவும், பொறுப்புள்ள பருவ வயதினர்களாகவும் வளர்ந்தார்கள்” என காட்டியது. தன்னடக்கத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்காத பிள்ளைகள் “பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்களாக, எளிதில் எரிச்சலடைபவர்களாக, பிடிவாத குணமுள்ளவர்களாக இருந்தார்கள், அதோடு, பிரச்சினைகள் ஏற்பட்டபோது அடிபணிந்து போனார்கள், சவால்களை ஏற்க துணிவில்லாதவர்களாக இருந்தார்கள்.” எல்லாவற்றையும் நன்கு அனுசரித்துப் போகும் நபராக வளருவதற்கு ஒரு பிள்ளை தன்னடக்கத்தைக் காட்ட கற்றுக்கொள்வது அவசியம் என்பது தெளிவாயிருக்கிறது.
15. தன்னடக்கம் இல்லாதிருப்பது எதை சுட்டிக்காட்டுகிறது, இதற்கு மாறாக என்ன இலக்கு வைக்க வேண்டுமென பைபிள் குறிப்பிடுகிறது?
15 அவ்வாறே, நாம் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக வேண்டுமானால், தன்னடக்கத்தைக் காட்ட கற்றுக்கொள்ள வேண்டும். அது குறைவுபட்டால் நாம் இன்னும் ஆவிக்குரிய குழந்தைகளாக இருக்கிறோம் என்றே அர்த்தம். “புரிந்துகொள்ளும் திறன்களில் முழு வளர்ச்சி அடையுங்கள்” என்று பைபிள் அறிவுரை கூறுகிறது. (1 கொரிந்தியர் 14:20, NW) ‘கடவுளுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் திருத்தமான அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, . . . கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவான வளர்ச்சியை பெறும் அளவுக்கு முதிர்ச்சியடைவதே’ நம் இலக்கு. ஏன்? “நாம் இனி மனுஷரின் சூதினாலும் வஞ்சனைக்கேதுவான தந்திரத்தினாலும் எவ்விதப் போதகக் காற்றிலும் அலைகள் போல் அடிபட்டுச் சுழன்று திரிந்து குழந்தைகளாயிரா”தபடிக்கே ஆகும். (எபேசியர் 4:12-14, திருத்திய மொழிபெயர்ப்பு) தன்னடக்கத்தைக் காட்ட கற்றுக்கொள்வது நமது ஆவிக்குரிய நலனிற்கு மிக முக்கியம் என்பதில் சந்தேகமில்லை.
தன்னடக்கத்தை வளர்த்தல்
16. யெகோவா எவ்வாறு உதவி அளிக்கிறார்?
16 தன்னடக்கத்தை வளர்க்க கடவுளுடைய உதவி நமக்குத் தேவை, அது நமக்கு எப்போதும் கிடைக்கும். நாம் எந்ததெந்த விஷயங்களில் தனிப்பட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை கடவுளுடைய வார்த்தை கண்ணாடியைப் போல் பளிச்சென்று நமக்குக் காட்டுகிறது. மேலும், எவ்வாறு அதைச் செய்ய வேண்டும் என்ற அறிவுரையையும் அளிக்கிறது. (யாக்கோபு 1:22-25) அதோடு, அன்பான சகோதரர்களும் நமக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறார்கள். தனிப்பட்ட உதவி அளிப்பதில் கிறிஸ்தவ மூப்பர்கள் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை காண்பிக்கிறார்கள். பரிசுத்த ஆவியை அருளும்படி ஜெபத்தில் நாம் வேண்டிக்கொண்டால் யெகோவா அதை தாராளமாக அருளுவார். (லூக்கா 11:13; ரோமர் 8:26) ஆகையால், இந்த ஏற்பாடுகளை மகிழ்ச்சியுடன் நாம் பயன்படுத்துவோமாக. 21-ம் பக்கத்தில் காணப்படும் ஆலோசனைகள் உதவியாக இருக்கும்.
17. என்ன ஊக்குவிப்பை நீதிமொழிகள் 24:16 நமக்கு தருகிறது?
17 யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்ய நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் உயர்வாக மதிக்கிறார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! தன்னடக்கத்தை அதிகமாய் காட்டுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய இது நம்மை தூண்ட வேண்டும். அப்படி செய்ய முடியாமல் பல முறை இடறிவிழுந்தாலும், நம்முடைய முயற்சிகளை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்.” (நீதிமொழிகள் 24:16) யெகோவாவை நாம் பிரியப்படுத்துகிற ஒவ்வொரு முறையும் நம் தோளை நாமே தட்டிக்கொடுத்துக் கொள்ளலாம். யெகோவாவும் நம் தோளை தட்டிக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு முன்பு, புகைபிடிப்பதை நிறுத்தும் போராட்டத்தில் தான் ஒவ்வொரு வாரமும் வெற்றி பெற்றபோதெல்லாம், அந்தக் காசில் தனக்கு உபயோகமான எதையாவது ஒன்றை வாங்கி தனக்குத் தானே பரிசளித்துக் கொண்டதாக யெகோவாவின் சாட்சி ஒருவர் கூறுகிறார்.
18. (அ) தன்னடக்கத்திற்கான நம் போராட்டத்தில் எது உட்பட்டுள்ளது? (ஆ) யெகோவா தரும் உறுதி என்ன?
18 தன்னடக்கம் மனதையும் உணர்ச்சிகளையும் உட்படுத்துகிறது என்பதை மிக முக்கியமாக நாம் நினைவில் வைக்க வேண்டும். இதை நாம் இயேசுவின் வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.” (மத்தேயு 5:28; யாக்கோபு 1:14, 15) தன் மனதையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தக் கற்றிருக்கிற ஒருவருக்கு தன் முழு சரீரத்தையும் கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்கும். ஆகவே, தவறு செய்வதை மட்டுமல்ல, ஆனால் அதைப் பற்றிய சிந்தையையும் தவிர்ப்பதற்கு நம் தீர்மானத்தை பலப்படுத்துவோமாக. தவறான சிந்தனைகள் எழும்பினால், உடனடியாக அவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள். ஜெபசிந்தையுடன் இயேசுவின் முன்மாதிரியை உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள், அப்படி செய்யும்போது சோதனைகளிலிருந்து நம்மால் விலகியோட முடியும். (1 தீமோத்தேயு 6:11; 2 தீமோத்தேயு 2:22; எபிரெயர் 4:15, 16) நம்மால் இயன்ற மிகச் சிறந்ததை செய்கையில், சங்கீதம் 55:22-ன் (தி.மொ.) அறிவுரையைப் பின்பற்றுவோம்: “யெகோவாவின் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• எந்த இரண்டு வழிகளில் நாம் தன்னடக்கத்தைக் காட்ட வேண்டும்?
• ‘எல்லாவற்றிலேயும் தன்னடக்கத்தைக்’ காட்டுவது என்பதன் அர்த்தமென்ன?
• தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ள என்ன நடைமுறை ஆலோசனைகளை இந்தப் படிப்பில் நீங்கள் முக்கியமாய் கவனித்தீர்கள்?
• தன்னடக்கம் எங்கிருந்து தொடங்குகிறது?
[பக்கம் 21-ன் பெட்டி/படங்கள்]
தன்னடக்கத்தை வளர்ப்பது எப்படி
• சிறிய காரியங்களிலும் அதைக் காட்டுங்கள்
• அதன் தற்போதைய, வருங்கால நன்மைகளைக் குறித்து தியானியுங்கள்
• கடவுள் தடை செய்கிற காரியங்களை செய்வதற்கு பதிலாக அவர் ஊக்குவிப்பவற்றை செய்யுங்கள்
• தகாத எண்ணங்களை உடனடியாக ஒதுக்கித் தள்ளுங்கள்
• ஆவிக்குரிய விதத்தில் கட்டியெழுப்பும் சிந்தனைகளால் உங்கள் மனதை நிரப்புங்கள்
• முதிர்ச்சியடைந்த சக கிறிஸ்தவர்கள் தரும் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்
• மனதில் ஆசையைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளைத் தவிருங்கள்
• தகாத ஆசைகள் மனதில் வரும்போதெல்லாம் கடவுளுடைய உதவிக்காக ஜெபியுங்கள்
[பக்கம் 18, 19-ன் படங்கள்]
தன்னடக்கம் நல்லதைச் செய்ய நம்மை உந்துவிக்கிறது