அறிவோடே தன்னடக்கத்தைக் கூட்டி வழங்குங்கள்
‘அறிவோடே தன்னடக்கத்தை . . . கூட்டி வழங்குங்கள்.’—2 பேதுரு 1:5-8, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. என்ன சொல்லத் தவறுவதால் மனிதருக்கு பெரும்பாலான பிரச்சினைகள் வருகின்றன?
போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்து பிரமாண்டமான அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டபோது ஐக்கிய மாகாணங்களிலுள்ள இளைஞர்களுக்கு இவ்வாறு புத்திமதி கொடுக்கப்பட்டது: “போதைப்பொருள் ‘வேண்டாம்’ என்று சொல்லுங்கள்.” போதைப்பொருளுக்கு மட்டுமல்ல, குடிவெறி, ஞானமற்ற அல்லது ஒழுக்கயீனமான வாழ்க்கை பாணிகள், நேர்மையற்ற வியாபாரம், ‘துர்இச்சைகள்’ ஆகியவற்றிற்கும் ‘வேண்டாம்’ என்று எல்லாரும் சொன்னால் நிலைமை எவ்வளவு நன்றாயிருக்கும்! (ரோமர் 13:14) ஆனால், எப்போதுமே இப்படி ‘வேண்டாம்’ என சொல்வது யாருக்குத்தான் சுலபம்?
2. (அ) ‘வேண்டாம்’ என சொல்வது எப்போதுமே கஷ்டமாக இருந்திருக்கிறது என்பதை என்ன பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன? (ஆ) நாம் என்ன செய்யும்படி இந்த உதாரணங்கள் நம்மை உற்சாகப்படுத்த வேண்டும்?
2 அபூரண மனிதர் அனைவருக்கும் தன்னடக்கத்தைக் காட்டுவது கஷ்டமாக இருக்கிறது. ஆகவே நம்முடைய கெட்ட பழக்கங்களை மேற்கொள்வது எப்படி என்பதை நாம் அக்கறையோடு அறிந்துகொள்ள வேண்டும். கடவுளை சேவிப்பதற்கு கடினமாக முயன்றும் சிலசமயங்களில் தவறிப்போன நபர்களைப் பற்றி பைபிள் நமக்கு சொல்கிறது. தாவீதையும் பத்சேபாளுடன் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தையும் நினைத்துப் பாருங்கள். விபச்சாரத்தினால் கருத்தரிக்கப்பட்ட பிள்ளையும் பத்சேபாளுடைய கணவனும் இறப்பதற்கு இது வழிநடத்தியது—இவர்கள் இருவரும் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள். (2 சாமுவேல் 11:1-27; 12:15-18) “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்” என்று வெளிப்படையாக அறிக்கையிட்ட அப்போஸ்தலன் பவுலையும் சிந்தித்துப் பாருங்கள். (ரோமர் 7:19) சில சமயங்களில் நீங்களும் இதுபோல விரக்தி அடைந்துவிடுகிறீர்களா? பவுல் தொடர்ந்து கூறினார்: “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப் பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:22-24) அதிக தன்னடக்கத்தைப் பெறுவதற்கான இந்தப் போராட்டத்தில் துவளாதிருக்க நாம் எடுத்துள்ள உறுதியை பைபிள் உதாரணங்கள் பலப்படுத்த வேண்டும்.
தன்னடக்கம், கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்
3. தன்னடக்கத்தைக் காட்டுவது ஏன் சுலபமல்ல என்பதை விளக்குங்கள்.
3 ‘வேண்டாம்’ என்று சொல்வது தன்னடக்கத்தில் உட்படுகிறது; அப்படிப்பட்ட தன்னடக்கம், 2 பேதுரு 1:5-7-ல், விசுவாசம், நற்குணம், ஞானம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு ஆகியவற்றோடு சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நல்ல பண்புகள் எதுவும் பிறவியிலேயே வந்துவிடுவதில்லை. அவற்றை வளர்க்க வேண்டும். அவற்றை நன்கு வெளிக்காட்டுவதற்கு உறுதியும் முயற்சியும் தேவை. இப்படியிருக்கும்போது, தன்னடக்கத்தைக் காட்டுவது அவ்வளவு சுலபமென நினைத்துவிட முடியுமா?
4. தன்னடக்கத்தைக் காட்டுவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை என ஏன் அநேகர் நினைக்கின்றனர், ஆனால் இது எதற்கு அறிகுறி?
4 உண்மைதான், தன்னடக்கத்தைக் காட்டுவதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை என அநேகர் நினைக்கலாம். அவர்கள் தங்களுடைய விருப்பப்படி வாழ்கிறார்கள், தெரிந்தோ தெரியாமலோ தங்களுடைய மாம்ச இச்சைகளுக்கு அடிபணிந்து விடுகிறார்கள், அதனால் தங்களுக்கோ மற்றவர்களுக்கோ வரும் பின்விளைவுகளைப் பற்றி துளிகூட யோசித்துப் பார்ப்பதில்லை. (யூதா 10) ‘வேண்டாம்’ என மறுக்க அநேகருக்கு திறமையில்லாதிருப்பதும் மனமில்லாதிருப்பதும் முன்பைவிட இப்பொழுது அப்பட்டமாக தெரிகிறது. நாம் உண்மையிலேயே “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதற்கு இது ஓர் அறிகுறி. இதைப் பற்றி பவுல் முன்னறிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்: ‘[“கையாளுவதற்கு கடினமான,” NW] கொடிய காலங்கள் வரும். எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும் [“தன்னடக்கமில்லாதவர்களாயும்,” தி.மொ.] இருப்பார்கள்.’—2 தீமோத்தேயு 3:1-5.
5. தன்னடக்கத்தைப் பற்றிய விஷயத்தில் ஏன் யெகோவாவின் சாட்சிகள் ஆர்வம் காட்டுகின்றனர், என்ன புத்திமதி இன்றும் மதிப்புமிக்கதாய் இருக்கிறது?
5 தன்னடக்கத்தைக் காட்டுவது எவ்வளவு சவால்மிக்கது என்பதை யெகோவாவின் சாட்சிகள் நன்கு அறிந்திருக்கிறார்கள். கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக வாழ வேண்டுமென்ற ஆசைக்கும் அபூரண மாம்சத்தின் தூண்டுதலுக்கும் இடையே போராட்டம் இருப்பதை பவுலைப் போல அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே, இந்தப் போராட்டத்தில் எப்படி வெற்றி பெறுவது என்பதை தெரிந்து கொள்வதில் இவர்கள் நெடுங்காலமாக ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது வாசிக்கும் இப்பத்திரிகையின் 1916-ம் வருட இதழ், “நம்மையும் நம்முடைய சிந்தை, சொல், செயல் ஆகியவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு நாம் எடுக்க வேண்டிய சரியான வழியைப்” பற்றி பேசியது. பிலிப்பியர் 4:8-ஐ மனதில் வைத்திருக்கும்படி அந்தப் பத்திரிகை ஆலோசனை கொடுத்தது. அந்த வசனத்தில் கடவுள் பதிவு செய்திருக்கும் அறிவுரை சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்டபோதிலும், இன்றும் மதிப்புமிக்கதாய் இருக்கிறது. அதைக் கடைப்பிடிப்பது, 1916-ல் இருந்ததைவிட இப்பொழுது அதிக கடினமாக இருக்கிறது. என்றாலும், உலக ஆசைகளைத் தவிர்க்க கிறிஸ்தவர்கள் கடினமாக முயற்சி செய்கிறார்கள், அப்படி செய்வது தங்களுடைய படைப்பாளருக்கு கீழ்ப்படிதலை காட்டுகிறது என்பதை அறிந்திருக்கிறார்கள்.
6. தன்னடக்கத்தை வளர்த்துக் கொள்ளும்போது நாம் ஏன் ஊக்கமிழந்துவிட வேண்டியதில்லை?
6 கலாத்தியர் 5:22, 23-ல், தன்னடக்கம் என்பது “[பரிசுத்த] ஆவியின் கனி”யில் ஒரு பாகமென குறிப்பிடப்பட்டுள்ளது. “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம்” ஆகியவற்றோடு இந்தப் பண்பை நாம் வெளிக்காட்டினால் அதிக நன்மையடைவோம். இப்படி செய்வது, பேதுரு விளக்கிக் கூறியபடி, கடவுளுக்கு செய்யும் சேவையில் நம்மை ‘முயற்சியற்றவரும் கனியற்றவருமாயிருக்க வொட்டாது.’ (2 பேதுரு 1:8, தி.மொ.) ஆனால் நாம் விரும்புகிற அளவுக்கு இந்தக் குணங்களை வேகமாகவும் முழு நிறைவாகவும் வெளிக்காட்டுவதில் தவறிவிடுவோமாகில் ஊக்கமிழந்துவிடக் கூடாது அல்லது நம்மையே நொந்துகொள்ளக் கூடாது. பள்ளியில் ஒரு மாணவன் மற்றொருவனைவிட வேகமாய் கற்றுக்கொள்வதை நீங்கள் ஒருவேளை கவனித்திருக்கலாம். அல்லது வேலை செய்யும் இடத்தில் ஒருவர் மற்றவர்களைவிட சட்டென்று புதிய வேலையை கற்றுக்கொள்ளலாம். இதைப் போலவே, கிறிஸ்தவ பண்புகளை சிலர் மற்றவர்களைவிட வேகமாய் கற்றுக்கொண்டு, அவற்றை கடைப்பிடிக்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், நம்மால் முடிந்தளவுக்கு தேவபக்திக்கேற்ற பண்புகளை தொடர்ந்து வளர்க்க வேண்டும். கடவுள் தமது வார்த்தையின் வாயிலாகவும் சபையின் வாயிலாகவும் தரும் உதவியை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். நம்முடைய இலக்கை வேகமாக அடைவது முக்கியமல்ல, ஆனால் தொடர்ந்து முன்னேற விடாமுயற்சி செய்வதே முக்கியம்.
7. தன்னடக்கம் முக்கியம் என்பதை எது காட்டுகிறது?
7 தன்னடக்கம் ஆவியின் கனியில் கடைசியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறபோதிலும், மற்ற பண்புகளைப் பார்க்கிலும் அது எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. அது மிக முக்கியம் என்பதே உண்மை. நமக்கு பூரண தன்னடக்கம் இருந்தால், “மாம்சத்தின் கிரியைகள்” எல்லாவற்றையும் நம்மால் தவிர்க்க முடியும் என்பதை மனதிற்கொள்ள வேண்டும். என்றாலும், அபூரண மனிதர்கள் ‘மாம்சத்தின் கிரியைகளாகிய . . . விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்’ ஆகிய சிலவற்றில் ஒருவேளை ஈடுபடக்கூடும். (கலாத்தியர் 5:19, 20) ஆகவே, தகாத மனப்பான்மைகளை இருதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் வேரோடு பிடுங்கியெறிய உறுதிபூண்டு, அதற்காக இடைவிடாமல் போராட வேண்டும்.
சிலருக்கு பெரும் போராட்டம்
8. என்ன காரணங்களால் தன்னடக்கத்தைக் காட்டுவது சிலருக்கு கடினமாய் இருக்கிறது?
8 தன்னடக்கத்தைக் காட்டுவது கிறிஸ்தவர்கள் சிலருக்கு மற்றவர்களைவிட அதிக கடினமாக இருக்கிறது. ஏன்? வளர்ப்பு அல்லது கடந்தகால அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். தன்னடக்கத்தை வளர்ப்பதும் வெளிக்காட்டுவதும் நமக்கு ஒரு பிரச்சினையாக தோன்றாவிட்டால் சந்தோஷம்தான். ஆனால் அதைக் காண்பிக்க போராடுகிற ஒருவருடன் பழகும்போது நாம் அதிக கரிசனையோடும் புரிந்துகொள்ளுதலோடும் நடக்க வேண்டும்; அவர்கள் தன்னடக்கமின்றி நடப்பது நமக்கு ஏதாவது பிரச்சினைகளை உண்டுபண்ணினாலும் இத்தகைய பண்பை நாம் காண்பிக்க வேண்டும். நாமே அபூரணராக இருக்கும்போது, நம்மை நீதிமான்களென்று சொல்லிக்கொள்ள நம்மில் யாருக்குத்தான் காரணம் இருக்கிறது?—ரோமர் 3:23; எபேசியர் 4:2.
9. சிலருக்கு என்ன பலவீனங்கள் இருக்கின்றன, இவை எப்போது முழுமையாக மேற்கொள்ளப்படும்?
9 இதை இவ்வாறு விளக்கலாம்: புகைபிடிப்பதை அல்லது மதிமயக்கும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்திய சக கிறிஸ்தவர்கள் சிலரை நமக்குத் தெரிந்திருக்கலாம்; ஆனால் இவர்களுக்கு சில சமயங்களில் அவற்றின் மீது ஏக்கம் ஏற்படலாம். அல்லது, உணவையோ மதுபானங்களையோ உட்கொள்வதை கட்டுப்படுத்துவது சிலருக்கு சவாலாக இருக்கலாம். வேறு சிலருக்கு தங்கள் நாவை அடக்குவது பிரச்சினையாக இருக்கலாம், அதனால் அடிக்கடி ஏதாவது ஏடாகூடமாக பேசிவிடலாம். இத்தகைய குறைபாடுகளைத் தவிர்த்து தன்னடக்கத்தை வளர்க்க ஊக்கமான முயற்சி தேவை. ஏன்? “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீர முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்” என யாக்கோபு 3:2 எதார்த்தமாக சொல்கிறது. இன்னும் சிலருக்கு சூதாட்டத்தில் ஈடுபட வேண்டுமென்ற பலமான தூண்டுதல் ஏற்படலாம்; அல்லது கோபத்தை அடக்குவது கடினமாக இருக்கலாம். இவற்றையும் இவற்றைப் போன்ற பலவீனங்களையும் வெற்றிகரமாய் சமாளிக்க கற்றுக்கொள்வதற்கு காலம் எடுக்கலாம். நம்மால் இப்பொழுது நல்ல முன்னேற்றம் செய்ய முடிந்தாலும், பரிபூரணராகும் போதுதான் தவறான ஆசைகளெல்லாம் அடியோடு அழிக்கப்படும். இதற்கிடையில், தன்னடக்கத்தைக் காண்பிக்க முழு மூச்சோடு போராடுவது பாவச் சேற்றுக்குள் மீண்டும் நாம் விழாமலிருக்க உதவும். இந்தப் போராட்டம் தொடருகையில், தளர்ந்து விடாதிருக்க ஒருவருக்கொருவர் உதவி செய்வோமாக.—அப்போஸ்தலர் 14:21, 22.
10. (அ) பாலியல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தன்னடக்கத்தைக் காட்டுவது ஏன் சிலருக்கு முக்கியமாய் சவாலாக இருக்கிறது? (ஆ) என்ன பெரும் மாற்றத்தை ஒரு சகோதரர் செய்தார்? (16-ம் பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.)
10 பாலியல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தன்னடக்கத்தைக் காட்டுவது சிலருக்கு கஷ்டமாக இருக்கலாம். மனிதருக்கு உண்டாகும் பாலியல் ஆசைகள் யெகோவா தேவனுடைய படைப்பின் ஒரு பாகமாகும். என்றாலும், கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக பாலியல் ஆசைகளை அதற்குரிய இடத்தில் வைப்பது சிலருக்கு போராட்டமாக இருக்கலாம். அவர்களுக்கு பாலியல் தூண்டுதல் அசாதாரணமாக இருப்பதால் அவர்கள் இன்னும் அதிக கஷ்டப்படலாம். பல வழிகளில் மோகத்தைத் தூண்டுகிற காம வெறிபிடித்த ஓர் உலகில் இன்று நாம் வாழ்கிறோம். இது, கவனச்சிதறல்கள் இன்றி கடவுளை சேவிப்பதற்காக சில காலமாவது மணம் செய்யாதிருக்க விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கலாம். (1 கொரிந்தியர் 7:32, 33, 37, 38) ஆனால், “வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்” என்ற வேதப்பூர்வ கட்டளையின்படி, அவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானிக்கலாம்; இது நிச்சயமாகவே மதிப்புக்குரியது. அதேசமயத்தில், வேதவசனம் அறிவுறுத்துகிறபடி, ‘கர்த்தருக்குட்பட்ட’ ஒருவரையே மணமுடிக்க அவர்கள் திடமனதுடன் இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:9, 39) தமது நீதியுள்ள நியமங்களைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் ஆர்வம் காண்பிப்பதைக் குறித்து யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பது நிச்சயம். அத்தகைய உயர்ந்த ஒழுக்க தராதரங்களையும் உத்தமத்தையும் காட்டுகிற மெய் வணக்கத்தாருடன் கூட்டுறவு கொள்வதில் சக கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
11. மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு அப்படி செய்துகொள்ள முடியாமல் இருக்கும் ஒரு சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு நாம் எவ்வாறு உதவியாக இருக்கலாம்?
11 பொருத்தமான துணை கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? ஒருவர் மணம் செய்ய ஆசைப்பட்டு அப்படி செய்ய முடியாமல் இருக்கிறாரென்றால், அவருக்கு ஏற்படும் ஏமாற்றத்தை கற்பனை செய்து பாருங்கள்! பொருத்தமான துணைக்காக அவர் இன்னும் தேடிக் கொண்டிருக்கையில், அவருடைய நண்பர்களோ கல்யாணம் பண்ணிக்கொண்டு ஓரளவு சந்தோஷமாக இருப்பதை அவர் பார்க்கலாம். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் சிலருக்கு, சுயபுணர்ச்சி எனும் அசுத்தமான பழக்கம் தொடர்கதையாக ஆகிவிடலாம். எப்படியிருந்தாலும், கற்புடன் நிலைத்திருக்க போராடிக் கொண்டிருக்கும் மற்றொருவரை எந்த கிறிஸ்தவரும் தெரியாத்தனமாக ஊக்கமிழக்கச் செய்ய மாட்டார். “நீ எப்போது கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறாய்?” என யோசிக்காமல் நாம் ஏதாவது கேட்டு விடுவோமாகில் அவர்களை உற்சாகமிழக்கச் செய்துவிடுவோம். எவ்வித தவறான உள்நோக்கமின்றி இதை நாம் கேட்கக்கூடும். ஆனால் நம்முடைய நாவை அடக்கி, தன்னடக்கத்தைக் காட்டுவது எவ்வளவு நல்லது! (சங்கீதம் 39:1) நம் மத்தியில் மணமாகாமல் கற்புடன் நிலைத்திருப்பவர்கள் நமது மனமார்ந்த பாராட்டுக்குரியவர்கள். உற்சாகமிழக்கச் செய்யும் விதத்தில் பேசாமல், உற்சாகப்படுத்தும் விதத்தில் நாம் அவர்களை நடத்த முயல வேண்டும். உதாரணமாக, விருந்துக்கு அல்லது கிறிஸ்தவ கூட்டுறவுக்கு முதிர்ச்சியுள்ளவர்கள் சிறு தொகுதியாக ஒன்றுகூடி வரும்போது மணமாகாதவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொள்ளலாம்.
மண வாழ்க்கையில் தன்னடக்கம்
12. திருமணமானவர்களுக்கும்கூட ஏன் ஓரளவு தன்னடக்கம் தேவை?
12 திருமணம் செய்திருப்பதால் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருவருக்கு தன்னடக்கம் அவசியமில்லாமல் போய்விடாது. உதாரணமாக, கணவன் மனைவியின் பாலியல் ஆசைகள் பேரளவு வேறுபடலாம். அல்லது சில சமயங்களில் ஒருவருடைய உடல்நிலை காரணமாக இயல்பாக பாலுறவுகொள்ள முடியாமல் போகலாம் அல்லது அறவே ஈடுபட முடியாமலும் போகலாம். ஒருவேளை வாழ்க்கையில் முன்பு ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாக, “புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவது ஒரு துணைக்கு கடினமாய் இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மற்றொரு துணை கூடுதலாக தன்னடக்கத்தைக் காட்ட வேண்டியிருக்கலாம். ஆனால், மணமான கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த அன்புள்ள அறிவுரையை இருவருமே மனதில் வைக்க வேண்டும்: “உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சில காலம் பிரிந்திருக்க வேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டி விடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.”—1 கொரிந்தியர் 7:3, 5.
13. தன்னடக்கத்தைக் காட்ட போராடிக் கொண்டிருப்போருக்காக நாம் என்ன செய்யலாம்?
13 மணமாகிய தம்பதியினரின் இந்த மிக நெருங்கிய உறவில், தகுந்த தன்னடக்கத்தைக் காட்ட கற்றிருந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். அதேசமயத்தில், இந்த விஷயத்தில் தன்னடக்கத்தைக் காட்டுவதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கிற சக வணக்கத்தாரிடம் அவர்கள் புரிந்துகொள்ளுதலுடன் நடக்க வேண்டும். தன்னடக்கத்தைக் காட்டுவதிலும், தகாத ஆசைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதிலும் தொடர்ந்து உறுதியாயிருக்க நம் ஆவிக்குரிய சகோதரர்களுக்கு உட்பார்வையையும் தைரியத்தையும் மனவுறுதியையும் அருளும்படி யெகோவாவிடம் ஜெபிப்பதற்கு நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.—பிலிப்பியர் 4:6, 7.
ஒருவருக்கொருவர் தொடர்ந்து உதவுங்கள்
14. சக கிறிஸ்தவர்களுடன் நாம் ஏன் பரிவுடனும் புரிந்துகொள்ளுதலுடனும் நடக்க வேண்டும்?
14 நமக்கு கஷ்டமாக இல்லாத ஒரு விஷயத்தில், தன்னடக்கத்தைக் காட்ட போராடும் சக கிறிஸ்தவர்களைப் புரிந்துகொள்வது சில சமயங்களில் நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவருடைய சுபாவமும் வேறுபடுகிறது. சிலர் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார்கள்; மற்றவர்களோ அவ்வாறில்லை. தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது சிலருக்கு எளிதாக இருப்பதால் தன்னடக்கத்தைக் காட்டுவது அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதில்லை. மற்றவர்களுக்கோ அது அதிக கடினமாக இருக்கிறது. என்றபோதிலும், இப்படி போராடிக் கொண்டிருப்பவர் மோசமானவர் அல்ல என்பதை நினைவில் வையுங்கள். சக கிறிஸ்தவர்களுக்கு நம்முடைய புரிந்துகொள்ளுதலும் பரிவும் தேவை. தன்னடக்கத்தை அதிகமாக காண்பிக்க இன்னும் போராடிக் கொண்டிருப்பவர்களிடம் நாம் தொடர்ந்து இரக்கம் காட்டுகையில் நாம்தாமே மகிழ்ச்சி அடைவோம். மத்தேயு 5:7-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளிலிருந்து இதை நாம் காணலாம்.
15. தன்னடக்கத்தைப் பற்றிய விஷயத்தில் சங்கீதம் 130:3-ல் உள்ள வார்த்தைகள் ஏன் ஆறுதலாய் இருக்கின்றன?
15 ஏதோவொரு சந்தர்ப்பத்தில், இந்தக் கிறிஸ்தவ குணத்தைக் காட்ட தவறுகிற சக கிறிஸ்தவரை நாம் ஒருபோதும் தவறாக எடைபோடக் கூடாது. நாம் தன்னடக்கத்தைக் காட்டத் தவறிய ஏதோவொரு சந்தர்ப்பத்தை யெகோவா கவனித்த அதேசமயத்தில், நாம் தன்னடக்கத்தைக் காட்டிய வேறு பல சந்தர்ப்பங்களை—சக கிறிஸ்தவர்கள் கவனிக்காமற்போனாலும்—அவர் கவனித்தார் என்பதை அறிவது எவ்வளவாய் உற்சாகமூட்டுகிறது! சங்கீதம் 130:3-ல் உள்ள வார்த்தைகளை மனதில் வைத்திருப்பது மிகவும் ஆறுதலாய் இருக்கும்: “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.”
16, 17. (அ) தன்னடக்கத்தைப் பற்றியதில் கலாத்தியர் 6:2, 5-ஐ நாம் எவ்வாறு பொருத்திப் பயன்படுத்தலாம்? (ஆ) தன்னடக்கத்தைப் பற்றி நாம் அடுத்தபடியாக என்ன சிந்திப்போம்?
16 யெகோவாவுக்குப் பிரியமுள்ளவர்களாய் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்; அதேசமயத்தில் நமது கிறிஸ்தவ சகோதரர்களின் உதவியும் நமக்கு கிடைக்கும் என்பதில் நிச்சயமாயிருக்கலாம். உத்தரவாதம் எனும் சுமையை அவரவர் சுமக்க வேண்டியிருந்தாலும் பலவீனங்களைச் சமாளிக்க ஒருவருக்கொருவர் உதவி செய்யும்படி ஊக்குவிக்கப்படுகிறோம். (கலாத்தியர் 6:2, 5) போகக்கூடாத இடங்களுக்குப் போவதிலிருந்தும், பார்க்கக்கூடாத காட்சிகளைப் பார்ப்பதிலிருந்தும், செய்யக்கூடாத காரியங்களைச் செய்வதிலிருந்தும் நம்மை தடுத்து வைக்கிற பெற்றோரை, துணைவரை, அல்லது நண்பரை நாம் அருமையானவராய் கருத வேண்டும். ஏனென்றால் நாம் தன்னடக்கத்தைக் காட்டுவதற்கு, அதாவது ‘வேண்டாம்’ என உதட்டளவில் அல்ல, உள்ளப்பூர்வமாய் சொல்வதற்கு அவர் நமக்கு உதவி செய்கிறார்!
17 இதுவரை தன்னடக்கத்தைப் பற்றி நாம் சிந்தித்த விஷயங்களுக்கு இசைய கிறிஸ்தவர்கள் பலர் நடக்கலாம். ஆனால் தனிநபராக இன்னும் அதிக முழுமையாக அதைக் காட்ட விரும்பலாம், அதாவது அபூரண மனிதரிடம் நியாயமாகவே எந்தளவு எதிர்பார்க்கலாம் என தாங்கள் நினைக்கிறார்களோ அந்தளவு தன்னடக்கத்தை காட்ட விரும்பலாம். நீங்களும் அவ்வாறே உணருகிறீர்களா? அப்படியானால், கடவுளுடைய ஆவியின் கனியிலுள்ள இந்த அம்சத்தை வளர்த்துக் கொள்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு கிறிஸ்தவராக நீங்கள் வைத்திருக்கும் நெடுங்கால இலக்குகளை எட்ட இது எவ்வாறு உதவும்? அடுத்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ஏன் தன்னடக்கம் . . .
• கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று?
• சிலருக்கு சவாலாக இருக்கிறது?
• மண வாழ்க்கையில் அவசியம்?
• ஒருவருக்கொருவர் உதவிசெய்து வளர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு பண்பாக இருக்கிறது?
[பக்கம் 16-ன் பெட்டி/படம்]
‘வேண்டாம்’ என்று சொல்ல அவர் கற்றுக்கொண்டார்
ஜெர்மனியில் வாழும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தொழில்நுட்ப தொலைத்தொடர்பு அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். அவருடைய வேலை, ஏறக்குறைய 30 வெவ்வேறு டெலிவிஷன் மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளை கண்காணிப்பதாகும். ஏதாவது இடையூறு ஏற்படுகையில் அவர் நிகழ்ச்சியை கூர்ந்து கவனித்து பிரச்சினையைத் திட்டமாய் கண்டுபிடிக்க வேண்டும். அவர் இவ்வாறு சொல்கிறார்: “வேண்டாத சமயத்தில்தான், அதாவது வன்முறை அல்லது பாலியல் காட்சிகள் காட்டப்படுகையில்தான் இடையூறுகள் வருவதாக தெரிகிறது. அந்தக் கெட்ட காட்சிகள் பல நாட்களுக்கு, ஏன் பல வாரங்களுக்குக்கூட என் மனதில் அப்படியே பதிந்துவிட்டன.” இது தனது ஆவிக்குரியத் தன்மையை பாதித்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார்: “நான் ஓரளவு மூர்க்க குணமுடையவன், ஆகையால் வன்முறை காட்சிகளை பார்த்ததால் தன்னடக்கத்தைக் காட்டுவது எனக்கு பெரும் கஷ்டமாக ஆனது. பாலியல் காட்சிகள் எனக்கும் என் மனைவிக்கும் இடையே மன இறுக்கத்தை ஏற்படுத்தின. இதனால் தினமும் எனக்கு போராட்டமாக இருந்தது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக, குறைந்த சம்பளம் கிடைத்தாலும்கூட வேறொரு வேலையைத் தேட தீர்மானித்தேன். சீக்கிரத்தில் எனக்கு வேறொரு வேலையும் கிடைத்தது. என் விருப்பம் நிறைவேறியது.”
[பக்கம் 15-ன் படங்கள்]
பைபிள் படிப்பிலிருந்து பெற்ற அறிவு தன்னடக்கத்தைக் காட்ட நமக்கு உதவுகிறது