உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g19 எண் 2 பக். 6-7
  • பணிவாக இருப்பது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பணிவாக இருப்பது
  • விழித்தெழு!—2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பணிவு என்றால் என்ன?
  • பணிவு ஏன் முக்கியம்?
  • பணிவைக் கற்றுக்கொடுப்பது எப்படி?
  • உண்மையான மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • மனத்தாழ்மையாக இருக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்
    விழித்தெழு!—2017
  • பின்பற்றுவதற்கான மனத்தாழ்மையின் முன்மாதிரிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—2019
g19 எண் 2 பக். 6-7
ஒரு பையன் குப்பைத் தொட்டியில் குப்பையைப் போடுகிறான்

பாடம் 2

பணிவாக இருப்பது

பணிவு என்றால் என்ன?

பணிவோடு இருப்பவர்கள் மற்றவர்களுக்கு மரியாதை காட்டுவார்கள். அவர்கள் தலைக்கனத்தோடு நடந்துகொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் தங்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, மற்றவர்கள்மேல் உண்மையான அக்கறை காட்டுவார்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவார்கள்.

பணிவு என்பது பலவீனம் என்று சிலர் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், அது ஒரு பலம். நம்முடைய தவறுகளையும் வரம்புகளையும் புரிந்துகொள்ள அது நமக்கு உதவுகிறது.

பணிவு ஏன் முக்கியம்?

  • நட்பு வட்டம் பெரிதாகும். “பணிவோடு இருப்பவர்களுக்குச் சுலபமாக நண்பர்கள் கிடைப்பார்கள்” என்று சொல்கிறது நார்சிஸம் எப்பிடெமிக் என்ற புத்தகம். “அவர்களால் மற்றவர்களோடு நன்றாகப் பேசிப் பழக முடிகிறது” என்றும் அது சொல்கிறது.

  • பிள்ளையின் எதிர்காலத்துக்குக் கைகொடுக்கும். பணிவோடு இருப்பது இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் உங்கள் பிள்ளைக்குக் கைகொடுக்கும். உதாரணத்துக்கு, ஒரு நல்ல வேலை கிடைக்க அது உதவி செய்யும். “தங்களிடம் குறைகள் இருப்பதையே உணராமல், தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்கிற இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது கஷ்டம். ஆனால், வேலை கொடுப்பவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள நினைக்கிற பணிவான இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சுலபம்” என்று டாக்டர் லெனர்ட் சாக்ஸ் ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.a

பணிவைக் கற்றுக்கொடுப்பது எப்படி?

தன்னையே உயர்வாக நினைக்காமல் இருக்க உதவுங்கள்.

பைபிள் ஆலோசனை: “ஒருவன் முக்கியமானவனாக இல்லாமலிருந்தும் தன்னை முக்கியமானவனாக நினைத்துக்கொண்டால், அவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.”—கலாத்தியர் 6:3.

  • வீண் நம்பிக்கை தராதீர்கள். “நீ ஆசைப்படுறது எல்லாம் நிறைவேறும்,” “நெனச்சத எல்லாம் உன்னால சாதிக்க முடியும்” என்றெல்லாம் சொன்னால், பிள்ளையை உற்சாகப்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அதெல்லாம் நடக்கும் என்று சொல்ல முடியாது. உங்கள் பிள்ளைக்கு நியாயமான லட்சியங்கள் இருக்க வேண்டும், அவற்றை அடைய அவன் கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான், அவனால் வெற்றி பெற முடியும்.

  • குறிப்பாகப் பாராட்டுங்கள். உங்கள் பிள்ளையை எப்போதுமே புகழ்ந்து தள்ளினால் அவனுக்குப் பெருமை வந்துவிடலாம். அதனால், அவன் ஏதாவது நல்ல விஷயம் செய்யும்போது குறிப்பாக அதைச் சொல்லிப் பாராட்டுங்கள்.

  • சோஷியல் மீடியாவை அதிகமாகப் பயன்படுத்த விடாதீர்கள். பொதுவாக, மக்கள் சோஷியல் மீடியா மூலம் தங்களுடைய திறமைகளையும் சாதனைகளையும் பற்றி ஊர் உலகத்துக்கே தம்பட்டம் அடிக்கிறார்கள். அப்படிச் செய்வது பணிவு என்ற குணத்துக்கு நேர்மாறானது.

  • உடனடியாக மன்னிப்புக் கேட்கச் சொல்லிக்கொடுங்கள். உங்கள் பிள்ளை ஏதாவது தப்பு செய்துவிட்டால், அதை உணர்ந்துகொள்ளவும் ஒத்துக்கொள்ளவும் உதவி செய்யுங்கள்.

நன்றியோடு இருக்கக் கற்றுக்கொடுங்கள்.

பைபிள் ஆலோசனை: “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்.”—கொலோசெயர் 3:15.

  • படைப்புகளுக்காக நன்றியோடு இருப்பது. பிள்ளைகள் இயற்கையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் உயிர்வாழ்வதற்கு அது எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சுவாசிப்பதற்குக் காற்றும், குடிப்பதற்குத் தண்ணீரும், சாப்பிடுவதற்கு உணவும் நமக்குக் தேவை என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள். பிறகு, இயற்கையிலுள்ள இதுபோன்ற அதிசயங்களுக்காக நன்றியோடு இருப்பதன் அவசியத்தை அவர்களுடைய மனதில் பதிய வையுங்கள்.

  • மற்றவர்களுக்கு நன்றியோடு இருப்பது. தன்னைவிட மற்றவர்கள் ஏதோவொரு விதத்தில் உயர்ந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். மற்றவர்களுடைய திறமைகளைப் பார்த்துப் பொறாமைப்படுவதற்குப் பதிலாக அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எப்படிக் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுங்கள்.

  • நன்றி சொல்வது. வெறுமனே வாயளவில் நன்றி சொல்லாமல், மனதார நன்றி சொல்ல உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுங்கள். பொதுவாக, நன்றியுணர்வு பணிவோடு நடந்துகொள்ள உதவும்.

மற்றவர்களுக்கு உதவுவது முக்கியம் என்பதைக் கற்றுக்கொடுங்கள்.

பைபிள் ஆலோசனை: “[எல்லாவற்றையும்] மனத்தாழ்மையினால் செய்யுங்கள். மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள். உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலிப்பியர் 2:3, 4.

  • வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லுங்கள். வீட்டில் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் எந்த வேலையையும் கொடுக்காவிட்டால், ‘இதெல்லாம் என்னோட வேலை இல்ல’ என்று பிள்ளை நினைத்துக்கொள்ளலாம். அதனால், வீட்டு வேலைகள்தான் முக்கியம், அதற்கு அடுத்ததுதான் விளையாட்டு என்பதைப் புரிய வையுங்கள். அதுமட்டுமல்ல, அந்த வேலைகள் வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள். அந்த வேலைகளைச் செய்தால் மற்றவர்களுடைய பாராட்டும் மதிப்பும் கிடைக்கும் என்றுகூட புரிய வையுங்கள்.

  • மற்றவர்களுக்கு உதவுவது ஒரு பாக்கியம் என்பதைப் புரிய வையுங்கள். பிள்ளைகள் பக்குவம் அடைவதற்கான ஒரு முக்கிய வழி, மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதுதான். அதனால், யாருக்கெல்லாம் உதவி தேவை என்று உங்கள் பிள்ளையை யோசிக்கச் சொல்லுங்கள். பிறகு, அவர்களுக்கு உதவ அவன் என்ன செய்யலாம் என்று அவனோடு கலந்துபேசுங்கள். அவன் அந்த உதவிகளைச் செய்யும்போது அவனுக்கு ஆதரவு கொடுங்கள், முக்கியமாக அவனைப் பாராட்டுங்கள்.

a புத்தகத்தின் பெயர்: The Collapse of Parenting.

ஒரு பையன் குப்பைத் தொட்டியில் குப்பையைப் போடுகிறான்

இப்போதே பழக்குங்கள்

இப்போதே சின்னச் சின்ன வீட்டு வேலைகளைச் செய்ய பிள்ளை கற்றுக்கொண்டால், வளர்ந்து ஆளான பிறகு மற்றவர்களோடு சேர்ந்து வேலை செய்வது அவனுக்குச் சுலபமாக இருக்கும்

வாழ்ந்து காட்டுங்கள்

  • எனக்குக்கூட சிலசமயங்களில் மற்றவர்களுடைய உதவி தேவை என்பதை என் பிள்ளைக்குப் புரிய வைக்கிறேனா?

  • நான் மற்றவர்களை மெச்சிப் பேசுகிறேனா அல்லது மட்டம்தட்டிப் பேசுகிறேனா?

  • மற்றவர்களுக்கு உதவி செய்வதை நான் முக்கியமாக நினைக்கிறேன் என்பதை என் பிள்ளையால் பார்க்க முடிகிறதா?

எங்கள் அனுபவம் . . .

“ஒருதடவ எங்க பொண்ணு, கூடப்படிக்கிற ஒரு பொண்ண பத்தி எங்ககிட்ட சொன்னா. ‘அந்த பொண்ணு யார் கிட்டயுமே நல்லா பழக மாட்டா, யாருக்குமே அவள பிடிக்காது’ அப்படின்னெல்லாம் சொன்னா. ஒருவேள அந்த பொண்ணுக்கு அவளோட வீட்ல நிறைய பிரச்சினை இருக்கலாம்னு நான் சொன்னேன். எல்லாருக்குமே நல்ல குடும்பம் அமையறது இல்லைங்கறதயும் எடுத்து சொன்னேன். அப்புறம்தான் என் பொண்ணுக்கு புரிஞ்சுது, அந்த பொண்ணவிட இவ எந்த விதத்திலும் ஒசத்தி இல்லன்னு. இவளோட சூழ்நிலை வேணா அந்த பொண்ணோட சூழ்நிலையவிட நல்லா இருக்கலாம்னு புரிஞ்சுகிட்டா.”​—காரன்.

“நாங்க எங்க பொண்ணுங்ககிட்ட, ‘ஸ்கூல்ல நல்லா படிச்சு, உங்களோட பெஸ்ட்டை செய்யணும், ஆனா மத்தவங்களோட உங்கள ஒப்பிட்டு பார்க்க கூடாது’னு சொல்வோம். நாங்ககூட அவங்கள மத்தவங்களோட ஒப்பிட்டு பார்க்க மாட்டோங்கறத புரிய வெச்சோம்.”​—மாரியான்னா.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்