உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w19 செப்டம்பர் பக். 2-7
  • மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனத்தாழ்மை என்றால் என்ன?
  • மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?
  • மனத்தாழ்மையை உரசிப்பார்க்கும் சூழ்நிலைகள்
  • உண்மையான மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • பின்பற்றுவதற்கான மனத்தாழ்மையின் முன்மாதிரிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • தாழ்மையுள்ளோருக்கு யெகோவா தம் மகிமையை வெளிப்படுத்துகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • மனத்தாழ்மையுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
w19 செப்டம்பர் பக். 2-7

படிப்புக் கட்டுரை 35

மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்!

“யெகோவா . . . தாழ்மையானவர்களைக் கண்ணோக்கிப் பார்க்கிறார்.”—சங். 138:6.

பாட்டு 48 யெகோவாவுடன் தினம் நடப்போம்

இந்தக் கட்டுரையில்...a

1. மனத்தாழ்மையோடு இருப்பவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்? விளக்குங்கள்.

மனத்தாழ்மையோடு இருப்பவர்களை யெகோவா நெஞ்சார நேசிக்கிறார். உண்மையிலேயே மனத்தாழ்மையாக இருக்கிறவர்களால் மட்டும்தான் அவரோடு ஒரு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும். ஏனென்றால், “தலைக்கனம் உள்ளவர்களைவிட்டு [அவர்] தூரமாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 138:6) யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்றும் அவருடைய அன்பை ருசிக்க வேண்டும் என்றும் நாம் ஆசைப்படுகிறோம். அப்படியென்றால், மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வது முக்கியம், இல்லையா?

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 இந்தக் கட்டுரையில், மூன்று கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். (1) மனத்தாழ்மை என்றால் என்ன? (2) நாம் ஏன் அந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (3) எந்தெந்த சூழ்நிலைகள் நம் மனத்தாழ்மையை உரசிப்பார்க்கலாம்? இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ளும்போது, யெகோவா சந்தோஷப்படுகிறார்; நாமும் நன்மையடைகிறோம். எப்படி? தொடர்ந்துவரும் பாராக்களில் கவனிக்கலாம்.—நீதி. 27:11; ஏசா. 48:17.

மனத்தாழ்மை என்றால் என்ன?

3. மனத்தாழ்மையுள்ள ஒருவர் எப்படி நடந்துகொள்வார்?

3 மனத்தாழ்மையுள்ள ஒருவர் தன்னை உயர்வாக நினைக்க மாட்டார். பெருமையோ ஆணவமோ அவரிடம் துளிகூட இருக்காது. தன்னைவிட யெகோவாதான் மிக மிக உயர்ந்தவர் என்பதை மனத்தாழ்மையுள்ள ஒருவர் புரிந்துவைத்திருப்பார் என்று பைபிள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, மற்றவர்களோடு இருக்கும் பந்தத்தைப் பற்றி அவர் சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்வார். தன்னைவிட இன்னொருவர் ஏதோவொரு விதத்தில் உயர்ந்தவர் என்பதை ஒத்துக்கொள்வார்.—பிலி. 2:3, 4.

4-5. பார்ப்பதற்கு மனத்தாழ்மையுள்ளவர்களைப் போல் தெரிகிறவர்கள் உண்மையிலேயே மனத்தாழ்மையுள்ளவர்களா? விளக்குங்கள்.

4 சிலர் பார்ப்பதற்கு மனத்தாழ்மையுள்ளவர்களைப் போல் தெரிவார்கள். ஆனால் உண்மையில் அப்படி இருக்க மாட்டார்கள். ஒருவேளை, அவர்கள் கூச்ச சுபாவமுள்ளவர்களாகவோ அமைதியானவர்களாகவோ இருக்கலாம். வளர்க்கப்பட்ட விதம் அல்லது கலாச்சாரத்தின் காரணமாக மற்றவர்களிடம் மரியாதையாகவும் மென்மையாகவும் நடந்துகொள்ளலாம். ஆனால், இதயத்தின் ஆழத்தில் கர்வம் ஒட்டிக்கொண்டிருக்கலாம். என்றாவது ஒருநாள், அவர்களுடைய உண்மையான சுபாவம் வெளியே எட்டிப்பார்க்கலாம்.—லூக். 6:45.

5 அதேசமயத்தில், தன்னம்பிக்கையோடு இருக்கிறவர்களை அல்லது ஒளிவுமறைவில்லாமல் பேசுகிறவர்களை பெருமைபிடித்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. (யோவா. 1:46, 47) ஆனாலும், அப்படிப்பட்டவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ஏனென்றால், அவர்கள் தங்களுடைய திறமைகள்மீதே நம்பிக்கை வைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், நமக்கு எப்படிப்பட்ட சுபாவம் இருந்தாலும் சரி, மனத்தாழ்மையான இதயத்தை வளர்த்துக்கொள்ள கடினமாக உழைக்க வேண்டும்.

ஒரு சகோதரரின் வீட்டில் பவுல் இருக்கிறார். அங்கே இருக்கிற எல்லாரோடும், சின்னப் பிள்ளைகளோடும் சந்தோஷமாகப் பேசிப் பழகுகிறார்

அப்போஸ்தலன் பவுல் மனத்தாழ்மையுள்ளவராக இருந்தார்; தன்னை முக்கியமானவனாக நினைக்கவில்லை (பாரா 6)d

6. ஒன்று கொரிந்தியர் 15:10 காட்டுகிறபடி, அப்போஸ்தலன் பவுலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

6 அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தை இப்போது கவனிக்கலாம். அடுத்தடுத்து பல நகரங்களில் புதிய சபைகளை உருவாக்குவதற்கு யெகோவா அவரைப் பெரிய அளவில் பயன்படுத்தினார். இயேசுவின் மற்ற அப்போஸ்தலர்களைவிட ஊழியத்தில் அவர் நிறைய சாதித்திருக்கலாம். இருந்தாலும், மற்ற சகோதரர்களைவிட தன்னை உயர்வாக அவர் நினைக்கவில்லை. “அப்போஸ்தலர்கள் எல்லாரிலும் நான் அற்பமானவன்; கடவுளுடைய சபையைக் கொடுமைப்படுத்தியதால் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குக்கூட தகுதியில்லாதவன்” என்று மனத்தாழ்மையோடு சொன்னார். (1 கொ. 15:9) கடவுளுடைய அளவற்ற கருணையால்தான் யெகோவாவோடு ஓர் அருமையான பந்தத்தை வைத்துக்கொள்ள முடிந்ததே தவிர, தன்னுடைய குணங்களாலோ தன்னுடைய சாதனைகளாலோ அல்ல என்பதை அவர் ஒத்துக்கொண்டார். (1 கொரிந்தியர் 15:10-ஐ வாசியுங்கள்.) கொரிந்து சபையில் இருந்த சிலர், பவுலைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முயற்சி செய்தபோதும், கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தன்னைப் பற்றி அவர் பெருமையடிக்கவில்லை. எவ்வளவு மனத்தாழ்மை!—2 கொ. 10:10.

கார்ல் க்ளைனும் அவருடைய மனைவி க்ரெட்டிலும்

கார்ல் க்ளைன், ஆளும் குழுவில் சேவை செய்த மனத்தாழ்மையுள்ள சகோதரர் (பாரா 7)

7. முக்கியப் பொறுப்பிலிருந்த ஒரு சகோதரர் எப்படி மனத்தாழ்மையைக் காட்டினார்?

7 ஆளும் குழு அங்கத்தினராக சேவை செய்த சகோதரர் கார்ல் க்ளைனின் வாழ்க்கை சரிதை நிறைய பேரைப் பலப்படுத்தியிருக்கிறது. தன்னுடைய பலவீனங்களைப் பற்றியும் பிரச்சினைகளைப் பற்றியும் அவர் அதில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு, 1922-ல், அவர் முதல் தடவையாக வீட்டுக்கு வீடு ஊழியத்துக்குப் போனபோது ரொம்பவே பயந்துவிட்டாராம். அதனால், கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்கு வீட்டுக்கு வீடு ஊழியத்துக்கே போகவில்லையாம்! பிறகு, பெத்தேலில் சேவை செய்தபோது நடந்த ஒரு விஷயத்தையும் அவர் சொல்லியிருந்தார். ஒரு சகோதரர், அவருக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார். அதனால், அந்தச் சகோதரர்மேல் கொஞ்ச நாளுக்கு அவர் கோபமாக இருந்திருக்கிறார். அதோடு அவருக்கு இன்னொரு பிரச்சினையும் இருந்தது. அதாவது, நரம்புத் தளர்ச்சியால் அவர் அவதிப்பட்டார். ஆனால் கொஞ்சக் காலத்தில் அது சரியாகிவிட்டது. இந்தச் சூழ்நிலைகளின் மத்தியிலும் பல முக்கியமான பொறுப்புகளைச் செய்துவந்தார். அவருக்கு எவ்வளவு மனத்தாழ்மை இருந்திருந்தால், தன்னுடைய பலவீனங்களை இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லியிருப்பார்! சகோதர சகோதரிகள் நிறைய பேரின் மனதில் அவர் இடம் பிடித்திருக்கிறார். ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லப்பட்ட அவருடைய வாழ்க்கை சரிதையும் நிறைய பேருடைய மனதில் இடம் பிடித்திருக்கிறது.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?

8. மனத்தாழ்மையுள்ள ஒரு நபர் யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவார் என்பதை 1 பேதுரு 5:6 எப்படிக் காட்டுகிறது?

8 நாம் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதற்கான முக்கியக் காரணமே, அது யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதுதான்! அப்போஸ்தலன் பேதுருவும் அதைத் தெளிவுபடுத்தினார். (1 பேதுரு 5:6-ஐ வாசியுங்கள்.) பேதுரு சொன்ன வார்த்தைகளைப் பற்றி, “என்னைப் பின்பற்றி வா” என்ற புத்தகம் இப்படிச் சொன்னது: “கர்வம் விஷம் போன்றது. அதன் விளைவுகள் படுநாசகரமாய் இருக்கும். ஒருவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் சரி, அவரிடம் கர்வம் இருந்தால் கடவுளுக்குமுன் அவர் ஒன்றுக்கும் உதவாதவர் போல் இருப்பார். ஆனால், ஒருவருக்கு மனத்தாழ்மை இருந்தால் அவரிடம் எந்தத் திறமையும் இல்லையென்றாலும் யெகோவாவுக்கு அதிக பிரயோஜனமுள்ளவராக இருப்பார். . . . நீங்கள் மனத்தாழ்மை காட்டும்போது உங்களுக்கும் யெகோவா பலனளிப்பார்.”c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) யெகோவாவின் இதயத்தைச் சந்தோஷப்படுத்துவதைவிட வேறு ஏதாவது முக்கியமாக இருக்க முடியுமா?—நீதி. 23:15.

9. மனத்தாழ்மை எப்படி மற்றவர்களை நம்மிடமாகச் சுண்டியிழுக்கிறது?

9 மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளும்போது, யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவது மட்டுமல்ல நமக்கும் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. நாம் மனத்தாழ்மையோடு இருந்தால், நம்மோடு நெருங்கிய நட்பை வைத்துக்கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் விரும்புவார்கள். மனத்தாழ்மையாக இருக்கிறவர்களோடு நட்பு வைத்துக்கொள்ளத்தானே நாமும் விரும்புவோம்! (மத். 7:12) ‘எனக்கு பிடிச்ச மாதிரிதான் மத்தவங்க நடந்துக்கணும். நான் என்ன செய்யணும்னு யாரும் எனக்கு சொல்ல தேவையில்ல’ என்று நினைப்பவர்களோடு பழக நாம் விரும்புவோமா? “அனுதாபத்தையும் சகோதரப் பாசத்தையும் கரிசனையையும் மனத்தாழ்மையையும்” காட்டுகிற சகோதர சகோதரிகளோடு பழகுவதைத்தான் நாம் விரும்புவோம். (1 பே. 3:8) நாம் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளும்வரை, இப்படிப்பட்டவர்களும் நம்மோடு நட்பு வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.

10. மனத்தாழ்மையாக இருந்தால் வாழ்க்கையை ஓட்டுவது சுலபம் என்று ஏன் சொல்லலாம்?

10 நமக்கு மனத்தாழ்மை இருந்தால், நாம் நினைப்பதுபோல்தான் எல்லாமே நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டோம். வாழ்க்கையை உள்ளபடி ஏற்றுக்கொள்வோம். அப்போது வாழ்க்கையை நடத்துவது சுலபமாக இருக்கும். ஏனென்றால், சிலசமயங்களில் அநியாயமும் அக்கிரமமும் நம் கண்ணில் படலாம். “வேலைக்காரர்கள் குதிரைமேல் உட்கார்ந்து போவதையும், இளவரசர்கள் வேலைக்காரர்களைப் போல் நடந்துபோவதையும் பார்த்தேன்” என்று ஞானியான சாலொமோன் ராஜா சொன்னார். (பிர. 10:7) திறமைசாலிகளுக்கு எல்லா சமயத்திலும் மதிப்பு கிடைப்பதில்லை. ஆனால், அவ்வளவாகத் திறமை இல்லாதவர்களுக்குச் சிலசமயங்களில் அதிக மதிப்பு கிடைக்கிறது. இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்காமல், வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதுதான் ஞானமானது என்று சாலொமோன் சொன்னார்.—பிர. 6:9

மனத்தாழ்மையை உரசிப்பார்க்கும் சூழ்நிலைகள்

இளம் சகோதரர் கொடுக்கும் ஆலோசனையை வயதான சகோதரர் ஒருவர் காதுகொடுத்து கேட்கிறார்

இதுபோன்ற சூழ்நிலைகள் நம் மனத்தாழ்மையை எப்படி உரசிப்பார்க்கலாம்? (பாராக்கள் 11-12)e

11. யாராவது ஆலோசனை கொடுத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

11 மனத்தாழ்மையைக் காட்டுவதற்கு ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கின்றன. சில சூழ்நிலைகளை இப்போது பார்க்கலாம். முதலாவது, யாராவது நமக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, நமக்கு மனத்தாழ்மை தேவை. நேரம் எடுத்து ஒருவர் நமக்கு ஆலோசனை கொடுக்கிறார் என்றால், நாம் நினைப்பதைவிட மோசமான ஒரு தவறைச் செய்திருக்கிறோம் என்றுதானே அர்த்தம்! அப்படிக் கொடுக்கப்படுகிற ஆலோசனைகளை ஒதுக்கித்தள்ள வேண்டும் என்ற எண்ணம் முதலில் நமக்கு வரலாம். ‘அவர் மட்டும் ஒழுங்கா’ என்று நாம் நினைக்கலாம். அல்லது, ‘அவர் சொன்ன விதம் சரியில்ல’ என்று அவரைக் குறை சொல்லலாம். ஆனால், மனத்தாழ்மை இருந்தால் நாம் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வோம்.

12. நீதிமொழிகள் 27:5, 6-ன்படி, ஆலோசனை கொடுப்பவருக்கு நாம் ஏன் நன்றியோடு இருக்க வேண்டும்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

12 மனத்தாழ்மையுள்ள ஒருவர், ஆலோசனைகளை நன்றியோடு ஏற்றுக்கொள்வார். இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். கூட்டம் முடிந்த பிறகு, நீங்கள் எல்லாரிடமும் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு சகோதரர், உங்களைத் தனியாகக் கூட்டிக்கொண்டுபோய், ‘உங்க பல்லுல ஏதோ ஒட்டிட்டு இருக்கு’ என்று சொல்கிறார். அப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? சங்கடமாகத்தான் இருக்கும்! ஆனால், அவர் அப்படிச் சொன்னதற்காக நீங்கள் அவருக்கு நன்றியோடு இருப்பீர்கள், இல்லையா? ‘முன்னாடியே யாராவது சொல்லியிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்’ என்று நீங்கள் நினைப்பீர்கள். யாராவது நமக்கு ஆலோசனை கொடுக்கும்போது, மனத்தாழ்மையோடும் நன்றியோடும் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆலோசனை கொடுப்பவரை ஓர் எதிரியைப் போல் நாம் பார்க்க மாட்டோம்; நம்முடைய நண்பனாகத்தான் பார்ப்போம்.—நீதிமொழிகள் 27:5, 6-ஐ வாசியுங்கள்; கலா. 4:16

கூட்டத்தை ஓர் இளம் சகோதரர் நடத்துகிறார். வயதான ஒரு சகோதரரும் அவருடைய மனைவியும் அவர் சொல்வதைக் கேட்கிறார்கள்

மற்றவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும்போது, மனத்தாழ்மை என்ற குணம் நமக்கு ஏன் தேவை? (பாராக்கள் 13-14)f

13. மற்றவர்களுக்குப் பொறுப்புகள் கிடைக்கும்போது நாம் எப்படி மனத்தாழ்மையைக் காட்டலாம்?

13 இப்போது, இரண்டாவது சூழ்நிலைக்கு வரலாம். மற்றவர்களுக்குப் பொறுப்புகள் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? “மத்தவங்களுக்கு பொறுப்பு கிடைக்கிறப்போ, எனக்கு ஏன் அந்த பொறுப்பு கிடைக்கலனு நான் சில நேரத்துல யோசிச்சிருக்கேன்” என்று ஜேசன் என்ற மூப்பர் சொல்கிறார். நீங்களும் அவரைப் போலவே யோசித்திருக்கிறீர்களா? பொறுப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு ‘முயற்சி செய்வதில்’ எந்தத் தவறும் இல்லை! (1 தீ. 3:1) ஆனால், நாம் என்ன யோசிக்கிறோம் என்பதற்கு எப்போதுமே கவனம் செலுத்த வேண்டும். நாம் ஜாக்கிரதையாக இல்லை என்றால், பெருமை என்ற குணம் நம் இதயத்தில் வேர்விட ஆரம்பித்துவிடும். அப்படி மட்டும் நடந்துவிட்டால், ‘இந்த பொறுப்ப செய்றதுக்கு நான்தான் சரியான ஆளு’ என்று நாம் நினைக்க ஆரம்பித்துவிடலாம். அல்லது ஒரு சகோதரருடைய மனைவி, ‘அவரவிட என்னோட வீட்டுக்காரராலதான் இத நல்லா செய்ய முடியும்’ என்று நினைக்க ஆரம்பித்துவிடலாம். நமக்கு மனத்தாழ்மை இருந்தால், இப்படியெல்லாம் நினைக்க மாட்டோம்.

14. மற்றவர்களுக்குப் பொறுப்புகள் கிடைத்தபோது மோசே என்ன செய்தார், அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 மற்றவர்களுக்குப் பொறுப்புகள் கிடைத்தபோது மோசே எப்படி நடந்துகொண்டார் என்றும், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்க்கலாம். இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்திக்கொண்டு போவதை மோசே ஒரு பாக்கியமாக நினைத்தார். ஆனால், அவரோடு சேர்ந்து வேலை செய்ய யெகோவா மற்றவர்களைப் பயன்படுத்தியபோது, மோசே என்ன செய்தார்? அவர் வயிற்றெரிச்சல்படவில்லை! (எண். 11:24-29) மக்களுக்குத் தீர்ப்பு சொல்கிற விஷயத்தில், மற்றவர்களின் உதவியை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். (யாத். 18:13-24) இதனால் இஸ்ரவேலர்கள் பிரயோஜனமடைந்தார்கள். எப்படி? தீர்ப்பு சொல்ல நிறைய பேர் இருந்ததால், நீதிக்காக அவர்கள் ரொம்ப நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தன்னுடைய கௌரவத்தைவிட மற்றவர்களின் நலனைத்தான் மோசே முதலிடத்தில் வைத்தார். இப்படி, அவர் நமக்கு அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார். யெகோவாவுக்குப் பிரயோஜனமானவர்களாக இருப்பதற்கு, திறமையானவர்களாக இருப்பதைவிட தாழ்மையானவர்களாக இருப்பதுதான் முக்கியம்! “யெகோவா மிகவும் உயர்ந்தவராக இருந்தாலும், தாழ்மையானவர்களைக் கண்ணோக்கிப் பார்க்கிறார்.”—சங். 138:6.

15. நிறைய பேருடைய நியமிப்பு எப்படி மாறியிருக்கிறது?

15 இப்போது, மூன்றாவது விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம். நம்முடைய சூழ்நிலைகள் மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நாம் எப்படி நடந்துகொள்வோம்? பல வருஷங்கள் அனுபவமுள்ள சகோதர சகோதரிகளின் நியமிப்புகள் சமீப காலங்களில் மாற்றப்பட்டிருக்கின்றன. இதோ, சில உதாரணங்கள்: 2014-லிருந்து, மாவட்டக் கண்காணி என்ற பொறுப்பு இல்லாமல் போனது. அதனால், அந்தப் பொறுப்பில் இருந்தவர்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் வேறு நியமிப்புகள் கொடுக்கப்பட்டன. அதே வருஷத்தில், 70 வயதை எட்டிய வட்டாரக் கண்காணிகள் தங்களுடைய சேவையைத் தொடர முடியாது என்று சொல்லப்பட்டது. 80 வயதை எட்டிய அல்லது அந்த வயதையும் தாண்டிய சகோதரர்கள், மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சேவை செய்ய முடியாது என்றும் சொல்லப்பட்டது. அதோடு, கடந்த சில வருஷங்களாகவே, பெத்தேல் சேவை செய்துகொண்டிருந்த நிறைய பேர் பயனியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலருக்கு, உடல்நலப் பிரச்சினைகள், குடும்பப் பொறுப்புகள், தனிப்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றால் விசேஷ முழுநேர சேவையை விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

16. மாற்றங்களை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டதை சகோதர சகோதரிகள் எப்படிக் காட்டியிருக்கிறார்கள்?

16 இப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்வது சகோதர சகோதரிகளுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், முன்பு செய்துவந்த நியமிப்போடு அவர்கள் ஒன்றிப்போய்விடுகிறார்கள். அதுவும், பல வருஷங்களாகச் செய்துவந்த நியமிப்பை விட்டுப்போவது நிறைய பேருக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களில் சிலர், துக்கத்தில் மூழ்கிவிடுகிறார்கள். ஆனால் காலப்போக்கில், புதிய மாற்றத்துக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது? எல்லாவற்றையும்விட யெகோவாவைத்தான் அவர்கள் ரொம்ப நேசிக்கிறார்கள். அவருக்குத்தான் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்களே தவிர, எந்தவொரு நியமிப்புக்கோ பொறுப்புக்கோ அல்ல என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். (கொலோ. 3:23) எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சரி, மனத்தாழ்மையோடு யெகோவாவுக்குச் சேவை செய்வதை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். தங்கள்மேல் கடவுளுக்கு அக்கறை இருப்பதைப் புரிந்துகொண்டு, ‘கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுகிறார்கள்.’—1 பே. 5:6, 7.

17. மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளும்படி பைபிள் நம்மைக் கேட்டுக்கொள்வதற்காக நாம் ஏன் நன்றியோடு இருக்கிறோம்?

17 மனத்தாழ்மை என்பது ஓர் அருமையான குணம்! இதை வளர்த்துக்கொள்ளும்போது, நமக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி பிரயோஜனமாக இருக்கும். வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்க இந்தக் குணம் உதவுகிறது. எல்லாவற்றையும்விட, நம் பரலோகத் தந்தையிடம் நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ள உதவுகிறது. அப்படியென்றால், இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ளும்படி பைபிள் நம்மைக் கேட்டுக்கொள்வதற்காக, நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம், இல்லையா? ‘மேலே பரிசுத்தமான இடத்தில் குடியிருந்தாலும்’ தன்னுடைய தாழ்மையான ஊழியர்களை யெகோவா நேசிக்கிறார் என்பதையும் மதிக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ளும்போது, நாம் எவ்வளவு பூரித்துப்போகிறோம்!—ஏசா. 57:15.

உங்கள் பதில் என்ன?

  • மனத்தாழ்மை என்றால் என்ன?

  • நாம் ஏன் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

  • எப்படிப்பட்ட சூழ்நிலைகள் நம் மனத்தாழ்மையை உரசிப்பார்க்கலாம்?

பாட்டு 57 என் இதயத்தின் தியானம்

a மனத்தாழ்மை! நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான குணம்! அப்படியானால், மனத்தாழ்மை என்றால் என்ன? அதை ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்? இந்தக் குணத்தைக் காட்டுவது சிலசமயங்களில் ஏன் கஷ்டமாக இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

b அக்டோபர் 1, 1984 ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த “யெகோவா என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்தார்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

c அதிகாரம் 3, பாரா 23-ஐப் பாருங்கள்.

d படங்களின் விளக்கம்: ஒரு சகோதரரின் வீட்டில் பவுல் இருக்கிறார். அங்கே இருக்கிற எல்லாரோடும், சின்னப் பிள்ளைகளோடும் சந்தோஷமாகப் பேசிப் பழகுகிறார். இப்படி, மனத்தாழ்மையைக் காட்டுகிறார்.

e படங்களின் விளக்கம்: இளம் சகோதரர் கொடுக்கும் ஆலோசனையை வயதான சகோதரர் ஒருவர் ஏற்றுக்கொள்கிறார்.

f படங்களின் விளக்கம்: சபையில் பொறுப்புகளைக் கையாளும் ஓர் இளம் சகோதரரைப் பார்த்து வயதான சகோதரர் வயிற்றெரிச்சல்படுவதில்லை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்