தாழ்மையுள்ளோருக்கு யெகோவா தம் மகிமையை வெளிப்படுத்துகிறார்
“தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.”—நீதிமொழிகள் 22:4.
1, 2. (அ) ஸ்தேவான் ‘விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவராய்’ இருந்தார் என அப்போஸ்தலர் புத்தகம் எப்படி காட்டுகிறது? (ஆ) ஸ்தேவான் தாழ்மையுள்ளவராய் இருந்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?
ஸ்தேவான், “விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்த” ஒரு மனிதர். “கிருபையும் வல்லமையும் நிறைந்த”வராகவும் திகழ்ந்தார். இயேசுவின் ஆரம்பகால சீஷர்களில் ஒருவராக அவர் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். ஒரு சந்தர்ப்பத்தில், அவருக்கு விரோதமாக சிலர் எழும்பி தர்க்கம் பண்ணினார்கள்; ஆனாலும், “அவர் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.” (அப்போஸ்தலர் 6:5, 8-10) ஆம், கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாக படிக்கும் ஒருவராக ஸ்தேவான் விளங்கினார்; தன் நாளில் இருந்த யூத மதத் தலைவர்களிடம் கடவுளுடைய வார்த்தையை ஆதரித்து திறம்படவும் பேசினார். அவர் கொடுத்த விளக்கமான பிரசங்கம் அப்போஸ்தலர் 7-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடவுளுடைய நோக்கம் வெளிப்படுத்தப்படுவதில் அவருக்கு இருந்த தீவிர ஆர்வத்தை இப்பதிவு நிரூபிக்கிறது.
2 அவர் காலத்திலிருந்த மதத் தலைவர்கள், சாதாரண மக்களைவிட தங்களை உயர்வானவர்களாக நினைத்தனர்; அவர்களது அந்தஸ்தும் அறிவுமே அவ்வாறு உணரச் செய்தது. ஆனால் ஸ்தேவான் அந்த மதத் தலைவர்களைப் போல் அல்லாமல் தாழ்மையுள்ளவராய் இருந்தார். (மத்தேயு 23:2-7; யோவான் 7:49) அவர் வேதவாக்கியங்களை நன்கு அறிந்தவராக இருந்த போதிலும் அன்றாட “பந்தி விசாரணை,” அதாவது பந்தியில் பரிமாறும் நியமிப்பை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். “ஜெபம் பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும்” அப்போஸ்தலர்கள் ஈடுபடுவதற்காக அந்த வேலையை அவர் ஏற்றுக்கொண்டார். சகோதரர் மத்தியில் ஸ்தேவான் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்; ஆகவேதான் தினமும் உணவு பகிர்ந்தளிக்கப்படும் இந்தப் பந்தி விசாரணைக்காக, நற்சாட்சி பெற்ற ஏழு பேரில் இவரும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வேலையை அவர் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார்.—அப்போஸ்தலர் 6:1-6.
3. கடவுளுடைய தகுதியற்ற தயவை மிகச் சிறந்த விதத்தில் ஸ்தேவான் அனுபவித்தது எப்படி?
3 ஸ்தேவானுடைய பணிவையும், ஆவிக்குரிய தன்மையையும் உத்தமத்தன்மையையும் யெகோவா கண்டும் காணாமல் விட்டுவிடவில்லை. நியாயசங்கத்தில் திரண்டிருந்த விரோதிகளான யூத தலைவர்களுக்கு ஸ்தேவான் சாட்சி கொடுத்தபோது, ‘அவருடைய முகம் தேவதூதன் முகம் போலிருப்பதை’ அவர்கள் கண்டார்கள். (அப்போஸ்தலர் 6:15) மகிமை பொருந்திய கடவுளான யெகோவா அருளிய சமாதானத்தினால் அவருடைய முகம் தேவதூதனின் முகம் போல பிரகாசித்தது. நியாயசங்க உறுப்பினர்களிடம் தைரியமாக சாட்சி கொடுத்த பின்னர், கடவுளுடைய தகுதியற்ற தயவை மிகச் சிறந்த விதத்தில் ஸ்தேவான் அனுபவித்தார். ‘அவர் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டார்.’ (அப்போஸ்தலர் 7:55) பிரமிப்பூட்டும் இந்தக் காட்சி இயேசுவின் ஸ்தானத்தை, அதாவது அவர் கடவுளுடைய குமாரன், மேசியா என்பதை ஸ்தேவானுக்கு மீண்டும் உறுதிப்படுத்தியது. மனத்தாழ்மையுள்ள ஸ்தேவானை இக்காட்சி பலப்படுத்தியது, அதோடு யெகோவாவின் தயவு இருக்கிறது என்ற நம்பிக்கையையும் அவருக்கு அளித்தது.
4. யெகோவா யாருக்கு தம் மகிமையை வெளிப்படுத்துகிறார்?
4 யெகோவா, தாழ்மையுள்ளோருக்கும் தம்மோடுள்ள உறவை போற்றும் தெய்வ பயமுள்ளோருக்கும் தமது மகிமையையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறார் என்பதை ஸ்தேவானுக்கு காண்பிக்கப்பட்ட தரிசனம் தெளிவுபடுத்துகிறது. “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” என பைபிள் கூறுகிறது. (நீதிமொழிகள் 22:4) ஆகவே, உண்மையான மனத்தாழ்மை என்றால் என்ன, இந்த முக்கியமான பண்பை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம், வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் இப்பண்பைக் காட்டுவதால் நாம் எப்படி பயன்பெறலாம் ஆகிய விஷயங்களை அறிந்துகொள்வது முக்கியமானது.
மனத்தாழ்மை—ஒரு தெய்வீக பண்பு
5, 6. (அ) மனத்தாழ்மை என்றால் என்ன? (ஆ) மனத்தாழ்மையை யெகோவா எப்படி காட்டியிருக்கிறார்? (இ) யெகோவாவின் மனத்தாழ்மை நம்மை எப்படி பாதிக்க வேண்டும்?
5 இப்பிரபஞ்சத்திலேயே மிகப் பெரியவரும் மகிமை பொருந்தியவருமான யெகோவா தேவன் மனத்தாழ்மைக்கு மிகச் சிறந்த முன்மாதிரி என்பதை அறிவது சிலரை வியப்பில் ஆழ்த்தலாம். யெகோவாவிடம் தாவீது ராஜா இவ்வாறு சொன்னார்: “உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் [“மனத்தாழ்மை,” NW] என்னைப் பெரியவனாக்கும்.” (சங்கீதம் 18:35) யெகோவாவை மனத்தாழ்மையுள்ளவர் என விவரிக்கையில், தாவீது பயன்படுத்தின எபிரெய வேர்ச்சொல்லின் அர்த்தம் “தாழக் குனிதல்” என்பதாகும். “பணிவு,” “சாந்தம்,” “கீழ்நிலையில் உள்ளவர்களிடம் தாழ்ந்து போதல்” ஆகியவையும் இந்த வேர்ச்சொல்லோடு சம்பந்தப்பட்டவையே. ஆகவே, அபூரண மனிதனான தாவீதிடம் தொடர்பு கொள்வதற்காக யெகோவா தம்மைத் தாழ்த்தி, தம்மை பிரதிநிதித்துவம் செய்யும் ராஜாவாக அவரை பயன்படுத்தியதன் மூலம் மனத்தாழ்மையைக் காட்டினார். 18-ம் சங்கீதத்தின் தலைப்பு காட்டுகிறபடி, “எல்லாச் சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி” விடுவித்ததன் மூலம் தாவீதை யெகோவா பாதுகாத்து ஆதரித்தார். ஒரு ராஜாவாக தனக்கு கிடைத்த எந்த மேன்மைக்கும், மகிமைக்கும் காரணம் யெகோவா தாழ்மையோடு தன் சார்பாக செயல்பட்டதே என்பதை தாவீதும் அறிந்திருந்தார். இது தாழ்மையோடு நிலைத்திருக்க அவருக்கு உதவியது.
6 நம்மைப் பற்றி என்ன? சத்தியத்தைப் போதிப்பதற்காக யெகோவா நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்; மேலும், தம்முடைய அமைப்பு மூலம் சில விசேஷ ஊழிய சிலாக்கியங்களை அவர் நமக்கு அளித்திருக்கலாம், அல்லது தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற ஏதாவதொரு வழியில் நம்மை பயன்படுத்தியிருக்கலாம். இவை எல்லாவற்றையும் குறித்து நாம் எப்படி உணர வேண்டும்? நம்மையே தாழ்த்திக்கொள்ள வேண்டுமல்லவா? யெகோவாவின் மனத்தாழ்மைக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்து, நிச்சயமாக அழிவுக்கு வழிநடத்தும் மேட்டிமையை நாம் தவிர்க்க வேண்டுமல்லவா?—நீதிமொழிகள் 16:18; 29:23.
7, 8. (அ) மனாசேயிடம் யெகோவா எப்படி மனத்தாழ்மையை வெளிக்காட்டினார்? (ஆ) மனத்தாழ்மை காட்டுவதில் யெகோவாவும் மனாசேயும் எவ்வழிகளில் நமக்கு முன்மாதிரி வைக்கிறார்கள்?
7 அபூரண மனிதரோடு தொடர்புகொள்வதன் மூலம் யெகோவா மிகுந்த மனத்தாழ்மை காண்பிப்பது மட்டுமல்ல, எளியவருக்கு இரக்கம் காட்டவும், தங்களை தாழ்த்துகிறவர்களை தூக்கிவிடவும், அதாவது உயர்த்தவும்கூட மனமுள்ளவராய் இருப்பதை காண்பித்திருக்கிறார். (சங்கீதம் 113:4-7) உதாரணத்திற்கு யூதாவின் ராஜாவாகிய மனாசேயை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தன்னுடைய மதிப்புமிக்க ஸ்தானத்தை துஷ்பிரயோகம் செய்தார்; பொய் வணக்கத்தை ஆதரித்து, ‘கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தார்.’ (2 நாளாகமம் 33:6) இறுதியில், அரச பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கு அசீரிய ராஜாவை யெகோவா அனுமதிப்பதன் மூலம் அவரை தண்டித்தார். சிறையில் மனாசே ‘தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன்னை மிகவும் தாழ்த்தினார்.’ இதனால், யெகோவா அவரை எருசலேமிலே மீண்டும் சிங்காசனத்தில் அமர்த்தினார்; ‘யெகோவாவே தேவன் என்று மனாசே அறிந்து கொண்டார்.’ (2 நாளாகமம் 33:11-13) ஆம், முடிவில் மனாசே தன்னை தாழ்த்தியது யெகோவாவின் மனதை குளிர்வித்தது. இதனால் யெகோவாவும் மனத்தாழ்மையோடு அவரை மன்னித்து, மீண்டும் ராஜாவாக அமர்த்தினார்.
8 மன்னிப்பதற்கு யெகோவா மனமுள்ளவராய் இருந்ததும், மனாசே மனந்திரும்பியதும் மனத்தாழ்மையைக் குறித்த முக்கிய பாடங்களை நமக்கு கற்பிக்கின்றன. நம்மைப் புண்படுத்தியவரிடம் நாம் நடந்துகொள்கிற விதமும், நாம் பாவம் செய்யும்போது காட்டுகிற மனப்பான்மையும் நம்மோடு யெகோவா தொடர்பு கொள்ளும் விதத்தை பாதிக்கலாம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். பிறருடைய குற்றங்களை மனப்பூர்வமாக மன்னிக்கும்போதும் நம்முடைய தவறுகளை தாழ்மையோடு ஒத்துக்கொள்ளும்போதும் யெகோவாவிடமிருந்து நாம் இரக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.—மத்தேயு 5:23, 24; 6:12.
தாழ்மையுள்ளோரிடம் கடவுளின் மகிமை வெளிப்படுகிறது
9. மனத்தாழ்மை பலவீனத்திற்கு அடையாளமா? விளக்கவும்.
9 ஆனால், மனத்தாழ்மையையும் அதனுடன் சம்பந்தப்பட்ட பண்புகளையும் பலவீனத்திற்கு அடையாளமாகவோ தவறை பொருட்படுத்தாமல் விட்டுவிடும் ஒரு மனப்பான்மையாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. பரிசுத்த வேதாகமம் காட்டுகிறபடி, யெகோவா மனத்தாழ்மையுள்ளவராக இருந்தாலும் தேவைப்படும் சமயங்களில் நியாயமான விதத்தில் கோபத்தையும் பிரமிப்பூட்டும் அளவில் வல்லமையையும் காட்டுகிறார். தம்முடைய மனத்தாழ்மையின் காரணமாக, தாழ்மையுள்ளவர்கள் மீது தயவு காட்டுகிறார், விசேஷ கவனம் செலுத்துகிறார். ஆனால் மேட்டிமையானவர்களை விட்டு அவர் விலகிச் செல்கிறார். (சங்கீதம் 138:6) தமது தாழ்மையுள்ள ஊழியர்களிடம் யெகோவா எப்படி விசேஷ கவனம் செலுத்தியிருக்கிறார்?
10. 1 கொரிந்தியர் 2:6-10-ல் குறிப்பிட்டுள்ளபடி தாழ்மையுள்ளோருக்கு யெகோவா எதை வெளிப்படுத்துகிறார்?
10 யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்றுவது பற்றிய விவரங்களை தாழ்மையுள்ளோருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்; இதை தம்முடைய உரிய காலத்திலும், தாம் தொடர்பு கொள்வதற்காக ஏற்படுத்தியுள்ள வழியின் மூலமும் செய்திருக்கிறார். மனித ஞானத்தையோ சிந்தையையோ பெருமையுடன் நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு, விடாப்பிடியாய் அதையே பின்பற்றுபவர்களுக்கு இந்த மகத்தான விஷயங்களை அவர் வெளிப்படுத்தவில்லை. (1 கொரிந்தியர் 2:6-10) தாழ்மையுள்ளவர்களுக்கோ யெகோவாவின் நோக்கத்தைப் பற்றிய திருத்தமான புரிந்துகொள்ளுதல் அருளப்பட்டிருப்பதால் அவர்கள் யெகோவாவை மகிமைப்படுத்த தூண்டப்படுகிறார்கள். அவருடைய பிரமிப்பூட்டும் மகிமையை அவர்கள் அதிகமதிகமாக போற்றுவதே அதற்குக் காரணம்.
11. முதல் நூற்றாண்டில் சிலர் தங்களுக்கு மனத்தாழ்மை இல்லாததை எப்படி காட்டினார்கள், அது அவர்களுக்கு எப்படி கேடு விளைவித்தது?
11 முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டவர்கள் உட்பட பலர் மனத்தாழ்மையைக் காட்டவில்லை; அதுமட்டுமல்ல, கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் வெளிப்படுத்திய காரியங்களைக் கேட்டு அவர்கள் இடறலும் அடைந்தனர். பவுல், ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக’ ஆனார்; தேசம், கல்வி, வயது, நற்கிரியைகளில் நீண்ட கால அனுபவம் ஆகிய அம்சங்களால் அவர் அந்த தகுதியைப் பெறவில்லை. (ரோமர் 11:13, 14) யெகோவாவால் பயன்படுத்தப்படும் ஓர் ஊழியருக்கு இந்த அம்சங்களெல்லாம் தேவை என மாம்ச சிந்தையுள்ளவர்களே பெரும்பாலும் கருதுகிறார்கள். (1 கொரிந்தியர் 1:26-29; 3:1; கொலோசெயர் 2:19) ஆனால் பவுலோ யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; அவரது கிருபையாகிய அன்புள்ள தயவுக்கும் நீதியான நோக்கத்திற்கும் இசைவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். (1 கொரிந்தியர் 15:8-10) ‘பிரதான அப்போஸ்தலர்கள்’ என பவுலால் குறிப்பிடப்பட்டவர்களும் மற்ற எதிரிகளும், அவரையும் வேதவசனங்களிலிருந்து அவர் எடுத்துக்காட்டிய நியாயங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு மனத்தாழ்மை இல்லாததால் யெகோவாவின் நோக்கம் மகத்தான விதத்தில் நிறைவேறுவதைப் பற்றிய அறிவும் புரிந்துகொள்ளுதலும் கிடைக்காமல் போனது. ஆகவே, தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக யெகோவா தேர்ந்தெடுத்திருப்போரை நாம் ஒருபோதும் துச்சமாகவோ முன்கூட்டியே தவறாகவோ எடை போடாதிருப்போமாக.—2 கொரிந்தியர் 11:4-6.
12. தாழ்மையுள்ளோரை யெகோவா ஆதரிக்கிறார் என்பதை மோசேயின் உதாரணம் எப்படி காட்டுகிறது?
12 மறுபட்சத்தில், மனத்தாழ்மையுள்ளோர் எவ்வாறு கடவுளுடைய மகிமையைக் காணும் பாக்கியத்தைப் பெற்றனர் என்பதை சிறப்பித்துக்காட்டும் அநேக பைபிள் உதாரணங்களும் இருக்கின்றன. “சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்த” மோசே கடவுளுடைய மகிமையைக் கண்டார், அவரோடு அன்யோன்யத்தையும் அனுபவித்தார். (எண்ணாகமம் 12:3) 40 ஆண்டுகளாக பெரும்பாலும் அரேபிய தீபகற்பத்தில் ஒரு சாதாரண மேய்ப்பனாக இருந்த தாழ்மையுள்ள இவர், பல வழிகளில் படைப்பாளரின் தயவை மிகுதியாக பெற்றார். (யாத்திராகமம் 6:12, 30) மோசே யெகோவாவின் ஆதரவோடு, அவர் சார்பாக பேசுபவராகவும் இஸ்ரவேல் ஜனத்தின் பிரதான ஒழுங்கமைப்பாளராகவும் ஆனார். கடவுளுக்கும் அவருக்கும் இடையே பரஸ்பர பேச்சுத்தொடர்பு இருந்தது. ஒரு தரிசனத்தின் வாயிலாக ‘யெகோவாவின் சாயலை’ காணும் பாக்கியம் பெற்றார். (எண்ணாகமம் 12:7, 8; யாத்திராகமம் 24:10, 11) தாழ்மையுள்ள ஊழியராகவும் கடவுளுடைய பிரதிநிதியாகவும் இருந்த இவரை ஏற்றுக்கொண்டவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டனர். அவ்வாறே, மோசேயைக் காட்டிலும் பெரிய தீர்க்கதரிசியான இயேசுவையும் அவரால் நியமிக்கப்பட்ட ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையையும்’ ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நாமும் ஆசீர்வதிக்கப்படுவோம்.—மத்தேயு 24:45, 46, NW; அப்போஸ்தலர் 3:22.
13. முதல் நூற்றாண்டில் தாழ்மையுள்ள மேய்ப்பர்களுக்கு யெகோவாவின் மகிமை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டது?
13 தேவதூதன் மூலமாக ‘கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகரின்’ பிறப்பு பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட்டபோது யாரிடத்தில் ‘யெகோவாவின் மகிமை பிரகாசித்தது’? ஆணவமிக்க மதத் தலைவர்களிடத்திலோ உயர்ந்த அந்தஸ்திலிருந்த பெரும் புள்ளிகளிடத்திலோ அல்ல, ஆனால் “வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த” மேய்ப்பர்களிடத்திலே யெகோவாவின் மகிமை பிரகாசித்தது. (லூக்கா 2:8-11) தகுதிகள் மற்றும் வேலையின் நிமித்தம் உயர்வாக கருதப்பட்டவர்கள் அல்ல இவர்கள். இருந்தாலும், இவர்களையே யெகோவா கவனித்தார்; இவர்களுக்கே மேசியாவின் பிறப்பைப் பற்றி முதலில் தெரிவிக்க விரும்பினார். ஆம், தாழ்மையும் தேவபயமும் உள்ளவர்களுக்கே யெகோவா தமது மகிமையை வெளிப்படுத்துகிறார்.
14. தாழ்மையுள்ளோருக்கு கடவுள் என்ன ஆசீர்வாதங்களை அளிக்கிறார்?
14 இந்த உதாரணங்கள் நமக்கு எதைக் கற்பிக்கின்றன? தாழ்மையுள்ளோரை யெகோவா ஆதரிக்கிறார் என்றும், அவர்களுக்கு தம்முடைய நோக்கத்தைப் பற்றிய அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் அருளுகிறார் என்றும் கற்பிக்கின்றன. தகுதியில்லாதவர்களென சிலரது கண்களில் தோன்றும் நபர்களையே தமது மகத்தான நோக்கத்தை அறிவிக்க யெகோவா தேர்ந்தெடுக்கிறார். வழிநடத்துதலுக்காக தொடர்ந்து யெகோவாவையும் அவரது தீர்க்கதரிசன வார்த்தையையும் அவரது அமைப்பையும் நாடுவதற்கு இது நம்மைத் தூண்ட வேண்டும். தம்முடைய தாழ்மையுள்ள ஊழியர்களுக்கு தமது மகத்தான நோக்கத்தின் நிறைவேற்றத்தை யெகோவா தொடர்ந்து தெரியப்படுத்துவார் என்று நாம் உறுதியோடிருக்கலாம். “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என ஆமோஸ் தீர்க்கதரிசி அறிவித்திருக்கிறார்.—ஆமோஸ் 3:7.
மனத்தாழ்மையை வளர்த்து கடவுளுடைய தயவைப் பெறுங்கள்
15. மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள நாம் உழைப்பது ஏன் அவசியம், இஸ்ரவேலின் ராஜாவான சவுலின் விஷயத்தில் இது எப்படி சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது?
15 கடவுளுடைய தயவை என்றென்றும் அனுபவிப்பதற்கு நாம் எப்போதும் தாழ்மையோடு இருப்பது அவசியம். ஒரு சமயம் மனத்தாழ்மையை காட்டுபவர் எப்போதுமே மனத்தாழ்மையை காட்டுவார் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் மனத்தாழ்மையை இழந்து பெருமையுள்ளவராயும் அகந்தையுள்ளவராயும் ஆகிவிடலாம்; இது துணிகர செயலுக்கும் அழிவுக்குமே வழிநடத்துகிறது. இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட சவுல் இதையே செய்தார். அவர் முதலில் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது ‘தன்னுடைய பார்வைக்கு சிறியவராக’ தோன்றினார். (1 சாமுவேல் 15:17) ஆனால், ஆட்சி செய்ய ஆரம்பித்து இரண்டே வருடங்களுக்குள் துணிகரமாக செயல்பட்டார். சாமுவேல் தீர்க்கதரிசியைக் கொண்டு பலிகளை செலுத்தும்படியான யெகோவாவின் ஏற்பாட்டை அவர் அவமதித்தார், அதுமட்டுமல்ல தான் பலி செலுத்தியதை நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு பல சாக்குப்போக்குகளை சொன்னார். (1 சாமுவேல் 13:1, 8-14) இதற்குப்பின் அடுத்தடுத்து அவர் செய்த காரியங்கள் அவருக்கு மனத்தாழ்மை அறவே இருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தின. இதனால் கடவுளுடைய ஆவியையும் தயவையும் இழந்து, இறுதியில் இழிவான விதத்தில் மரணமடைந்தார். (1 சாமுவேல் 15:3-19, 26; 28:6; 31:4) இது நமக்கு என்ன பாடத்தைக் கற்பிக்கிறது? மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் வளர்த்துக்கொள்வதற்கு நாம் உழைக்க வேண்டும் என்பதையும் தற்பெருமையை அடக்கி, யெகோவாவின் அங்கீகாரத்தை இழக்கச் செய்யும் துணிகரமான எந்தக் காரியத்தையும் தவிர்க்க வேண்டும் என்பதையும் தெளிவாக கற்பிக்கிறது.
16. யெகோவாவோடும் சக மனிதரோடும் உள்ள உறவைப் பற்றி தியானிப்பது மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள எப்படி உதவும்?
16 மனத்தாழ்மை, கடவுளுடைய ஆவியின் கனியில் ஓர் அம்சமாக குறிப்பிடப்படாவிட்டாலும், இது நாம் வளர்க்க வேண்டிய ஒரு தெய்வீக பண்பாகும். (கலாத்தியர் 5:22, 23; கொலோசெயர் 3:10, 12) இதில் நம் மனப்பான்மை உட்பட்டிருப்பதால், அதாவது நம்மையும் மற்றவர்களையும் நாம் எப்படி கருதுகிறோம் என்பது உட்பட்டிருப்பதால் மனத்தாழ்மையை வளர்ப்பதற்கு மனப்பூர்வமாக உழைப்பது அவசியம். யெகோவாவோடும் மற்றவர்களோடும் உள்ள உறவைப் பற்றி கருத்தூன்றி சிந்திப்பதும் தியானிப்பதும் தாழ்மையோடு நிலைத்திருக்க உதவும். கடவுளுடைய பார்வையில் அபூரண மாம்சமெல்லாம் கொஞ்சகாலத்திற்கு தழைத்து பின்னர் வாடிப் போகிற புல்லைப் போல் இருக்கிறது. அதோடு மனிதர், புல்வெளியில் காணப்படும் வெட்டுக்கிளிகளைப் போலவும் இருக்கிறார்கள். (ஏசாயா 40:6, 7, 22) ஒரு புல்லின் இதழ் மற்ற இதழ்களைவிட கொஞ்சம் நீளமாக இருக்கிறது என்பதற்காக அது பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டுமா என்ன? ஒரு வெட்டுக்கிளி மற்ற வெட்டுக்கிளிகளைவிட சற்று தள்ளி குதிக்க முடியும் என்பதற்காக பந்தா காட்டிக்கொள்ள வேண்டுமா என்ன? இது நினைத்துப் பார்க்கவே அர்த்தமற்றதாக இல்லையா? அதனால்தான், அப்போஸ்தலனாகிய பவுல் சக கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு நினைப்பூட்டினார்: “அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக் கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” (1 கொரிந்தியர் 4:7) இது போன்ற வசனங்களை தியானிப்பது மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதற்கும் அதைக் காண்பிப்பதற்கும் உதவும்.
17. மனத்தாழ்மையை வளர்க்க தானியேலுக்கு எது உதவியது, அப்பண்பை வளர்க்க நமக்கு எது உதவும்?
17 எபிரெய தீர்க்கதரிசியாக தானியேல் தன்னை ‘சிறுமைப்படுத்தினதால்,’ அதாவது மனத்தாழ்மை காட்டியதால், ‘பிரியமான புருஷன்’ என அறிவிக்கப்பட்டார். (தானியேல் 10:11, 12) மனத்தாழ்மையை வளர்க்க தானியேலுக்கு எது உதவியது? முதலாவதாக, யெகோவா மீது தானியேல் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார், தவறாமல் அவரிடம் ஜெபம் செய்து வந்தார். (தானியேல் 6:10, 11) அதுமட்டுமல்ல, கடவுளுடைய வார்த்தையை ஊக்கத்துடனும் சரியான உள்நோக்கத்துடனும் படித்தார்; இது கடவுளுடைய மகத்தான நோக்கத்தை தன் மனதில் தெளிவாக வைத்துக்கொள்ள அவருக்கு உதவியது. தன் ஜனங்களுடைய குறைகளை மட்டுமல்ல தன்னுடைய குறைகளையும் ஒத்துக்கொள்ள அவர் மனமுள்ளவராய் இருந்தார். மேலும் சுயநீதியை அல்ல, ஆனால் கடவுளுடைய நீதியை ஆதரிப்பதிலேயே உண்மையில் ஆர்வமுள்ளவராய் இருந்தார். (தானியேல் 9:2, 5, 7) தானியேலின் தலைசிறந்த உதாரணத்திலிருந்து கற்றுக்கொண்டு, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலுமே மனத்தாழ்மையை வளர்ப்பதற்கும் அதை வெளிக்காட்டுவதற்கும் நம்மால் கடின முயற்சி எடுக்க முடியுமா?
18. இன்று மனத்தாழ்மையை காட்டுவோருக்கு என்ன மகிமை காத்திருக்கிறது?
18 “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” என நீதிமொழிகள் 22:4 குறிப்பிடுகிறது. ஆம், தாழ்மையுள்ளோருக்கு யெகோவா தயவு காட்டுகிறார், அதனால் கிடைக்கும் பலன் மகிமையும் ஜீவனுமாம். சங்கீதக்காரனான ஆசாப் கடவுளுக்கு சேவை செய்வதை ஏறக்குறைய நிறுத்திவிட்டிருந்தார்; ஆனால் யெகோவாவின் உதவியோடு தன் சிந்தையை சரிசெய்த பிறகு தாழ்மையோடு அவர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (சங்கீதம் 73:24) இன்று நமக்கு எப்படி இது பொருந்துகிறது? மனத்தாழ்மையைக் காட்டுவோருக்கு என்ன மகிமை காத்திருக்கிறது? யெகோவாவுடன் தயவான, மகிழ்ச்சியான உறவை அனுபவிக்கலாம்; அது மட்டுமல்ல, “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என தாவீது ராஜா தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதிய வார்த்தைகளின் நிறைவேற்றத்தைக் காணவும் எதிர்நோக்கி இருக்கலாம். ஆம், உண்மையிலேயே அது மகத்தான எதிர்காலமாக இருக்கும்!—சங்கீதம் 37:11.
நினைவிருக்கிறதா?
• யெகோவா தம் மகிமையை மனத்தாழ்மையுள்ளவர்களுக்கு வெளிப்படுத்துகிறார் என்பதை ஸ்தேவானின் அனுபவம் எப்படி எடுத்துக்காட்டுகிறது?
• யெகோவா மனத்தாழ்மையை எவ்வழிகளில் காண்பித்திருக்கிறார்?
• தாழ்மையுள்ளோருக்கு யெகோவா தம் மகிமையை வெளிப்படுத்துகிறார் என்பதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
• மனத்தாழ்மையை வளர்ப்பதற்கு தானியேலின் உதாரணம் நமக்கு எப்படி உதவலாம்?
[பக்கம் 12-ன் பெட்டி]
உறுதியானவர் ஆனாலும் தாழ்மையானவர்
50 வயது ஜே. எஃப். ரதர்ஃபர்ட் பைபிள் மாணாக்கரின் (இன்றைய யெகோவாவின் சாட்சிகள்) ஊழிய வேலைகளை கண்காணித்து வந்த சமயம் அது. 1919-ல் அ.ஐ.மா., ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்ட்டில் மாநாடு நடந்தபோது, அவர் ஒரு ஹோட்டல் ரூம் பாய் போல வலியப் போய் மாநாட்டுக்கு வந்திருந்தோரின் பெட்டி படுக்கைகளை சுமந்துகொண்டு அவர்களுடைய அறைகளுக்கு முகமலர்ச்சியோடு அழைத்துச் சென்றார். மாநாட்டின் இறுதி நாளன்று அங்கு கூடிவந்திருந்த 7,000 பேரிடம் இவ்வாறு கூறி அவர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்: “ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமானவருக்கு நீங்கள் தூதுவர்கள், நம்முடைய கர்த்தரின் மகிமையான ராஜ்யத்தைக் குறித்து . . . மக்களுக்கு அறிவிப்பவர்கள் நீங்கள்.” சகோதரர் ரதர்ஃபர்ட் தன்னுடைய நம்பிக்கைகளில் உறுதியானவராய், சத்தியம் என தான் நம்பியதை விட்டுக்கொடுக்காமல் ஆணித்தரமாய் பேசுவதில் பிரசித்தி பெற்றிருந்தபோதிலும், கடவுளுக்கு முன்பாக மிக தாழ்மையுள்ளவராய் இருந்தார்; பெத்தேலில் பெரும்பாலும் காலை வணக்கத்தின்போது அவர் செய்த ஜெபங்களில் இது தெளிவாய் தெரிந்தது.
[பக்கம் 9-ன் படம்]
வேதவாக்கியங்களை நன்கு அறிந்த ஸ்தேவான் பந்தியில் பரிமாறும் வேலையை மனத்தாழ்மையோடு செய்தார்
[பக்கம் 10-ன் படம்]
மனாசே தன்னை தாழ்த்தியது யெகோவாவின் மனதை குளிர்வித்தது
[பக்கம் 12-ன் படம்]
தானியேலை ‘பிரியமான புருஷனாக’ ஆக்கியது எது?