படிப்பு 12
சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து மற்றும் திட்டவட்டமான தயாரிப்பின்றி ஆற்றப்படும் பேச்சு
1 “எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.” (மத். 10:19, 20) இயேசுவின் ஆரம்பகால சீஷர்களுக்கு அந்த வார்த்தைகள் அதிசயமான தன்னம்பிக்கையைக் கொண்டுவந்திருக்க வேண்டும். மேலும் இன்று கடவுளுடைய நற்செய்தியின் ஊழியர்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு முன்பாக சாட்சிகொடுக்க அழைக்கப்படுகையில் அவை அவர்களைப் பலப்படுத்துகின்றன. இது அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சாட்சிகள் சிலரைப் போல யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் இன்று அற்புதமான “ஞானம் நிறைந்த பேச்சு” மற்றும் “அறிவு செறிந்த பேச்சு” அருளப்படுகின்றனர் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. (1 கொ. 12:8, கத்.பை.) இருந்தபோதிலும், நாம் நிச்சயமாகவே நேர்த்தியான தேவராஜ்ய கல்வியின் நல்ல வாய்ப்பை அனுபவிக்கிறோம், வாக்களிக்கப்பட்டது போல தேவை எழுகையில், கடவுளுடைய ஆவி நம்முடைய மனங்களுக்கு பதில்களைத் திரும்பக் கொண்டுவருகிறது.
2 பைபிள் படிப்புகளில், தேவராஜ்ய ஊழியப் பள்ளி கூட்டங்களில் இன்னும் மற்ற சபை கூட்டங்களில் பெற்றுக்கொள்ளும் பயிற்றுவிப்பின் காரணமாக, நீங்கள் ஏராளமான பைபிள் அறிவைச் சேமித்து வைக்கிறீர்கள். நீதியின் அடிப்படை நியமங்களையும் உங்களுடைய சொந்த வாழ்க்கையில் பல்வகைப்பட்ட சூழ்நிலைகளில் அவற்றை எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம் என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். பின்னர் வெளி ஊழியத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் நீங்கள் பெற்றிருக்கும் தகவலைப் பகிர்ந்துகொண்டு மற்றவர்களிடம் பேசுவதில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள். இந்தப் பேசுதலை சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்தோ திட்டவட்டமான தயாரிப்பின்றியோ நீங்கள் செய்கிறீர்கள்.
3 இந்த இரண்டு வகையான பேச்சும் நெருக்கமாக சம்பந்தப்பட்டதாயினும் அவை ஒன்றேயல்ல. ஒருவேளை ஓர் உதாரணம் வேறுபாட்டை தெளிவாக்கிவிடும். நீங்கள் ஒரு வீட்டுக்காரரை அணுகி, ஏற்கெனவே உங்கள் மனதில் உறுதியாகப் பதிந்திருக்கும் ஒரு குறிப்புத்தாளிலிருந்து, தயாரிக்கப்பட்ட ஓர் அளிப்பைக் கொடுக்க ஆரம்பிப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தக் குறிப்புத்தாளுக்கும் அப்பால், பொருளைச் சரியாக எந்த வார்த்தைகளைக் கொண்டு விரிவுபடுத்தப் போகிறீர்கள் என்பதை நீங்கள் மனப்பாடம் செய்யவில்லை. நீங்கள் சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்துப் பேசுகிறீர்கள். ஆனால் அப்போது வீட்டுக்காரர் எதிர்பாராத ஒரு மறுப்பை எழுப்புகிறார். இதற்கு எந்தத் திட்டவட்டமான தயாரிப்பையும் நீங்கள் செய்யவில்லை. இருந்தபோதிலும், ராஜ்ய மன்றத்தில் உங்கள் பயிற்றுவிப்பின் காரணமாக உங்கள் பைபிள் தகவல் களஞ்சியத்திலிருந்து எடுத்து ஏதோ சில குறிப்புகளை அல்லது விளக்கத்தைக் கொடுக்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள். இந்த இடத்தில் உங்களுடைய பேச்சு உடனடியானச் செயலாக தொகுக்கப்பட்டு சொல்லப்படுவதால் அது திட்டவட்டமான தயாரிப்பின்றி ஆற்றப்படுவதாக இருக்கிறது என்று சொல்லப்படலாம்.
4 சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சு. வீட்டுக்கு வீடு அளிப்பாக இருந்தாலும் அல்லது மேடையிலிருந்து ஒரு சொற்பொழிவாக இருந்தாலும்சரி, பலன்தரத்தக்க சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சுக்கு ஆயத்தம் முக்கிய காரியமாகும். சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து நீங்கள் ஒரு சொற்பொழிவை ஆற்றப்போவதாக இருந்தால், விரிவுபடுத்த பல்வேறு பிரதான குறிப்புகளைக் கொண்ட ஒரு நல்ல குறிப்புத்தாளை தயாரித்துக்கொள்ள வேண்டும். பிரதான குறிப்புகளின்கீழே, அதை நிலை நிறுத்த உதவும் கருத்துக்கள், நிரூபணங்கள், வேதவசனங்கள் மற்றும் உதாரணங்களை நீங்கள் பட்டியல் போட்டுக்கொள்ளலாம். அப்பொழுது நீங்கள் உண்மையிலேயே தகவல் நிறைந்த ஒரு பேச்சை அளிக்கத் தயாராயிருப்பீர்கள். நீங்கள் பயன்படுத்தவிருக்கும் சரியான வார்த்தைகளைத் தவிர அனைத்தையுமே முன்கூட்டியே தீர்மானித்துவிடுங்கள்.
5 சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சு முறையில் அநேக அனுகூலங்கள் உள்ளன. ஒரு விஷயத்திலிருந்து வேறு விஷயத்துக்குச் சுலபமாக மாறமுடிவது அதில் ஒன்றாகும். உரையிலிருந்து வாசிப்பதில் அல்லது ஞாபகத்திலிருந்து ஒப்பிப்பதில் இருப்பது போல, நீங்கள் பொருளிலிருந்து விலகிச் செல்ல முடியாதபடி அது அத்தனை கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்டில்லை. கடைசி நிமிட சம்பவங்கள் திட்டமிடப்பட்ட சொற்பொழிவில் சில மாற்றங்களைத் தூண்டலாம். மேடைக்குப் போவதற்குச் சற்று முன்பாக கேட்போரில் எதிர்பாராத மிகப் பெரிய எண்ணிக்கையில் புதிதாக அக்கறை காட்டும் ஆட்கள் இருப்பதை நீங்கள் காண்பதாக வைத்துக்கொள்வோம். சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றும் முறை அவர்கள் விவாதங்களை முழுமையாக கிரகித்துக்கொள்ள உதவிசெய்வதற்காக சரிப்படுத்தல்களைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது. அல்லது ஒருவேளை கேட்போர் கூட்டத்தில் பள்ளி வயது இளைஞர் அநேகர் இருப்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். பொருள் அவர்களுடைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அவர்கள் போற்றுவதற்கு உதவிசெய்யும் நோக்கத்தோடு உங்கள் உதாரணங்களையும் பொருத்தத்தையும் நீங்கள் சரிசெய்துகொள்ளலாம்.
6 சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சின் இரண்டாவது அனுகூலம் உங்கள் மனதுக்கு ஊக்கமளிக்கும் விளைவை அது கொண்டிருக்கிறது. புதுமையான கருத்துக்களை எந்தத் தடையுமின்றி அபிவிருத்திசெய்ய உங்களை விட்டுவைக்கிறது. அநேகமாக போற்றுதலுள்ள, பிரதிபலிக்கின்ற கேட்போரைச் சந்திக்கையில் நீங்கள் எழுச்சியடைகிறீர்கள். சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சில் சுலபமாக இடையில் சேர்த்துக்கொள்ள முடிகிற புதிய கருத்துக்கள் உங்கள் மனதிற்குள் பெருக்கெடுத்து வருகின்றன.
7 உங்கள் பார்வையை கேட்போர்மீது வைக்க அனுமதிப்பதும்கூட இவ்வகையான பேச்சின் மூன்றாவது அனுகூலமாகும். இது அவர்களோடு உங்கள் தொடர்பை மேம்படுத்துகிறது. நீங்கள் சொல்வதை அவர்கள் அதிக உன்னிப்பாக கவனிக்கும் சாத்தியமே விளைவாக இருக்கிறது. ஏதோ ஓர் எழுதப்பட்ட பொருளின்மீது எப்போதும் உங்கள் பார்வையை செலுத்த அவசியமில்லாமல் இருப்பதால் உங்கள் தலைப்புப் பொருளை நீங்கள் அறிந்திருப்பதை கேட்போர் உணர்ந்துகொள்வர். மேலும், கேட்போரின் பிரதிபலிப்புகளைக் கவனிக்கக்கூடிய நிலையிலும் நீங்கள் இருக்கிறீர்கள். அவர்களுடைய அக்கறை குறைந்துபோவதை நீங்கள் கண்டால், இந்தப் பிரச்சினையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம். இதன் காரணமாக இவ்வகையான பேச்சுமுறை அனலான, உரையாடல் முறையான அளிப்புக்கு, உண்மையில் மனம்விட்டு பேசுவதற்கு உதவிசெய்கிறது.
8 இருப்பினும் சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சுக்களின் சம்பந்தமாக ஒருசில படுகுழிகள் இருக்கின்றன; ஆனால் இவற்றைத் தவிர்க்க முடியும். உதாரணமாக, பேச்சாளர் அளவுக்கு அதிகமாக கூடுதலான கருத்துக்களை நுழைக்க, அவருடைய பேச்சு கொடுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிவிடும். மேலும், மனதுக்குள் வரும் கருத்துக்களைத் தன்னிச்சையாக அறிமுகப்படுத்துவதற்கு பேச்சாளருக்கிருக்கும் சுயாதீனத்தை முன்னிட்டுப் பார்க்கையில், அவர் திட்டமிட்டதைவிட ஒருசில குறிப்புகளின்பேரில் கருத்தூன்றி நீண்ட நேரம் அவர் பேசிவிடலாம். பேச்சின் ஒவ்வொரு பகுதிக்கும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை உங்கள் குறிப்புத்தாளில் குறித்துக்கொள்வதன் மூலம் இதற்கு எதிராக நீங்கள் காத்துக்கொள்ளலாம். பின்னர் இந்த அட்டவணையைக் கூர்ந்து பின்பற்றுங்கள்.
9 குறிப்புகளை விட்டுவிடுதல், அரைகுறையான அல்லது தவறான கூற்றுகளைச் சொல்லிவிடுதல் அல்லது போதுமான நிலைநிறுத்தும் அத்தாட்சிகள் இல்லாமல் உரிமைபாராட்டல்களைச் செய்தல் போன்ற ஆபத்தும்கூட இருக்கிறது. அவசரப்படாமல் அவ்வப்போது உங்கள் குறிப்புகளைப் பார்த்துக்கொண்டால், உங்கள் பொருளில் ஊன்றியிருந்து, குறிப்புகளை விட்டுவிடுவதையும் தவறுகளையும் தவிர்க்க முடிகிறவர்களாக இருப்பீர்கள். விரிவுபடுத்த பல பிரதான குறிப்புகளையும், நிலைநிறுத்த உதவும் நிரூபணங்களையும் வேதவசனங்களையும் கொண்ட ஒரு நல்ல குறிப்புத்தாளை உருவாக்குவதன் மூலம், உறுதியாக கூறுவதை நீங்கள் தவிர்க்கமுடியும்.
10 சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சின் வார்த்தைகளை அப்படியே மனப்பாடம் செய்வது அவசியமில்லாதிருக்கையில், பொருத்தமான சொல்லமைப்பு பழக்கப்படுத்திக்கொள்ளப்படலாம். இது கோர்வையான சிந்தனையை உறுதியாக உங்கள் மனதில் பதியவைக்க உதவியாக இருக்கும். இவ்விதமாக நீங்கள் மட்டமான மொழிநடையையும் மோசமான வார்த்தைகளின் தெரிவையும் தவிர்க்கமுடியும். மேலும் உங்கள் அன்றாட உரையாடலில் நல்ல மொழிநடையை பயன்படுத்த நீங்கள் முயற்சிசெய்வீர்களானால், பேச்சைக் கொடுக்கையில் அது எளிதாக வந்துவிடும். உண்மைதான், அப்போதும்கூட உரை வாசிப்பு பேச்சின் மிகச் சிறந்த மொழியும் இலக்கண நுட்பமும் உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் உங்கள் உரையாடல் பாணியின் மூலம் இதை ஈடுசெய்வதற்கும் அதிகத்தைச் செய்துவிடலாம். மேலும் பேச்சைக் கொடுப்பதற்கு முன்பாக பல முறை உங்கள் பேச்சை மறுபார்வை செய்ய தீர்மானமாயிருங்கள். சிலர் தங்கள் சொந்த மனதில் மெளனமாக அதைச் செய்வது போதுமானதாக இருப்பதைக் காண்கின்றனர். ஆனால் அநேகர் குறிப்பாக நேரம் சம்பந்தமாக அதை சப்தமாக கொடுத்து பழகிக்கொள்வது அதிக பிரயோஜனமாயிருப்பதைக் காண்கின்றனர்.
11 காலப்போக்கிலும், பழக்கத்தோடும் விரைவில் உங்கள் பேச்சின் ஒவ்வொரு குறிப்புக்கும் குறிப்புத்தாளில் ஒருசில வார்த்தைகளாக குறைத்துக்கொள்ள முடிகிறவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இவையும், நீங்கள் பயன்படுத்தப்போகும் வேதவசனங்களின் குறிப்பும் எளிதில் எடுத்துப் பார்ப்பதற்கு ஓர் அட்டையில் அல்லது துண்டுக்காகிதத்தில் வரிசைப்படுத்தப்படலாம். ஊழியப் பள்ளியில் ஒரு மாணாக்கர் பேச்சு போன்ற சிறிய பேச்சுக்களுக்குக் குறிப்புத்தாளை மனப்பாடம் செய்ய சிலர் விரும்பலாம். உங்கள் சிந்தனைக் கோர்வையை ஏதோவொரு கவனமாற்றம் அல்லது ஞாபகசக்தி குறைவு தடுத்துவிடும் பட்சத்தில் எடுத்துப்பார்ப்பதற்காக சுருக்கமான ஒரு குறிப்புத்தாளை கைவசம் வைத்திருப்பதற்கு எந்த ஆட்சேபணையுமில்லை. ஒரு பொதுப் பேச்சு போன்ற நீண்ட பேச்சுக்களுக்கு, பேசுகையில் எடுத்துப்பார்க்க விளக்கமான ஒரு குறிப்புத்தாளை வைத்திருப்பது பொதுவாக நடைமுறையில் ஞானமுள்ள போக்காகும்.
12 சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சு பாணி வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மிகவும் மதிப்புள்ளதாகும். வீட்டுக்காரர் மறுப்பு ஒன்றை எழுப்பும்போது அல்லது ஏதாவது ஒரு முறையில் குறுக்கிடும்போது கலந்தாலோசிக்கப்படும் குறிப்புகளிலிருந்து சற்றே விலகிச்சென்று, மறுப்பை சமாளித்துவிட்டு பின்னர் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட பொருளை அளிப்பது சாத்தியமாகும். அளிப்பின் சரியான வார்த்தைகள் மனப்பாடம் செய்யப்பட்டிருந்தால் ஒரு தடங்கலைச் சமாளித்துவிட்ட பின்னர் பேச்சைத் தொடர்வது கடினமாக இருக்கும்.
13 திட்டவட்டமான தயாரிப்பின்றி ஆற்றப்படும் பேச்சு. “திட்டவட்டமான தயாரிப்பின்றி” என்ற வார்த்தை “தயாரிப்பின்றி, தயக்கமின்றி, உடனடியாகச் செய்யப்படுவது” என்று அர்த்தப்படுவதாக விளக்கப்படுகிறது. ஆனால் தலைப்புப் பொருளின் அல்லது குறிப்பின்பேரில் எந்தத் தயாரிப்புமே செய்யப்படவில்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. எல்லா உண்மையான போதனையிலும் தயாரிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்புப் பொருளின்பேரில் பேசப்போகிறீர்கள் என்பதற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாத சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆகவே அதனுடைய கலந்தாலோசிப்புக்கு குறிப்பாக நீங்கள் தயாரிக்காமல் இருக்கிறீர்கள். இது வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பில் சந்திக்கப்படும் வீட்டுக்காரர் ஒரு கேள்வியை எழுப்புகையில் இருக்கலாம். அல்லது அது மறுசந்திப்புகளில், வீட்டு பைபிள் படிப்புகளில், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில் அல்லது ஒரு நீதிமன்றம் அல்லது மன்றக்குழுவுக்கு முன்பாக அழைக்கப்படுகையில் இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பொருள் தொகுக்கப்படும் விதமும் சொற்களின் அமைப்பும் திட்டவட்டமான தயாரிப்பின்றி இருக்கும், ஆனால் தேவராஜ்ய படிப்பிலிருந்து பெற்ற உங்கள் பின்னணி அறிவு, சொல்லப்படுகிறவற்றிற்கு ஆதாரமாக இருக்கும். ஆகவே திட்டவட்டமான தயாரிப்பின்றி ஆற்றப்படும் பேச்சு என்று நாம் அழைப்பதுங்கூட, குறிப்பிட்ட சமயத்துக்காக அந்தத் தயாரிப்பு திட்டமிடப்படாவிட்டாலும் முன்கூட்டியே செய்யப்பட்ட தயாரிப்பின்மேல் சார்ந்திருக்கிறது.—ஏசா. 50: 4.
14 ஒருசில நிமிடங்களுக்கு முன்புதானேகூட நீங்கள் எதையாவது சொல்வதற்கு அழைக்கப்படப் போகிறீர்கள் என்பதை அறியவந்தால், தயாரிப்பில் நீங்கள் எடுக்கக்கூடிய பயனுள்ள படிகள் உண்டு. முதலாவதாக, பேசுவதற்கு ஒன்று அல்லது இரண்டு முக்கிய குறிப்புகளின்பேரில் தீர்மானம் செய்யுங்கள். பொருத்தமான ஒருசில வேதவசனங்கள் உட்பட அதை நிலைநிறுத்த உதவும் சில விவாதங்களை தேர்ந்தெடுங்கள். பின்னர் சுருக்கமான ஒரு முன்னுரையைப்பற்றி சிந்தியுங்கள். இப்பொழுது, தேவை ஏற்பட்டால், பேச ஆரம்பிக்க நீங்கள் தயாராயிருக்கிறீர்கள். உதாரணமாக தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மாணாக்கர் பேச்சு கொடுப்பவருக்கு கடைசி நிமிடத்தில் ஒரு பதிலாள் தேவைப்படும்போது இது தேவையாக இருக்கலாம்.
15 முன்னேற்பாடின்றி சத்தியத்துக்குச் சாட்சிகொடுக்கும்படியாக அழைக்கப்பட்ட யெகோவாவின் ஊழியர்களுடைய உதாரணங்கள் வேதாகமத்தில் இருக்கின்றன. இவர்களில் ஒருவர் ஸ்தேவான். இவர் பலாத்காரமாக ஆலோசனை சங்கத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு பொய் சாட்சிகளால் குற்றஞ்சுமத்தப்பட்டார். திட்டவட்டமான தயாரிப்பின்றி அவர் ஆற்றிய கிளர்ச்சியூட்டும் பேச்சை அப்போஸ்தலர் புத்தகத்தில் 7-ம் அதிகாரத்தில் வாசிக்கமுடியும். அப்போஸ்தலன் பவுலை அத்தேனியர்கள் பிடித்து மார்ஸ் மேடைக்கு அழைத்துச்சென்று அவருடைய நம்பிக்கைகளைக் குறித்து வினவினார்கள். திட்டவட்டமான தயாரிப்பில்லாத அவருடைய நேர்த்தியான கலந்தாலோசிப்பு அப்போஸ்தலர் 17-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது.
16 மிகச் சிறந்த முறை. சில சமயங்களில் புதிதாக துவங்குபவர்கள் தங்கள் மாணாக்கர் பேச்சுக்கு கையால் எழுதப்பட்ட ஒரு உரையைப் பயன்படுத்த விரும்புவார்கள். பொதுவாக இது மிகச் சிறந்த முறையாக இல்லை, விரைவில் இந்தப் பழக்கத்தைவிட்டுவிட அவர்கள் முயற்சிசெய்ய வேண்டும். ஏனென்றால் அது கேட்போருடன் தொடர்பு மற்றும் சம்பாஷணைமுறை பண்பு ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திருப்பிவிடுகிறது. உரை வாசிப்பு பேச்சுக்களை நாம் பயன்படுத்தும் சமயங்கள் உண்டு. ஆனால் வாசிப்பு நியமிப்பு உங்களுக்கிருக்கையில் இவற்றிற்கு நீங்கள் பயிற்சிபெறுகிறீர்கள். உங்களுடைய மற்ற பேச்சுக்களைக் குறிப்புகளிலிருந்து தாராளமாகப் பேசுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
17 சில மாணாக்கர்கள் எல்லா குறிப்புகளிலிருந்தும் விடுபட பேச்சுக்களை மனப்பாடம் செய்ய முயற்சிசெய்கின்றனர். ஆனால் மனப்பாடம் செய்யப்பட்ட பேச்சுக்கள் சந்தர்ப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க முடியாமல், இயற்கைத்தன்மை குறைவுபட்டு மற்றும் முக்கியமான பகுதியை ஒருவர் மறந்துவிடும் சாத்தியத்தை அதிகரிக்கக்கூடிய திட்டவட்டமான பிரதிகூலங்களைக் கொண்டிருக்கின்றன. முன்னுரை அல்லது முடிவுரை போன்ற ஒருசில முக்கியமான வாக்கியங்களுக்கு மனப்பாடம் செய்வது பொருத்தமாக இருக்கலாம், ஆனால் முழு பேச்சுக்கும் அது தகுதியாயில்லை.
18 பொதுவாக சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சே மிகச் சிறந்த முறையாக இருக்கிறது. இதுதானே வெளி ஊழியத்தில் பயன்படுத்தப்படுகிறது. இங்குதானே நாம் உறுதியாகச் சிந்திப்பதற்கு உண்மையில் பயிற்றுவிக்கப்படுகிறோம். அதேவிதமாகவே சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து செய்யும் முறையே சபை கூட்டங்களில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய செய்தியை உண்மையாக, நேரடியான முறையில் அளிப்பதை இது அனுமதிக்கிறது. இது நல்ல பலன்களில் விளைவடைகிறது. ஆகவே எப்போதும் அதை பழகிக்கொள்ளுங்கள். மேலும் சில சமயங்களில் திட்டவட்டமான தயாரிப்பின்றி பேசுவதற்கு அழைக்கப்பட்டாலும், அதற்காக நாம் தயாராக இருப்போம், ஏனென்றால் சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்தும் திட்டவட்டமான தயாரிப்பின்றியும் பேசுவதற்கு நன்கு ஆயத்தமாயிருப்பதை யெகோவா பார்த்துக்கொள்கிறார். இரண்டும் நம்முடைய ஊழியத்தில் அவற்றிக்குரிய இடத்தைக் கொண்டிருக்கின்றன.
[கேள்விகள்]
1, 2. பேசுவதற்கு யெகோவா நமக்கு எவ்விதமாக உதவிசெய்கிறார்?
3. சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சுக்கும் திட்டவட்டமான தயாரிப்பின்றி ஆற்றப்படும் பேச்சுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கவும்.
4. பலன்தரத்தக்க ஒரு சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சுக்கு என்ன தயாரிப்பு தேவையாக இருக்கிறது?
5-7. சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சின் அனுகூலங்களைக் குறிப்பிடவும்.
8-10. சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்து ஆற்றப்படும் பேச்சின் சம்பந்தமாக உள்ள படுகுழிகள் எவ்விதமாக தவிர்க்கப்படலாம்?
11, 12. பேச்சாளர் குறிப்புத்தாளை வைத்திருப்பது ஏன் பாதுகாப்பானது?
13-15. திட்டவட்டமான தயாரிப்பின்றி நாம் எப்பொழுது பேசுகிறோம், என்ன தயாரிப்பு உட்பட்டிருக்கிறது?
16-18. கையால் எழுதப்பட்ட ஒரு உரையைப் பயன்படுத்துவதற்கு அல்லது தங்கள் பேச்சுக்களை மனப்பாடம் செய்வதற்கு பதிலாக மாணாக்கர்கள் ஏன் சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்துப் பேசுவதைப் பழகிக்கொள்ள வேண்டும்?