படிப்பு 25
குறிப்புத்தாளைப் பயன்படுத்துதல்
குறிப்புத்தாளை பயன்படுத்தி பேசுவதை நினைத்தாலே பலர் வியர்த்து விறுவிறுத்துப் போகிறார்கள். சொல்ல வேண்டிய விஷயத்தை வரிக்கு வரி அப்படியே எழுதி வைத்திருந்தால் அல்லது மனப்பாடம் செய்திருந்தால் தைரியமாக உணருகிறார்கள்.
ஆனால் நிஜத்தில், எழுதி வைக்கப்பட்ட ஒரு தாளை பயன்படுத்தாமலே நாம் அனைவரும் அன்றாடம் உரையாடுகிறோம். குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் அளவளாவுகிறோம். வெளி ஊழியத்தில் ஈடுபடும்போதும் அப்படித்தான் செய்கிறோம். ஊக்கமாக ஜெபிக்கும்போதும்—தனிப்பட்ட விதமாகவும் சரி கூட்டத்தார் முன்பாகவும் சரி—அப்படித்தான் செய்கிறோம்.
மான்யுஸ்க்ரிப்ட்டை பயன்படுத்தி பேச்சு கொடுப்பதற்கும் குறிப்புத்தாளை பயன்படுத்தி பேச்சு கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? முன்பே தயாரிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட்டிலிருந்து வாசிப்பது திருத்தமாகவும் பொருத்தமான வார்த்தைகளைப் போட்டு அழகிய மொழிநடையிலும் பேச உதவுகிற போதிலும், இருதயத்தைச் சென்றெட்டும் விதமாக பேசுவதில் அதற்கு சில வரம்புகள் இருக்கின்றன. நீங்கள் வாசித்துக்கொண்டே வரும்பொழுது, சில வாக்கியங்களுக்குப் பிறகு, நீங்கள் வழக்கமாக பேசும் பாணியிலிருந்து வித்தியாசப்படும் வேகத்திற்கும் தொனிக்கும் மாறிவிடுவீர்கள். உங்களுடைய கவனத்தை கூட்டத்தார் மீது ஒருமுகப்படுத்துவதைவிட அந்தத் தாளின் மீதே ஒருமுகப்படுத்தினால் அவர்களில் அநேகர் நன்கு கவனம் செலுத்த மாட்டார்கள்; அதாவது, அவர்களை மனதில் வைத்து அவர்களுடைய சூழ்நிலைகளுக்கேற்ப உங்களுடைய தகவல்களை மாற்றியமைத்து பேசும்போது எந்தளவுக்கு கூர்ந்து கவனிக்கிறார்களோ அந்தளவுக்கு கவனிக்க மாட்டார்கள். உண்மையிலேயே உந்துவிக்கும் பேச்சை கொடுப்பதற்கு, மனதிலிருந்து பேசும் முறையே சாலச் சிறந்தது.
அன்றாட வாழ்க்கையில் நமக்கு உதவ தேவராஜ்ய ஊழியப் பள்ளி திட்டமிடப்பட்டுள்ளது. நாம் நண்பர்களை சந்திக்கும்போது, ஒரு துண்டு காகிதத்தை எடுத்து நம்முடைய எண்ணங்களை அழகிய வார்த்தைகளில் வடித்து அவர்களிடம் வாசித்துக் காட்டுவதில்லை. நாம் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளும்போதும், ஜனங்களிடம் பேச விரும்பும் சில குறிப்புகளை மறந்துவிடுவோம் என்ற பயத்தில், அவர்களிடம் வாசித்துக் காட்டுவதற்காக ஒரு தாளை கொண்டு செல்வதில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எப்படி சாட்சிகொடுப்பது என்பதை ஊழியப் பள்ளியில் நடித்துக் காட்டும்போது, முடிந்தளவுக்கு இயல்பான முறையில் பேசிப் பழகுங்கள். நீங்கள் நன்றாக தயாரித்திருந்தால் பேச விரும்பும் முக்கிய கருத்துக்களை நினைவுபடுத்திக் கொள்வதற்கு, பொதுவாக ஒரு குறிப்புத்தாளை—மனதிலோ எழுத்திலோ வடிக்கப்பட்ட ஒன்றை—வைத்திருந்தால் போதும் என்று உணர்வீர்கள். ஆனால் இதை வைத்துப் பேசுவதற்குரிய நம்பிக்கையை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
உங்களுடைய கருத்துக்களை ஒழுங்கமையுங்கள். நீங்கள் பேசும்போது குறிப்புத்தாளை பயன்படுத்துவதற்கு, உங்களுடைய கருத்துக்களை ஒழுங்கமைக்க வேண்டும். இது, நீங்கள் பயன்படுத்த விரும்பும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதை அர்த்தப்படுத்தாது. நீங்கள் பேசுவதற்கு முன்பு சிந்திப்பதையே அர்த்தப்படுத்துகிறது.
அன்றாட வாழ்க்கையில், அவசரப்பட்டு பேசும் ஒருவர் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் எதையாவது சொல்லிவிட்டு பின்பு அதற்காக வருந்துவார். வேறொருவர் மனம்போன போக்கில் எதையாவது பேசலாம், ஒரு கருத்திலிருந்து மற்றொன்றுக்கு தாவலாம். பேசுவதற்கு முன்பு குறிப்புகளை மனதில் வரிசைப்படுத்திக் கொண்டால் இவ்விரண்டு போக்குகளையும் திறம்பட சமாளிக்கலாம். முதலில், உங்களுடைய குறிக்கோளை மனதில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், பின்பு அதை சாதிப்பதற்கு எடுக்க வேண்டிய படிகளை தேர்ந்தெடுங்கள், அதற்குப்பின் பேச ஆரம்பியுங்கள்.
வெளி ஊழியத்திற்காக நீங்கள் தயார் செய்கிறீர்களா? உங்களுடைய பையில் எல்லாவற்றையும் அடுக்கி வைப்பதற்கு மட்டுமல்ல, உங்களுடைய கருத்துக்களை மனதில் ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் நேரமெடுத்துக் கொள்ளுங்கள். நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களில் ஒன்றை பயன்படுத்த தீர்மானித்தால், முக்கிய கருத்துக்களை மனதில் தெளிவாக பதிய வைப்பதற்கு அதை பல தடவை வாசியுங்கள். அதன் சாராம்சத்தை ஓரிரண்டு வரிகளில் சொல்லுங்கள். அதிலுள்ள வார்த்தைகளை உங்களுடைய பாணிக்கும் பிராந்தியத்திலுள்ள நிலைமைகளுக்கும் ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். இப்படி குறிப்புகளை மனதில் வரிசைப்படுத்தி வைத்திருப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். அதில் எவையெல்லாம் அடங்கலாம்? (1) அறிமுகத்தில், உங்களுடைய சமுதாயத்தில் வசிப்பவர்களுக்கு அக்கறைக்குரியதாக இருக்கும் ஒன்றை குறிப்பிடலாம். அதைப் பற்றி வீட்டுக்காரருடைய கருத்தை கேளுங்கள். (2) அந்த விஷயத்தின் பேரில் பேசுவதற்கு குறிப்பிட்ட விஷயத்தை மனதில் வைத்திருங்கள்; அதற்குப் பரிகாரமாக என்ன செய்யப்போவதாக கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்பதை காட்டுவதற்கு ஓரிரண்டு வசனங்களையும் மனதில் வைத்திருங்கள். பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால், யெகோவா தம்முடைய ராஜ்யத்தின் மூலம், அதாவது தம்முடைய பரலோக அரசாங்கத்தின் மூலம் இதைச் செய்வார் என்பதை வலியுறுத்திக் கூறுங்கள். (3) நீங்கள் பேசிய விஷயத்தின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு அந்த நபரை உற்சாகப்படுத்துங்கள். நீங்கள் பிரசுரங்களை கொடுக்கலாம், மற்றும்/அல்லது பைபிள் படிப்பை பற்றி சொல்லலாம். அந்த சம்பாஷணையை பின்னர் தொடர்வதற்கு திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
இத்தகைய பிரசங்கத்திற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குறிப்புகளை மனதில் வரிசைப்படுத்திக் கொள்வதே. ஒருவரை முதலில் சந்திப்பதற்கு முன்பு, எழுதப்பட்ட குறிப்புத்தாளை நீங்கள் எடுத்துப்பார்க்க விரும்பினால், அறிமுகத்தில் பயன்படுத்துவதற்குரிய சில வார்த்தைகளும் ஓரிரண்டு வசனங்களும் முடிவுரையில் சொல்ல விரும்பும் சுருக்கமான குறிப்பும் மட்டுமே அதில் இருக்கும். அத்தகைய குறிப்புத்தாளை பயன்படுத்துவதும் தயாரிப்பதும் எதையாவது பிதற்றிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க உதவும், பேச்சை கேட்பவர்கள் எளிதில் ஞாபகம் வைக்கக்கூடிய தெளிவான செய்தியை சொல்லவும் உதவும்.
உங்களுடைய பிராந்தியத்தில் ஏதாவது கேள்வியையோ ஆட்சேபணையையோ அடிக்கடி எதிர்ப்பட்டால், அந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக, உங்களுக்குத் தேவையானதெல்லாம் இரண்டு அல்லது மூன்று அடிப்படை குறிப்புகளும் அதற்கு ஆதாரமான வசனங்களுமே. “கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள்” அல்லது வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் தடித்த எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ள உபதலைப்புகள் உங்களுக்குத் தேவையான குறிப்புகளைக் கொடுக்கலாம். வேறொரு புத்தகத்திலுள்ள பொருத்தமான மேற்கோளை நீங்கள் சேர்த்துக்கொள்ள விரும்பலாம். அந்த மேற்கோளோடு சுருக்கமான குறிப்புகளை எழுதிக் கொள்ளுங்கள். அவற்றை வெளி ஊழியத்திற்குக் கொண்டு செல்லும் பையில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டுக்காரர் அந்தக் கேள்வியை கேட்டால் அல்லது ஆட்சேபணையை தெரிவித்தால், உங்களுடைய நம்பிக்கையைக் குறித்து அவருக்கு நியாயத்தோடு காண்பிக்க கிடைத்த வாய்ப்பை வரவேற்பதாக சொல்லுங்கள். (1 பே. 3:15) நீங்கள் பதிலளிப்பதற்கு அந்தக் குறிப்புத்தாளை அடிப்படையாக பயன்படுத்துங்கள்.
உங்களுடைய குடும்பத்தில், புத்தகப் படிப்பு தொகுதியில், அல்லது சபையில் ஜெபிக்கும்போதும் உங்களுடைய கருத்துக்களை ஒழுங்கமைத்துக் கொள்வது பிரயோஜனமாக இருக்கும். லூக்கா 11:2-4-ல் சொல்லப்பட்டுள்ளபடி, அர்த்தமுள்ள ஜெபத்திற்கு எளிய குறிப்புகளை இயேசு தமது சீஷர்களுக்குக் கொடுத்தார். எருசலேமில் ஆலய பிரதிஷ்டை செய்தபோது, சாலொமோன் நீண்ட ஜெபம் செய்தார். அவர் ஏற்கெனவே அந்த விஷயத்தைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். முதலில் யெகோவாவிற்கும் தாவீதிற்கு அவர் கொடுத்த வாக்குறுதிக்கும் கவனம் செலுத்தினார்; பின்பு ஆலயத்திற்கு, அதற்குப்பின் ஒவ்வொன்றாக, தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கும் மக்கள் தொகுதியினருக்கும் கவனம் செலுத்தினார். (1 இரா. 8:22-53) இந்த உதாரணங்களிலிருந்து நாம் பயனடையலாம்.
உங்களுடைய குறிப்புத்தாளை எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய குறிப்புத்தாள் பொதுப் பேச்சு கொடுப்பதற்கு தயாரிக்கப்பட்டதா? அது எந்தளவு விரிவாக இருக்க வேண்டும்?
கருத்துக்களை மனதிற்கு கொண்டுவர உதவி செய்வதற்கே குறிப்புத்தாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அறிமுகத்திற்காக சில வரிகளை எழுதி வைத்துக்கொள்வது நல்லது என நீங்கள் நினைக்கலாம். அதற்குப் பிறகு, வார்த்தைகளுக்கு அல்ல, ஆனால் கருத்துக்களுக்கு கவனம் செலுத்துங்கள். அந்தக் கருத்துக்களை வாக்கியங்கள் வடிவில் எழுதிக்கொள்ள விரும்பினால் சுருக்கமான வாக்கியங்களில் எழுதுங்கள். நீங்கள் விரிவாக்க விரும்பும் முக்கியமான சில கருத்துக்கள் உங்களுடைய குறிப்புத்தாளில் தெளிவாக தெரிய வேண்டும். இவற்றை பெரிய எழுத்துக்களில் எழுதலாம், முக்கிய குறிப்புகளை கோடிட்டுக் கொள்ளலாம், அல்லது அவற்றை கலரில் குறித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முக்கிய குறிப்பிற்கும் கீழே, அதை விரிவாக்கும்போது பயன்படுத்த விரும்பும் கருத்துக்களை எழுதிக் கொள்ளுங்கள். நீங்கள் வாசிக்க விரும்பும் வசனங்களை குறித்துக்கொள்ளுங்கள். பொதுவாக, பைபிளை திறந்து அதிலிருந்து நேரடியாக வாசிப்பதே சிறந்தது. நீங்கள் பயன்படுத்த விரும்பும் உதாரணங்களைக் குறித்துக் கொள்ளுங்கள். பொருத்தமாக இருக்கும் உலகப்பிரகாரமான மேற்கோள்கள் சிலவற்றையும் நீங்கள் எழுதிக் கொள்ளலாம். திட்டவட்டமான தகவல்களை போதுமான அளவுக்கு விரிவாக எழுதிக்கொள்ளுங்கள். குறிப்புத்தாள் தெளிவாக இருந்தால் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
சிலர் மிகவும் எளிமையான குறிப்புத்தாள்களைப் பயன்படுத்துகிறார்கள். அதில் முக்கியமான சில வார்த்தைகள், மனப்பாடமாக சொல்லப்போகும் வசனங்கள், கருத்துக்களை மனதிற்கு கொண்டுவர உதவும் ஓவியங்கள் அல்லது படங்கள் இடம்பெறலாம். இப்படிப்பட்ட எளிய குறிப்புகளோடு, பேச்சாளர் தன்னுடைய தகவலை தர்க்க ரீதியிலும் உரையாடல் ரீதியிலும் வழங்க முடியும். இதுவே இந்தப் பாடத்தின் நோக்கம்.
இந்தப் புத்தகத்தில் 39-42 பக்கங்களில், “குறிப்புத்தாளை தயாரித்தல்” என்ற தலைப்பில் சில விஷயங்களைக் காண்பீர்கள். “குறிப்புத்தாளை பயன்படுத்துதல்” என்ற இந்தப் படிப்பின் பேரில் நீங்கள் உழைக்கும்போது அதிலுள்ள விஷயங்களை வாசித்துப் பார்ப்பது அதிக பிரயோஜனமாக இருக்கும்.
குறிப்புத்தாளை பயன்படுத்துவது எப்படி. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுடைய இலக்கு, பேச்சை குறிப்புத்தாள் வடிவில் தயாரிப்பது மட்டுமே அல்ல. அந்தக் குறிப்புத்தாளை திறம்பட பயன்படுத்துவதாகும்.
உங்களுடைய குறிப்புத்தாளை பயன்படுத்துவதில் நீங்கள் எடுக்க வேண்டிய முதல்படி, பேச்சு கொடுக்க தயாரிப்பதாகும். மையப்பொருளை கவனியுங்கள், முக்கிய குறிப்புகள் ஒவ்வொன்றையும் வாசியுங்கள், ஒவ்வொரு முக்கிய குறிப்புக்கும் மையப்பொருளுக்கும் உள்ள தொடர்பை நீங்களே மனதில் சொல்லிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முக்கிய குறிப்பிற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்பதை குறித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது, முதலாம் முக்கிய குறிப்பிற்கு சென்று அதைப் படியுங்கள். அந்தக் குறிப்பை விரிவாக்குவதற்கு நீங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ள விவாதங்களையும் வேதவசனங்களையும் உவமைகளையும் உதாரணங்களையும் மீண்டும் மறுபார்வை செய்யுங்கள். இந்தப் பகுதி உங்களுடைய மனதில் தெளிவாக பதியும்வரை திரும்பத் திரும்ப எடுத்துப் பாருங்கள். மற்ற முக்கிய குறிப்புகள் ஒவ்வொன்றிற்கும் இதேபோல செய்யுங்கள். சரியான நேரத்தில் முடிப்பதற்கு, தேவையானால் எதை விட்டுவிடலாம் என்பதையும் சிந்தியுங்கள். பின்பு முழு பேச்சையும் பார்வையிடுங்கள். வார்த்தைகளுக்கு அல்ல, கருத்துக்களுக்கு கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். பேச்சை மனப்பாடம் செய்யாதீர்கள்.
நீங்கள் பேச்சு கொடுக்கும்போது, உங்களால் சபையாரை பார்த்துப் பேச முடிய வேண்டும். ஒரு வசனத்தை வாசித்த பிறகு, மீண்டும் உங்களுடைய குறிப்புத்தாளை பார்க்காமல், பைபிளை பயன்படுத்தியே உங்களால் நியாயங்காட்டிப் பேச முடிய வேண்டும். அதைப் போலவே, நீங்கள் ஓர் உதாரணத்தை பயன்படுத்தினால், உங்களுடைய குறிப்புத்தாளிலிருந்து வாசிப்பதற்கு பதிலாக உங்களுடைய நண்பர்களுக்குச் சொல்வதுபோல அதை சொல்லுங்கள். நீங்கள் பேசும்போது ஒவ்வொரு வாக்கியத்திற்கும் உங்களுடைய குறிப்புத்தாளைப் பார்க்காதீர்கள். இருதயத்திலிருந்து பேசுங்கள், அப்பொழுதுதான் கேட்போருடைய இருதயத்தை எட்ட முடியும்.
குறிப்புத்தாளிலிருந்து பேசுவதில் நீங்கள் தேர்ச்சி பெறும்போது, திறம்பட்ட பொதுப் பேச்சாளராவதற்குரிய மிகவும் முக்கியமான முன்னேற்ற படியை எடுத்திருப்பீர்கள்.