குறிப்புத்தாளை தயாரித்தல்
பேச்சு கொடுக்கும்படி நியமிக்கப்படும்போது அநேகர் முன்னுரை முதல் முடிவுரை வரை ஒரு வார்த்தை விடாமல் எல்லாவற்றையும் கைநோக எழுதுகிறார்கள். அவர்கள் பக்கம் பக்கமாக, பலமுறை அடித்து திருத்தி மாற்றி எழுதி பேச்சைத் தயாரிக்கலாம். இதற்கு மணிக்கணக்கில் நேரம் செலவிடலாம்.
நீங்களும் இப்படித்தான் பேச்சைத் தயாரிக்கிறீர்களா? சுலபமான ஒரு வழியை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? குறிப்புத்தாளை எப்படி தயாரிப்பது என்பதை கற்றுக்கொண்டுவிட்டால், எல்லாவற்றையும் எழுத வேண்டியிருக்காது. இதனால் பேசிப் பார்த்துப் பழகுவதற்கு அதிக நேரமும் கிடைக்கும். உங்கள் பேச்சு, கொடுப்பதற்கு சுலபமாக இருப்பதோடு கேட்பதற்கும் அதிக சுவாரஸ்யமாக இருக்கும்; கேட்போருக்கு இன்னுமதிக தூண்டுதலையும் அளிக்கும்.
சபையில் கொடுக்க வேண்டிய பொதுப் பேச்சுக்கு சொஸைட்டியே குறிப்புத்தாளை தந்துவிடுகிறது. பெரும்பாலான மற்ற பேச்சுக்களுக்கோ அது தரப்படுவதில்லை. ஒரு பொருள் (subject) அல்லது மையப்பொருள் (theme) மட்டுமே உங்களுக்கு நியமிக்கப்படும். அல்லது ஒரு பிரசுரத்திலிருந்து குறிப்பிட்ட பகுதியை கலந்தாலோசிக்கும்படி சொல்லப்படும். சிலசமயம் ஒருசில அறிவுரைகள் மட்டும் வழங்கப்படும். இப்படிப்பட்ட எல்லா நியமிப்புகளுக்கும் நீங்கள் சொந்தமாக குறிப்புத்தாளை தயாரிக்க வேண்டும்.
பக்கம் 41-ல் கொடுக்கப்பட்டுள்ள சாம்பிள், சுருக்கமான ஒரு குறிப்புத்தாளை எவ்வாறு தயாரிப்பது என்பதை புரிந்துகொள்ள உதவும். ஒவ்வொரு முக்கிய குறிப்பும் இடதுபக்க ஓரத்தில் ஆரம்பிப்பதையும், பெரிய எழுத்துக்களில் இருப்பதையும் கவனியுங்கள். ஒவ்வொரு முக்கிய குறிப்பின் கீழும் அதை ஆதரிக்கும் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்களை விவரிப்பதற்கு ஏற்ற கூடுதலான குறிப்புகள் அவற்றின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, இவை இடதுபக்க ஓரத்திலிருந்து சற்று தள்ளி ஆரம்பிக்கின்றன. இந்தக் குறிப்புத்தாளை கவனமாக ஆராயுங்கள். இரு முக்கிய குறிப்புகளும் மையப்பொருளோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதை கவனியுங்கள். உபகுறிப்புகள்கூட சுவாரஸ்யமான விஷயங்கள் மட்டுமே அல்ல என்பதை கவனியுங்கள். மாறாக, அவை ஒவ்வொன்றும் அவற்றிற்குரிய முக்கிய குறிப்பை ஆதரிக்கின்றன.
நீங்கள் தயாரிக்கும் குறிப்புத்தாள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள சாம்பிளைப் போலவே ஒருவேளை இருக்காது. ஆனால் இதில் உட்பட்டுள்ள நியமங்களை மட்டும் நீங்கள் புரிந்துகொண்டால், கணிசமான நேரத்திற்குள் தகவலை நன்கு ஒழுங்கமைத்து நல்ல பேச்சைத் தயாரித்துவிடலாம். எப்படி துவங்குவது?
பகுத்தறிந்து, தேர்ந்தெடுத்து, ஒழுங்கமைத்தல்
உங்கள் பேச்சிற்கு ஒரு மையப்பொருள் வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்லிவிடும் அளவுக்கு உங்கள் மையப்பொருள் பொதுப்படையான ஒன்றாக இருக்க முடியாது. நீங்கள் சொல்ல விரும்பும் முக்கிய கருத்தும் அதுவே, உங்கள் பொருளை எந்தக் கோணத்திலிருந்து கலந்தாலோசிப்பீர்கள் என்பதை சுட்டிக்காட்டுவதும் அதுவே. உங்களுக்கு ஒரு மையப்பொருள் நியமிக்கப்பட்டிருக்கிறது என்றால், ஒவ்வொரு முக்கிய வார்த்தையையும் கவனமாக பகுத்தறியுங்கள். பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையின் அடிப்படையில் அந்த மையப்பொருளை விவரிக்க வேண்டுமென்றால், மையப்பொருளை மனதில் வைத்தே அக்கட்டுரையை படியுங்கள். பேச்சுப் பொருள் மட்டும் கொடுக்கப்பட்டால், நீங்களே மையப்பொருளை தேர்ந்தெடுக்கலாம். இருந்தாலும் அதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கொஞ்சம் ஆராய்ச்சி செய்வது உதவியாக இருக்கலாம். திறந்த மனதோடு ஆராயும்போது புது கருத்துக்களை கண்டடைவீர்கள்.
இவற்றைச் செய்யும்போது, ‘இந்தத் தகவல் சபையாருக்கு ஏன் முக்கியமானது? என் குறிக்கோள் என்ன?’ என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். கட்டுரையிலுள்ளதை சொல்வது அல்லது மிக சுவாரஸ்யமான பேச்சைக் கொடுப்பது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கக்கூடாது; மாறாக, சபையாருக்கு பயனளிக்கும் விதமாக அளிப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். அந்தக் குறிக்கோள் உருப்பெற்றவுடன் அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பேச்சைத் தயாரிக்கும்போது அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் குறிக்கோளை தீர்மானித்து, அதற்கேற்ற மையப்பொருளை தேர்ந்தெடுத்த பிறகு (அல்லது கொடுக்கப்பட்ட மையப்பொருள் குறிக்கோளோடு எவ்வாறு பொருந்துகிறது என்பதை பகுத்தறிந்த பிறகு) ஆராய்ச்சியை அதன்பேரில் இன்னுமதிகமாக ஒருமுகப்படுத்தலாம். சபையாருக்கு குறிப்பான விதத்தில் பிரயோஜனமளிக்கும் தகவலைத் தேடுங்கள். பொதுப்படையான விஷயங்களோடு திருப்தியடைந்துவிடாதீர்கள்; உண்மையிலேயே பயனளிக்கும், தகவலளிக்கும் குறிப்பான விஷயங்களைத் தேர்ந்தெடுங்கள். எந்தளவு ஆராய்ச்சி செய்வது என்பதன்பேரில் எதார்த்தமாக இருங்கள். பெரும்பாலும், தேவைக்கும் அதிகமான தகவலை விரைவில் சேகரித்துவிடுவீர்கள், ஆகவே தெரிவுசெய்ய வேண்டியது அவசியமாக இருக்கும்.
மையப்பொருளைச் சுற்றி பேச்சை தயாரித்து உங்கள் குறிக்கோளை எட்டுவதற்கு என்னென்ன முக்கிய குறிப்புகளை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். இதுவே உங்கள் அடிப்படை குறிப்புத்தாளாக, பேச்சின் கட்டமைப்பாக இருக்கும். எத்தனை முக்கிய குறிப்புகள் இருக்க வேண்டும்? சிறிய பேச்சிற்கு இரண்டு இருக்கலாம், ஒரு மணிநேர பேச்சிற்கு பொதுவாக ஐந்து போதுமானதாக இருக்கும். முக்கிய குறிப்புகள் எவ்வளவு குறைவாக இருக்கின்றனவோ, அவ்வளவு அதிகமாக சபையார் அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.
மையப்பொருளும் முக்கிய குறிப்புகளும் மனதில் தெளிவான பிறகு, ஆராய்ச்சியில் சேகரித்த தகவலை ஒழுங்கமையுங்கள். முக்கிய குறிப்புகளோடு நேரடியாக சம்பந்தப்பட்டவை எவை என பாருங்கள். உங்கள் பேச்சிற்கு புதுமை சேர்க்கும் விவரங்களை தேர்ந்தெடுங்கள். முக்கிய குறிப்புகளை ஆதரிக்க வசனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவற்றை அர்த்தமுள்ள விதத்தில் நியாயங்காட்டி விளக்குவதற்கு ஏற்ற விவரங்களை குறித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் அதற்குரிய முக்கிய குறிப்பின்கீழ் எழுதி வையுங்கள். ஒரு தகவல் எந்த முக்கிய குறிப்புகளுக்குமே பொருந்தவில்லை என்றால், அது எவ்வளவுதான் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஒதுக்கிவிடுங்கள்; அல்லது மற்றொரு சமயம் பயன்படுத்துவதற்கு ஃபைலில் வைத்துக்கொள்ளுங்கள். மிகச் சிறந்த தகவலை மட்டுமே பேச்சிற்கு பயன்படுத்துங்கள். எக்கச்சக்கமான விஷயங்களை சொல்ல முயற்சி செய்தால் வேக வேகமாக பேச வேண்டியிருக்கும், சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் சொல்ல முடியாமல் போய்விடும். சபையாருக்கு உண்மையிலேயே பயன்தரும் ஒருசில குறிப்புகளை நன்கு எடுத்துச் சொன்னாலே போதும். குறித்த நேரத்திற்கு அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்!
ஏற்கெனவே செய்யவில்லை என்றால் இப்போது தகவல் அனைத்தையும் தர்க்கரீதியாக வரிசைப்படுத்துங்கள். சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா இதைச் செய்தார். தன் பொருளோடு சம்பந்தப்பட்ட எக்கச்சக்கமான தகவல்களை திரட்டிய பிறகு அவற்றை ‘தர்க்கரீதியாக வரிசைப்படுத்தினார்.’ (லூக். 1:3, NW) காலவரிசைப்படி அல்லது பொருளின்படி நீங்கள் தகவலை வரிசைப்படுத்தலாம்; ஒருவேளை காரணத்தையும் விளைவையும், அல்லது பிரச்சினையையும் தீர்வையும் மாறிமாறி சொல்லலாம்; மிகத் திறம்பட்ட விதத்தில் உங்கள் குறிக்கோளை அடைய எந்த முறை உதவுமோ அதைத் தேர்ந்தெடுங்கள். ஒரு கருத்திலிருந்து இன்னொரு கருத்திற்கு திடீரென தாவக்கூடாது. ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பை கேட்பவர்கள் எளிதாக புரிந்துகொள்ள வேண்டும், இணைத்துப் பார்க்க முடியாதபடி சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கக்கூடாது. அளிக்கப்படும் அத்தாட்சி, சபையாரை நியாயமான முடிவுக்கு வழிநடத்த வேண்டும். குறிப்புகளை வரிசைப்படுத்தும்போது சபையாருக்கு அது எப்படி தொனிக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். உங்கள் கருத்தை உடனடியாக புரிந்துகொள்வார்களா? உங்கள் மனதிலிருக்கும் குறிக்கோளுக்கு இசைய, கேட்டதை கடைப்பிடிக்கும்படி அவர்கள் தூண்டப்படுவார்களா?
அடுத்ததாக, உங்கள் பொருளின்பேரில் ஆர்வத்தைக் கிளறும் ஒரு முன்னுரையை தயாரியுங்கள்; நீங்கள் சொல்லப்போகும் விஷயங்கள் மிகவும் பயன்மிக்கவை என்பதை சபையாருக்கு உணர்த்தும் விதத்தில் அந்த முன்னுரை அமைய வேண்டும். முதல் சில வரிகளை எழுதி வைத்துக் கொள்வது உதவியாக இருக்கலாம். இறுதியாக, தூண்டுதலளிக்கும் முடிவுரையை உங்கள் குறிக்கோளுக்கு இசைய தயாரியுங்கள்.
முன்கூட்டியே உங்கள் குறிப்புத்தாளை தயாரித்துவிட்டால், அதை நன்கு மெருகூட்ட போதுமான நேரம் இருக்கும். சில கருத்துக்களை ஆதரிக்க புள்ளிவிவரத்தையோ உதாரணத்தையோ அனுபவத்தையோ சொல்ல வேண்டிய அவசியத்தை நீங்கள் உணரலாம். சமீபத்திய சம்பவத்தை அல்லது சபையாரின் அக்கறைக்குரிய விஷயத்தை சொன்னால் பேச்சு தங்களுக்கு எப்படி பொருந்துகிறது என கேட்போர் உடனடியாக புரிந்துகொள்வார்கள். உங்கள் பேச்சை மறுபார்வை செய்யும்போது, சபையாருக்கு ஏற்றவாறு அதை மாற்றியமைக்க இன்னும் நிறைய யோசனைகள் தோன்றலாம். நல்ல தகவலை திறம்பட்ட பேச்சாக தயாரித்தளிக்க, பகுத்தறிந்து மெருகூட்டுவது அவசியம்.
சில பேச்சாளர்களுக்கு மற்றவர்களைவிட சற்று விரிவான குறிப்புத்தாள் அவசியமாக இருக்கலாம். ஆனால் ஒருசில முக்கிய குறிப்புகளின்கீழ் விஷயங்களை ஒழுங்கமைத்து, இவற்றை ஆதரிக்காத வீண் தகவலை அகற்றி, கருத்துக்களை தர்க்கரீதியாக வரிசைப்படுத்தினால், கொஞ்ச காலத்திற்குள் அனுபவம் வந்துவிடும்; அதன்பின் எல்லாவற்றையும் எழுதி வைக்க வேண்டிய அவசியமே இருக்காது. அதனால் எவ்வளவு நேரம் மிச்சமாகும்! உங்கள் பேச்சுக்களின் தரமும் கூடும். தேவராஜ்ய ஊழியப் பள்ளி அளிக்கும் கல்வியிலிருந்து உண்மையிலேயே பயன்பெறுகிறீர்கள் என்பது தெளிவாகும்.