அதிகாரம் 2
கடவுளிடத்திலிருந்து வந்த கடிதம்
எந்தப் புத்தகத்தை நீ எல்லாவற்றையும் பார்க்கிலும் மிக அதிகமாய் விரும்புகிறாய்? எனக்குச் சொல். — சில பிள்ளைகள் மிருகங்களைப்பற்றிச் சொல்லுகிற புத்தகத்தைப் பொறுக்கி எடுப்பார்கள். மற்றும் சிலர் நிறைய படங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தைத் தெரிந்தெடுப்பார்கள். இந்தப் புத்தகங்களை வாசிப்பது மகிழ்ச்சியைத் தரக்கூடும்.
ஆனால், கடவுளைப்பற்றிய சத்தியத்தை நமக்குச் சொல்லுகிற புத்தகங்களே உலக முழுவதிலும் மிகச் சிறந்த புத்தகங்களாகும். இந்தப் புத்தகங்களில் ஒன்று எல்லாவற்றையும் பார்க்கிலும் மிக அதிக அருமையானதாக இருக்கிறது. அது எது என்று உனக்குத் தெரியுமா? — பைபிளே.
பைபிள் ஏன் அவ்வளவு முக்கியமானது? — ஏனென்றால் அது கடவுளிடத்திலிருந்து வந்தது. அது அவரைப் பற்றியும் அவர் நமக்குச் செய்யப்போகிற நல்ல காரியங்களைப் பற்றியும் நமக்குச் சொல்லுகிறது. மேலும் அவரைப் பிரியப்படுத்த நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் அது நமக்குக் காட்டுகிறது. அது கடவுளிடத்திலிருந்து வந்த ஒரு கடிதத்தைப்போல் இருக்கிறது.
கடவுள், இந்த முழு பைபிளையும் பரலோகத்தில் எழுதி பின்பு அதை மனிதனுக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அதிலுள்ள எண்ணங்கள் கடவுளிடத்திலிருந்து வந்தன. ஆனால் அதை எழுதுவதில் மிகப் பெரும் பாகத்தைச் செய்ய கடவுள் பூமியிலிருந்த தம்முடைய ஊழியரை உபயோகித்தார்.
இதை அவர் எப்படிச் செய்தார்? — இதை விளங்கிக்கொள்ள ஓர் உதாரணம் நமக்கு உதவி செய்யக்கூடும். ஆட்கள் ரேடியோவில் ஒரு குரலைக் கேட்கையில் அது வெகு தூரத்திலிருக்கும் யாரோ ஒருவரிடமிருந்து வருகிறது. அவர்கள் அந்த ஆளைக் காணமுடியாது, ஆனால் அவன் சொல்வதைக் கேட்கக்கூடும் அல்லவா?
மனிதர் தங்கள் வானவெளி ஊர்திகளில் தூர சந்திரனுக்குங்கூட செல்லக்கூடும், மேலும் அங்கிருந்து திரும்ப பூமிக்குச் செய்திகளையும் அனுப்பக்கூடும். இது உனக்குத் தெரியும் அல்லவா? — மனிதர் இதைச் செய்யக்கூடும் என்றால், கடவுள் பரலோகத்திலிருந்து செய்திகளை அனுப்பக்கூடுமா? — நிச்சயமாகவே அவரால் கூடும்; மனிதனுக்கு ரேடியோவோ டெலிவிஷனோ இருப்பதற்கு வெகு வெகு காலத்திற்கு முன்பாகவே அவர் இதைச் செய்தார்.
மோசே, கடவுள் பேசின மனிதரில் ஒருவனாக இருந்தான். மோசே கடவுளைப் பார்க்க முடியவில்லை, ஆனால் அவன் அவருடைய குரலைக் கேட்க முடிந்தது. இது நடந்தபோது பத்து லட்சக்கணக்கான ஆட்கள் அங்கே இருந்தனர். கடவுள் ஒரு முழு மலையை அதிரச் செய்தபோது அவர்கள் அதைக் கண்டனர். அங்கே இடி முழுக்கமும் மின்னலும் உண்டாயிற்று. பரலோகத்திலிருந்து ஒரு குரல் வந்தபோது அவர்கள் அதைக் கேட்டார்கள். கடவுள் பேசினார் என்பதை அவர்கள் அறிந்தார்கள். பின்னால் கடவுள் மறுபடியுமாக மோசேயினிடம் பேசினார், கடவுள் சொன்ன காரியங்களை மோசே எழுதி வைத்தான். அவன் எழுதினது பைபிளில் இருக்கிறது.—யாத்திராகமம் 19:3–20:21.
மோசே ஒருவன் மாத்திரமே எழுதி வைக்கவில்லை. பைபிளின் பாகங்களை எழுத ஏறக்குறைய நாற்பது மனிதரைக் கடவுள் உபயோகித்தார். எதிர்காலத்தில் கடவுள் செய்யப்போகிற காரியங்களை அவர்கள் எழுதி வைத்தார்கள். அந்தக் காரியங்கள் நடப்பதற்கு முன்பாகவே அவர்கள் அவற்றை எப்படி அறிந்தார்கள்? — கடவுள் அவர்களிடம் பேசியிருந்தார்.
பெரிய போதகராகிய இயேசு பூமியில் இருந்த காலத்திற்குள்ளாக, பைபிளின் பெரும்பாகம் எழுதப்பட்டிருந்தது. இந்தப் பெரிய போதகர் பரலோகத்தில் இருந்து வந்தார் என்பதை நினைவுகூருங்கள். கடவுள் செய்திருந்ததை அவர் அறிந்திருந்தார். பைபிள் கடவுளிடத்திலிருந்து வந்ததென்று அவர் நம்பினாரா? — ஆம், அவர் நம்பினார்.
கடவுளுடைய வேலைகளைப் பற்றி இயேசு ஜனங்களிடம் பேசினபோது, அவர் பைபிளிலிருந்து வாசித்தார். சில சமயங்களில் அது என்ன சொன்னதென்பதை நினைவிலிருந்து அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
மேலும் இயேசு கடவுளிடத்திலிருந்து அதிகப்படியான தகவலை நமக்குக் கொண்டுவந்தார். ‘கடவுளிடத்திலிருந்து நான் கேட்ட காரியங்களையே நான் இந்த உலகத்தில் பேசுகிறேன்,’ என்று அவர் சொன்னார். இயேசு கடவுளுடன் வாழ்ந்திருந்ததனால் கடவுளிடத்திலிருந்து பல காரியங்களைக் கேட்டிருந்தார். இயேசு சொன்ன இந்தக் காரியங்களை நாம் எங்கே வாசிக்கக்கூடும்? — பைபிளிலேயே. நாம் வாசிப்பதற்காகவே இதெல்லாம் எழுதி வைக்கப்பட்டது.—யோவான் 8:26.
நிச்சயமாகவே, எழுதுவதற்குக் கடவுள் மனிதரை உபயோகித்தபோது, அவர்கள் தாங்கள் அனுதினமும் உபயோகித்த மொழியில் அதை எழுதினார்கள். ஆகவே பைபிளின் ஒரு பாகம் எபிரெயுவில் எழுதப்பட்டது, சிறிது அரமேயிக்கிலும், பேரளவில் கிரேக்கிலும் எழுதப்பட்டது. இன்று பெரும்பான்மையோர் அந்த மொழிகளை வாசிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். உனக்குத் தெரியுமா? —
இதன் காரணமாகவே பைபிளானது மற்ற மொழிகளில் பெயர்த்து எழுதப்பட்டிருக்கிறது. இன்று பைபிளின் பாகங்கள் ஆயிரத்து நானூருக்கு மேற்பட்ட மொழிகளில் இருக்கின்றன. இதைச் சற்று யோசித்துப்பார்! பைபிளானது எல்லா இடங்களிலும் இருக்கிற ஜனங்களுக்கு எழுதப்பட்ட கடவுளுடைய கடிதம். ஆகவே அது பல மொழிகளில் இருக்க வேண்டியதாக இருக்கிறது. எத்தனை தடவைகள் அது பிரதி எடுக்கப்பட்டாலும் கவலையில்லை, அதன் செய்தி கடவுளிடத்திலிருந்தே வந்தது.
பைபிள் என்ன சொல்லுகிறதோ அது நமக்கு முக்கியமானது. அது வெகு காலத்திற்கு முன்பாக எழுதப்பட்டது. ஆனால் அது இன்று நடந்துகொண்டிருக்கும் காரியங்களைப் பற்றிச் சொல்லுகிறது. மேலும், சமீப எதிர்காலத்தில் கடவுள் என்ன செய்யப்போகிறார் என்பதையும் அது நமக்குச் சொல்லுகிறது. ஆ, அது சொல்வது கிளர்ச்சியூட்டுகிறது! அது அதிசயமான ஒரு நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது.
நாம் எப்படி வாழும்படி கடவுள் விரும்புகிறார் என்பதையுங்கூட பைபிள் நமக்குச் சொல்லுகிறது. எது சரி எது தவறு என்பதை அது நமக்குச் சொல்லுகிறது. நீ இதைத் தெரிந்துகொள்வது அவசியம். அவ்விதமே நானும் தெரிந்துகொள்ள வேண்டும். கெட்ட காரியங்களைச் செய்த ஆட்களைப் பற்றியும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அது நமக்குச் சொல்லுகிறது. இவ்வாறாக அவர்களுக்கு வந்த தொந்தரவை நாம் தவிர்க்கக்கூடும். மேலும் சரியான காரியங்களைச் செய்த ஆட்களைப் பற்றியும், அவர்களுக்கு உண்டான நல்ல பலன்களையுங்கூட அது நமக்குச் சொல்லுகிறது. இதெல்லாம் நம்முடைய நலனுக்காக எழுதி வைக்கப்பட்டது.
ஆனால் பைபிளிலிருந்து மிக அதிகத்தை அடைய, ஒரு கேள்விக்குப் பதிலை நாம் தெரிந்திருப்பது அவசியம். அந்தக் கேள்வி இதுவே: “நமக்குப் பைபிளைக் கொடுத்தவர் யார்?” நீ என்ன சொல்வாய்? — ஆம், அது முழுவதும் கடவுளிடத்திலிருந்து வந்தது.
ஆனால் சில ஆட்கள், கடவுள் பைபிளில் சொல்லும் காரியங்களுக்குச் செவிகொடுப்பதில்லை. அவர்கள் வெறுமென தாங்கள் விரும்புகிற முறையில் வாழ்கின்றனர். இது சரியென்று நீ நினைக்கிறாயா? — கடவுளைப் பார்க்கிலும் அதிகம் வேறு எவருக்காவது தெரியுமென்று நீ நினைக்கிறாயா? — நாம் உண்மையில் விவேகமுள்ளவர்கள் என்று காட்டுவதற்கான வழி கடவுளுக்குச் செவிகொடுப்பதே. பின்பு அவர் சொல்வதை நாம் செய்ய வேண்டும்.
ஆகவே பைபிளை ஒன்றாக வாசிக்க நாம் நேரம் எடுப்பது அவசியம். நாம் மிக அதிகமாய் நேசிக்கும் ஒருவரிடத்திலிருந்து நமக்கு ஒரு கடிதம் வருகையில், நாம் அதை மறுபடியும் மறுபடியுமாக வாசிக்கிறோம். அது நமக்கு மிகவும் அருமையாயிருக்கிறது. இந்த விதமாகவே பைபிள் நமக்கு இருக்கவேண்டும், ஏனென்றால் அது, நம்மை மிக மிக அதிகமாய் நேசிக்கும் ஒருவரிடத்திலிருந்து வந்த ஒரு கடிதமாக இருக்கிறது. அது கடவுளிடத்திலிருந்து வந்த கடிதம்.
(இப்பொழுது மேலும் ஒரு சில நிமிடங்கள் எடுத்து, பைபிள் மெய்யாகவே கடவுளுடைய வார்த்தை, நம்முடைய நன்மைக்காக எழுதப்பட்டது என்பதைக் காட்டும் பின்வருகிற வேதவசனங்களை வாசியுங்கள்: 2 தீமோத்தேயு 3:16, 17; 2 பேதுரு 1:20, 21; ரோமர் 15:4.)