உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lr அதி. 2 பக். 16-20
  • அன்பான கடவுள் எழுதிய கடிதம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பான கடவுள் எழுதிய கடிதம்
  • பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • இதே தகவல்
  • கடவுளிடத்திலிருந்து வந்த கடிதம்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • பைபிள் உண்மையில் கடவுளால் கொடுக்கப்பட்டதா?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • பைபிளில் இருக்கும் சந்தோஷமான செய்தியை கடவுள்தான் சொன்னாரா?
    கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!
  • கடவுளிடமிருந்து ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
lr அதி. 2 பக். 16-20

அதிகாரம் 2

அன்பான கடவுள் எழுதிய கடிதம்

உனக்கு எந்த புத்தகம் ரொம்ப பிடிக்கும்?— சில பிள்ளைகளுக்கு மிருகங்களைப் பற்றிய புத்தகம் பிடிக்கும். இன்னும் சில பிள்ளைகளுக்கு நிறைய படங்கள் இருக்கிற புத்தகம் பிடிக்கும். இந்த மாதிரி புத்தகங்கள் படிப்பதற்கு ஜாலியாக இருக்கும்.

ஆனால் கடவுளைப் பற்றிய உண்மைகளை நமக்கு சொல்லும் புத்தகங்கள்தான் மற்ற எல்லா புத்தகங்களையும்விட நல்லவை. அப்படிப்பட்ட நல்ல புத்தகங்களில் ஒன்று மற்ற எல்லாவற்றையும்விட மிகவும் மதிப்புள்ளது. அது எந்தப் புத்தகம் என்று உனக்குத் தெரியுமா?— அதுதான் பைபிள்.

பைபிள் ஏன் ரொம்ப முக்கியமான புத்தகம் என்று நீ நினைக்கிறாய்?— ஏனென்றால் அது கடவுள் கொடுத்த புத்தகம். அவரைப் பற்றிய விஷயங்கள் அதில் இருக்கின்றன. அவர் நமக்காக என்னென்ன நல்ல காரியங்களை செய்யப் போகிறார் என்றும் அது சொல்கிறது. அவருக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்றுகூட விளக்குகிறது. அது கடவுள் நமக்குத் தந்திருக்கும் கடிதம்.

கடவுள் நினைத்திருந்தால், முழு பைபிளையும் பரலோகத்திலேயே எழுதிவிட்டு, பின் அதை மனிதர்களுக்கு கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. பைபிளை எழுதுவதற்கு, தன்னை வணங்கி வந்த ஆட்களையே பயன்படுத்தினார்; ஆனால் தன்னுடைய யோசனைகளைத்தான் எழுத வைத்தார்.

அதை கடவுளால் எப்படி செய்ய முடிந்தது தெரியுமா?— எப்படி என்று புரிந்துகொள்வதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம். நாம் ரேடியோவில் ஒருவருடைய குரலைக் கேட்கிறோம், ஆனால் உண்மையில் அவர் ரொம்ப தூரத்தில் இருப்பார். அதேபோல் மற்ற நாடுகளில் உள்ளவர்களைக்கூட டிவியில் பார்க்கிறோம், அவர்கள் பேசுவதையும் கேட்கிறோம்.

மனிதர்களால் சந்திரனுக்கே போக முடியும், அங்கிருந்து பூமிக்கு செய்திகளை அனுப்பவும் முடியும். அது உனக்குத் தெரியும்தானே?— மனிதர்களாலேயே இதை செய்ய முடியும் என்றால் கடவுளால் பரலோகத்திலிருந்து செய்திகளை அனுப்ப முடியாதா? நீ என்ன சொல்கிறாய்?— நிச்சயமாக அவரால் முடியும். சொல்லப்போனால், மனிதன் ரேடியோவையும் டிவியையும் கண்டுபிடிப்பதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே அவர் அதை செய்துவிட்டார்.

A man on the moon communicates with people on the earth

கடவுள் ரொம்ப தூரத்தில் இருந்தாலும் நம்மோடு பேச முடியும் என்று எப்படி சொல்லலாம்?

மோசே என்பவர் கடவுள் பேசியதைக் கேட்டார். அவரால் கடவுளைப் பார்க்க முடியவில்லை, ஆனால் கடவுளுடைய குரலை மட்டும் கேட்க முடிந்தது. இது நடந்தபோது லட்சக்கணக்கான ஆட்கள் அங்கு இருந்தார்கள். அப்போது கடவுள் ஒரு பெரிய மலையையே கிடுகிடுவென ஆட வைத்தார்; இடி இடிக்கும் சத்தம் கேட்டது, மின்னல் அடித்தது. கடவுள்தான் பேசினார் என்று அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது, ஆனால் அவர்களுக்கு ஒரே பயம். அதனால், ‘கடவுள் எங்களிடம் பேச வேண்டாம், அவர் பேசினால் நாங்கள் செத்தே போய்விடுவோம்’ என்று மோசேயிடம் சொன்னார்கள். அதன்பின், கடவுள் சொன்ன விஷயங்களை மோசே எழுதி வைத்தார். அவர் எழுதியதெல்லாம் இப்போது பைபிளில் இருக்கிறது.—⁠யாத்திராகமம் 20:18-21.

பைபிளில் உள்ள முதல் ஐந்து புத்தகங்களை மோசே எழுதினார். ஆனால் அவர் மட்டுமே பைபிளை எழுதவில்லை. கிட்டத்தட்ட 40 பேரை கடவுள் அதற்காக உபயோகித்தார். இவர்கள் ரொம்ப காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள். பைபிளை எழுதி முடிப்பதற்கு நிறைய வருஷங்கள் பிடித்தது. அதாவது, கிட்டத்தட்ட 1,600 வருஷங்கள் எடுத்தது! ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? பைபிளை எழுதிய சிலர் ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததுகூட இல்லை, இருந்தாலும் அவர்கள் எழுதிய எல்லா விஷயங்களுமே முழுக்க முழுக்க ஒத்துப்போகின்றன.

Solomon, Peter and John, Moses, Luke, and Amos

பைபிளை எழுதிய இவர்களுடைய பெயர்கள் என்ன?

பைபிளை எழுதுவதற்கு கடவுள் பயன்படுத்திய சிலர் புகழ் பெற்றவர்கள். உதாரணத்திற்கு, முதலில் மேய்ப்பராக இருந்த மோசே பிற்பாடு இஸ்ரவேல் தேசத்திற்கே தலைவரானார். இன்னொருவர் சாலொமோன்; அவர் ஒரு ராஜாவாக இருந்தார், அப்போது வாழ்ந்த எல்லாரையும்விட மகா புத்திசாலியாக இருந்தார், அதோடு பெரிய பணக்காரர் வேறு. பைபிளை எழுதிய மற்றவர்களோ ரொம்ப சாதாரண ஆட்கள். உதாரணத்திற்கு, ஆமோஸ் என்பவர் அத்திமரத் தோட்டக்காரராகத்தான் இருந்தார்.

பைபிளை எழுதிய இன்னொருவர் டாக்டராக இருந்தார். அவருடைய பெயர் உனக்குத் தெரியுமா?— அவருடைய பெயர்தான் லூக்கா. இன்னொரு நபர் வரிகளை வசூலித்து வந்தார். அவர் பெயர் மத்தேயு. வக்கீலாக இருந்த ஒருவரும் பைபிளை எழுதினார். யூதர்களுக்கு கடவுள் தந்த சட்டதிட்டங்களை அவர் மிக நன்றாக அறிந்திருந்தார். அவர்தான் மற்றவர்களைவிட நிறைய பைபிள் புத்தகங்களை எழுதினார். அவருடைய பெயர் என்ன தெரியுமா?— அவருடைய பெயர் பவுல். இயேசுவின் நண்பர்களாக இருந்த பேதுருவும் யோவானும்கூட பைபிளை எழுதினார்கள். அவர்கள் மீன் பிடிப்பவர்களாக இருந்தார்கள்.

பைபிளை எழுதிய நிறைய பேர், கடவுள் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்று எழுதினார்கள். அதெல்லாம் நடக்கும் என்று அவர்களுக்கு எப்படி முன்னமே தெரிந்தது?— கடவுள்தான் அவர்களிடம் சொன்னார். ஆமாம், பின்னால் என்னென்ன நடக்கும் என்பதை அவர்களிடம் சொன்னார்.

பெரிய போதகரான இயேசு இந்தப் பூமிக்கு வந்த சமயத்தில், பைபிளில் முக்கால்வாசி பாகம் எழுதப்பட்டிருந்தது. அவர் ஏற்கெனவே பரலோகத்தில் இருந்தார் என்று நாம் படித்தோம், ஞாபகம் இருக்கிறதா? ஆகவே கடவுள் என்ன செய்தார் என்று அவருக்கு தெரியும். அப்படியென்றால் பைபிளை கடவுள்தான் எழுதினார் என்று அவர் நம்பினாரா?— ஆமாம், நம்பினார்.

கடவுளுடைய செயல்களைப் பற்றி ஜனங்களிடம் பேசியபோது, இயேசு பைபிளிலிருந்து வாசித்துக் காட்டினார். சிலசமயம் பைபிள் வசனங்களை மனப்பாடமாக சொன்னார். கடவுளிடமிருந்து நேரடியாகக் கேட்ட விஷயங்களைக்கூட மனிதர்களுக்கு சொன்னார். ‘அவரிடம் கேட்ட விஷயங்களைத்தான் நான் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு சொல்கிறேன்’ என்றார். (யோவான் 8:26) இயேசு கடவுளோடு இருந்தார், ஆகவே அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கேட்டு தெரிந்து வைத்திருந்தார். இயேசு சொன்ன அந்த விஷயங்களை நாம் எதிலிருந்து படித்து தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறாய்?— பைபிளிலிருந்து படித்துத் தெரிந்துகொள்ளலாம். அந்த விஷயங்களெல்லாம் நமக்காகத்தான் எழுதப்பட்டிருக்கின்றன.

கடவுள் பயன்படுத்திய மனிதர்கள், தாங்கள் தினமும் பேசிய சாதாரண பாஷையிலேயே பைபிளை எழுதினார்கள். ஆகவேதான் பைபிளில் அதிகமான பகுதி எபிரெயு என்ற பாஷையில் எழுதப்பட்டது, சில பகுதிகள் அரமேயிக் என்ற பாஷையிலும் இன்னும் நிறைய பகுதிகள் கிரேக்க பாஷையிலும் எழுதப்பட்டன. இன்று நிறைய பேருக்கு அந்த பாஷைகள் தெரியாது. அதனால் நமக்கு தெரிந்த பாஷைகளில் பைபிள் எழுதப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பைபிளின் பகுதிகள் 2,260-⁠க்கும் அதிகமான பாஷைகளில் கிடைக்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? எல்லா இடங்களிலும் இருக்கும் மக்களுக்கு கடவுள் தந்திருக்கும் கடிதம்தான் பைபிள். அதனால், அது எத்தனை மொழிகளில் எழுதப்பட்டாலும் சரி, அதில் இருப்பது கடவுளுடைய செய்திதான்.

பைபிள் சொல்லும் விஷயங்கள் நமக்கு முக்கியமானவை. அது ரொம்ப காலத்திற்கு முன்பு எழுதப்பட்டாலும், இன்று நடக்கும் காரியங்களைப் பற்றி சொல்கிறது. சீக்கிரத்தில் கடவுள் என்ன செய்யப் போகிறார் என்றும் சொல்கிறது. அதைப் படித்தால் அப்படியே சிலிர்த்துப் போவோம்! அருமையான ஒரு நம்பிக்கையை அது நமக்கு தருகிறது.

An older boy reads the Bible to two small children

நீ பைபிளிலிருந்து என்னென்ன விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்?

நாம் எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதைக்கூட பைபிள் சொல்கிறது. சரி எது தவறு எது என்று அது நமக்குக் காட்டுகிறது. அதையெல்லாம் நானும் நீயும் தெரிந்திருக்க வேண்டும். கெட்டவர்களைப் பற்றியும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. இதன் மூலம், அவர்கள் பட்ட வேதனையை நாம் தவிர்க்க முடிகிறது. அதோடு, நல்லவர்களைப் பற்றியும், அவர்களுக்கு எப்படி நல்லது நடந்தது என்பதைப் பற்றியும்கூட சொல்கிறது. அதெல்லாம் நம்முடைய நன்மைக்காக எழுதி வைக்கப்பட்டது.

ஆனால் நாம் பைபிளிலிருந்து மிக அதிகமாக பயன் பெற வேண்டுமென்றால், ஒரு கேள்விக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும். பைபிளை யார் நமக்கு கொடுத்தது? என்பதுதான் அந்தக் கேள்வி. நீ என்ன பதில் சொல்வாய்?— ஆமாம், முழு பைபிளையும் கடவுள்தான் கொடுத்திருக்கிறார். இப்போது நாம் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று எப்படி காட்டலாம்?— கடவுள் சொல்வதைக் கேட்டு நடப்பதன் மூலமே காட்டலாம்.

எனவே ஒன்று சேர்ந்து பைபிளைப் படிப்பதற்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டும். நமக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஒருவர் கடிதம் எழுதினால், அதை திரும்பத் திரும்ப படிக்கிறோம் அல்லவா? அது நமக்கு ரொம்ப மதிப்புள்ள ஒன்று. அப்படித்தான் பைபிளை நாம் நினைக்க வேண்டும், ஏனென்றால் நம்மீது கொள்ளைப் பிரியம் வைத்திருப்பவர் கொடுத்துள்ள கடிதம் அது. ஆமாம், அன்பான கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் கடிதம் அது.

இப்போது கொஞ்ச நேரத்திற்கு சில வசனங்களை வாசித்துப் பார்க்கலாம்; பைபிள் உண்மையிலேயே கடவுளால் எழுதப்பட்டது, அதுவும் நம்முடைய நன்மைக்காக எழுதப்பட்டது என்று இந்த வசனங்கள் காட்டுகின்றன: ரோமர் 15:4; 2 தீமோத்தேயு 3:16, 17; 2 பேதுரு 1:20, 21.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்