அதிகாரம் 31
தண்ணீர் ஓர் உலகத்தை வாரிக்கொண்டு போகிறது
உனக்கு விளையாட்டுகள் பிரியமா? — எனக்குப் பிரியம். அவை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடும் அல்லவா? — ஆனால் விளையாடி மகிழ்ந்து கொண்டிருப்பதிலேயே மட்டுக்குமீறி மனதைச் செலுத்திக் கொண்டிருப்பதில் அபாயம் இருக்கிறதென்பது உனக்குத் தெரியுமா? — ஆம், அபாயம் உண்டு. கடவுளுக்குச் செவிகொடுப்பதற்கு நேரமெடுக்க நாம் தவறிவிடக்கூடும். இது உனக்குத் தெரியுமா? —
முன் ஒரு தடவை ஒரு முழு உலக ஜனங்களுக்கும் இது சம்பவித்திருந்தது என்று பெரிய போதகர் அறிந்திருந்தார். அவர் சொன்னதாவது: ‘அந்த ஜனங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விவாகஞ்செய்து கொண்டிருந்தார்கள்.’ சாப்பிடுவதோ குடிப்பதோ விவாகஞ்செய்வதோ தவறல்ல. ஆனால் இந்தக் காரியங்களைச் செய்வதில் அவர்கள் அவ்வளவாய் மனம் மூழ்கி இருந்ததால் கடவுளுக்குச் செவி கொடுக்க அவர்கள் நேரம் எடுக்கவில்லை. இது கெட்ட காரியமாயிருந்தது.
அந்த ஜனங்களுக்கு என்ன நடந்தது? — “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்,” என்று இயேசு சொன்னார். நோவாவின் நாட்களில் மாண்ட அந்த ஜனங்களைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு ஜலப்பிரளயத்தின் தண்ணீர்கள் பூமி முழுவதையும் மூடின.—மத்தேயு 24:37-39.
அந்த ஜனங்களுக்கு என்ன சம்பவித்ததோ அது இன்று நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது என்று இயேசு சொன்னார். ஆகவே நோவாவின் நாளில் ஏற்பட்ட அந்த ஜலப்பிரளயத்தைப் பற்றிய எல்லா காரியங்களையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமானது.
முதலாவதாக, யெகோவா தேவன் ஏன் அந்த ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தார்? — ஏனென்றால் அந்த ஜனங்கள் மிகக் கெட்ட காரியங்களைச் செய்து வந்தனர். என்றபோதிலும் கடவுளுடைய தயவைக் கண்டடைந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் யார்? — அவனே நோவா. நோவா யெகோவா தேவனை நேசித்தான். கடவுளுக்குச் செவிகொடாமல் போகும் அளவுக்கு அவன் மனம் ஒருபோதும் வேறுகாரியங்களில் மூழ்கியிருக்கவில்லை. நாமுங்கூட அவ்விதம் இருக்க வேண்டும் அல்லவா? —
கெட்ட காரியங்களை விடாமல் செய்து கொண்டிருந்த ஜனங்கள் யாவரையும் தாம் அழிக்கப் போவதாக ஒரு நாள் யெகோவா நோவாவினிடம் கூறினார். பூமி முழுவதையும், மலைகளையுங்கூட தண்ணீர் மூடும்படியாக அவ்வளவு அதிக மழை பெய்யும்படி கடவுள் செய்யப் போகிறவராக இருந்தார்.
இந்தத் தண்ணீர் யாவும் விழுகையில் நோவாவுங்கூட மாண்டு போவானா? — இல்லை; யெகோவா அவனைக் காப்பாற்றுவார். ஒரு பெரிய பேழையைக் கட்டும்படி யெகோவா நோவாவுக்குச் சொன்னார். பேழை என்பதானது ஒரு படகைப் போன்றது, ஆனால் அது ஒரு பெரிய நீண்ட பெட்டியைப் போல் பெரும்பாலும் தோன்றும். அது தண்ணீரில் மிதக்கும். நோவாவும் அவனுடைய குடும்பமும் அநேக மிருகங்களும் அதற்குள் பத்திரமாய் இருக்கும்படியாக அந்தப் பேழையைப் போதிய அளவு பெரிதாகக் கட்டும்படி கடவுள் அவனுக்குச் சொன்னார்.
இதற்கு முன்பாக நோவா ஒரு பேழையை ஒருபோதும் கட்டினதில்லை. ஆனால் அதை எப்படிச் செய்வதென்று கடவுள் அவனுக்குச் சொன்னார். நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் வெகு கடினமாக உழைத்தனர். அவர்கள் பெரிய மரங்களை வெட்டினார்கள். அந்த மரங்களிலிருந்து வந்த கட்டைகளைக்கொண்டு அவர்கள் இந்தப் பேழையை ஒன்றாகக் கட்டியமைக்க ஆரம்பித்தனர். இந்தப் பேழை அவ்வளவு பெரியதாக இருந்ததனால் அது பல வருடங்கள் எடுத்தது.
பேழைக்குள் சென்று காப்பாற்றப்படும்படியான ஒரு வாய்ப்பை யெகோவா மற்ற ஆட்களுக்குக் கொடுத்தாரா? — ஆம், கொடுத்தார். பிரசங்கிக்கும்படி யெகோவா நோவாவுக்குக் கூறினார். ஆகவே அந்தப் பேழை கட்டப்பட்டு வந்த அந்த வருடங்களிலெல்லாம், நோவா வரப்போகிற அந்த ஜலப்பிரளயத்தைப் பற்றி ஜனங்களை எச்சரித்து வந்தான்.
அவர்களில் யாராவது செவிகொடுத்தார்களா? — நோவாவின் குடும்பத்தார் மாத்திரமே செவிகொடுத்தனர். மற்றவர்கள் எல்லோரும் மற்றக் காரியங்களைச் செய்வதில் மட்டுக்குமீறி ஆழ்ந்திருந்தனர். தாங்கள் அவ்வளவு கெட்டவர்களாக இருப்பதாய் அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் கவனித்துக் கேட்கவும் நேரமெடுக்கவில்லை.
கடைசியாய், யெகோவா காப்பாற்ற விரும்பின எல்லா மிருகங்களும் பேழைக்குள் கொண்டுவரப்பட்டன. இப்பொழுது ஆட்களும் பேழைக்குள் செல்வதற்கான நேரமாகிவிட்டது. நோவாவும் அவனுடைய குடும்பத்தாரும் உள்ளே சென்றனர். அப்பொழுது யெகோவா கதவை மூடினார். வேறு எவராவது உள்ளே செல்வதற்கு நேரம் வெகு பிந்திவிட்டது.
வெளியே இருந்த ஆட்கள், ஜலப்பிரளயம் வருமென்று இன்னும் நம்பவில்லை. ஆனால் திடீரென்று தண்ணீர் விழ ஆரம்பித்தது! நோவா சொன்னது சரியே!
அது வெறுமென வழக்கமாகப் பெய்யும் மழையாக இருக்கவில்லை. அது மிகக் கடுமையான மழையாக இருந்தது. சீக்கிரத்தில் தண்ணீர் பெரிய நதிகளைப்போல் மிகுந்த இரைச்சல் உண்டாக்கிக்கொண்டிருந்தது. பெரிய மரங்களைப் பெயர்த்துத் தள்ளிற்று, பெரிய கற்பாறைகளைச் சிறு கூழாங்கற்களைப்போல் உருட்டிப் புரட்டிச் சென்றது.
பேழைக்கு வெளியே இருந்த ஆட்களைப் பற்றியதென்ன? — ‘ஜலப் பிரளயம் வந்து அவர்கள் அனைவரையும் வாரிக்கொண்டு போயிற்று,’ என்று இயேசு சொன்னார். அவர்கள் ஒரு குன்றின் மேல் ஏறினபோதிலும், அது உதவியாக இல்லை. நாற்பது பகல்களும் நாற்பது இரவுகளுமாக அந்தப் பெரும் மழை விடாமல் பெய்துகொண்டே இருந்தது. சீக்கிரத்தில் பூமி முழுவதும் தண்ணீரால் மூடப்பட்டது. பேழைக்கு வெளியே இருந்த எல்லா ஆட்களும் இப்பொழுது மாண்டு விட்டனர். ஏன்? — இயேசு சொன்ன பிரகாரம், ‘அவர்கள் செவி கொடுக்கவில்லை!’
ஆனால் பேழையோ அங்கே தண்ணீரின் மேல் மிதந்து கொண்டிருந்தது. நோவாவும், அவனுடைய குடும்பத்தாரும் மிருகங்களும் உள்ளே பத்திரமாய் இருந்தனர். தமக்குச் செவிகொடுத்த ஆட்களை யெகோவா காப்பாற்றினார்.—ஆதியாகமம் 6:5–7:24.
நோவாவின் நாட்களில் நடந்ததைப்பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? இயேசு சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? — அப்பொழுது நடந்தது நமக்கு ஒரு பாடமாக இருக்கிறதென்று அவர் சொன்னார். கெட்ட ஆட்கள் எல்லோரையும் யெகோவா மறுபடியுமாக அழிப்பார். ஆனால் இந்தத் தடவை அவர் ஜலப்பிரளயத்தை உபயோகிக்க மாட்டார். அதை அவர் செய்வதற்கான காலம் நெருங்கிவிட்டது.
கடவுள் இதைச் செய்கையில், அவர் உயிரோடு பாதுகாத்து வைக்கப்போகிற ஆட்கள் யாராக இருப்பார்கள்? — மற்றக் காரியங்களில் அவ்வளவாய் மனதை மூழ்க வைத்திருந்தவர்களாய்க் கடவுளைப்பற்றிக் கற்றறிய ஒருபோதும் விரும்பாத ஆட்களாக இருக்கக்கூடுமா? பைபிளைப் படிப்பதற்கு நேரமில்லை என்பவர்களாய் எப்பொழுதும் அதிக வேலையாய் இருந்த ஆட்களாக இருக்கக்கூடுமா? — கடவுளுடைய சித்தத்தைப்பற்றி ஆட்கள் கற்றறியும் கூட்டங்களுக்கு ஒருபோதும் போக விரும்பாதவர்களாக இருக்கக்கூடுமா? நீ என்ன நினைக்கிறாய்? —
கடவுள் உயிரோடு பாதுகாத்து வைக்கும் ஆட்களுக்குள் நாம் இருக்க விரும்புகிறோம், அல்லவா? — நம்முடைய குடும்பம் நோவாவின் குடும்பத்தைப்போல் இருந்து இவ்விதமாய்க் கடவுள் நம்மெல்லோரையும் காப்பாற்றுவாராகில் ஆ, எவ்வளவு நன்றாயிருக்கும் அல்லவா? — கடவுள் நம்மெல்லோரையும் காப்பாற்றும்படி கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பதற்கு நாம் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வோமாக.
(கடவுளுக்குச் செவி கொடுக்க நாம் நம்முடைய வாழ்க்கையில் நேரத்தை உண்டாக்கிக் கொள்வது அவசியம். ஓசியா 4:6; மத்தேயு 13:18-22; உபாகமம் 30:15, 16 ஆகியவற்றில் இதைப்பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை வாசியுங்கள்.)