உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lr அதி. 46 பக். 238-243
  • தண்ணீர் உலகை அழித்தது—மறுபடியும் அழிக்குமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தண்ணீர் உலகை அழித்தது—மறுபடியும் அழிக்குமா?
  • பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • இதே தகவல்
  • தண்ணீர் ஓர் உலகத்தை வாரிக்கொண்டு போகிறது
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • நோவா கட்டிய பேழை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • கடந்த காலத்திலிருந்து ஓர் எச்சரிப்பு
    கடவுளுடைய நண்பர்
  • பெரிய வெள்ளம் வந்தபோது கடவுள் சொன்னதை யார் கேட்டார்கள்?
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
மேலும் பார்க்க
பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
lr அதி. 46 பக். 238-243

அதிகாரம் 46

தண்ணீர் உலகை அழித்தது—மறுபடியும் அழிக்குமா?

உலகம் அழியப்போகிறது என்று யாராவது பேசுவதை நீ கேட்டிருக்கிறாயா?—இன்று நிறைய பேர் அதைப் பற்றி பேசுகிறார்கள். மனிதர்கள் போர் செய்து, அணுகுண்டுகள் போட்டு இந்த உலகத்தை அழித்துவிடுவார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். நம்முடைய அழகான பூமியை அழித்துவிட கடவுள் அனுமதிப்பார் என்று நினைக்கிறாயா?—

நாம் கற்றிருக்கிறபடி, உலகத்தின் முடிவைப் பற்றி பைபிள் சொல்கிறது. ‘உலகம் அழிந்துபோகிறது’ என்று அது சொல்கிறது. (1 யோவான் 2:17) உலக அழிவு என்றால் இந்தப் பூமி அழிந்துவிடும் என்று நீ நினைக்கிறாயா?— உண்மையில் பூமி அழியாது. ஏனென்றால் பூமியை “குடியிருப்புக்காக,” அதாவது மக்கள் வாழ்வதற்காக, அதுவும் சந்தோஷமாக வாழ்வதற்காக கடவுள் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 45:18) ‘நல்லவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்’ என்று சங்கீதம் 37:29 சொல்கிறது. அதனால்தான் பூமி என்றென்றும் நிலைத்திருக்கும் என்றுகூட பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 104:5; பிரசங்கி 1:4.

ஆகவே உலக அழிவு பூமியின் அழிவைக் குறிக்காது என்றால் வேறு எதைக் குறிக்கும்?— நோவாவின் காலத்தில் என்ன நடந்தது என்பதை கவனமாக சிந்தித்தால் இதற்குப் பதிலைத் தெரிந்துகொள்ள முடியும். ‘அன்று இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே [அல்லது, வெள்ளத்தினாலே] அழிந்தது’ என்று பைபிள் விளக்குகிறது.—2 பேதுரு 3:6.

நோவாவின் நாளில் ஏற்பட்ட அந்த வெள்ளத்தால் உலகம் அழிந்தபோது யாராவது பிழைத்தார்களா?— கடவுள், ‘நீதியைப் பிரசங்கித்த நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, தேவ பக்தியில்லாதவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்’ என்று பைபிள் சொல்கிறது.—2 பேதுரு 2:5.

After Noah, his family, and the animals come out of the ark, a rainbow appears in the sky

நோவாவின் காலத்தில் அழிந்த உலகம் எது?

ஆகவே எந்த உலகம் அழிந்தது? பூமியா அல்லது கெட்ட ஜனங்களா?— ‘தேவ பக்தியில்லாதவர்கள் நிறைந்த உலகம்’ என்று அதை பைபிள் குறிப்பிடுகிறது. நோவா ‘பிரசங்கித்தார்’ என்றும் சொல்லப்பட்டிருப்பதை கவனி. அவர் எதைப் பற்றி பிரசங்கித்திருப்பார்?— ‘அன்று இருந்த உலகத்தின்’ முடிவைப் பற்றி நோவா மக்களை எச்சரித்தார்.

அந்தப் பெரிய வெள்ளம் வருவதற்கு முன்பு மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். அவர் என்ன சொன்னார் என்று இப்போது பார்க்கலாம். ‘ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் செல்லும் நாள் வரைக்கும், ஜனங்கள் சாப்பிட்டுக் கொண்டும் குடித்துக் கொண்டும் கல்யாணம் செய்து கொண்டும் இருந்தார்கள், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகும் வரை உணராதிருந்தார்கள்’ என்று இயேசு சொன்னார். பிறகு, இந்த உலக அழிவுக்கு முன்பாகவும் மக்கள் அதேபோல் நடந்துகொள்வார்கள் என்றுகூட சொன்னார்.—மத்தேயு 24:37-39.

அந்த வெள்ளம் வருவதற்கு முன்பு ஜனங்கள் நடந்து கொண்ட விதத்திலிருந்து நாம் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை இந்தப் புத்தகத்தில் 10-ஆம் அதிகாரத்தில் படித்தது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— சிலர் ஜனங்களை கொடுமைப்படுத்தினார்கள், அடித்து உதைத்து காயப்படுத்தினார்கள். இன்னும் நிறைய பேர், கடவுளுடைய செய்தியை நோவா பிரசங்கித்தபோது கேட்கவே இல்லை.

ஆகவே கெட்டவர்களை வெள்ளத்தால் அழிக்கப்போவதாக நோவாவிடம் யெகோவா சொன்னார். பூமி முழுவதும், மலைகளும்கூட தண்ணீரில் மூழ்கிவிடும் என்றார். ஆகவே ஒரு பெரிய பேழையைக் கட்டும்படி நோவாவிடம் சொன்னார். அது ஒரு பெரிய, நீளமான பெட்டியைப் போல் இருந்தது. 238-ஆம் பக்கத்தில் உள்ள படத்தில் தெரிவது போல் இருந்தது.

நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் நிறைய மிருகங்களும் அந்தப் பேழைக்குள் பத்திரமாக இருக்க வேண்டியிருந்தது; ஆகவே அதை பெரிதாக கட்டும்படி கடவுள் சொன்னார். நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் கடினமாக வேலை செய்தார்கள். பெரிய மரங்களை வெட்டி, துண்டு துண்டாக்கி, செதுக்கி, பேழையைக் கட்டினார்கள். இதைக் கட்ட நிறைய வருடங்கள் எடுத்தது, ஏனென்றால் பேழை மிகப் பெரியதாக இருந்தது.

பேழையைக் கட்டிய சமயத்தில் வேறு எதையும் நோவா செய்தார் என்று ஞாபகம் இருக்கிறதா?— அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அதாவது, வெள்ளம் வரவிருந்ததைப் பற்றி மக்களை எச்சரித்து வந்தார். அந்த எச்சரிப்பு செய்தியை யாராவது கேட்டார்களா? நோவாவின் குடும்பத்தாரைத் தவிர ஒருவரும் கேட்கவில்லை. அவர்கள் மற்ற காரியங்களில் மூழ்கியிருந்தார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்ததாக இயேசு சொன்னார் என்று ஞாபகம் இருக்கிறதா?— அவர்கள் சாப்பிட்டுக் கொண்டும் குடித்துக் கொண்டும் கல்யாணம் செய்து கொண்டும் இருந்தார்கள். தங்களை கெட்டவர்கள் என்று நினைக்காததால் நோவா சொன்ன எச்சரிப்பைக் கேட்க அவர்கள் நேரம் ஒதுக்கவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழைக்குள் சென்ற பிறகு யெகோவா அதன் கதவை அடைத்தார். அப்போதுகூட, வெள்ளம் வரும் என்று வெளியிலிருந்த ஜனங்கள் நம்பவில்லை. ஆனால் திடீரென்று வானத்திலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது! அது சாதாரண மழையாக இல்லை. அடை மழை, கொட்டோ கொட்டென்று கொட்டியது! தண்ணீர் பெரிய ஆறுகளாக பயங்கர சத்தத்தோடு ஓட ஆரம்பித்தது. பெரிய மரங்களையும் பாறாங்கற்களையும்கூட ஏதோ சிறிய கற்களைப் போல சர்வசாதாரணமாக அடித்துச் சென்றது. பேழைக்கு வெளியில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது?— ‘ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போனது’ என்று இயேசு சொன்னார். பேழைக்கு வெளியில் இருந்த எல்லாரும் செத்துப் போனார்கள். ஏன்?— ஏனென்றால் ‘அவர்கள் உணராதிருந்தார்கள்’ என்று இயேசு சொன்னார்; ஆம், அவர்கள் எச்சரிப்பைக் கேட்கவில்லை!—மத்தேயு 24:39; ஆதியாகமம் 6:5-7.

Children play in the water beside a beach

நாம் ஜாலியாக இருப்பதைப் பற்றி மட்டுமே ஏன் நினைக்கக் கூடாது?

அந்த ஜனங்களுக்கு நடந்தது இன்று நமக்கு ஒரு பாடம் என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார். நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?— மக்கள் கெட்டவர்களாக இருந்ததால் மட்டுமே அழியவில்லை. அநேகர் கடவுளையும் அவர் செய்யவிருந்த காரியங்களையும் பற்றி கற்றுக்கொள்வதற்கு நேரம் ஒதுக்காமல் மற்ற காரியங்களிலேயே மூழ்கியிருந்ததாலும் அழிந்தார்கள். நாம் அவர்களைப் போல் இல்லாதிருக்க கவனமாயிருக்க வேண்டும் அல்லவா?—

கடவுள் மறுபடியும் வெள்ளத்தால் இந்த உலகை அழிப்பார் என்று நினைக்கிறாயா?— அழிக்கப்போவதில்லை என்று அவரே சத்தியம் செய்தார். ‘நான் வானவில்லை மேகத்தில் வைக்கிறேன், அது அடையாளமாயிருக்கும்’ என்று அவர் சொன்னார். ‘இனி தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து எல்லா உயிர்களையும் அழிக்காது’ என்பதற்கு வானவில் அடையாளமாக இருக்கும் என்று யெகோவா சொன்னார்.—ஆதியாகமம் 9:11-17.

ஆகவே கண்டிப்பாக வெள்ளத்தால் கடவுள் இந்த உலகை மறுபடியும் அழிக்க மாட்டார். ஆனாலும் நாம் ஏற்கெனவே பார்த்தபடி, உலகம் அழியப்போவதைப் பற்றி பைபிள் சொல்கிறது. கடவுள் இந்த உலகத்தை அழிக்கையில் யார் தப்பிப்பார்கள்?— கடவுளைப் பற்றி கற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் மற்ற காரியங்களிலேயே ஆர்வத்தோடு ஈடுபடும் மக்கள் தப்பிப்பார்களா? பைபிளை படிக்க நேரமே ஒதுக்காதவர்கள் தப்பிப்பார்களா? நீ என்ன நினைக்கிறாய்?—

அந்த அழிவிலிருந்து கடவுள் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் அல்லவா?— நம் குடும்பமும் நோவாவின் குடும்பத்தைப் போலவே இருந்தால் அருமையாக இருக்கும் அல்லவா? அப்போது கடவுள் நம் எல்லாரையும் காப்பாற்றுவார் இல்லையா?— இந்த உலகம் அழியும்போது நாம் தப்பிக்க வேண்டும் என்றால், கடவுள் அதை எப்படி அழிப்பார் என்றும் நீதியுள்ள புதிய உலகை எப்படி உண்டாக்குவார் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். இதை எப்படி செய்வார் என்று பார்க்கலாம்.

இதற்கான பதில் பைபிளில் தானியேல் 2-ஆம் அதிகாரம், 44-ஆம் வசனத்தில் இருக்கிறது. நம் காலத்தைப் பற்றி அந்த வசனம் இப்படி சொல்கிறது: ‘அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்துவார்; அந்த அரசாங்கம் வேறே ஜனத்துக்கு கொடுக்கப்படாது; அது இந்த அரசாங்கங்களையெல்லாம் நொறுக்கி, அழித்து, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.’

இது உனக்குப் புரிகிறதா?— கடவுளுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் அழிக்கப் போவதாக பைபிள் சொல்கிறது. ஏன் தெரியுமா?— ஏனென்றால் கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கும் ராஜாவுக்கு அந்த அரசாங்கங்கள் கீழ்ப்படிவதில்லை. அந்த ராஜா யார்?— ஆமாம், இயேசு கிறிஸ்துதான்!

Jesus Christ and his heavenly armies destroy the wicked world at Armageddon

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்து அர்மகெதோனில் இந்த உலகை அழிப்பார்

எப்படிப்பட்ட அரசாங்கம் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு யெகோவாவுக்கு உரிமை உண்டு. அவர் தனது மகன் இயேசுவை ராஜாவாக தேர்ந்தெடுத்திருக்கிறார். சீக்கிரத்தில் கடவுளுடைய ராஜாவாகிய இயேசு கிறிஸ்து இந்த உலக அரசாங்கங்களை எல்லாம் அழிப்பார். அவர் அப்படி செய்வதாக வெளிப்படுத்துதல் அதிகாரம் 19, வசனங்கள் 11-16 விளக்குகிறது. அதைத்தான் இந்தப் படத்தில்கூட பார்க்கிறோம். இந்த உலகத்தில் உள்ள எல்லா அரசாங்கங்களையும் அழிக்கப் போகும் கடவுளுடைய போரை அர்மகெதோன் என்று பைபிள் அழைக்கிறது.

மனித அரசாங்கங்களை எல்லாம் தன் அரசாங்கம் அழிக்கப் போவதாக கடவுள் சொல்கிறார். ஆனால் அந்த அரசாங்கங்களை அழிக்கும்படி நம்மிடம் சொல்கிறாரா?— இல்லை. அர்மகெதோன் என்பது ‘சர்வல்லமையுள்ள கடவுளுடைய மகா நாளில் நடக்கும் போர்’ என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) ஆகவே அர்மகெதோன் என்பது கடவுளுடைய போர். அப்போது பரலோக வீரர்களை வழிநடத்த அவர் இயேசு கிறிஸ்துவை பயன்படுத்துவார். அர்மகெதோன் சீக்கிரத்தில் வரப்போகிறதா? இதை எப்படி தெரிந்துகொள்ளலாம் என்று பார்ப்போம்.

கடவுள் எப்போது கெட்டவர்களை எல்லாம் அழித்து தன்னை சேவிப்பவர்களை காப்பாற்றுவார் என்பதை வாசித்துப் பார்க்கலாம். நீதிமொழிகள் 2:21, 22; ஏசாயா 26:20, 21; எரேமியா 25:31-33; மத்தேயு 24:21, 22.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்