விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை
“எல்லா பாதைகளும் கடவுளிடமே வழிநடத்துகின்றன,” என்பது பொதுவாகப் பலர் கொண்டுள்ள கருத்து. மனிதவர்க்கத்தின் எல்லா மதங்களும் கடவுளுக்கு ஏற்கத்தகுந்தவையாக இருக்கின்றன என்பதே இதன் அர்த்தம். இந்த எண்ணத்தை ஆதரித்து, பகவத் கீதா பின்வருமாறு சொல்லுகிறது: “மற்றத் தெய்வங்களின் பக்தர்களுங்கூட, விசுவாசத்துடன் அவர்களை வணங்குகிறார்கள். குந்தியின் மகனே (அர்ச்சுனனே), மெய்ச் சட்டத்தின்படி இராதபோதிலும், அவர்களுங்கூட எனக்கு மாத்திரமே பலி செலுத்துகிறார்கள்.”—9:23.
2 ‘இன்று எத்தனை மதப் பாதைகள் இருக்கின்றன? மதப் பற்றுள்ள ஆட்கள் தெரிந்துகொள்ள இப்பேர்ப்பட்ட இத்தனை அநேக மதநம்பிக்கைகள் எப்பொழுதுமே இருந்திருக்கின்றனவா? உதாரணமாக, பூமியில் ஒரே ஒரு மனிதன் இருந்தபோது எத்தனை மதப்பாதைகள் இருந்தன?’ என்பதாக சிந்தனை திறனுள்ள எவரும் வியந்து அறிய ஆவல் கொள்ளலாம்.
3 மதமானது சரித்திரத்தின் மூலமாய் நம்முடைய முன்னோரிடமிருந்து நம்மிடம் வந்திருக்கிறதென்ற இந்தத் தெளிவான உண்மையை எவரும் தவிர்க்க முடியாது. மதமானது பிரிக்க முடியாத வண்ணம் சரித்திரத்துடன் அவ்வளவு நெருங்க இணைக்கப்பட்டிருப்பதால், நாம் சரித்திரத்தில் போதியளவு பண்டைய காலத்தை நோக்கிச் செல்வோமானால், சரியாக முதல் மனித முற்பிதாவினிடத்திற்கு அது நம்மை வழிநடத்தும்; நியாயப்படியே இது, நம்மை அந்த முதல் மதப்பாதைக்குக் கொண்டு வரும். அப்படியானால், யார் அந்த முதல் மனிதன்? அவனுடைய மதம் என்ன?
முதல் மனிதன் மனுஷியின் தொடக்கம்
4 இந்துமத பதிவுகளின் பிரகாரம் அந்த முதல் மனிதனின் பெயர் மனு; பைபிளின்படி அவனுடைய பெயர் ஆதாம். (ஆதியாகமம் 5:1) ஆனால் அந்த முதல் மனிதனைப் பற்றிய அதிகாரப் பூர்வமான, நம்பத்தக்க, அறியப்பட்ட தெளிவான உண்மைகளோடு இசைந்த ஒரு சரித்திரம் இருக்கிறதா? நவீன மருத்துவ விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் இந்தக் கேள்விக்குரிய பதிலை உண்மையென நிரூபிக்கும் துணை சான்றுகளை அளிக்கின்றன. நம்முடைய மனித உடலானது பூமியின் மண்ணிலிருந்து கிடைக்கக்கூடிய ஏறக்குறைய 90 மூலப்பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது என்று மருத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர். இப்படியிருக்க, இந்த முதல் மனிதன் பூமியின் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று திருத்தமாய்ச் சொல்லுகிற ஒரு பூர்வ சரித்திரம் இருக்கிறதென்றால், அதை நீங்கள் நம்புவீர்களா? பைபிள் சொல்லுகிறதை நீங்களே வாசித்துப் பார்க்கலாம். ஆதியாகமம் 2:7-ல் (தி.மொ.) அது பின்வருமாறு சொல்லுகிறது: “கடவுளாகிய யெகோவா மனிதனைத் தரையினின்றுறெடுத்து மண்ணினால் உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; அப்படியே மனுஷன் உயிருள்ள ஆத்துமாவானான்.”
5 மனிதனின் தொடக்கத்தைப் பற்றிய இந்தப் பூர்வ சரித்திரம் கவனிக்கத்தக்கதாய் இருக்கிறது. இந்து பேரறிஞராகிய S. ராதா கிருஷ்ணனின் காலக்கணிப்பு நூல், எருசலேமின் அரசனாகிய சாலொமோனின் காலத்தை கி.மு. 975 எனக் குறிப்பிடுகிறது. அப்படியானால் இது தீர்க்கதரிசியாகிய மோசே கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளின் மத்திபத்தில் வாழ்ந்தான் என்று பொருள்படும். (1 இராஜாக்கள் 6:1-ஐ ஒத்துப்பாருங்கள்.) மேலும் ஓர் இந்து சுவாமியாகிய பாரதி கிருஷ்ணா “மோசேயின் நியாயப்பிரமாணத்தைக்” குறித்து எழுதுகிறார். இவ்வாறாக, மோசே ஆதியாகமத்தைத் தொகுத்தவன் என்பதாக ஒப்புக்கொள்ளுகிறார். ஏனென்றால் ஆதியாகமம் ‘மோசேயின் நியாயப்பிரமாணத்தின்’ அல்லது முதல் ஐந்து ஆகமத் தொகுதியின் தொடக்கப் பகுதியாக இருக்கிறது. திருத்தமாகச் சொல்லவேண்டுமானால், நம்பத்தக்கக் காலக் கணிப்பு, ஆதியாகமம் தொகுக்கப்பட்ட காலத்தை கி.மு. 1513 என்பதாக நிலைநாட்டுகிறது. இவ்வாறாக இந்த முதல் மனிதனின் தொடக்கத்தைப் பற்றிய மிகப் பண்டைய விவரிப்பு இங்கே நமக்கு இருக்கிறது. உண்மை என 20-ம் நூற்றாண்டு மருத்துவ விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்ளும் ஒரு விவரிப்பு. புராணக் கட்டுக் கதைகளுக்கும் கற்பனைக் கதைகளுக்கும் விலகிய நம்பத்தக்க ஒரு சரித்திரம்!
6 இது ஓர் இந்துவுக்கு ஆர்வத்துக்குரிய ஒரு விஷயம், ஏனென்றால், வெகு சமீபத்தில் வெளிவந்துள்ள இந்து புலமையின்படி கி.மு. முதல் ஆயிரத்தின் முதற் பாதி பகுதியில் தொகுக்கப்பட்டதாக உத்தேசமாய்க் கூறப்படும் ரிக்வேதம் உருவக நடையில் பூமியாகிய பிருதுவியை மனிதனின் தாயாக விவரித்துப் பேசுகிறது. இந்தப் பூமி, முதல் மனித உறுப்பமைப்புக்குக் கருப்பையாக நூற்றாண்டுகளாய் எண்ணப்பட்டு வந்திருக்க, நாளடைவில் “பூமா தேவி” என்று பொதுமக்களால் கருதப்படும் வழக்கம் வந்திருக்கலாம். ரிக்வேதம் 1. 164. 33 ஒத்துப்பாருங்கள்.
7 மனு சந்ததியைப் பிறப்பித்ததைப் பற்றி ரிக்வேதத்திலுள்ள விவரம் பைபிளில் ஆதாரம் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. பூர்வ கால இந்து எழுத்துக்கள் முதல் மனிதனை மனு என்பதாகவும், அவனுக்கு ஒரு மனைவி இல்லாத காரணத்தால் தன்னுடைய விலா எலும்புகளில் (பரசு) ஒன்றைக் கொண்டு ஒரு சந்ததியைப் பிறப்பித்ததாகவும் வருணிக்கின்றன. இதற்குப் பிறகு எழுதப்பட்ட ரிக்வேத தேவாரம், மனித உருவில் மாற்றப்பட்ட இந்த விலா எலும்பாகிய பரசுவை முதல் மனிதனாகிய மனுவின் மகளாகவும் இவள் மூலமாய்ப் பிள்ளைகளை—“ஒரு பிரசவத்தில் இருபது பிள்ளைகளைத்”—தோற்றுவித்தான் எனவும் விவரிக்கிறது! (ரிக்வேதம் 10. 86. 23) இந்த முதல் மனுஷி, முதல் மனிதனின் விலா எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்ட தெய்வீக சிருஷ்டிப்பாக இருக்க, காலப்போக்கில் பாரம்பரியமாய் அவனுடைய மகளாகக் கருதப்பட்டிருக்கக்கூடும்.
8 சிந்தனைத் திறனுள்ள எவரும், இந்தப் பாரம்பரியம் பைபிளில் உள்ள பின்வரும் பூர்வ சரித்திரப் பதிவைப் பற்றிய மங்கிய நினைவுகளே என்பதைக் காண்பர். ஆதியாகமம் 2:21, 22-ல் (தி.மொ.) பைபிள் கூறுவதாவது: “கடவுளாகிய யெகோவா மனுஷனுக்கு அயர்ந்த நித்திரையுண்டாகும்படி செய்யவே அவன் நித்திரை போனான். அவர் அவன் விலா எலும்புகளிலொன்றையெடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடிவிட்டார். கடவுளாகிய யெகோவா மனுஷனிலிருந்தெடுத்த விலா எலும்பை மனுஷியாக அமைத்து உருவாக்கி அவளை மனுஷனிடம் அழைத்துக் கொண்டுவந்தார்.” இதுவே பைபிளின் கலப்பற்ற, முற்றிலும் நடைபெறக்கூடிய, முதல் மனுஷியின் படைப்பு விவரம். ஒரு விலா எலும்பை மூடியுள்ள சவ்வு நீக்கப்படாமலேயே விலா எலும்பு அகற்றப்பட்டால் அந்த எலும்பு வளர்ந்து தன்னிடத்தை நிரப்பக்கூடும், என்று வைத்தியர்கள் சொல்வது கவனத்துக்குரியதாக இருக்கிறது. யெகோவா தேவன் இந்த முறையைக் கையாண்டாரா இல்லையா என்பதைப்பற்றி பைபிள் எதுவும் சொல்லுகிறதில்லை. என்றபோதிலும், மனிதனைப் படைத்தவராகிய யெகோவா தேவன் நிச்சயமாகவே விலா எலும்புகள் இவ்விதமாய் வளரும் தனித்தன்மையை அறிந்திருந்தார். மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பைப் பயன்படுத்தி முதல் மனுஷியைப் படைத்ததைப் பற்றிய பைபிளின் விவரப்பதிவு நம் பகுத்தறிவுக்கு நியாயமாய்த் தோன்றுகிறது, மேலும் புராணக் கற்பனை கதைகளுக்கு முற்றிலும் விலகியதாய் இருக்கிறது.
9 இயல்பாகவே, மனிதவர்க்கத்தின் முதல் பெற்றோர்களின் படைப்பைப் பற்றிய பைபிளின் உண்மையான விவரப்பதிவு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில், மனிதனின் முதல் முற்பிதாக்களைப் பற்றிய இந்த எண்ணங்கள், நாளடைவில் பிரிந்துபோன மனிதவர்க்க சமுதாயங்களின் கோட்பாட்டுத் தொகுதிகளுக்குள் சேர்க்கப்பட்டன. இவ்வாறு மனுவையும் பரசுவையும் பற்றிய இந்த ரிக்வேத விவரிப்புகளுக்கு ஊற்றுமூலம் இவைகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பைபிளின் ஆதியாகமப் பதிவில் இருக்கிறது. ஆகையால், நேர்மையும் பகுத்துணர்வும் உள்ள இந்துவுக்கு பைபிளின் நம்பத்தக்க படைப்பு விவரத்தையும் அதைப் படைத்தவரையும் பற்றி ஆராய்வது வெறும் தன் கல்வி அறிவை அதிகரிக்கவேண்டும் என்ற ஆசையினால் மட்டுமல்ல; மாறாக அவர் தன்னுடைய சொந்த நலனில் கொண்டுள்ள அக்கறையின் காரணமாகவும் இருக்கிறது.
முதல் மதத்தை ஆராய்ந்து கண்டுபிடித்தல்
10 அப்படியானால், மற்ற காரியங்களின் ஆரம்பத்தைப்பற்றி இந்த நம்பத்தக்கச் சரித்திரம் என்ன சொல்லுகிறது? உதாரணமாக, மதத்தின் தொடக்கத்தைப் பற்றியதென்ன? மேலும் தீமை, மரணம் ஆகியவற்றின் தொடக்கத்தைப் பற்றியதென்ன? மறுபடியுமாக ஆதியாகமம் 2:15-17-ஐ (தி.மொ.) நீங்கள் தாமே வாசியுங்கள்: “கடவுளாகிய யெகோவா மனுஷனை அழைத்துக்கொண்டுபோய் ஏதேனின் தோட்டத்தில் விட்டு அதைப் பண்படுத்தவுங் காக்கவும் வைத்தார். கடவுளாகிய யெகோவா மனுஷனிடம்: தோட்டத்திலுள்ள எந்த விருக்ஷத்தின் கனியையும் நீ தடையின்றி புசிக்கலாம். நன்னை தீமை அறிவதற்கேதுவான விருக்ஷத்தின் கனியையோ புசிக்கக்கூடாது. நீ அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாயென்று கட்டளையிட்டார்.” இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் கடவுளுக்குப் பக்தியை மெய்ப்பித்துக் காட்டுவதாய் இருக்கும். ஆதலால் இந்த விவரப்பதிவானது உண்மையில், அந்த முதல் மனிதனுக்கு வகுத்துரைக்கப்பட்ட மதத்தை விவரிக்கிறது. எனவே, முதல் மதமானது கடவுளுக்குக் கீழ்ப்படிதல் உட்பட்ட ஒரு பாதையாக இருக்க வேண்டியதாய் இருந்தது. ஒழுக்க விஷயத்தில் மற்றும் ஆவிக்குரிய விஷயத்தில் மனிதனுக்கு எது நன்மை எது தீமை என்பதைத் தீர்மானிப்பதற்கு நம் சிருஷ்டிகருக்கு இருக்கும் உரிமையை அது அங்கீகரித்தது. எவ்வளவு எளிதான மதம் அது! கோயில்களோ, ஆலயங்களோ, குருக்களோ, மிஷனரிகளோ, பூசாரிகளோ (புரோகிதர்களோ), விக்கிரகங்களோ, சடங்காச்சாரங்களோ அங்கு இருக்கவில்லை. அது மனிதனின் உடலுக்கும் மனதுக்கும் சாத்தியமான காரியங்கள் உட்பட்டதாய் இருந்தது. அங்கே தத்துவ சாஸ்திரம் இருக்கவில்லை. கற்பனை கோட்பாடு உருவாக்குதலும் இருக்கவில்லை. விளங்கிக்கொள்வதற்கோ நடப்பிப்பதற்கோ சாதாரண மனிதத் திறமைக்கு அப்பாற்பட்ட எதுவும் இருக்கவில்லை. மனிதனின் முதல் மதமானது அவனுடைய மனித இயல்புக்கு ஏற்றதாயும், நடைமுறையில் கையாளக்கூடியதாயும் இருந்தது—அவனுடைய அன்றாடக வேலையில், அதாவது, தனக்கும் தன் தோட்ட வீட்டுக்கும் தேவையானவைகளைப் புத்திசாலித்தனமாய்க் கவனித்துக் கொள்ளவேண்டிய அன்றாடக வேலையில் ஈடுபட்டு வருகையில் தன்னைப் படைத்தவருக்குச் செலுத்தி வந்த எளிய பக்திக்குரிய ஒரு பாதையாக இது இருந்தது. நம்புவதற்கு, நிச்சயமாகவே, இது கடினமாயில்லை.
11 இந்த மெய்யியல்பான சரித்திரமானது, பூங்காவன பூமியே மனிதனில் முதல் வீடாக இருந்ததென்று சொல்லுகிறது. மேலும் அவனுடைய முதல் மதமானது, அவனைச் சாவதற்கு அல்ல உயிர் வாழ்வதற்கே வழி நடத்துவதாக இருந்தது! மனிதனின் முதல் மதமானது, அவனுடைய பரிபூரண, மனித மாம்ச உடலில் என்றென்றும் வாழ்வதற்கு வழிநடத்துவதற்குரிய ஒரு பாதையாக இருந்தது—தவறான ஆசையும் பாவமும், கருமம் போன்ற எவ்வித விதியின் தீங்கான விளைவுகளும் அற்ற, உண்மையான சுயாதீனமுள்ள மனித வாழ்க்கையை நித்தியமாய் வாழ்வதற்கு வழிநடத்துகிற ஒரு பாதையாக இருந்தது. என்றென்றும் மனிதனாய் மாம்சத்தில் வாழ்ந்து திருப்தியளிக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதையே கடவுள் மனிதனுக்கு முன்பாக வைத்தார்; இது, மாண்டுபோவதற்கு அல்லது சாவுக்கு எதிர்மாறானது. இறுதியாக மோட்சத்தை அல்லது முக்தியை அடைவதற்கு மனிதன் தன் மாம்ச உடலைக் களைந்துபோடுவதைப்பற்றிய கருத்து சிறிதேனும் தெரிவிக்கப்படவில்லை. மனிதனுடைய முதல் மதத்தின் பிரகாரம், சாவு ஒரு விடுதலையாக அல்லது கூட்டிலிருந்து விடுவிப்பதாக இருக்கவில்லை. அதற்கு மாறாக, அது ஒரு தண்டனையாக இருந்தது. ஆனால் மனிதன் செத்து தன்னுடைய மாம்ச உடலையும் பூலோக பூங்காவனத்தையும் இழந்துபோகும்படி கடவுள் விரும்பவில்லை என்பதை தயவுசெய்து கவனியுங்கள். அப்படியானால் என்ன தவறு நேரிட்டது?
சாவு ஏன்?—அது என்ன?
12 நம்முடைய முதல் மனித முற்பிதா ஏன் மரித்தான்? அவன் தன் தெரிவு சுயாதீனத்தைத் தவறாகப் பயன்படுத்தினதன் காரணமாகவே. கடவுள் அன்புடன் மனிதனுக்கு சுய தெரிவு செய்யும் சுயாதீனத்தைக் கொடுத்தார். இது, ஆதியாகமம் 2:17-ல் பதிவு செய்யப்பட்டுள்ள கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. இவற்றையே நாம் சற்று முன்பு (10-வது பத்தியில்) வாசித்தோம். மனிதன் பரிபூரணமாய் இருக்க அவன் தான் விரும்பியதைத் தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தை உடையவனாக இருக்கவேண்டும். ஆகையால், தெரிவுசெய்யும் சுயாதீனம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது. விலக்கப்பட்ட அந்தக் கனியைச் சாப்பிடுவதா அல்லது சாப்பிடாமல் இருப்பதா? இதுவே கேள்வியாக இருந்தது. கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போவதா அல்லது கீழ்ப்படிவதா? தன் சொந்த முடிவைத் தானே தெரிந்துகொள்ளும்படி மனிதன் விடப்பட்டான். இது மனிதனுடைய அறிவு கூர்மைக்கும் அவனுடைய நேசிக்கும் திறமைக்கும் பொருத்தமாய் இருந்தது.
13 ஆம், மனிதனுடைய நேசிக்கும் திறமையே அவனுக்குத் தான் சுய தெரிவு செய்யும் சுயாதீனம் இருக்கிறதென்று நிரூபிக்கிறது. “அன்பு,” விதியினால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால், அல்லது கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால், அது அன்பல்ல. அன்பு சுய இஷ்டத்தினால்—ஆத்துமா உண்மையுடன் விரும்பி ஒப்புக்கொள்வதால்—காட்டப்பட வேண்டிய குணம். எனவே, கடவுள் பேரிலுள்ள அவனுடைய அன்பு உண்மையாகவும் மனமுவந்ததாயும் இருக்க அன்புகூர மனிதனுக்கு இருந்த விருப்பத்திற்கு சுயாதீனம் இருக்கவேண்டும். ஆகையால் மனிதனுடைய முதல் மதத்தின் முழு நோக்கம்தானே உண்மையாய் நிறைவேற கடவுள் மனிதனில் ஒழுக்க சம்பந்தமாய் விரும்பியதைத் தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தை வைத்தார். ஆகையால், மனிதன், தன்னுடைய பரலோகத் தகப்பனுக்கு நன்றியறிதலினால் தூண்டப்பட்டு புத்திசாலித்தனமான தெரிந்துகொள்ளுதலைச் செய்து தன்னுடைய அன்பை மெய்ப்பித்துக் காட்டியிருக்கலாம். அன்பானது அது உண்டுபண்ணுகிற விளைவுகளிலிருந்தே அறியப்படக்கூடும், மேலும், தம்மில் முழு நிறைவுள்ளவராய் இருக்கிற கடவுளுக்கு தான் கீழ்ப்படிவதன் மூலம் மாத்திரமே மனிதன் தன் அன்பை நிரூபிக்கக்கூடும். 1 யோவான் 5:3-ல் பைபிள் பின்வருமாறு சொல்லுகிற பிரகாரம்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”
14 என்றாலும் நம்முடைய முதல் முற்பிதா தெரிந்து வேண்டுமென்றே கீழ்ப்படியாமையின் பாதையை மேற்கொண்டான், இதன் விளைவாக சர்வலோகத்தின் கடவுளிடமிருந்து தன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டான். மனிதன் இப்பொழுது கடவுளில்லாமல் தன்னையே சார்ந்து இருந்தான். இதன் விளைவாக அவன் தன் மனித பரிபூரணத்தை இழந்தான். தண்டனையாக, சாவு மனித வாழ்க்கைக்குள் படையெடுத்தது. தகப்பன் தன் தன்மைகளைப் பிள்ளைக்குக் கடத்தும் இயற்கையிலுள்ள நியமத்தின் விளைவால், முதல் மனிதனின் சந்ததியார் பாவத்தால் கறைப்பட்டவர்களாயும், இதன் மூலம் கடவுளோடு உறவு குலைந்தவர்களாயும் பிறந்தார்கள். நம்முடைய முதல் முற்பிதா வெளிப்படுத்தப்பட்ட தன்னுடைய மதத்தின் எளிதான, முதல் கட்டளையை, அதாவது, கடவுள் பேரிலுள்ள அன்பினால், காட்டப்படும் கீழ்ப்படிதலை, அசட்டை செய்து கீழ்ப்படியாமற்போனான். இதன் விளைவாக, அவனுடைய சந்ததியார் தங்களுடைய மிக நேர்த்தி வாய்ந்த சுதந்தரமாக இருந்திருக்கக்கூடியதை இழந்தார்கள். ஆகையால் பாவமும் குற்ற உணர்ச்சியும் ரிக்வேத எழுத்தாளர் உட்பட மனிதவர்க்கம் முழுவதற்கும் கடத்தப்பட்டது. ஆகையால் வேதாந்தக் கடவுளாகிய வருணனுக்குப் பாடும் தேவாரத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது: “வருணா, தேவலோக சேனைக்கு விரோதமாக மனிதராகிய நாங்கள் செய்யும் குற்றம் என்னவாக இருந்தாலும், எங்களுடைய யோசனை குறைவால் உம்முடைய சட்டங்களை நாங்கள் மீறுகையில், கடவுளே, அந்தப் பழிபாவத்திற்காக, எங்களைத் தண்டியாதே.”—ரிக்வேதம் 7. 89. 5. பைபிளில் ரோமர் 5:12-ஐ ஒத்துப்பாருங்கள்.
15 அந்த முதல் மனிதன், அவன் சாவான் என்று கடவுள் சொன்னபடியே, தன்னுடைய கலகத்தினிமித்தமாக முடிவில் செத்தான். நம்முடைய முதல் பொது முற்பிதாவுக்கு சாவு தீர்ப்பு அளிக்கையில், கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்ட அறிவிப்பு பின்வருமாறு சொல்லுகிறது: “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் (தரைக்குத்) திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) இது மனித சாவைப்பற்றிய கடவுளுடைய விவரிப்பு. கவனத்துக்குரிய காரியம் என்னவெனில், பைபிளின் இந்த வசனமானது, செத்தவரின் நிலைமையை விவரித்து பிற்பாடு எழுதப்பட்ட வேதாந்த விவரிப்புக்கு அடிப்படையாக இருப்பதாய்த் தோன்றுகிறது. மேலே மேற்கோளாக எடுத்துக் குறிக்கப்பட்ட ரிக்வேத தேவாரம் முதல் வசனத்தில் பின்வருமாறு சொல்லுகிறது: “அரசனாகிய வருணா, என்னை இதற்குள்ளாகவே களிமண் வீட்டுக்குள் புகவிடாதே; வல்லமையுள்ள ஆண்டவனே, எனக்கு இரங்கு, என்னைக் கொல்லாமல் விடு.” (ரிக்வேதம் 7. 89. 1) இந்த வசனத்தின்பேரில் ரிக்வேதத்திலுள்ள அடிக்குறிப்பு பின்வருமாறு சொல்லுகிறது. “களிமண் வீடு: பிரேதக்குழி. அதர்வண வேதம் வசனம் 30. 14. ஒத்துப்பாருங்கள்.” பிரேதக்குழிக்குச் செல்வதும் தரையின் மண்ணுக்குத் திரும்புவதும் செத்த மனித பிணத்துக்கு நிச்சயமாகவே “களிமண் வீட்டுக்குள்” புகுவதாயிருக்கும்!
16 ஆகையால் சாவானது, மனிதனை அவன் எங்கிருந்து வந்தானோ அங்கே—அதாவது மண்ணுக்குத்—திரும்பக் கொண்டு செல்லும். சாவானது மற்றொரு வாழ்க்கைக்கு வாசல் அல்ல. மனிதனுக்குச் சாவு என்பது உயிருக்கு எதிர்மாறாக இருக்கவேண்டியதாய் இருந்தது, அதாவது, வாழ்வு அற்ற நிலையாகும். சாவானது செம்போக்குக்கு அதாவது வரையறையில்லாத பிறப்பு மற்றும் மறுபிறப்புகளடங்கிய சுழற்சிக்கு அடிமையாக்கும் ஒரு துவக்கமல்ல. சாவு உயிரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். உண்மையில், செம்போக்கைப் பற்றிய இந்துமத கருத்தும் அதோடு சம்பந்தப்பட்ட ஆத்துமா கூடுவிட்டுக் கூடுபாய்தல் போதகமும், இந்துமத எழுத்துக்கள் அனைத்துக்கும் பண்டைய நூலான ரிக்வேதத்தில் காணப்படுகிறதில்லை. கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்ற இந்துமத கருத்தானது உபநிடதம் இயற்றப்படும் வரையில் ஆரம்பிக்கவில்லை. இது, இந்து நூலாசிரியராகிய S. N. தாஸ்குப்தா சொல்லுகிறபடி கி.மு. 700-க்கும் 600-க்கும் இடையில் இயற்றப்பட்டது. அதாவது, மோசே ஆதியாகமத்தின் இரண்டாம் அதிகாரத்தை எழுதி 800 அல்லது 900 ஆண்டுகளுக்குப் பின்பு இயற்றப்பட்டது.
17 கடவுளுடைய நோக்கத்தில் மனிதனின் எதிர்கால வாழ்க்கை, அழியாத ஆத்துமாவின்பேரில் அல்ல, செத்துப்போன ஒருவரைப்பற்றி கடவுள் நினைவு வைத்திருப்பதன் பேரிலேயே சார்ந்திருக்கும். இந்தத் தெய்வீக சத்தியத்திற்கு இசைய பூர்வ கோத்திரத் தகப்பனாகிய யோபு பேசியிருக்கிறான்; இவனைக் குறித்து கடவுள்: “அவனைப் போலப் பூமியில் ஒருவனும் இல்லை,” என்று கூறினார். இவன் பின்வருமாறு கூறினான்: “மனுஷன் படுத்துக் கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை. நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.” (யோபு 1:8; 14:12-15, ஏறக்குறைய கி.மு. 1500-ல் எழுதப்பட்டது.) மனிதனைத் திரும்ப நினைப்பதற்கு கடவுள் குறித்திருக்கும் காலம் வரும் வரையில் அவன் தன் மரண நித்திரையில் காத்துக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு மனிதவர்க்கத்தின் எதிர்கால வாழ்க்கை—அழியாத ஆத்துமாவின் பேரில் அல்ல—கடவுளுடைய தவறாத ஞாபக சக்தியின் பேரிலேயே சார்ந்திருக்கும்.
எதிர்கால நம்பிக்கை மனித முற்பிதாக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது
18 அந்த முதல் மனிதன் கடவுளை விட்டு விலகியபோதிலும், கடவுள் மனிதனைக் கைவிட்டாரா? கடவுள், இரக்கத்தைக் கொண்டு தம்முடைய நீதியைப் பதப்படுத்தினார் என்று மனிதவர்க்கத்தின் முதல் சரித்திரப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. நீதியாய், மனிதவர்க்கம் பாவத்திற்குத்தக்க பலனை அனுபவிக்கும்படி கடவுள் அனுமதித்தார். ஆனால் இரக்கமாய் அவர் அவர்கள் தம்மிடம் ஒப்புரவாவதற்கு ஏற்பாடு செய்து, பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தார். பைபிளின் உண்மை சரித்திரம் பின்வருமாறு கூறுகிறது: “அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” (ரோமர் 8:20, 21) மனித சரித்திரம் மாயையின் அதாவது பயனில்லாமையின் ஒரு நீண்ட பதிவாக இருந்து வந்திருப்பது உண்மையல்லவா? மனித சரித்திரமானது மெய்யாகவே பைபிளில் உள்ள இச்சொற்களில் உண்மையை உறுதிப்படுத்துகிறது. ஆனால் நம்பிக்கைக்கான ஓர் ஆதாரத்தைக் கடவுள் எப்படி அளித்தார்?
19 நம்முடைய தொடக்க சரித்திரத்திற்குத் திரும்பப் போவோமானால், அங்கே ஆதியாகமம் 3:15-ல் பின்வரும் வார்த்தைகளில் கடவுள் மனிதவர்க்கத்திற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” இந்த மூலாதாரமான வாக்குத்தத்தத்தின் மீதே முழு மனிதவர்க்கத்தின் நம்பிக்கைகளும் சார்ந்திருக்கின்றன. உண்மையில் இது, நம்முடைய மிகப்பெரிய முற்பிதாவானவர் மனித குலம் முழுவதற்கும் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம்!
20 மனித சரித்திரத்திலேயே முதல் பரிசுத்த தீர்க்கதரிசனமாகிய இது, நான்கு முக்கிய ஆட்களைச் சுற்றிச் சுழலுகிறது. அதாவது, (1) சர்ப்பத்தின் தோற்றத்தில், பகைஞன், (2) இந்தப் பகைஞனின் வித்து, (3) ஸ்திரீ, (4) அவளுடைய வித்து. இந்த ஆட்கள் அடையாளக் குறிப்புகளால் விவரிக்கப்பட்டிருப்பதால், இந்த ‘ஸ்திரீயின் வித்து’ இன்னதென்பது ஒரு “பரிசுத்த இரகசியம்” என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (கொலோசெயர் 1:25-ஐ ஒத்துப் பாருங்கள்.) என்றபோதிலும், இந்தத் தீர்க்கதரிசனம் யாரை நோக்கிச் சொல்லப்பட்டதோ, அவனே, கடவுளுடைய அரசாட்சிக்கு விரோதமான அந்த முதல் பெரிய பகைஞனும் கலகக்காரனுமானவன் என்பதும் அவனுடைய “வித்து” அவனை ஆதரிப்பவர்களே என்பதும் தெளிவாய் இருக்கிறது. அந்த “ஸ்திரீ,” கடவுளுடைய அரசாட்சிக்கு மனைவியைப் போன்ற பற்றையும் கீழ்ப்படிதலையும் தவறாமல் காத்துவருகிற கடவுளுடைய சர்வலோக அமைப்புக்கு அடையாளக் குறிப்பாய் இருக்கிறாள். (ஏசாயா 54:1, 5 கலாத்தியர் 4:26; வெளிப்படுத்துதல் 12:1, ஆகியவற்றை ஒத்துப்பாருங்கள்.) ஆகவே, இந்த ‘ஸ்திரீயின் வித்து,’ கடவுளுடைய சிருஷ்டிகள் அடங்கிய சர்வலோக அமைப்பிலிருந்து கடவுளுடைய குமாரனாகப் பிறப்பிக்கப்படுவார், இவரே அந்தப் பெரிய கலகக்காரனை நசுக்கிப் போட்டு, கடவுளுடைய அரசாட்சி நேர்மையானது என்பதை மெய்ப்பித்துக் காட்டி, கடவுளுடைய அரசாட்சியை ஆதரிக்கிற மனிதவர்க்கத்தினர் எல்லாரையும் விடுதலை செய்வார். ஆகையால் உங்கள் மிகப் பெரிய முற்பிதாவால் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தமானது, தீயசேனைகளுக்கு எதிராகக் கடவுளுடைய போர் அறிவிப்பாகவும் அதன் விளைவாக, தெய்வீக அரசாட்சியும் நன்மையும் இறுதியில் வெற்றி பெறும் என்பதைக் குறித்த முன்னறிவிப்பாகவும் இருக்கிறது.
21 பைபிளின் இந்த அடிப்படை வாக்குத்தத்தத்தைப் பற்றிய எண்ணங்கள், இந்து மதம் வளர்ச்சியுற்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் போதும் மனிதரின் மனதில் இருந்து வந்திருப்பதானது கவனிப்பதற்குகந்த உண்மையாயிருக்கிறது. பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள, இந்த ஸ்திரீயின் வித்துவால் அந்தச் ‘சர்ப்பத்தின் தலை’ நசுக்கப்படும் என்பதைப் பற்றிய இந்தத் தெய்வீக வாக்குத்தத்தம் மனிதவர்க்கத்தின் முதல் மனித பெற்றோருக்கு வெளிப்படுத்தப்பட்டதால், இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிய ஏதாவது அறிகுறி சுவடுகள் பற்பல தேசங்களுக்குள் காணப்படுமென்று நியாயமாகவே எதிர்பார்க்கலாம். அவ்வாறு நிச்சயமாகவே காணப்படுகிறது.
22 இன்று, இந்துக்கள் சந்தானலட்சுமி என்றழைக்கப்படுகிற ஒரு தேவதையின் படத்தை வைத்து வணங்குகிறார்கள். இப்படத்தில் உள்ள தாயும் சேயும் ஒரு பூர்வ “ஸ்திரீ”யையும் அவளுடைய ‘வித்து’வையும் குறிப்பிட்டுக் காட்டுவதாய் இருக்கிறது. பாதுகாப்புக்காகப் பட்டயத்தையும் கேடகத்தையும் அந்தத் தாய் தாங்கியிருப்பது ஒரு சத்துருவின் ஏதோ ‘பகை’ அவர்களுக்கு இருக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. முதன்முதல் லட்சுமியின் படத்திற்கு இருந்த இந்தப் பிரதான அர்த்தம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் நாளடைவில் மறைந்து போயிருக்கக்கூடும். என்றாலும் சந்தேகமில்லாமல் இது தொடக்கத்தில் மனிதரின் முதல் பெற்றோருக்குக் கொடுக்கப்பட்டதாக பைபிளில் கூறப்பட்டுள்ள, மனிதவர்க்கத்தின் முதல் நம்பிக்கைகளைச் சித்தரித்துக் காட்டுகிறது. ஒருவேளை இதை அறியாமலேயே இந்துக்கள், பைபிளின் முதல் வாக்குத்தத்தத்தின் கருத்தை இந்த லட்சுமியின் படத்தில் இணைக்கின்றனர்.
23 இந்த இந்து படத்தை பைபிளின் முதல் தீர்க்கதரிசனத்தோடு ஒத்துப் பார்க்கையில், ‘எது முதல் வந்தது, இந்த இந்து படமா அல்லது பைபிள் எழுத்துக்களா?’ என்று கேட்பது பொருத்தமாய் இருக்கிறது. இதற்குச் சரித்திரப் பூர்வமான பதில் பைபிள் எழுத்துக்களே என்று இருக்கவேண்டும். இந்தத் தீர்க்கதரிசனம் மனிதனின் பூமிக்குரிய முதல் முற்பிதாவின் வாழ்க்கைக் காலத் தொடக்கப் பகுதியில் கூறப்பட்டது. அதன் பின்பு, கடவுளுடைய உரிய காலம் வரும் வரையில் இந்தத் தீர்க்கதரிசனத்தின் உண்மையான அர்த்தம் பின்தொடர்ந்து வந்தத் தலைமுறைகளுக்கு இரகசியமாக வைக்கப்பட்டு வந்தது. (கொலோசெயர் 1:25) மறுபட்சத்தில், மதப்புத்தகங்களிலும் படங்களிலும் வருணிக்கப்பட்டுள்ள ‘தெய்வத்தாயையும் சேயையும்’ பற்றிய இந்தக் கருத்து நியாயப்படியே அந்த முதல் மனிதனுக்கும் அவன் இந்த முதல் தீர்க்கதரிசனத்தைப் பெறுவதற்கும் முன்பாக எவருடைய எண்ணத்திலும் உருவாக்கப்பட்டிருக்க முடியாது!
24 பைபிளில்லாவிடில், இந்த இந்து படத்தைப்பற்றிய மற்ற விளக்கங்கள் அனைத்தும் மேற்போக்கான கற்பனைக் கோட்பாடுகளாகவே இருக்கும். பட்சபாதமான விளக்கங்கள் காரணங்களை பகுத்தாராயும் மனதுக்கு உண்மையில் திருப்தியளிக்காது. ஆகையால் லட்சுமியின் இந்த நவீனகால படத்தில் சித்தரிக்கப்படும் இந்துக்களின் எதிர்கால நம்பிக்கைகள், பைபிளில் மாத்திரமே காத்து வைக்கப்பட்டிருக்கிற சரித்திரத்திலிருந்து ஆரம்பித்திருக்கின்றன. இவ்வாறு, ஆதியாகமம் 3:15-ல் உள்ள ‘ஸ்திரீயின் வித்து’வைப்பற்றிய பைபிளின் தீர்க்கதரிசனம், கடவுளுடைய அரசாட்சி கடைசியாக வெற்றியடையும், மேலும் நம்முடைய பூமி உட்பட, இந்தச் சர்வலோகம் முழுவதிலிருந்தும் எல்லா கலகமும் பொல்லாப்பும் கடைசியாக விலக்கி ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கைகளை உண்மை மனதுள்ள இந்துக்களுக்கு அளிக்கிறது. மேலும் அந்த மெய்யான ‘ஸ்திரீயின் வித்தானவர்’ கடவுள் தாமே நியமித்திருக்கிற விடுதலை செய்பவராக இருக்கிறார். இந்த மிக முக்கிய பிரச்னையை இது வரையாக ஏன் எந்த மனிதனாலும் தீர்க்க முடியவில்லை என்பதற்குக் காரணம், அது கடவுளுடைய வழியிலும் அவர் குறித்திருக்கும் காலத்திலும் செய்யப்பட வேண்டியதாய் இருப்பதேயாகும்.
25 சர்வலோகத்தில் ஒழுங்கைத் திரும்ப நிலைநிறுத்துவதாகக் கூறியுள்ள இந்தத் தெய்வீக வாக்கின் மெய்யான நிறைவேற்றத்தைக் கண்டடைய, மனித சரித்திரத்தில் ஆராய்ச்சியை நாம் தொடர்ந்து செய்யவேண்டியது அவசியம். ஆகையால் மனிதவர்க்கத்தின் முதல் சமுதாயத்தின்—நம்முடைய பொது மனித முற்பிதாக்களின்—சரித்திரப்பூர்வ வளர்ச்சியை நாம் படிப்படியாக ஆராயலாம். கடவுளால் படைக்கப்பட்ட அந்த முதல் தம்பதிகளுக்குப் பிள்ளைகள் பிறந்தனர். பின்பு படிப்படியாய் அந்த மனித குடும்பம் பெருகிற்று. கடவுளிடமிருந்து உறவு பிரிந்த நிலையில், அவர்களுக்குள், கொலை, விபசாரம், கீழ்த்தரமான நடத்தைகள் ஆகியவை தங்கள் அருவருப்பான தோற்றங்களைக் காட்டின.—ஆதியாகமம் 5:3-5; 4:8, 23.
அவதாரங்களின் தொடக்கம்
26 இப்பொழுது பழக்கத்திற்கு மாறான ஒரு சம்பவம் சரித்திரத்தில் நடந்தது, இந்தச் சம்பவமானது இந்து மத பாரம்பரிய கோட்பாடு தொகுதிகளில் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பைபிளின் உண்மையான சரித்திரம் பின்வருமாறு சொல்லுகிறது: “மனுஷர் பூமியின் மேல் பெருகத் துவக்கினார்கள். அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது, தெய்வ குமாரர் மனுஷ குமாரத்திகளைச் செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு அவர்களில் தங்களுக்கு இஷ்டமானவர்களைப் பெண்களாகக் கொண்டார்கள். அப்பொழுது யெகோவா என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனில் தங்குவதில்லை, அவன் மாம்சத்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷந்தான் என்றார்.
27 “தெய்வ குமாரர் மனுஷ குமாரத்திகளோடு கூடிவாழ்ந்து இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றதினால் அக்காலத்திலும் பிற்காலத்திலும் இராட்சதர் பூமியிலிருந்தார்கள்; அவர்களே பூர்வத்தில் பேர் பெற்ற பலவான்கள்.
28 “மனுஷரின் அக்கிரமம் பூமியிலே பெருகிற்றென்றும் அவன் இருதயத்து நினைவுகளும் உத்தேசங்களும் நித்தமும் பொல்லாதவைகளே என்றும் யெகோவா கண்டார்.”—ஆதியாகமம் 6:1-5, தி.மொ.
29 காணக்கூடாத மண்டலத்தில் இருந்த, கடவுளுடைய புத்திக்கூர்மையுள்ள ஆவிக் குமாரர்கள், கவர்ச்சிகரமான மனித பெண்களிடமாக இயற்கைக்கு மாறான இச்சைகளை வளர்த்து வந்தார்கள், ஆகவே இந்தத் தூதர்கள் “தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக் கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்”டார்கள் என்பதை இது குறிக்கிறது. (யூதா 6) இந்தத் தூதர்களாகிய கடவுளுடைய குமாரர்கள் பூமியில் அவதாரங்கள் எடுத்தவர்கள், அல்லது மனித உருவெடுத்தவர்கள் ஆனார்கள். இவர்கள் கவர்ச்சிகரமான மாம்ச பெண்களுடன் கணவன் மனைவிபோன்று கூடிவாழ்ந்து, அசாதாரண பலம் கொண்ட கலப்பு இனப் பிறவிகளைப் பிறப்பித்தார்கள். அவதாரம் என்ற இந்தச் சமஸ்கிருதச் சொல், “இறங்குதல்” என்று, முக்கியமாய் ஒரு தெய்வம் வானுலகத்திலிருந்து பூமிக்குக் கீழிறங்கிவருதல் என்று பொருள்படுகிறது. பிற்காலத்தில் இந்து கோட்பாட்டில் அவதாரங்களைப்பற்றி வழங்கி வந்த விஷயங்களுக்கு அடிப்படையான உண்மை சம்பவங்களை இங்கே பைபிள் சரித்திரம் நமக்குச் சொல்லுகிறது.
30 மேலும், பைபிளின் இந்த உண்மை விவரப்பதிவு, இந்து மத தெய்வங்களைப்பற்றி எழுதப்பட்ட புராணங்கள் எனப்படும் நூல்களின் பேரிலுங்கூட விளக்கத் தெளிவைக் கொடுக்கிறது. இந்தப் புராணங்கள், தெய்வங்களையும் இராட்சதர்களையும், அவர்களின் பலத்தச் செயல்களையும், அவர்களுடைய காதல் விவகாரங்களையும், அவர்களுடைய போர்களையும் அருஞ்செயல்களையும் பற்றிய விவரங்களைப் பதிவு செய்திருக்கின்றன. இந்தப் புராணங்கள், மண்ணுக்குரிய மணத்தையுடைய காந்தருவர் எனப்படுகிற தெய்வங்களைப்பற்றி விவரிக்கின்றன. காந்தருவர்கள் விவாகத்துடனும் சம்பந்தப்படுத்தப்படுகின்றனர், இவர்கள் பெண்களைக் காதலிப்பதாகவும் அவர்களைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றனர். இவர்களுடைய காமக் கிழத்திகளாகிய அபிசாரிகள் (அப்சரஸ்) கவர்ச்சி செய்து கற்பழிக்கச் செய்பவர்களாகவும், வரைமுறையற்றவர்களாகவும், தாய்க்குரிய பாச உணர்ச்சியற்றவர்களாகவும் இந்து எழுத்துக்களில் வருணித்துக் காட்டப்படுகின்றனர். இந்த அபிசாரிகளுங்கூட மண்ணுக்குரிய மணத்தை உடையவர்கள், இது ஆதரவாகக் கருதப்படுகிறது. பின்னும் இந்து சமய நூலில் குறிக்கப்பட்டுள்ள மற்றொரு தொகுதியான அரைத் தெய்வங்கள் காணார் என்பவர்கள். இந்து அதிகாரத்துவம் ஒன்றின்படி, இந்தக் காணார் கலப்பு இன பிறவியர் என்று சொல்லப்படுகின்றனர். கடவுளுடைய கீழ்ப்படியாத ஆவி குமாரர்களைப்பற்றிய பைபிளின் உண்மையான விவரப் பதிவோடு இந்த விவரங்கள் நன்றாய்ப் பொருந்துகின்றன. இந்தத் தூதர்கள் காதல் விவகாரங்களில் ஈடுபட்டனர்; பெரிய அடையாளங்களையும் அதிசயங்களையுங்கூட நடப்பித்தனர். கலப்பு இன பிறவிகளான இவர்களுடைய இராட்சதப் பிள்ளைகள் பலத்த செயல்களைச் செய்யக்கூடியவர்களாக இருந்தனர். இந்தக் கீழ்ப்படியாத தூதர்களும் இராட்சதர்களும் குறைந்த பட்சம் 120 ஆண்டுகளாவது பூமியில் வாழ்ந்தனர். பைபிள் குறிப்பிடுகிற பிரகாரம், இத்தனை ஆண்டுகளுக்குள் பேர் பெற்ற பல செயல்களின் பதிவை உண்டுபண்ணிவிட்டனர். ஆகையால் இந்தச் சம்பவங்கள், பல பூர்வ ஜனங்களின் மத பழங்கதைகளுக்குள் பல்வேறு அளவுகளில் கலந்து வந்திருக்கின்றன.
31 இருந்தபோதிலும், இந்தச் செயல்கள் தீமையைப் பெருகச் செய்தன. இதனால் கடவுள் பெரிய பிரளயத்தை அல்லது ஜலப்பிரளயத்தைக் கொண்டு வரவேண்டியதாக இருந்தது. உண்மையான சரித்திரம் பின்வருமாறு அறிவிக்கிறது: “பூமி கடவுள் பார்வையில் சீர் கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. கடவுள் பூமியைப் பார்த்தார். மாம்சமான யாவரும் பூமியின் மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள். இதோ, பூமி சீர் கெட்டே போயிற்றென்று கடவுள் கண்டு நோவாவைப் பார்த்து: . . . இதோ, வானத்தின் கீழ் ஜீவ சுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின் மேல் ஜப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்,” என்றார்.—ஆதியாகமம் 6:11-17, தி.மொ.
32 “அப்பொழுது பூமியின்மேல் சஞ்சரிக்கிற சகல மாம்ச ஜந்துக்களாகிய பறவைகள் நாட்டு மிருகங்கள் காட்டு மிருகங்கள் பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும் சகல நரஜீவன்களும் மாண்டன.”—ஆதியாகமம் 7:21, தி.மொ.
33 அந்தப் பெரு வெள்ளத்தின் அல்லது ஜலப்பிரளயத்தின் மூலம் பூமி இப்பொழுது சுத்தமாக்கப்பட்டிருந்தது. கடவுள் தாம் நீதியை நேசிப்பதை நடைமுறையில் காட்டியிருந்தார், மேலும், சிலர் தப்பிப் பிழைப்பதற்கான ஏற்பாட்டை அவர் அருளியிருந்ததனால், மனிதவர்க்கம் ஒரு புதிய தொடக்கத்தை அடைந்தது. நம்முடைய தற்போதைய யுகம் அல்லது சகாப்தம் தொடங்கினது. என்றபோதிலும் ஜலப்பிரளயத்திற்கு முந்திய இந்தச் சரித்திரங்களைப் பற்றிய நினைவுகள் அந்த ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தவர்களின் மனதில் நீடித்திருந்தன. இவ்வாறாக இவை இன்று பல ஜனங்கள் கடைப்பிடித்து வருகிற மதங்களையும் தெய்வங்களையும் பற்றிய நம்பிக்கைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் அடிப்படையாயிற்றென்பது தெளிவாகத் தெரிகிறது.
பேய்களை உண்டாக்கினவர் யார்
34 தெய்வ பக்தியற்ற அந்த மானிடரை ஜலப்பிரளயம் சாவுக்கு அடித்துச் சென்றபோது, அந்தக் கலகஞ் செய்த தூதர்கள் தங்கள் மாம்ச உடல்களைக் களைந்துவிட்டு ஆவி மண்டலத்துக்குத் திரும்பிச் சென்றனர், நீதியுள்ள ஆட்சிக்குரிய கடவுளுடைய நோக்கத்தின் ஆதரவாகக் கடவுளிடம் திரும்பிப்போய்ச் சேர்ந்து கொள்ள அல்ல. கடவுளுடைய பிரதான சத்துருவின் சேனைகளாகப் பேய்களுக்குத் தலைவனானவனைச் சேர்ந்து கொள்ளவேயாகும். இந்த முதல் பேயே, அந்த முதல் தொடக்கத்தில் அந்த முதல் மனிதனையும் மனுஷியையும் கடவுளுடைய அரசாட்சிக்கு விரோதமாகக் கலகஞ் செய்யும்படி தூண்டி இயக்குவித்தவன். மேலும் ஆதியாகமம் 3:15-ல் உள்ள இந்தப் பெரிய தீர்க்கதரிசனம் இவனை நோக்கியே கூறப்பட்டது. இந்த முதல் பேயானவன், வஞ்சனையின் மூலமும் உயிரையும் சாவையும் பற்றி தவறான எண்ணங்களைக் கொடுப்பதன் மூலமும் மனிதரைக் கலகம் செய்யும்படி செய்வித்திருந்தான். எப்படி?
35 நாம் மறுபடியும் ஒன்றாக ஆதியானமம் 3:1-5-ல் (தி.மொ.) உள்ள பதிவைக் கவனித்துப் பார்க்கலாம்: “கடவுளாகிய யெகோவா உண்டாக்கின சகல காட்டு ஜந்துக்களிலும் சர்ப்பமே தந்திரமுள்ளது. அது ஸ்திரீயினிடம்: நீங்கள் தோட்டத்திலுள்ள எந்த விருட்சத்தின் கனியையேனும் புசிக்க வேண்டாமென்று கடவுள் சொன்னதுண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தினிடம்: நாங்கள் தோட்டத்திலுள்ள மற்ற விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; தோட்டத்தின் நடுவிலிருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்தோ, கடவுள்: நீங்கள் அதைப் புசிக்கவும் தொடவும் வேண்டாம்; புசித்தால் சாவீர்களென்று சொன்னார் என்று சொல்லவே, சர்ப்பம் ஸ்திரீயினிடம்: நீங்கள் சாவதே இல்லை; கடவுளுக்கோ ஒன்று தெரியும்: நீங்கள் இதைப் புசிக்கும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றது.”
36 சர்ப்பத்தின் மூலம் பேசிய இந்த முதல் பிசாசு, கடவுளுக்கு எதிர்மாறாகப் பேசினதன் காரணத்தால், தன்னைப் பொய்யனாகவும், பொய்க்குத் தகப்பனாகவும் ஆக்கிக்கொண்டான். (யோவான் 8:44) கடவுளை இவ்வாறு அவன் எதிர்த்ததால் சாத்தான் என்று அழைக்கப்பட்டான். ஏனென்றால் சாத்தான் என்பது “எதிர்ப்பவன்” அல்லது “எதிர்த்து நிற்பவன்” என்று அர்த்தங்கொள்ளுகிறது. மனிதவர்க்கம் தொடர்ந்து வாழ்வது கடவுளுக்குக் கீழ்ப்படிவதன்பேரில் சார்ந்தில்லை என்பதே அதன் விவாதம். ஆகையால், உயிரையும் சாவையும் பற்றி சில தவறான எண்ணங்களைச் சாத்தான் மனித வர்க்கத்திற்குள் வஞ்சகமாக நுழைத்தான். உண்மையில், குடியிருக்கப்பட்ட பூமி முழுவதையும் சாத்தான் மோசம் போக்கிக் கொண்டிருக்கிறான் என்று பைபிள் சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) இந்தத் தவறான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டே, இன்று மனிதவர்க்கத்தில் பெரும்பான்மையர் உயிரையும் சாவையும்பற்றி பலதரப்பட்ட கருத்துக்களைப் பெற்றிருக்கின்றனர். நிச்சயமாகவே, இந்தப் பலவிதமான கருத்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளினூடே, உயிர், சாவு, மதம் ஆகியவற்றைக் குறித்ததில் பொதுமக்கள் விரும்புகிற வண்ணமான நம்பிக்கைகளாகவும் மனப்பான்மைகளாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
37 ஆனால் ஒரு பரிபூரண தூதன் எப்படி ஒரு பேய் அல்லது பிசாசு ஆகக்கூடும்? என்று நீங்கள் கேட்கலாம். அந்த முதல் பரிபூரண மனிதன் கடவுளுக்கு விரோதமாகக் கலகஞ் செய்த அதே முறையிலேயே இதுவும் நடந்தது. தன் விருப்பத் தெரிவு சுயாதீனத்தை அவன் துர்ப்பிரயோகம் செய்ததனாலேயே! நல்வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன் எப்படி பெருங் குற்றவாளியாகிறான்? திருடுவதன் மூலம் ஒருவன் தன்னைத் திருடனாக்கிக் கொள்கிறான். அதைப்போலவே ஒழுக்க நெறியைத் தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தையுடைய ஒரு பரிபூரண ஆள், அவன் மனிதனாக இருந்தாலும்சரி ஆவியாக இருந்தாலும்சரி தன்னுடைய தெரிவு சுயாதீனத்தைத் துர்ப்பிரயோகம் செய்து கடவுளுக்கு விரோதமான கலகக்காரனாக இழிநிலைக்குச் செல்லக்கூடும். ஜலப்பிரளயத்திற்கு முந்திய காலத்தில், கடவுளுடைய அந்தப் பரிபூரண தூத குமாரரின் காரியத்திலும் இப்படியே நடந்தது. தெரிந்து கொள்வதற்குத் தங்களுக்கு இருந்த சுயாதீனத்தைத் தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்குரிய ஆதிவாசஸ்தலத்தை விட்டுவிட்டார்கள். ஆனால் இப்பொழுது கடவுளுடைய தயவில் இல்லாதபோதிலும் பிரளயத்தின் அல்லது ஜலப்பிரளயத்தின் காரணத்தால் ஆவியின் ரூபத்தில் தங்கள் வாழ்க்கையைத் திரும்ப மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
ஆரியர் இந்தியாவுக்கு வந்த விதம்
38 ஆகையால் ஜலப்பிரளயத்திற்குப் பின், சுத்தமான பூமியில் இந்தப் பேய்கள் சாத்தானின் தலைமையின்கீழ், மனிதவர்க்கத்தின் மேல் தங்கள் தீயச் செல்வாக்கைச் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, மனித குலத்தைத் தம்முடைய அரசாட்சிக்குள் திரும்பக் கொண்டுவருவதற்குரிய கடவுள் வெளிப்படையாய்ச் சொல்லியிருந்த நோக்கத்தின் முன்னேற்றத்தை எதிர்க்க முற்பட்டனர். (ஆதியாகமம் 3:15) இதைச் செய்வதற்கு இந்தத் தற்போதைய யுகத்தில் அவர்களுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. மனிதவர்க்கம் முழுவதும் ஒரே மொழியை இன்னும் பேசிக்கொண்டிருந்த சமயத்திலாகும். இந்தச் சரித்திரத்தை ஆதியாகமம் 11:1-9-ல் (தி.மொ.) நீங்கள் வாசிக்கலாம், அதாவது:
39 “பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சுமிருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில் ஷிநேயார் தேசத்திலே சமபூமியைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்களென்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; அவர்கள் செங்கலைக் கல்லாகவும் நிலக்கீலைச் சாந்தாகவும் உபயோகித்தார்கள். ஆகவே அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடி நமக்கு ஒரு நகரத்தையும் வானத்தையளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி நமக்குப் பேர் உண்டாகச் செய்வோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.
40 “மனுப்புத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்கு யெகோவா இறங்கினார். அப்பொழுது யெகோவா: இதோ ஜனங்கள் ஒரே கூட்டமாயிருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையுமிருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; அவர்கள் செய்ய நினைத்தது ஒன்றும் இனித் தடைப்பட மாட்டாது. நாமோ இறங்கிப்போய் ஒருவர் பேசுவதை மற்றவர் அறியாதபடி அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம், வாருங்கள் என்றார். அப்படியே யெகோவா அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்; அவர்கள் நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையை யெகோவா அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால் அதின்பேர் பாபேல் எனப்பட்டது; யெகோவா அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்.”
41 அப்படியானால், இதுவே சமஸ்கிருதம், பிராகிருதம், பாளி மற்றும் திராவிட மொழிகள் உட்படி எல்லா இந்தோ—ஐரோப்பிய மொழிகளின் தொடக்கத்தைக் குறித்த மிகப் பூர்வ சரித்திர விவரப்பதிவு. பாபேலில் இவ்வாறு கடவுள் குறிக்கிட்டது, அநேகர் அறிந்தவண்ணம், பூர்வ குடிகள் திடீரென்று இடம் பெயர்ந்து செல்லும்படிச் செய்தது. இவ்வாறு ஆரியர் மத்திய ஆசியாவின் வழியாய் இந்தியாவுக்குள்ளும் ஐரோப்பாவுக்குள்ளும் வந்தனர். தற்காலத்திய ஜாதிகளும் மொழிகளும் இந்தச் சரித்திரத்திலுள்ளபடியே ஆரம்பித்தன என்பதை நவீன விஞ்ஞானம் ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக கிழக்கத்திய மொழி நிபுணராகிய சர் ஹென்றி ராலின்ஸன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “பைபிளின் குறிப்பு எதையும் சாராமல் வெறும் மொழி பாதைகளின் குறுக்கீட்டுச் சந்திப்பை மாத்திரமே அடிப்படையாய் வைத்து ஆராய்ந்தாலும், நாம் சிநேயார் சமபூமியே இந்தப் பற்பல மொழிகள் சுற்றிப் பரவுவதற்கு மைய ஸ்தானமாக இருந்ததென்று உறுதியான முடிவுக்கு வருவோம்.” மறுக்கமுடியாத வண்ணம் பைபிள், உங்கள் தேச மக்களும் உங்கள் மொழியும் உண்டாவதற்குக் காரணமாயிருந்த சரித்திர தொடக்கத்தை விவரிக்கிறது. இவ்வாறாக பைபிள் உங்கள் தொடர்ந்த அக்கறைக்கும் கவனத்திற்கும் தகுதியுள்ளதாய் இருக்கிறது.
42 இந்தப் பாபேல் கோபுர நிகழ்ச்சியானது, மனிதர் தெய்வீகச் சித்தத்தை வேண்டாமென்று தள்ளின மற்றொரு சம்பவமாய் இருந்தது; கடவுள் தலையிட்டதால் மனிதருடைய முயற்சி தோல்வியுற்று, அதன் பின்பு அந்தந்த மொழி தொகுதிகள் இடம்பெயர்ந்து பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தம் சிதறிப்போக நேரிட்டது. ஆகையால் நம்பத்தக்கச் சரித்திரம் பின்வருமாறு கூறுகிறது: “தங்கள் ஜாதிகளிலுள்ள தங்கள் சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு அவர்களிலிருந்து பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.” (ஆதியாகமம் 10:32, தி.மொ.) கடவுளுடைய அரசாட்சியோடு தொடர்பு அற்றவர்களாய் மனிதர்கள் தங்கள் சொந்த அரசு முறைகளையும் ஆசாரிய முறைகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். இதன் விளைவாக, உண்மையில், பாபேலிலிருந்து கொண்டுவரப்பட்ட எண்ணங்களில் ஊன்றிய மதங்களும், அவற்றின் விதிக்கப்பட்ட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சடங்கு முறைகளும், கற்பனை கருத்துக்களும் பன்மடங்காகப் பெருகின. என்றபோதிலும், படைக்கப்பட்ட நம்முடைய முதல் பெற்றோரில் கடவுள் நிலைநாட்டின மனச்சாட்சியானது, இவ்வுலகத்தின் மதங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நல்நடத்தைக்குரிய சட்டங்களை உண்டுபண்ணுவதில் சந்தேகமில்லாமல் செல்வாக்கு செலுத்தினது. இது, “எல்லா பாதைகளும் கடவுளிடமே வழிநடத்துகின்றன,” என்று பலர் நம்பும்படி செய்திருக்கிறது. பைபிள் பின்வருமாறு விளக்கி இதன்பேரில் தெளிவைத் தருகிறது: “அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதியார் இயற்கையால் நியாயப் பிரமாணத்திற்கிசைந்தவைகளைச் செய்யும்போது நியாயப்பிரமாணமில்லாத இவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்கள் மனச்சாட்சியுங்கூடச் சாட்சியிடுகிறதினாலும் குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்கள் சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும் நியாயப்பிரமாணத்தின் பொருள் தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” (ரோமர் 2:14, 15, தி.மொ.) என்றாலும் நல்நடத்தைக்குரிய சட்டங்களைக் கொண்டிருப்பது மட்டுமே தெய்வீக வெளிப்படுத்துதலைப் பெற்றிருப்பதன் நிரூபணம் ஆகாது. நாத்திக கோட்பாட்டைக் கொண்ட கம்யூனிஸமுங்கூட, சில மதங்கள் கொண்டிருப்பவற்றிற்கு ஒப்பான நல்நடத்தைக்குரிய சட்டங்களை உடையதாய் இருக்கிறது. ஆம், பின்வரும் தகவல் காட்டப்போகிறபடி, வெறும் ஒரு நல்லொழுக்கச் சட்டத் தொகுதியைப் பார்க்கிலும் மிக அதிகம் தெய்வீக வெளிப்படுத்தலில் அடங்கி இருக்கிறது.
மனிதர் கடவுளிடம் ஒப்புரவாவதற்கு முன்னேற்பாடுகள்
43 மனிதவர்க்கம் தெய்வீகச் சித்தத்தைச் செய்வதை விட்டுவிட்டிருந்தபோதிலும் கடவுள் இன்னும் மனித குலம் இருந்துவரும்படி பராமரித்துக் காத்துவந்தார். ஆகவே பைபிள் நமக்குப் பின்வருமாறு உறுதியளிக்கிறார்: “சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை.”—அப்போஸ்தலர் 14:16, 17.
44 வேண்டுமென்றே தாறுமாறாய் நடக்கும் மனிதவர்க்கத்தின் தன்மையை நாம் மனதில் வைத்து, எப்படி அவர்கள் கடவுளுடன் ஒப்புரவான உறவுக்குள் தாங்களாக மனமார்ந்து வருவார்கள்? என்று கேட்கிறோம். மனித குடும்பத்திலிருந்து ஒரு சிறிய சமுதாயத்தைத் தெரிந்தெடுத்து அதைத் தம்முடைய கருவியாகப் பயன்படுத்தி அதன் மூலமாய் எல்லா ஜாதிகளும் நன்மை பெறக்கூடும்படி கடவுள் அன்புடன் ஏற்பாடு செய்தார். ஒரு பூர்வ கோத்திரத் தகப்பனாகிய ஆபிரகாமின் சந்ததியாரை இவ்வாறு உபயோகிக்க சிருஷ்டிகர் தெரிந்து கொண்டார், அந்த ஆபிரகாம் பாவத்தைச் சுதந்தரித்தவனாக இருந்தபோதிலும் கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்குச் சிறிதும் பின்வாங்காத பற்றுறுதியைக் காட்டினான். தன்னுடைய சொந்த மகனாகிய ஈசாக்கைப் பலியிடுவது கடவுளுடைய சித்தமென்றால் அதையுங்கூட செய்ய மனமுள்ளவனாக ஆபிரகாம் தன்னைக் காட்டினபோது, யெகோவாவின் தூதனானவர் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: “நீ உன் புத்திரன் என்றும் உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன்,” என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.—ஆதியாகமம் 22:15-18.
45 ஆகவே, ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடுதலையளிக்கும் ‘வாக்குப்பண்ணப்பட்ட வித்து’ ஆபிரகாமின் சந்ததியில் பிறப்பார், இவ்வாறாக அவரை அடையாளங் கண்டு கொள்ள முடியும். என்றபோதிலும், ஆபிரகாமின் சந்ததியாராகிய யூதர்கள் மனிதவர்க்கத்தின் மற்ற ஜாதிகளைப் பார்க்கிலும் மேம்பட்டவர்களாக இருந்தார்கள் என்ற எந்தக் காரணத்தினிமித்தமாக தெரிந்தெடுக்கப்பட்டவில்லை. உபாகமம் 9:6-ல் (தி.மொ.) பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி, கடவுளுக்கும் அந்த ஜனத்திற்கும் மத்தியஸ்தனான மோசே பின்வருமாறு சொல்லி இதைக் குறிப்பிட்டுக் காட்டினார்: “உன் கடவுளாகிய யெகோவா அந்த நல்ல தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பது உன் நீதியினிமித்தமல்ல என்பதை நீ உணர்ந்துகொள்ள வேண்டும்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம்.” (இப்படிப்பட்ட ஒளிவுமறைவில்லாத பேச்சானது, இந்தப் பதிவு பாரபட்சமற்ற நம்பத்தக்க உண்மை நிகழ்ச்சிகளைப் பற்றிய சரித்திரமென்பதைக் குறித்து காட்டுகிறது!) ஆனால், தெய்வீகக் கருவியாக இருக்கும்படி இந்த யூத ஜனத்தை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
46 ஏனென்றால் அவர்கள் ஆபிரகாமுடைய உண்மையுள்ள மகனாகிய ஈசாக்கின் மூலமும் பேரனாகிய யாக்கோபின் மூலமும் ஆபிரகாமின் வித்தாக இருந்தார்கள். இது மட்டுமல்லாமல், மனிதவர்க்கத்தை விடுதலை செய்யப் போகிறவர் மனித உலகத்திற்குள், ஓர் அவதாரமாக அல்ல, தெய்வ—மனிதனாக அல்ல, கலப்பற்ற மாம்ச மனிதனாக, இயற்கையாய் ஆபிரகாமின் சந்ததியில் பிறக்க வேண்டியதாக இருந்தது. உண்மையுள்ள முற்பிதாக்களின் காரணமாக, கடவுள் வேறு எந்த ஜனத்தைத் தெரிந்து கொண்டிருந்தாலுங்கூட அப்போதும், மற்ற ஜனங்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக மனக் கசப்புடன் உணரக்கூடும். என்றபோதிலும் கடவுள் தெரிந்துகொள்வது நீதியாகவே இருக்குமென்ற நம்பிக்கைக் கொண்டுள்ள எவரும் அவ்வாறு சற்றும் உணரமாட்டர்கள். உதாரணமாக, ஒரு பெரிய நாடகத்தைப் பார்ப்பதற்கு வந்திருக்கும் திரளான பார்வையாளர்கள் தாங்கள் அந்த மேடைமீது நடிக்காததனால் புறக்கணிக்கப்பட்டவர்களாய் உணருகிறதில்லை. அதைப்போலவே கடவுள், இந்த உலகத்திற்குத் தம்முடைய நியமங்களையும் செயல் முறைகளையும் கற்பிப்பதற்கு ஓர் உயிருள்ள கண்கூடான முன்மாதிரியாக இருக்கும்படி மனிதவர்க்கத்தின் ஒரு சிறு பகுதியை தெரிந்து கொண்டபோது, மனிதவர்க்கத்தின் மீதி பகுதியை அவர் புறக்கணிக்கவில்லை. இஸ்ரவேலின் சரித்திரமானது, கடவுளுடைய ஞானமும், நீதியுமுள்ள சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் என்ன நடக்கிறது கீழ்ப்படியாவிடில் என்ன நடக்கிறது என்பதை மனிதவர்க்கம் முழுவதற்கும் கற்பிக்கிறது. இவ்வாறு இஸ்ரவேலுடன் மாத்திரம் கடவுள் தற்காலிகமாகத் தனிப்பட்ட தொடர்பு வைத்துக் கொண்டே அதே சமயத்தின் பின்னொரு காலத்தில் எல்லா ஜாதிகளின் ஜனங்களையும் ஆசீர்வதிப்பதற்கான நம்முடைய நீண்ட கால நோக்கத்தை நிறைவேற்றி வந்தார்.—ஆதியாகமம் 22:18.
அப்படியானால் உங்கள் எதிர்காலம் என்ன?
47 சுவடுகளைப் பின்பற்றி ஆராய்ந்து உயிர், பாவம், மரணம், மதம் ஆகியவற்றின் உண்மையான தொடக்கத்தை நாம் கண்டுபிடித்தோம். பைபிளின் நம்பத்தக்க சரித்திரம் எப்படி நவீன விஞ்ஞானத்தாலும், தர்க்க முறைப்படி, இந்து பாரம்பரியத்தாலும் உறுதிசெய்யப்படுகிறதென்பதை நாம் பார்த்தோம். தெய்வீக சத்திய பாதையை விட்டு விலகியது எப்படி என்றும், பின்பு பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மெய்யான விடுதலை பெறுவதற்குரிய அந்த மகத்தான வாக்கு எப்படி வந்ததென்றும் நாம் பார்த்தோம். இது, எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்வதில் நம்பிக்கை வைப்பதற்கு ஒருவரை வழிநடத்துகிறது. கடவுள் உங்களுக்கு மிக அதிக மகிழ்ச்சியும் வாழ்வு வளமுமுள்ள ஓர் எதிர்காலத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம். மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய முதல் நோக்கமானது நாம் பூமியில் ஒரு பரதீஸில் மனித பரிபூரணத்துடன் வாழவேண்டும் என்பதே என்று நாம் கற்றறிந்தோம். இந்தப் பூமியிலே தானே அந்த மகிமையான பரதீஸ் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்று பரிசுத்த வேதாகமம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. உண்மையான பைபிள் சரித்திரத்தின் கடவுள், ஏசாயா 55:11-ல் பதிவு செய்திருக்கிறபடி பின்வருமாறு கூறுகிறார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”
48 ஆகையால், இப்பூமியில் திரும்ப நிலைநாட்டப்படும் ஒரு பரதீஸில் வாழப்போகிறோம் என்ற தனிப்பட்ட நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நீங்களும் பெறலாம். மனிதவர்க்கம் எல்லா பாவமும் அபூரணமும் இன்றி சுத்திகரிக்கப்பட்டு, இவ்வாறாக நீங்களும் மனித பரிபூரண நிலையை எட்டுவதற்குக் கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார். சங்கீதம் 37:29-ல் பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” மேலும் ஏசாயா 33:24-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.”
49 ஆனால், மனிதனால் கொடுக்க முடியாத இப்பேர்ப்பட்ட வெகுமதிகளை உங்களுக்குக் கொடுக்கும்படி நோக்கங்கொண்டிருக்கிற இந்தக் கடவுள் யார்? நாம் ஏற்கெனவே பார்த்தப் பிரகாரம் அவருடைய பெயர் யெகோவா. இந்தப் பெயரின் அர்த்தமானது கடவுளுடைய அதிசயமான சுபாவத்தோடு ஒத்திருக்கிறது. யெகோவா என்ற பெயரின் பொருள், “அவர் ஆகும்படி செய்கிறார்,” என்பதாகும். இதன் அர்த்தமானது, கடவுள் (தம்முடைய வாக்குகளை அல்லது வெளிப்படுத்திக் கூறியுள்ள நோக்கங்களை) நிறைவேற்றுகிறவர் என்பதே. உயிருள்ள மெய்யான கடவுள் மாத்திரமே சரியாயும் உண்மையாயும் இப்படிப்பட்ட ஒரு பெயரைத் தாங்கக்கூடும். யெகோவாவைக் குறித்து பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “யெகோவாவே கடவுளென்று அறிந்துகொள்ளுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடைய ஜனம், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள். யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றென்றும் அவர் உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.”—சங்கீதம் 100:3, 5, தி.மொ.
50 யெகோவா நல்லவராகவும் கிருபை அல்லது அன்புள்ள இரக்கமுள்ளவராகவும் இருக்கிறதனால்தான் அவர், நீங்களும் உங்கள் குடும்பமும் இப்பேர்ப்பட்ட மகிமையான எதிர்காலத்தை அனுபவிக்கக் கூடியதாக்கியிருக்கிறார். ஆழ்ந்த புத்தியுள்ள ஒருவன் ஒரு சமயத்தில் பின்வருமாறு கூறினான்: “கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எந்த ஜாதியானாயினும் அவர் அங்கீகாரத்துக்குரியவனென்றும் நிச்சயமாய் அறிந்து கொள்ளுகிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35, தி.மொ.
51 ஆனால் இந்த நல்ல வாக்குத்தத்தங்களை நீங்கள் எப்பொழுது அனுபவித்து மகிழக்கூடும்? பரதீஸானது, பூமி எங்கும் எப்படி திரும்ப நிலைநாட்டப்படும்? அது வருகையில் நீங்கள் உயிரோடிருப்பீர்களா? இவற்றிற்குப் பதில்களை அடைய நீங்களே தனிப்பட்ட முறையில் பரிசுத்த பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கும்படி நாங்கள் உங்களைத் துரிதப்படுத்துகிறோம். மேலும், உங்கள் பிராத்தியத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளை தயவுசெய்து சந்தியுங்கள், அல்லது இப்புத்தகத்தை பிரசுரிப்போருக்கு எழுதுங்கள். உங்களுக்கு முழு மனத்திருப்தியுண்டாக இந்த இன்றியமையாதக் காரியங்களைப் பற்றி இலவசமாய்க் கலந்தாராய்வதற்கு ஏற்பாடு செய்யப்படக்கூடும்.
[கேள்விகள்]
1, 2. (எ) எந்தப் பொதுவான மதக் கருத்தைப் பலர் திரும்பத் திரும்ப வெளிப்படுத்திக் கூறுகின்றனர்? (பி) இது என்ன கேள்விகளை எழுப்புகிறது?
3. முதல் மதத்தை எப்படிச் சுவடுகளைப் பின்தொடர்ந்து கண்டுபிடிக்கலாம்?
4. மனித உடலின் ஆக்க அமைவைப் பற்றிய பைபிளின் படைப்பு விவரப்பதிவுடன் விஞ்ஞானம் எப்படி ஒத்திசைகிறது?
5, 6. (எ) படைப்பைப்பற்றிய பைபிளின் விவரப்பதிவு எப்பொழுது எழுதப்பட்டது? (பி) படைப்பைப்பற்றி பிற்காலத்தில் தோன்றிய இந்து பாரம்பரியங்கள் எப்படி பைபிள் சரித்திரத்துடன் பொருந்துகின்றன?
7, 8. (எ) முதல் மனுஷி படைக்கப்பட்டதைப் பற்றிய பைபிளின் விவரப் பதிவு நடைபெறக்கூடியதாக இருக்கிறதா? (பி) ரிக்வேத பாரம்பரியம் எப்படி இந்தப் பைபிள் விவரப்பதிவைப் பிரதிபலிக்கிறது?
9. படைப்பைப் பற்றிய பைபிளின் விவரப் பதிவு ஏன் ஓர் இந்துவுக்கு நேரடியான அக்கறைக்குரியதாக இருக்கிறது?
10. (எ) மனிதனின் முதல் மதத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது? (பி) அந்த மதம் ஏன் நடைமுறைக்குரியதாய் இருந்தது?
11. மனிதனின் முதல் மதம் அவனை எதற்கு வழிநடத்தும்?
12, 13. (எ) நம்முடைய முதல் மனித முற்பிதா ஏன் மரித்தான்? (பி) மனிதன் ஏன் தன் முடிவைத் தெரிந்து கொள்ளக்கூடும்?
14. (எ) முதல் மனிதனுடைய கீழ்ப்படியாமையின் விளைவுகள் யாவை? (பி) இது அவனுடைய சந்ததியை எப்படிப் பாதித்தது?
15, 16. (எ) சாவு என்பது என்ன? (பி) ஆகையால், சாவைப் பற்றிப் பொதுமக்களிடையே வழங்கப்படுகிற எந்த எண்ணங்கள் உண்மையாக இருக்க முடியாது?
17. மனிதனின் எதிர்கால வாழ்க்கை எதன்பேரில் சார்ந்திருக்கிறது?
18. கடவுள் ஏன் மனிதவர்க்கத்தை முற்றிலுமாய்க் கைவிடவில்லை?
19. மனித நம்பிக்கைகள் எல்லாவற்றிற்கும் அடிப்படையான வாக்குத்தத்தம் எது?
20. (எ) பைபிளின் முதல் தீர்க்கதரிசனத்தில் எந்த நான்கு ஆட்கள் உட்பட்டிருக்கின்றனர்? (பி) உங்களுடைய மிகப் பெரிய முற்பிதா கொடுத்த இந்த வாக்குத்தத்தம் எப்படி நிறைவேற்றப்படும்?
21, 22. (எ) பைபிளின் இந்த வாக்குத்தத்தம் இந்து பாரம்பரியத்தில் எப்படிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது? (பி) இந்த இந்து படம் எதைக் குறித்துக் காட்டுகிறது?
23, 24. (எ) எப்படி மாத்திரமே இந்தப்படம் நியாயப்படி விவரிக்கப்படக்கூடும்? (பி) ஆதியாகமம் 3:15 மனிதவர்க்கம் முழுவதற்கும் என்ன நம்பிக்கைகளை அளிக்கிறது?
25. ஆதியாகமம் 3:15-ன் மெய்யான நிறைவேற்றத்தை நாம் எப்படி படிப்படியாய் ஆராய்ந்து கண்டடையலாம்?
26-30. (எ) அவதாரங்களைப் பற்றிய இந்த இந்து கோட்பாட்டின் பேரில் பைபிள் எப்படி விளக்கம் அளிக்கிறது? (பி) இந்து பாரம்பரியங்களில் சில பைபிளின் உண்மையான விவரப்பதிவில் தங்கள் மூலத் தோற்றங்களைக் கொண்டிருக்கின்றனவென்று ஏன் சொல்லலாம்?
31, 32. அந்தப் பெரிய ஜலப்பிரளயத்தைக் கடவுள் ஏன் கொண்டுவந்தார்?
33. இந்தத் தற்போதைய யுகம் எப்படி, எப்பொழுது தொடங்கினது?
34. அந்த அவதாரங்களுக்கு என்ன நடந்தது?
35. கடவுளுக்கு விரோதமாகக் கலகம் செய்யும்படி நம்முடைய முதல் பெற்றோரை அந்த முதல் பேய் எப்படித் தூண்டி இயக்கினான்?
36. சாத்தான் விவாதித்து வற்புறுத்தினதென்ன, குடியிருக்கப்பட்ட பூமி முழுவதையும் அவன் எப்படி மோசம் போக்கிக் கொண்டிருக்கிறான்?
37. ஒரு பரிபூரண தூதன் எப்படிப் பிசாசாகக்கூடும்?
38, 39. இந்தத் தற்போதைய யுகத்திற்குள், எப்பொழுது இந்தப் பேய்களுக்கு, மனிதவர்க்கத்தின்மேல் தங்கள் தீய செல்வாக்கைச் செலுத்துவதற்கான முதல் வாய்ப்பு கிடைத்தது?
40. அவர்களுடைய கலகத்தனமான திட்டங்களைச் சர்வவல்லமையுள்ள கடவுள் எப்படிக் குலைத்துப் போட்டார்?
41. (எ) இவ்வாறாக எந்தச் சரித்திரத் தொடக்கங்களைப் பைபிள் வெளிப்படுத்துகிறது? (பி) இது ஏன், பைபிளில் நாம் தொடர்ந்து அக்கறை காட்டுவதைத் தகுந்ததாக்குகிறது?
42. (எ) பாபேலில் கடவுள் தலையிட்டதைப் பின்தொடர்ந்து மனிதர் படிப்படியாய் ஏற்படுத்திக் கொண்டவைகள் யாவை? (பி) “எல்லா பாதைகளும் கடவுளிடமே வழி நடத்துகின்றன” என்று ஏன் பலர் நம்புகிறவர்களானார்கள்? (சி) ஒரு நல்லொழுக்கச் சட்ட தொகுதியைக் கொண்டிருப்பது கடவுளிடமிருந்து நேரடியாக வெளிப்படுத்தலைப் பெற்றதன் நிரூபணமாகுமா?
43. கடவுள், தாம் மனிதவர்க்கத்தை மறந்துவிடவில்லை என்பதைச் சரித்திரம் முழுவதிலும் எப்படிக் காட்டியிருக்கிறார்?
44. (எ) எவ்வாறு மனித குலத்தைத் தம்மிடம் ஒப்புரவாக்கிக்கொள்ள கடவுள் சித்தங் கொண்டார்? (பி) விடுதலை செய்யும் அந்த “வாக்குப்பண்ணப்பட்ட வித்து”வைப் பிறப்பிக்க ஆபிரகாமின் சந்ததியார் ஏன் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டனர்?
45. (எ) யூதர்கள் ஏன் மனிதவர்க்கத்தின் மற்ற எல்லாரையும் பார்க்கிலும் மேம்பட்டவர்களாக இல்லை? (பி) பேச்சில் இப்படிப்பட்ட ஒளிவு மறைவில்லாமையானது பைபிளைப் பற்றி எதைக் குறித்துக் காட்டுகிறது?
46. (எ) கடவுளுடைய தெரிவைக் குறித்து நாம் ஏன் மனக்கசப்பு அடைய வேண்டியதில்லை என்பதை உதாரணத்தைக் கொண்டு விளக்குங்கள். (பி) இஸ்ரவேலுடன் தற்காலிகமாகத் தொடர்பு வைத்ததில் கடவுளுடைய நோக்கம் என்ன?
47. (எ) நம்முடைய ஆராய்ச்சி ஏன் பைபிளில் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கவேண்டும்? (பி) எப்படிப்பட்ட எதிர்காலத்தை பைபிள் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறது? என்ன உறுதியுடன்?
48. நீதியுள்ளவர்கள் எவ்வளவு காலம் பூமியில் வாசமாயிருப்பார்கள், எப்படிப்பட்ட நிலைமைகளின்கீழ்?
49. (எ) இந்த அதிசயமான வெகுமதிகளை ஏற்பாடு செய்கிற அந்தக் கடவுள் யார்? (பி) யெகோவா எப்படிப்பட்ட கடவுள்?
50. யெகோவா ஏன் பட்சபாதமுள்ள கடவுள் அல்லர்?
51. இந்த முக்கிய விஷயங்களின்பேரில் மேலுமான கேள்விகளுக்குப் பதில்களை நீங்கள் எப்படி அடையக்கூடும்?
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மொழிகளின் குழப்பம் இடம்பெயர்ந்து சிதறிப்போகும்படி செய்கிறது
பாபேல்
ஆப்பிரிக்கா
இந்தியா
[பக்கம் 4-ன் படம்]
முதல் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான்
[பக்கம் 6-ன் படம்]
முதல் மனுஷி மனித விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டாள்
[பக்கம் 9-ன் படம்]
முடிவற்ற மனித வாழ்க்கை இறுதியில் மோட்சம் அடைவதைக் கூடாதக் காரியமாக்குகிறது
[பக்கம் 10-ன் படம்]
தெரிவு சுயாதீனம்: கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போவதா கீழ்ப்படிவதா?
[பக்கம் 13-ன் படம்]
ஆபூரண வாழ்க்கை
[பக்கம் 14-ன் படம்]
சர்ப்பத்தின் தலையை நசுக்குவதற்கு வாக்குப்பண்ணப்பட்ட வித்து
[பக்கம் 20-ன் படம்]
கலப்பு இன இராட்சதர்கள் பழங்கதைகளுக்குள் பேர்பெற்றவர்களாகிறார்கள்
[பக்கம் 29-ன் முழுபடம்]