குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்
பூமி முழுவதிலும் எங்கும் மெய்யான நீதி செலுத்தப்பட்டுக்கொண்டிருக்க, நீங்கள் சந்தோஷத்திலும் சமாதானத்திலும் வாழ விரும்புவீர்களா? ஆம்! என்று நீங்கள் நிச்சயமாகவே பதிலளிப்பீர்கள். மனிதவர்க்கத்தின் சரித்திரம் முழுவதிலுமே, இது நீதியை நேசிக்கும் எல்லாருடைய இயல்பான ஆவலாக இருந்துவந்திருக்கிறது. என்றபோதிலும், பொல்லாத மற்றும் அநீதியுள்ள மனிதர் இருந்துகொண்டிருக்கும் வரையில், உங்களுக்கோ வேறு எவருக்கோ நிலையான மனச்சமாதானமும் மகிழ்ச்சியும் இருக்கமுடியாது.
2 இந்தக் காரணத்தினிமித்தமாக, அநீதியை ஒழித்து நீதியுள்ளவர்களுக்குச் சந்தோஷத்தை நிலைநாட்டுவதற்கு மனிதர் முயற்சிகள் எடுத்ததில், விசனகரமாய் மனித சரித்திரம் போர்களால் பாழ்ப்படுத்தப்பட்டுவந்திருக்கிறது. இப்படிப்பட்ட போர்களில் ஒன்று பண்டைய இந்தியாவில் இருந்த குருசேத்திரம் போர்க்களத்தில் தொடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. தீமைக்குமேல் கடவுளுடைய நன்மை வெற்றிப் பெறவேண்டுமென்ற மனிதருடைய ஆவலின் காரணமாக, குருசேத்திர போர்க்களம், காலப்போக்கில், இந்தியாவின் பிரசித்திப்பெற்ற மத பெருங்காப்பியமாகிய மகாபாரதத்திற்குப் பின்னணி அமைப்பாக ஆயிற்று. முக்கியமாய் அந்தப் பெருங்காப்பியத்தின் மையமாகிய பகவத் கீதைக்கு அவ்வாறாயிற்று. கீதை எப்பொழுது இயற்றப்பட்டதென்ற காலமதிப்பீடுகள் வெகுவாய் வேறுபடுகின்றனவென்றும், பற்பல ஊகிப்புகள் அதை கி.மு. 400-க்கும் கி.மு. 200-க்கும் இடையேயுள்ள ஏதோ ஒரு காலமாக இருக்கவேண்டுமென்று குறிப்பிடுகின்றனவென்றும் இந்து நூலாசிரியராகிய K. M. சென் எழுதுகிறார்.
3 பாண்டவர் சேனையில் ஒரு தலைவனாகிய அருச்சுனன், போர் அணி வரிசைகளைச் சுற்றிப் பார்வையைச் செலுத்துகையில் நெருங்கிய உறவினர் ஒருவருக்கொருவர் விரோதமாக எதிர்க்கட்சிகளில் அணிவகுத்து நிற்பதைக் கவனித்தபோது மனக்கலக்கம் அடைந்தான் என பலரால் நம்பப்படுகிறது. இவ்வாறாக பகவத் கீதை முதலாம் அதிகாரம், 26-29, 47-ம் வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றன: “அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும், ஆசாரியர்களையும், மாதுவரையும், அண்ணன் தம்பிகளையும், மக்களையும், பேரர்களையும், தோழர்களையும், மாமனார்களையும், அன்பர்களையும் அருச்சுனன் பார்த்தான். குந்தியின் மகன் அருச்சுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லாரையும் உற்றுப் பார்த்து பேரிரக்கம் படைத்தவனாய் விசனத்துடன் இங்ஙனம் பகர்ந்தான்: கிருஷ்ணா, போர்புரிதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன; வாயும் வறள்கிறது. என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிப்பும் உண்டாகின்றன. கையினின்று காண்டீவம் நழுவுகிறது. மேலெல்லாம் தோலும் எரிகிறது. இங்ஙனம் இயம்பி, அம்பையும் வில்லையும் அரங்கத்தில் எறிந்துவிட்டுத் துயரம் துய்க்கும் மனத்தனனாய் அருச்சுனன் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்.”
4 தன் இராணுவக் கடமையை நிறைவேற்றும்படி அருச்சுனனைத் தூண்டி ஊக்குவிக்கவும், அந்த உள்நாட்டுப் போர் நீதியானதென்று விளக்கவும் விஷ்ணு தேவன், அருச்சுனனின் இரதமோட்டியாகக் கிருஷ்ணனின் பாகத்தை வகித்து பின்வருமாறு சொன்னதாகக் கூறப்பட்டிருக்கிறது: “அறப்போர் ஆகிய இதனை ஆற்றாயேல், அதனால் நீ ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் இழந்து பாபத்தை அடைவாய். இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைச் சமனாகக் கருதிப் போரில் முனைக. அதனால் நீ பாபம் அடையாய்.”—கீதை 2:33, 38.
5 பதினெட்டு நாட்கள் போர் மும்முரமாக நடந்ததாகவும், கடைசியாக உயிரோடு மீந்திருந்த அந்த ஒரே முக்கியமானத் தலைவன் அருச்சுனனே என்றும், அவனோடுகூட அவனுடைய நான்கு சகோதரரும் கிருஷ்ணனும் உயிரோடிருந்தார்கள் எனவும் பலர் நம்புகின்றனர். ஆகவே, நீதியின் சார்பாக இருந்தவர்கள் அந்தக் குருசேத்திரப் போரைத் தப்பிப்பிழைத்தனர் என்றும், நீதி சரிக்கட்டப்பட்டதென்றும் அவர்கள் முடிவு செய்கிறார்கள். பின்பு சிறிது காலத்துக்குச் சமாதானம் நிலவியிருந்தது. ஆனால் எவ்வளவு காலத்துக்கு?
6 வருந்தத்தக்கதாய், இன்று, அநீதியும் துன்பமும் முழு மனித குலத்தையும், சரித்திரத்தில் முன்னொருபோதும் இராத வண்ணமாய் மிக விரிவாகவும் மிகக் கடுமையான முறையிலும் தொல்லைப்படுத்துகின்றன. ஆகவே சரித்திரத்தின் போர்களில் எதுவுமே கடவுளுடைய ஆட்சிக்கும், இவ்வளவு அதிக பொல்லாப்பில் விளைவடைந்திருக்கிற மனித ஆட்சிமுறைகளுக்கும் இடையிலுள்ள இந்த விவாதத்தை நிலையாகத் தீர்த்து வைத்திருக்கவில்லை என்று ஒப்புக்கொள்ளவேண்டும். நிலையான சமாதானமும் பாதுகாப்பும் மனிதவர்க்கத்துக்குப் பிடிகொடாமல் தொடர்ந்து நழுவிச்சென்று கொண்டே இருக்கின்றன. ஆகவே, இன்று உண்மையான நீதிக்குரிய காரணம் இன்னும் திருப்திப்படுத்தப்படவேண்டியதாய் இருக்கிறது. ஆனால் எப்படி?
7 குருசேத்திரத்தில் செய்ய முயன்றதாக நம்பப்படுகிற அதே முறையிலாகும். இது தீர்வான ஒரு போரைத் தேவைப்படுத்துகிறது. ஆனால் உண்மையாக நிலையான விளைவுகளை உண்டுபண்ணும், மிகப் பெரிய அளவான போரைத் தேவைப்படுத்துகிறது. என்றபோதிலும், அதில் நீதியுள்ளவர்கள் தப்பிப்பிழைத்து மனித குலம் அழியாதபடி பாதுகாத்து வைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் ஒரு போராகவும் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு போர் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சமயத்திலும் தொடங்கலாமென்று லட்சக்கணக்கான ஆட்களால் எதிர்பார்க்கவும்படுகிறது. மனிதவர்க்கத்துக்குள் இருக்கும் நிலைமைகள் இப்படிப்பட்ட ஒரு போர் தொடங்குவதற்குப் பக்குவமாய் முற்றியிருப்பவையாக இருக்கின்றன. ஆகவே வெளிப்படுத்துதல் 16:14, 16-ல் பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது. அப்பொழுது எபிரேயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச்” சேர்த்தன.
8 குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலுமுள்ள ராஜாக்களின் ஒன்றுகூடிய சேனைகள் இந்தப் போரில் உட்பட்டிருக்கும். இவ்வாறாக, இது ஒரு பூகோள அளவான, உலகமெங்கும் விரிவான போராக இருக்குமென்று பைபிளில் சொல்லப்பட்டிருப்பது கவனிக்கப்படவேண்டும். ஆகவே, ஹார்-மகெதோன் அல்லது அர்மகெதோன் ஆனது, குருசேத்திரம் இருந்ததைப்போல் ஓர் உள்நாட்டுப் போர்க்களமல்ல. இந்தக் காரணத்தினிமித்தமாக அர்மகெதோன் என்ற இந்தப் பெயர் அடையாளக் குறிப்பான அர்த்தத்தை ஏற்கிறது. சொல்லர்த்தமான ஓர் இடத்தையல்ல, ஆனால் மனித அரசியலாளர் ஒன்றுகூடியவர்களாய், யெகோவா என்ற பெயரையுடைய கடவுளின் பரிசுத்த அக்கறைகளுக்கு எதிராக மோதும் பரப்பெல்லையைக் குறிக்கிறது.—சங்கீதம் 83:17, பரிசுத்த வேதாகமம்.
9 அர்மகெதோன் ஆனது, சத்தியத்தின் காரணமாகவும், நீதியின் காரணமாகவும் போரிடுகிற ஒரு போராக இருக்கும். கடவுளுக்குப் பாடப்பட்ட கிறிஸ்தவ காலத்துக்கு முந்திய ஒரு பூர்வ பாடலானது, கடவுளுடைய தலைமைப் போர் வீரருக்குப் பின்வருமாறு சொல்வதன் மூலம் இதை நமக்கு உறுதிப்படுத்துகிறது: “சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.” (சங்கீதம் 45:4) குருசேத்திரப் போரில் நடந்ததைப்போல், மொத்த அளவில் மகா சங்காரமிருக்கும். அர்மகெதோன் போருக்குப் பின் அந்தப் “போர்க்களம்” என்ன நிலையிலிருக்கும் என்பதைப் பற்றி பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது:
10 “ஆரவாரம் பூமியின் கடையாந்தர மட்டும் போய் எட்டும், ஜாதியாரோடே யெகோவாவுக்கு வழக்குண்டு; மாம்சமான யாவரையும் அவர் நியாயம் விசாரிப்பார்; தெய்வ பயமற்றவரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார்—இது யெகோவாவின் திருவாக்கு—என்று சொல்லென்றார். சேனைகளின் யெகோவா சொல்லுகிறதைக் கேளுங்கள்: இதோ, ஜாதியிடமிருந்து ஜாதிக்கு ஆபத்து பரவும், பூமியின் எல்லைகளிலிருந்து பெரும்புசல் எழும்பும். அக்காலத்திலே பூமியின் ஒருமுனைதுவக்கி மறுமுனைமட்டும் யெகோவாவினால் கொல்லப்பட்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் நிமித்தம் புலம்புவாரும், அவர்களைச் சேர்ப்பாரும் அடக்கம் பண்ணுவாருமிரார்; அவர்கள் பூமியின்மேல் எருவாவார்கள்.”—எரேமியா 25:31-33, தி.மொ.
11 ஆனால், குருசேத்திரத்தில் நடந்ததாகச் சிலர் நம்புவதுபோல், மகிழ்ச்சிகரமாய், தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள். அர்மகெதோன் போரைத் தப்பிப்பிழைப்பவர்கள் நீதியுள்ள ஆட்களாக இருப்பார்கள், நம்முடைய மனித குலத்தை அழியாமல் பாதுகாத்து வைப்பதற்குத் தகுதியுள்ளவர்களென்று நம்முடைய சிருஷ்டிகரால் தீர்க்கப்பட்டவர்களாக இருப்பார்கள். என்றபோதிலும், இந்தத் தப்பிப்பிழைக்கிற நீதியுள்ளவர்கள் இந்தப் போரில் பங்குகொள்ளமாட்டார்கள். இது எப்படிக் கூடிய காரியமாக்கப்படும் என்பது யெகோவாவின் பூர்வ ஊழியனாகிய ஏசாயாவால், பின்வருமாறு தீர்க்கதரிசனம் சொல்லுகையில் காட்டப்படுகிறது: “என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே புகுந்து உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்ச நேரம் ஒளித்துக்கொள். இதோ, பூமியில் குடியிருப்போரின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களைத் தண்டிப்பதற்கு யெகோவா தமது ஸ்தானத்திலிருந்து வெளிப்பட்டு வருவார்; பூமி தன்னில் சிந்துண்ட இரத்தத்தை மறையாதிருக்கும்; தன்னிடத்தில் கொல்லப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.” (ஏசாயா 26:20, 21, தி.மொ.) அப்படியானால், தெளிவாகவே, அர்மகெதோன் மனிதருக்கிடையில்தானே நடைபெறும் ஒரு போர் அல்ல, வெறும் ஓர் “உலகப் போரும்” அல்ல, ஆனால் கடவுளுடைய காணக்கூடாத சேனைகள் பங்குகொள்ளும் ஒரு போராகும்.
அர்மகெதோனுக்குரிய காலம்
12 கடவுளுடைய போராகிய அர்மகெதோன் எப்பொழுது நடைபெறும்? அது நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளம் என்னவாயிருக்கும்? வெகு காலத்துக்கு முன்பாக உள்ளப்பூர்வமாய்த் தகவல் நாடினவர்களால் இதற்கொப்பான ஒரு கேள்வி கேட்கப்பட்டது, அவர்களுக்குக் கிடைத்த அந்தப் பதிலை நாம் ஆராய்ந்து பார்ப்பது இன்றியமையாததாய் இருக்கிறது. அவர்கள் கேள்வியானது: “இந்தக் காரியங்கள் எப்பொழுது சம்பவிக்கும், நீர் வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்? எங்களுக்குச் சொல்லும்.” (மத்தேயு 24:3, NW) “காரிய ஒழுங்குமுறை” என்ற இந்தச் சொற்றொடர் கிரேக்கச் சொல்லாகிய ஏயான் (aion) என்பதன் மொழிபெயர்ப்பாகும், இது சிலசமயங்களில் “யுகம்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆகவே தி எம்ஃபாடிக் டயக்ளாட் (ஆங்கில பைபிள்) மத்தேயு 24:3-ஐப் பின்வருமாறு மொழிபெயர்க்கிறது: “‘எங்களுக்குச் சொல்லும், இந்தக் காரியங்கள் எப்பொழுது சம்பவிக்கும்?’ மேலும் ‘நீர் வந்திருப்பதற்கும், இந்தக் காலப்பகுதியின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?’” (தமிழ் திருத்திய மொழிபெயர்ப்பு 1936-ல் யுக முடிவு என்றிருக்கிறது) மத்தேயு 24:3-ல் சமஸ்கிருத பைபிள் ஏயான் என்பதை “யுகா” என்று மொழிபெயர்க்கிறது. யுகம் என்பது “உலகத்தின் ஒரு காலப் பிரிவு” அல்லது “மண்ணுலகம் சார்ந்த ஆண்டுகளின் ஒரு நீண்ட காலப்பகுதி, இக்காலப்பகுதிகள் நான்கு, இவற்றில் முதல் மூன்று கடந்துவிட்டன, நாம் வாழ்ந்துகொண்டிருப்பது கலி யுகம்,” என்று பொருள் விளக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறாக 1978-ன் நியூ ஹிந்தி பைபிள் மத்தேயு 24:3-ல் யுகாந்தம் என்ற பதத்தைப் பயன்படுத்துகிறது, இதன் அர்த்தம் “யுகத்தின் முடிவு” என்பதாகும்.
13 ஆகவே, சத்தியத்தை நாடித் தேடின அவர்கள், ‘இந்தத் தற்போதைய காலப்பகுதியின் முடிவுக்கு அடையாளம் என்னவாயிருக்கும்?’ என்று கேட்டார்கள். இதையே சிலர் கலி யுகம் என்று குறிப்பிடுகின்றனர்.
14 இதற்குப் பதிலாக, இந்து மூல வாக்கியமாகிய விஷ்ணு புராணம் பின்வருமாறு கூறினது: “ஜாதி, வகுப்புவாரி உயர்வு தாழ்வு நிலை ஆகியவற்றின் உபயோகங்களும் சட்ட மூலத் தொகுப்புகளும் நடப்பிலிராது . . . மதம் செல்வத்தை வீணாக்குவதில் அடங்கியிருக்கும் . . . அரசர்கள் தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களைக் கொள்ளையிடுவார்கள், வரிகளை உயர்த்தும் காரணங்காட்டி வியாபாரிகளின் செல்வத்தைக் கவர்ந்துகொள்வார்கள். பின்பு இந்த உலகத்தின் கடைசி காலப்பகுதியில் மனிதரின் உரிமைகள் தாறுமாறாக்கப்படும், எந்த உடைமையும் பத்திரமாயிராது, மகிழ்ச்சியிராது, வாழ்வு வளம் நீடித்திராது.” நூலாசிரியர் A. L. பாஷம் பின்வருமாறு கூறுகிறார்: “பெருங்காப்பிய பகுதிகள் பலவற்றின் பிரகாரம் கலி-யுகத்தின் முடிவானது வகுப்புகளின் தாறுமாறாலும், நிலைநாட்டப்பட்ட தராதரங்கள் கவிழ்க்கப்படுவதாலும், மத வழிபாட்டு முறைகள் யாவும் நின்றுபோவதாலும், கொடூரமான அந்நிய அரசர்களின் ஆட்சியாலும் குறிக்கப்படுகிறது.” இந்த விவரிப்புகள் நம்முடைய 20-ம் நூற்றாண்டின் நிலைமைகளுக்கு ஒருவாறு பொருத்தமாய் இருக்கின்றன அல்லவா? நாத்திகக் கோட்பாடுகள் பரவினதோடு, தீவிர முன்னேற்ற மற்றும் ஆவிக்குரியதல்லாத செல்வாக்குகள் மேலும் மேலும் அதிகமாக மனிதனின் ஆட்சிகளைத் தொற்றிப் பரவி வருகின்றன. கருச்சிதைவும் ஒத்தப்பாலினத்தவர் புணர்ச்சியும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்று வருகின்றன. கொடிய வன்முறையாட்சியும் ஒழுக்க முறிவும் உலகமெங்கும் பரவிக்கொண்டும் வேகத்தில் கடுமையாகிக்கொண்டும் வருகின்றன. இவ்வாறு இருக்க, நிலைநாட்டப்பட்ட தராதரங்கள் கவிழ்க்கப்பட்டு வருகின்றன.
15 கூடுதலாக, தொழில் துறையும், தொழில்நுட்ப விஞ்ஞானம் மனித சமுதாயத்தின் பாரம்பரிய வகுப்புகளைக் குழம்பச் செய்கின்றன. தொழிற்சாலைகள், மருத்துவ சாலைகள் மற்றும் மருத்துவ தொழில், பொதுக் கல்வி ஸ்தாபனங்கள், நவீன பொதுப் போக்குவரத்து சாதனம் ஆகியவை, எல்லா வகையினரான ஆட்களும் ஒருவரோடொருவர் கலந்திருக்கச் செய்கின்றன. இவ்வாறாக சமுதாயத்தில் நெடுங்காலம் இருந்துவந்த தெளிவான வேறுபாடுகளைத் தென்படாதபடி அழித்துப்போடுகின்றன. தொழில்மயமாக்கப்பட்ட இந்த உலகத்தின் அவசர நெருக்கடியும் பரபரப்பும் அளவு கடந்து தங்களை ஆட்கொள்வதாக இருப்பதால் லட்சக்கணக்கான ஆட்கள், நேரமெடுக்கும் பல மத சடங்குமுறைகளும் பழக்கவழக்கங்களும் நிறுத்திப் போடப்படுவதற்கு இணங்கி ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகள், இந்தத் தற்போதைய காலப்பகுதியின் விரைவாய் நெருங்கிக்கொண்டிருக்கும் முடிவைச் சுட்டிக்காட்டுகின்றன. நிச்சயமாகவே காலக்கணிப்பு மாத்திரமே இதை உறுதி செய்யும் காரியமாக இல்லை. அதற்கு மாறாக, இது இந்தத் தற்போதைய மனித ஒழுங்குமுறையின் அழிவை நோக்கி விரையும் மாற்றமுடியாத மும்முர வேகமே, கடவுள் தம்முடைய அர்மகெதோன் போரைத் தொடங்குவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது!
16 இந்தத் தற்போதைய காலப்பகுதியின் “கடைசிநாட்க”ளும் இவற்றை அடையாளங்காட்டும் நிலைமைகளும் பைபிளில் 2 தீமோத்தேயு 3:1-5-ல் திட்டவட்டமாய்க் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த வசனங்களை நாம் வாசிக்கையில், சட்டத்துக்குக் கட்டுப்படாத நிலைமையையும் குடும்ப சீர்க்குலைவையும் தயவுசெய்து கவனியுங்கள். “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” இவ்வாறாக மற்றக் கொடுமைகளோடுகூட சுபாவ அல்லது குடும்ப பாசம் இல்லாமற்போதலாலும் பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமற்போதலாலும் இந்தக் “கடைசிநாட்கள்” குறிக்கப்படுகின்றன. சமுதாயத்தின் அடிப்படை பகுதியாக இருக்கிற குடும்பம் சீர்க்குலைகையில், சமுதாயம் நலக்கேடான முறையில் பாதிக்கப்படுகிறது. அதிகாரத்தை அவமதிப்பது தோன்றி வளருகிறது. சட்டத்துக்கு அடங்காமை அதிகரிக்கிறது. தெய்வீகச் சட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன, குடும்பங்கள் முழுமையாக சட்டத்துக்குக் கீழ்ப்படியாமைக்கு இணங்கி இடங்கொடுக்கின்றன.
17 இவ்வாறே கீதை குறிப்பிடுகிறது: “குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.” (1:40) இந்த நிலைமைகளே குருசேத்திரப் போரைத் தூண்டிவிட்டதாகத் தோன்றுகிறது. மிக முக்கியமாய், இப்படிப்பட்ட நிலைமைகள் நம்முடைய காலத்தில் மிக மீறிய அளவில் பெருகியிருக்கிறது. இந்நிலைமைகள் நம் நாட்களை தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் “கடைசிநாட்க”ளாகக் குறிக்கின்றன. இவை அர்மகெதோன் நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளமாக இருக்கின்றன. இன்று நீதியை நேசிக்கும் ஆட்கள் தெய்வீகத் தலையிடுதலை ஆவலோடு வரவேற்பார்கள், இது பொல்லாதவர்களை ஒழித்து, தப்பிப்பிழைத்திருக்கிறவர்களுக்குச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும்.
18 இந்தக் “கடைசிநாட்கள்” இங்கே நம்முடைய 20-வது நூற்றாண்டின்மீது வந்திருப்பதினால், இவை எப்பொழுது தொடங்கின? என்று நீங்கள் சரியாகவே கேட்கலாம். மேலும், இந்தக் “கடைசிநாட்கள்” எவ்வளவு காலம் நீடித்திருக்கும்? ஒருவன் தகுதியுள்ளவனானால் தப்பிப்பிழைக்கக்கூடும்படியாக, அர்மகெதோன் போர் நம்முடைய வாழ்நாளுக்குள்ளேயே நடக்கும் என்று எப்படித் தெரிந்துகொள்வது? பைபிளில், மத்தேயு 24-ம் அதிகாரத்தை நாம் தொடர்ந்து கலந்தாராய்வதன் மூலம் தெரிந்துகொள்வோம். பின்வரும் இக்கேள்வி உங்களுக்கு நினைவிலிருக்கலாம்: “இந்தக் காரியங்கள் எப்பொழுது சம்பவிக்கும், நீர் வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்? எங்களுக்குச் சொல்லும்.”
19 இதற்குப் பதில் தருவதாய், அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து கூறுவதாவது: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” (மத்தேயு 24:7, 8, 12) “வேதனைகளுக்கு ஆரம்பமாக” இந்த இருபதாம் நூற்றாண்டில் எந்த ஆண்டை நீங்கள் தனிப்பட சுட்டிக்காட்டுவீர்கள்? 1914-ல் தொடங்கின முதல் உலகப் போர் ஒப்பற்ற கோர்வையான இக்கட்டுகளைத் தொடங்கி வைத்திருப்பதும், அது முதற்கொண்டு இவை அளவிலும் மும்முரத்திலும் பெருகி வந்திருப்பதும் உண்மையல்லவா? 1914 முதற்கொண்டு, போர்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு முன்னொருபோதும் இருந்திராத மிகப் பேரளவில் துயரத்தையும் வேதனையையும் மரணத்தையும் உண்டுபண்ணியிருக்கின்றன. போர்களில் சாவுக்குத் தப்பின லட்சக்கணக்கான மக்கள் உணவு குறைபாடுகளின் காரணமாக மாண்டனர். உணவு குறைபாடுகளுக்குத் தப்பினவர்கள், பின்பு பூமியதிர்ச்சிகளாலும், கொள்ளை நோய்களாலும், அக்கிரமங்களினாலும், கொடூரமான வன்முறையாட்சியாலும் மாண்டனர். இன்று பெரும்பான்மையரைக் குறித்ததில் கடவுள்பேரிலும் அயலான்பேரிலுமுள்ள அன்பு தணிந்துபோய்விட்டிருக்கிறது. மனிதவர்க்கத்தின் சரித்திரத்தில் முன்னொருபோதும், மனிதர் துன்பப்படுதலும் நாத்திகமும் இவ்வளவு ஒரு குறுகிய காலத்தில் அவ்வளவு கடுமையாய் ஒன்றுதிரண்டு ஏற்பட்டிருக்கவில்லை!
20 நிச்சயமாகவே, 1914-ம் ஆண்டு சரித்திரத்தில் மிகப்பெரிய திரும்புகட்டமாக இருந்துது! ஒரு செய்தித்தாளின் பதிப்பாசிரியர் கட்டுரைப் பகுதி சமீபத்தில் பின்வருமாறு கூறியது: “1914-க்கு முந்திய உலகத்தின் மகிழ்ச்சி நிலையில் வாழ்ந்தவர்களாகிய இப்பொழுது எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருகிற இவர்களைத் தவிர வேறு எவரும் அந்நாட்களுக்கும் இந்நாட்களுக்குமுள்ள விசனகரமான வேறுபாடுகளை முனைப்பாக எடுத்துக்காட்ட முடியாது.” ஆகவே, தற்போதைய யுகத்தின் இந்தக் “கடைசிநாட்கள்” கி.பி. 1914-ம் ஆண்டில் தொடங்கின.
21 இந்தக் “கடைசிநாட்கள்” எவ்வளவு காலம் நீடித்திருக்கும்? பைபிள் பின்வருமாறு பதிலளிக்கிறது: “அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:33, 34) வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், இப்பொழுது ‘எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருகிற’வர்களும் இந்த இக்கட்டான நிலைமைகளின் தொடக்கத்தைக் கண்டவர்களுமான அந்த 1914-ன் சந்ததியாகிய மக்கள் கடவுளுடைய போராகிய அர்மகெதோன் தொடங்குகையில் இன்னும் உயிருடனிருப்பார்கள் என்பதாகும். ஆகவே இந்தக் “கடைசிநாட்க”ளின் நீடிப்பு முன்னால் 1914-ல் உயிருடனிருந்த மனிதரின் அந்த ஒரே சந்ததிக்குள் இருக்குமென்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. கண்கண்ட சாட்சிகளாகிய அந்தச் சந்ததி இப்பொழுது வயதில் முதிர்ந்தவர்களாகிக்கொண்டு இருக்கின்றனர்—தங்கள் 70-ம் 80-ம் வயதில் இருக்கின்றனர். ஆகவே, அர்மகெதோன் தொடங்குவது அபாயகரமானதாய் நெருங்கிக்கொண்டிருக்கிறது. உலகமெங்கும் நீதியை நேசிக்கிற பலர், கடவுளுடைய தவிர்க்கமுடியாத இந்தப் போர் செயலின் தொடக்கத்திற்காக இப்பொழுது ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
22 அர்மகெதோன் எப்பொழுது தொடங்குமென்ற அந்தத் திட்டமான ஆண்டை முன்னறிவிப்பது கூடிய காரியமா? இல்லை. “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், (குமாரனுங்கூட அறியார், NW)” என்று பைபிள் தெளிவாகச் சொல்லுகிறது. (மத்தேயு 24:36) கீதையுங்கூட அந்த ஆண்டைக் குறிப்பிடுகிறதில்லை. கீதை வெறுமனே பின்வருமாறு சொல்லுகிறது: “பாரதா (அருச்சுனா), எப்பொழுதெல்லாம் அறம் அழிந்துபோய் மறம் மேலெழுகிறதோ, அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக்கொள்கிறேன். நல்லாரைக் காப்பதற்கும், கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் யுகந்தோறும் [யுகே யுகே] நான் அவதரிக்கிறேன்.” (4:7, 8) ஆகவே, நீதி குறைந்துகொண்டும் அநீதி பெருகிக்கொண்டும் வருகையில், தெய்வீகத் தலையிடுதலை எதிர்பார்க்கவேண்டுமென்று பலர் நம்புகின்றனர். கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பைப் பொல்லாதவர்கள்மீது நிறைவேற்றுவதற்கான அந்தக் காலம் இப்பொழுது இங்கே இருக்கிறது!
அர்மகெதோனைப்பற்றிய சரித்திரப்பூர்வ முன்காட்சி
23 அர்மகெதோனில் எதை எதிர்பார்க்கவேண்டும் என்பதைப் பற்றிய ஒரு முன்காட்சியைச் சரித்திரம் நமக்கு அளிக்கிறது. நோவாவின் காலத்திய அந்தப் பெரும் வெள்ளமானது நெருங்கிக்கொண்டிருக்கும் கடவுளுடைய போரின் ஒரு சிறு முன்தோற்றமாகும். உலக முழுவதிலும் ஒரு சரித்திரப்பூர்வ, பூகோள, பெரும் வெள்ளத்தைப்பற்றிய 90-க்கு மேற்பட்ட வெவ்வேறு கதைகள் இருக்கின்றன. இந்துக்களுக்குள், ஜலப்பிரளயம் என்று இது அறியப்பட்டிருக்கிறது. ஜலம் என்பது “நீரை”யும் பிரளயம் என்பது “பெருகிப்புரளுத”லையும் குறிக்கிறது—ஆகவே, ‘நீர் பெருகிப்புரளுதலைக்’ (அல்லது பெரும் வெள்ளத்தைக்) குறிக்கிறது. உயிருள்ள படைப்புகள் யாவும் ஜலப்பிரளயத்தில் அழிந்துபோனதாக நம்பப்படுகிறது. என்றபோதிலும், மனு தன் கடவுளுடைய தயவைப் பெற்றவனாய், தன்னையும் வேறு ஏழு ரிஷிகளையும் (சாதுக்களையும்), ஆக மொத்தம் எட்டு ஆட்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு ஒரு கப்பலைக் கட்டும்படி தெய்வீக எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டான். அவனுடைய கப்பல் ஒரு வடபுற மலையின்மேல் தங்கின பின்பு, அந்தப் பெருவெள்ளம் நின்று தண்ணீர் வற்றியது. மனு இந்தத் தற்போதைய யுகத்தில் தன் கடவுளுக்கு முதல் பலியைச் செலுத்தும்படி வெளியில் வந்தான். மனு, மனிதவர்க்கத்தின் முதல் சட்டப்பிரமாணிகனாக இருந்ததாகவும் நம்பப்படுகிறது. உண்மையில், தொடர்ந்து வருகிற மனிதகுலம் ஒவ்வொன்றுக்கும் மூதாதை மனு என்று பெயரிடப்பட்டதாக இந்து புராணக்கதைகள் பல உறுதியாகக் கூறுகின்றன.
24 மனுவை எச்சரித்துப் பாதுகாத்தது விஷ்ணு தேவனே என்று ஓர் இந்து பதிப்பு விளக்கம் கூறுகிறது. கவனத்தைக் கவருவதாய் விஷ்ணு என்ற இந்தப் பெயர் அதன் வகர எழுத்தில்லாமல் இஷ்ணு என்பதாக இருக்கிறது. இது கல்தேய மொழியில் “அந்த மனிதனாகிய நோவா” அல்லது “இளைப்பாறுதலின் மகன்” என்று கருத்துக் கொள்கிறது. இந்து பாரம்பரியம் விஷ்ணு, சேஷா என்றழைக்கப்படுகிற சுருண்டுப் படுத்துச் சமுத்திரத்தின்மீது மிதந்துகொண்டிருக்கும் பாம்பின்மீது ‘இளைப்பாறுவதாக’ அல்லது தூங்குவதாகக் காட்டுகிறது. சேஷா என்றால் “மிச்சம்” என்பதாகும், கவனமான ஆராய்ச்சியாளர்களின்படி, சேஷா, ஒரு காலப்பகுதியின் முடிவில் சர்வலோகத்தின் அழிவுக்குப் பின்பு அதன் ‘மிச்சமாக விடப்பட்டதைக்’ குறிக்கிறது. தெளிவாகவே இந்தப் புராணக்கதை ஜலப்பிரளயத்தையும் பாதுகாப்புக்குரியதாயிருந்த அந்தப் பேழையையும் அதில் இருந்தவர்களையும் பற்றிய பைபிளின் சரித்திரப் பதிவை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.
25 மனுவில் செயலுருப்படுத்தப்படுகிற இந்தப் புராணக்கதையைச் சார்ந்தத் தனியாட்கள்—அதாவது, ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைப்பவன், தற்போதைய மனித குலத்தின் மூதாதை, முதல் சட்டப்பிரமாணிகன், ஜலப்பிரளயத்துக்குப் பின்பு முதல் மத பலியைச் செலுத்தினவன் ஆகியவை—பைபிளில் குறிப்பிடப்படுகிற நோவாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்களின் நியாயப்படியான உறுதிப்பாடாக இருக்கின்றன. (ஆதியாகமம் 6:8, 13-22; 8:4, ஆதியாகமம் 8:18-9:7; 10:32 ஆகியவற்றை ஒத்துப்பாருங்கள்.) ஜலப்பிரளயத்தைப் பற்றிய இந்த இந்து விவரப்பதிவு, தேவாவியால் ஏவப்பட்ட வேதப்பூர்வ பதிவின் சில முக்கிய அம்சங்களோடு ஒத்திருக்கிறது, அவையாவன (1) தப்பிப்பிழைக்கும் ஒருசிலருக்கு அடைக்கலமான ஓர் இடம், (2) இல்லையெனில் தண்ணீரால் பூகோள முழுவதிலும் உயிருக்கு அழிவு, (3) மனிதவர்க்கத்தின் ஒரு வித்து பாதுகாத்து வைக்கப்படுவது ஆகியவை.
26 அர்மகெதோனைப்பற்றிய இந்தச் சரித்திரப்பூர்வ முன்காட்சியைக் குறித்து, பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் (வந்திருக்கையிலும், NW) நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் (வந்திருக்கையிலும், NW) நடக்கும்.” (மத்தேயு 24:37-39) ஆகவே அர்மகெதோனில் நம்முடைய உலக ஒழுங்குமுறையின் முடிவு சம்பந்தப்பட்ட சூழ்நிலைமைகள் அந்தப் பூர்வ ஜலப்பிரளயத்தின் போது இருந்த நிலைமைகளுக்கு ஒப்பாக இருக்கும். அவையாவன: (1) இந்தக் கிரகமாகிய பூமியும் அதன் மிருக ஜீவனும் தப்பிப்பிழைக்கும்; (2) வழக்கமாய் ஈடுபடுகிற வாழ்க்கை நடவடிக்கைகளில் தங்கள் கவனம் முழுவதுமாய் ஆழ்ந்திருக்க வைத்திருப்பதன் காரணமாக நம்முடைய காலங்களின் உட்கருத்தை அறிந்துகொள்ள மிகப் பலர் தவறுகின்றனர்; (3) மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் அர்மகெதோனைப்பற்றிய இந்தத் தெய்வீக எச்சரிப்புக்குக் கவனம் செலுத்துகிறதில்லை; (4) ஆகவே மனிதவர்க்கத்தின் பெரும் பான்மையர் அர்மகெதோனில் அழிக்கப்படுவர்; (5) மனிதவர்க்கத்தின் ஒரு மிகச் சிறுபான்மையரே கடவுளுடைய தயவைப்பெற்று “சர்வ வல்லமையுள்ள கடவுளுடைய அந்த மகா நாளின் போரைத்” தப்பிப்பிழைப்பர். (வெளிப்படுத்துதல் 16:14, NW) இதன் காரணமாக, கடவுளுடைய போரையும், அதைத் தப்பிப்பிழைப்பது எப்படி என்பதையும் பற்றிய இந்தச் செய்தியைத் தொடர்ந்து அலசியாராய்வது ஞானமுள்ள ஆட்களுக்கு மிக அதிக உசிதமானது.
தப்பிப்பிழைப்பவர் யாவர்?
27 வெற்றிகரமாய் மற்றும் ஞானமாய்ச் செயல்பட, அருச்சுனன் உண்மையான அறிவை அடையும்படி ஆலோசனை கூறப்பட்டான். கீதை பின்வருமாறு சொல்லுகிறது: “பணிந்தும், கேட்டும், பணிவிடை செய்தும் நீ அதை அறிக. உண்மையையுணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்.” (4:34) செப்பனியா 2:3-ல் பைபிள், ஒருவர் எடுக்கவேண்டிய ஞானமான அந்த ஒரே போக்கைப் பின்வருமாறு வெளிப்படுத்திக் கூறியது: “தேசத்திலுள்ள (பூமியிலுள்ள, NW) எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவின் நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத்தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள். அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (தி.மொ.) தெளிவாகவே, அர்மகெதோன் யெகோவாவின் போர். ஆகவே அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கிறவர்கள் யெகோவாவையும் அவருடைய நீதியையும்பற்றி மனத்தாழ்மையுடன் தங்களை அறிவூட்டிக் கொள்ளுகிறவர்களாக இருப்பர். ஆனால் யெகோவா யார்? அவரைப்பற்றிய அறிவை நாம் எப்படி அடையக்கூடும்?
28 மேற்கண்டபடி, கீதையில் அறிவின் முக்கியத்துவம் காட்டப்பட்டிருக்கிறது. இந்துக்கள் மத அறிவை எப்பொழுதும் உயர்வாய் மதித்து வந்திருக்கின்றனர். வேதம் என்பதுதானேயும் அறிவு என்று அர்த்தங்கொள்ளுகிறது. இவ்வாறாக அந்த நான்கு வேதங்கள் தெய்வீக அறிவைக் கொண்டிருப்பதாக உரிமைபாராட்டப்படுகிறது. இந்துமத அறிவின் மிகப் பூர்வ தொகுப்பு ரிக்வேதம் ஆகும். இதன் பெரும்பாகம் ஒருவேளை, கி.மு. முதல் ஆயிரம் ஆண்டுகளின் முதற் பாதி பகுதியில் தொகுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிற்பட்ட தொகுப்புநிலைகளில் இந்த ரிக்வேத கவிஞர்கள் கடவுள் யார் என்பதைப்பற்றிச் சந்தேகிக்கத் தொடங்கினர். ஆகவே ரிக்வேத பாடல் 10. 121-க்கு “அறியப்படாத தெய்வத்துக்கு” என்ற தலைப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் வசனங்கள் ஒவ்வொன்றும், “நாம் பலிகளைச் செலுத்தவேண்டிய அந்தத் தெய்வம் யார்?” என்ற கேள்வியுடன் முடிகிறது. உதாரணமாக 9-ம் வசனம் பின்வருமாறு சொல்லுகிறது: “பூமியைத் தோற்றுவித்தவர், அல்லது நீதியுள்ளவராகிய அவர், வானங்களைத் தோற்றுவித்தவர்; வல்லமை வாய்ந்தத் தெளிந்தத் தண்ணீர்களையுங்கூட தோற்றுவித்தவர், நமக்குத் தீங்கு செய்யாதிருப்பாராக.—நாம் பலிசெலுத்தவேண்டிய அந்தத் தெய்வம் யார்?”
29 ரிக் வேதத்திலுள்ள இந்தக் கேள்விக்கு உண்மையான விடை என்ன? இந்த வேதம் இயற்றிய கவிஞர்கள் அறியாமல் தெய்வ பக்தியைச் செலுத்தின, வானத்தையும் பூமியையும் தோற்றுவித்த அவர் யார்? இதற்கு விடையளிக்க முயன்று, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னான ஒரு மத முன்னேற்றம் பகவத் கீதையில் பின்வருமாறு கூறினது: “மேலாம் பிரம்மம், உயர்ந்த இருப்பிடம் ஒப்பற்ற புனிதம் தாம் ஆவீர். புருஷோத்தமா, உயிர்களைப் படைத்தவா, உயிர்களுக்கு இறைவா, தேவ தேவா, அண்ட நாயகனே, உம்மை உம்மால் உள்ளபடி நீரே அறிவீர்.” (10:12, 15) ஆகவே ஒரே ஒரு நித்தியர், ஈடற்ற உன்னதக் கடவுள், கடவுட்களில் முதல்வர், தேவாதி தேவன் இருந்தார் என்று பூர்வ இந்துக்களில் சிலர் உணர்ந்தனர்.
30 பெயர்பெற்ற இந்து தத்துவசாஸ்திரியாகிய S. ராதாகிருஷ்ணன், பிரம்மனுடைய முடிவற்றத் தன்மையை விளக்க முயலுபவராய், “‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்று மாத்திரமே நாம் சொல்லக்கூடும்,” என்று சொன்னார். இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன், பிரம்மனின் முடிவற்றத் தன்மையை, கடவுளுடைய பெயராகிய யெகோவாவுக்குப் பைபிள், யாத்திராகமம் 3:13, 14-ல் கொடுக்கும் விளக்கத்தோடு சம்பந்தப்படுத்துகிறார். அது சொல்வதாவது: “அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். அதற்குத் தேவன்: இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.”—தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு.
31 மேலுமதிகத் திருத்தமான நவீன ஆங்கில பைபிள், நியூ உவார்ல்ட் டிரான்ஸ்லேஷன் ஆஃப் தி ஹோலி ஸ்கிரிப்ச்சர்ஸ் யாத்திராகமம் 3:14, 15-ஐப் பின்வருமாறு மொழிபெயர்க்கிறது: “அப்பொழுது கடவுள் மோசேயிடம்: ‘நான் நிரூபிக்கப்போகிறவராக நிரூபிப்பேன்’ என்று சொன்னார். மேலும் அவர் தொடர்ந்து: ‘இஸ்ரவேல் புத்திரரிடம் இதையே நீ சொல்லவேண்டும், “நிரூபிக்கப்போகிறவர் என்னை உங்களிடத்தில் அனுப்பினார்.”’ பின்பு கடவுள் மறுபடியுமாக மோசேயிடம்:
32 “‘இஸ்ரவேல் புத்திரரிடம் நீ சொல்லவேண்டியது இதுவே, “ஆபிரகாமின் கடவுளும், ஈசாக்கின் கடவுளும், யாக்கோபின் கடவுளுமான உங்கள் முற்பிதாக்களின் கடவுளாகிய யெகோவா, என்னை உங்களிடம் அனுப்பினார்.” இதுவே வரையறையில்லா காலத்துக்கும் என் பெயர், இதுவே தலைமுறை தலைமுறைதோறும் என்னை நினைப்பதற்குரிய பெயர்.’”
33 ஆகவே, முடிவற்றப் பிரம்மனை விவரிக்க, “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்ற இந்தச் சொற்றொடரை டாக்டர் ராதாகிருஷ்ணன் பயன்படுத்துகையில், உயர் பிரம்மனை பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள யெகோவா தேவனுடன் சமப்படுத்த முயலுவதாகத் தோன்றும். பிரம்மனுக்குக் குறிப்பிட்டுக் கூறப்படும் பண்புகள் சில பைபிளில் யெகோவா தேவனுக்குக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைப் போலவே இருக்கின்றனவென்பது உண்மையே. உதாரணமாக, கீதை பிரம்மனை “தேவ தேவா” என்று குறிப்பிடுவது கி.மு. 5-ம் நூற்றாண்டுக்கும் 3-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது, இது பைபிள் பதிவில் கி.மு. 15-வது நூற்றாண்டில், அதாவது கி.மு. 1473-ல் உபாகமம் 10:17-ல் பின்வருமாறு எழுதப்பட்டிருந்ததன் ஓர் எதிரொலியான கூற்றாக இருக்கிறது: “உங்கள் கடவுளாகிய யெகோவா தேவாதிதேவன், கர்த்தாதி கர்த்தர், வல்லமையுமுள்ள பயங்கர மகா தெய்வம்; அவர் பட்சபாதமுள்ளவரல்ல; பரிதானம் வாங்குகிறவருமல்ல.”—தி.மொ.
34 ஆகவே, யெகோவா என்பது கடவுள்தாமே தமக்குக் கொடுத்துக்கொண்ட பெயராகும். இந்தக் காரணத்தினிமித்தமாக, பைபிள், படைப்பு வேலை யெகோவாவினுடையதென்று கூறுகிறது, அது சொல்வதாவது: “கடவுளாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் உண்டாக்கியபோது வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இதுதான்.” (ஆதியாகமம் 2:4, தி.மொ.) அப்படியானால், யெகோவாவே ‘வானங்களையும் பூமியையும் தோற்றுவித்தவர்.’
35 மேலும் அந்தப் பூர்வ ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தவரும் தெய்வ பக்தியற்றவர்களை அழித்து நீதியுள்ளவர்களான எட்டு ஆத்துமாக்களை உயிரோடுப் பாதுகாத்தவருங்கூட யெகோவாவே. பைபிள் பின்வருமாறு அறிவிக்கிறது: “யெகோவா நோவாவினிடம்: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்தியாருக்குள் என் பார்வையில் நீதிமான் நீயே, இதை நான் கண்டேன். இன்னும் ஏழு நாள் சென்றபின்பு நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழை பெய்யச்செய்வேன். நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடி நிக்கிரகம் பண்ணுவேன் என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நோவா செய்துமுடித்தான்.” (ஆதியாகமம் 7:1, 4, 5, தி.மொ.) இந்தத் தற்போதைய மனித குலம், தப்பிப்பிழைத்தவர்களாகிய அந்த எட்டு நீதிமான்களிலிருந்து தோன்றிவந்திருப்பதன் காரணமாக, இன்று நாம் நன்றியறிதலுள்ளவர்களாய் இருக்கவேண்டும். மேலும் நம்முடைய பூர்வ மூதாதையர்களின் இந்த நல்ல முன்மாதிரியைப் பின்பற்றி நடக்கவும்வேண்டும். மேலும் ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்த அவர்கள், இரட்சிப்புக்குரிய தங்கள் பேழையிலிருந்து வெளியில் வந்த பின்பு, நன்றியறிதலோடு யெகோவாவுக்கே பலி செலுத்தினார்கள் என்பதையும் கவனியுங்கள். அந்த விவரப்பதிவு சொல்வதாவது: “அப்பொழுது நோவா யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டிச் சுத்தமான சகல மிருகங்களிலும் சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். யெகோவா சுகந்தவாசனையை முகர்ந்தார்.” (ஆதியாகமம் 8:20, 21, தி.மொ.) ஆகவே, ரிக் வேதத்திலுள்ள பின்வரும் அந்தப் பூர்வ கேள்விக்கு உண்மையான விடை இங்கே இருக்கிறது. “நாம் பலி செலுத்தவேண்டிய அந்தத் தெய்வம் யார்?”
36 வானத்துக்கும் பூமிக்கும் கடவுளாகிய யெகோவாவே, அர்மகெதோனின் அந்த மகா போரின் மூலமாய் இந்தப் பொல்லாத யுகத்துக்கும் முடிவைக் கொண்டுவரப் போகிறவர். யெகோவா தேவனை உண்மையாய் அறிந்திருக்கிறவர்களும் யெகோவாவின் பெயரோடும் அவருடைய தனிப்பட்ட பண்பியலுடனும் பயபக்தியுடன் இணைக்கப்பட்டவர்களாக இருக்கிற எல்லாரும் அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்து அதற்குப் பின்னிருக்கப்போகும் அந்தச் சுத்திகரிக்கப்பட்ட பூமிக்குள் பிரவேசிப்பார்கள். பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.” (ரோமர் 10:13-15) பரலோகத்தின் கடவுளாகிய யெகோவாவைப் பற்றியும் மனிதவர்க்கத்துக்கான அவருடைய அன்புள்ள நோக்கங்களைப்பற்றியும் நாம் கற்றறிந்துகொள்வது இன்றியமையாத வண்ணமாய் மிக முக்கியமாக இருக்கிறது.
37 இதன் காரணமாகவே, அர்மகெதோன் போரைப்பற்றி எச்சரிக்கும் செய்தியும், அதைத் தப்பிப்பிழைக்கக் கூடியதைப் பற்றிய இந்த நற்செய்தியும் இன்று யெகோவாவின் சாட்சிகளால் பூமியெங்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, அர்மகெதோன் நெருங்கி வந்துகொண்டிருக்கிறதென்பதைக் குறிக்கும் அந்த அடையாளத்தின் ஒரு பாகமாக, இந்த யுகத்தின் முடிவுக்கு முன்பாகத்தானே உலகமெங்கும் ஒரு பிரசங்க வேலை நடைபெறுமென்று முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 24:14-ல் உள்ள பைபிள் தீர்க்கதரிசனத்தைத் திரும்ப கவனிக்கையில், நாம் வாசிப்பதாவது: “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், பின்பு முடிவு வரும்.” (NW) தற்போது யெகோவாவின் சாட்சிகள் இந்த உலகத்தின் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் 160-க்கு மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் இந்த மிக முக்கியமான வேலையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். உயிரைக் காப்பாற்றும் இந்த வேலை இப்பொழுது உங்கள் சொந்த வீட்டுக்குத்தானேயும் வந்திருக்கிறது!
அர்மகெதோனுக்குப் பின்பு—என்ன?
38 கலி யுகத்தைப் பின்தொடர்ந்து கிருத யுகம் வரும் என்பது பொதுவான நம்பிக்கை. இந்தக் கிருத யுகம் “பொற்காலம்” என்பதாகச் சொல்லப்படுகிறது. தீமை உலகத்தில் இல்லாமற்போகிறது. மனிதவர்க்கம் முழுவதும் ஒரே ஒரு கடவுளையே வணங்குவர். இந்தக் காலப்பகுதி சத்திய யுகம் என்றும் அறியப்படுகிறது, அதாவது சத்தியத்துக்குரிய காலப்பகுதி—பொய்மை இராத பெரும் காலப்பகுதி என்பதாகும்.
39 அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள், ஒரு புதிய மனித ஒழுங்குமுறையின் தொடக்க அங்கத்தினராக, தகர்க்கமுடியாத வண்ணமாய் நீதியைப் பற்றியிருக்கும் மக்களாக இருப்பார்கள். அர்மகெதோன் இந்தப் பூமியை எல்லா அநீதியிலிருந்தும் சுத்திகரிக்கும், மனிதவர்க்கம் ஒரு புதிய தொடக்கத்தை உடையதாய் இருக்கும். இவ்வாறே கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) பூமியின் குடிகளை, அவர்களுடைய பாவங்களிலிருந்தும், அபூரணங்களிலிருந்தும், பலவீனங்களிலிருந்தும், மனதின் பிரகாரமும் உடலின் பிரகாரமும் சுகப்படுத்த யெகோவா தேவன் பலிக்குரிய தம்முடைய ஏற்பாட்டின் பலன்களைப் பிரயோகிப்பார். கடைசியாக, பரதீஸ் பூமியில் உயிர் வாழ்வதற்கான உரிமை முற்றிலுமாய் மீட்டளிக்கப்படும். வறுமை, விலைவாசிகளின் உயர்வு, பட்டினி, வீடற்ற நிலைமை, மட்டுக்கு மீறிய நெருக்கமான அழுக்கடைந்த சேரிகள், உருக்குலைக்கும் குஷ்டரோகம் அல்லது உடலைக் கெடுக்கும் நோய்கள் ஆகியவையோ, குழந்தைகள் இறப்பதோ, மருத்துவசாலைகளுக்கான தேவையோ இனிமேல் இரா. அடிமைத்தனமாய் வற்புறுத்தி உழைக்க வைப்பதோ, கூலிகளோ, வேலையில்லா திண்டாட்டமோ, பிச்சைக்காரரோ, ஜாதி பேதங்களோ, வாழ்க்கையில் ஒட்டா வேறுபாடுகளோ இரா. இவற்றிற்குப் பதிலாக, செழித்தொளிரும் சுக ஆரோக்கியமும், நித்திய இளமையும், ஏராளமான நல்ல உணவும், திருப்தியளிக்கும் வேலையும், பாதுகாப்பான சூழ்நிலைமைகளும் இருக்கும்.
40 பைபிளின் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் இருதயத்துக்கு அனல்மூட்டும் உறுதி கூற்றுகள் சிலவற்றை நீங்கள்தாமே வாசியுங்கள். அவர் பின்வருமாறு எழுதினார்: “இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தைச் சேனைகளின் யெகோவா ஆயத்தப்படுத்துவார்; அதிலே . . . கொழும் பதார்த்தங்கள் ஊன் மிகுந்தவை; பழந்திராட்சரசம் வடிகட்டப்பட்டது. சகல தேசத்தாரையும் மறைத்திருக்கிற முக்காட்டையும் சகல ஜாதிகளையும் மேலே மூடியிருக்கிறதையும் இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை என்றுமாக விழுங்குவார்; யெகோவாவாகிய கடவுள் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்துத் தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடி முற்றிலும் நீக்கிவிடுவார்; யெகோவாவே இதைச் சொன்னார்.” “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்படும், செவிடரின் செவிகளும் திறவுண்டுபோம். சப்பாணி மானைப்போல் குதிப்பான், ஊமையன் நாவு களித்துப் பாடும்.”—ஏசாயா 25:6-8; 35:5, 6, தி.மொ.
41 ஏசாயா மேலும் எழுதினதாவது: “இதோ, நான் [யெகோவா] புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன், முந்தினவை இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை, வீடுகளைக்கட்டி அவற்றில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி அவற்றின் பலனை அநுபவிப்பார்கள். அவர்கள் கட்ட வேறொருவர் குடியிரார், அவர்கள் நாட்ட வேறொருவர் அநுபவியார். விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களும் நீடித்திருக்கும், நான் தெரிந்தெடுத்தவர்கள் தங்கள் கைகளால் செய்தவைகளைத் தாங்களே அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் அகால மரணமுறும் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும் அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன், அவர்கள் பேசுகையிலேயே நான் கேட்பேன்.”—ஏசாயா 65:17, 21-24, தி.மொ.
42 “ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; சர்ப்பம் புழுதியைத் தின்னும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை, சங்காரம் செய்வாருமில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.”—ஏசாயா 65:25, தி.மொ.
43 மரித்தோருங்கூட நினைவுகூரப்படுவர். எல்லா மரபினரும் மதத்தினருமாகிய எண்ணற்ற லட்சக்கணக்கான மனிதர் தங்கள் மரண நித்திரையிலிருந்து திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுவர். இது மறுபிறப்பாகவோ ஆத்துமா கூடுவிட்டுக் கூடுபாய்தலாகவோ இராது. அதற்கு மாறாக, சர்வவல்லமையுள்ள கடவுள் மனித உடல்களைத் திரும்ப உண்டாக்கி, தம்முடைய தவறாத நினைவிலிருந்து அவர்கள் ஒவ்வொருவரின் முந்திய வாழ்க்கை மாதிரிகளையும் சுபாவ பண்புகளையும் அவரவருக்கு அருளுவார், இவ்வாறாக அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களால் மறுபடியும் அடையாளங்கண்டுகொள்ளப்படுவர். ஆ, எப்பேர்ப்பட்ட ஆனந்தம்! உயிர்த்தெழுப்பப்பட்ட மரித்தோர் நித்திய தெய்வீக நோக்கத்துக்குள் பரிபூரணமாய் மறுபடியும் தங்களைச் சீராக அமைத்துக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். திட நம்பிக்கையுடன் பைபிள் பின்வருமாறு பதிவு செய்கிறது: “இதைக் குறித்து ஆச்சரியப்படவேண்டாம். பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவர் [கடவுளுடைய குமாரன்] சத்தத்தைக் கேட்குங் காலம் வருகிறது. அப்பொழுது, நன்மை செய்வோர் ஜீவனுக்கென்றும் தீமை முயல்வோரோ ஆக்கினைக்கென்றும் எழுந்து புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29, தி.மொ.
44 இந்த அதிசயங்கள் நீங்கள் வேண்டுமென்று விரும்புகிறவையாக இருக்கின்றனவல்லவா? இவை உங்களுடைய இருதயப்பூர்வமான வாஞ்சைகளல்லவா? நீங்கள் தனிப்பட்டவர்களாய் இந்தச் சந்தோஷங்களிலும் ஏராளமான நன்மைகளிலும் பங்குகொள்ளக்கூடும். விரைவாய் நெருங்கிக்கொண்டிருக்கும் அர்மகெதோன் போரைத் தப்பிப்பிழைக்கிறவர்களுக்கு இந்த ஆசீர்வாதங்கள் எதிரே வைக்கப்பட்டிருக்கின்றன.
45 என்றாலும் அர்மகெதோனுக்கப்பால் இருக்கப்போகும் உலகத்தில் நிறைவேறும்படியான இந்த வாக்குத்தத்தங்கள் நம்பத்தகுந்தவையா? அர்மகெதோன் வெறும் ஒரு கற்பனைக் கதையல்லவென்று நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்? ஏனென்றால் பூர்வ ஜலப்பிரளயம் கற்பனைக் கதையல்ல. மனிதன் கற்பனை ஆளல்ல. மனிதனை உண்டாக்கினவராகிய கடவுள் கற்பனைத் தெய்வம் அல்லர்! மேலும் கடவுள் பொய்யுரையாத தேவனாக இருப்பதனால் இந்த வாக்குத்தத்தங்களைப் பற்றி நாம் நிச்சயமாயிருக்கலாம். (தீத்து 1:3) சற்று சிந்தியுங்கள்! சிறு பிள்ளைகள் ஏன் பாசமும் அன்புமுள்ள பெற்றோரை நம்புகிறார்கள்? தங்கள் பெற்றோர் தங்கள்மீது அன்புள்ள அக்கறையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சந்தேகிக்கும்படி பொதுவாய் இளம் பிள்ளைகளை அவர்கள் கூட்டாளிகள் செய்விக்க முடியாது. தங்கள் பெற்றோரின் வாக்குகளை நம்பாதிருக்கச் சிறு பிள்ளைகளுக்கு எந்தக் காரணமுமில்லை. தங்கள் பெற்றோர் அருளியவற்றால் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வரையாக அவர்கள் வந்திருக்கிறார்கள் அல்லவா? ஆகவே கடவுள் மனிதவர்க்கத்தின்பேரில் அன்புள்ள அக்கறையுடையவராக இருக்கிறார் என்று நீங்கள் நம்ப மனமுள்ளவர்களாக இருப்பதை, மனிதத் தத்துவங்களின் மற்றும் வாக்குகளின் தோல்விகளும் ஏமாற்றங்களும், அழித்துப்போட அனுமதியாதேயுங்கள். கிடைக்கக்கூடிய நிரூபணங்களை தயவுசெய்து ஆராய்ந்து பாருங்கள். கடவுளுடைய வாக்குகளில் வைக்கும் நம்பிக்கை வீண்போகாதென்று உறுதியாய் நம்பியிருங்கள். அர்மகெதோனின் போரைக் கொண்டுவருவதற்கும் ஒரு புதிய காரிய ஒழுங்குமுறையை உண்டுபண்ணுவதற்கும் தேவைப்படுகிற ஞானத்தையும், வல்லமையையும், மன உறுதியையும் யெகோவா ஒருவரே உடையவராக இருக்கிறார். ஆறுதலளிப்பவராய், யெகோவா பின்வரும் இந்த உறுதி வாக்கைக் கொடுக்கிறார்:
46 “தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:3-5; எபிரெயர் 6:18-ஐ ஒத்துப் பாருங்கள்.
47 என்றபோதிலும், இந்த நல்ல காரியங்கள் எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்கும்? சிலர் சொல்வதைப்போல், வெறும் மற்றொரு யுகத்துக்கு அல்லது காலச் சுற்றுக்கு மாத்திரந்தானா? ஏன் அப்படியிருக்கவேண்டும்? காலம் வட்டங்களில் சுற்றிச் செல்லுகிறதில்லை. காலம் ஒரே திசையில்தானே—முன்னோக்கிச் செல்லுகிறது. காலம் என்பதுதானேயும் வெறும் பண்பைக் குறிக்கும், கருத்தியலான ஒரு பதம். காலம் தனக்குள் இயங்கி வாழ்ந்து கொண்டிருப்பவற்றின்பேரில் எவ்வித செல்வாக்கும் செலுத்தமுடியாது. ஒரு குறிப்பிட்ட யுகத்தை அல்லது காலப்பகுதியைக் குறிக்கும் தனி இயல்புகள் வெளியிலிருக்கும் அறிவுள்ள வலிமைகளால் உண்டுபண்ணப்படுகின்றன. ஆகவே தீமைக்கு ஏதுவான எல்லா வலிமைகளும் செல்வாக்குகளும் என்றுமாக அழிக்கப்படுகையில், நித்திய காலம் நன்மைக்கேதுவான வலிமையால் மாத்திரமே நிரம்பியிருக்கும்.
48 என்றபோதிலும், வரப்போகிற அந்தக் காரிய ஒழுங்குமுறை எவ்வளவு காலம் நீடித்திருக்குமென்பதை முதல் முக்கியமாய்த் தீர்மானிப்பது கடவுளுடைய சித்தமேயாகும். ஏதோ வகையான தானாக இயங்கும் சர்வலோகக் கடிகாரம் அல்ல. ஆகவே இந்த நல்ல காரியங்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதை நாம் உண்மையில் அறிய விரும்புகிறோமென்றால், நாம் உண்மையில் கேட்பதானது, ‘இந்தப் பூமியையும் மனிதவர்க்கத்தையும் குறித்த கடவுளுடைய சித்தம் என்ன?’ என்பதே.
49 பரிசுத்தப் புத்தகங்களில் எதிலாவது இந்தக் கேள்விக்குப் பதிலை நாம் கண்டடையக்கூடுமா? வேறு எங்கேயாவது நாம் அதை கண்டடையக்கூடுமா? ஆம், ஆனால் பைபிளில் மாத்திரமே கண்டடையலாம். ரிக்வேதத்தில் கொண்டுவரப்பட்ட பின்வரும் இந்தக் கேள்விக்கு, பைபிளிலேயே கடவுள் பதிலளிக்கிறார்: “நாம் பலி செலுத்தவேண்டிய அந்தத் தெய்வம் யார்?” எல்லாவற்றையும் படைத்தவருடைய பெயர் யெகோவா என்பதைப் பைபிளே நமக்குச் சொல்லுகிறது. சரித்திர முழுவதிலும் மனிதவர்க்கத்தோடுக் கடவுள் நடைமுறைத் தொடர்புகொண்டு நடத்தி வந்திருப்பதைப் பற்றிய தெளிவான ஒரு விவரம் பைபிளில் மாத்திரமே நமக்கு இருக்கிறது. மேலும் நம்முடைய நாட்களாகிய—இந்தக் கடைசி நாட்களில் காரியங்கள் எப்படி இருக்குமென்பதைப்பற்றி உண்மையில் தெளிவான ஒரு காட்சியை நமக்குக் கொடுப்பதும், இந்த ஒரே பரிசுத்த புத்தகமாகிய பைபிளே. எதிர்காலத்துக்கான கடவுளுடைய சித்தம் என்ன என்பதை நமக்கு விளக்கமாகத் தெரிவிப்பதும் பைபிளே.
50 யெகோவா தேவன் சித்தங்கொண்டிருப்பது மெய்யாகவே அதிசயமானதாய் இருக்கிறது. பைபிளில் சொல்லியிருக்கிறபடி, ஒரு நீதியுள்ள காரிய ஒழுங்குமுறை ஸ்தாபிக்கப்படும்படியும் அது வெறும் ஒரு காலப்பகுதிக்கு அல்லது யுகத்துக்கு மாத்திரமே அல்ல, நித்திய காலமெல்லாம் நீடித்திருக்கும்படியும் அவர் சித்தங்கொண்டிருக்கிறார். மேலும் நாம் ஒவ்வொருவரும் அந்த ஏற்பாட்டின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறோம். (சங்கீதம் 37:10, 11, 27-29) கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்ததன் காரணமாகத் தங்கள் குடும்பங்களால் கைவிடப்பட்டிருக்கிற சிலரைக் குறித்து பைபிள், அவர்கள் “இந்தக் காலப்பகுதியில் பல மடங்குகள் அதிகமாகவும், வரப்போகிற காரிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனையும்” பரதீஸான பூமியில் அடைவார்கள் என்று சொல்லுகிறது.—லூக்கா 18:29, 30, NW; ஆபகூக் 2:14.
51 புராணக்கதையின்படி,—குருசேத்திரத்தில் பெரும் போர் நடந்த அந்தக் காலம் முதற்கொண்டு, நிச்சயமாகவே பேரளவான சரித்திரம் கடந்துவிட்டது. இந்தக் காலத்தின்போது மனிதனுடைய சந்தோஷம், பல போர்களால், வெகுவாய்க் கெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. மேலும், அநீதியை ஒழித்து சமாதானத்தை உறுதியாய் நிலைநாட்ட மனிதன் எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் வெற்றிபெறாமல் போய்விட்டிருக்கின்றன. விசனகரமாய் நிலையான சமாதானமும் சந்தோஷமும் மனித முயற்சிகளின் பலனாக அமையவில்லை. ஏன்? ஏனென்றால் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள், அந்த ஈடற்றப் புத்தகமாகிய, பரிசுத்தப் பைபிளில் காணப்படுகிற யெகோவா தேவனின் அறிவுரையைப் பின்பற்றுவதன் மூலம் மாத்திரமே வரக்கூடும். எனவே, இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?
52 ‘யெகோவாவைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்’ என்ற இந்தத் தெய்வீக அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்றுக்கொள்வீர்களானால், “அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” நீங்கள் அப்படிச் செய்து “சர்வவல்லமையுள்ள கடவுளுடைய அந்த மகா நாளின் போ”ராகிய அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கும் அந்தச் சந்தோஷமானவர்களுக்குள் நீங்களும் இருக்கவேண்டுமென்பது எங்களுடைய ஜெபம்.—செப்பனியா 2:3, தி.மொ.; வெளிப்படுத்துதல் 16:14, 16, NW.
[கேள்விகள்]
1. பலருக்கு இருக்கும் இயல்பான ஆவல் என்ன? என்றாலும் இதை அடைவது ஏன் கடினமாய் இருக்கிறது?
2. துன்பத்தையும் அநீதியையும் ஒழிக்க மனிதன் எப்படி முயற்சி செய்திருக்கிறான்?
3-6. (அ) பண்டைய இந்தியாவில் இப்படிப்பட்ட முயற்சியில் ஒன்று எதுவாக இருந்ததாய்த் தோன்றுகிறது? (ஆ) பிரச்னைகள் நிலையாகத் தீர்க்கப்படவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
7. நிலையாகத் தீர்க்கப்படுவது எப்படி நிறைவேற்றப்படும்?
8. அர்மகெதோன் என்பது என்ன? அது எவ்வளவு பரவலானதாக இருக்கும்?
9, 10. அர்மகெதோன் ஏன் அவசியமானது? யார் அழிக்கப்படுவர்?
11. அர்மகெதோன் போரை யார் தப்பிப்பிழைப்பர்?
12, 13. வெகு காலத்துக்கு முன்பாக என்ன கேள்வி கேட்கப்பட்டது? சத்தியத்தை நாடித் தேடினவர்கள் எதை அறிய உண்மையில் விரும்பினார்கள்?
14. இந்து பாரம்பரியத்தின்படி, இந்தக் காலப்பகுதியின் முடிவுக்கு அடையாளம் என்னவாயிருக்கும்?
15. தற்கால நிலைமைகள் பாரம்பரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றனவா?
16. (அ) இந்தக் காலப்பகுதியின் “கடைசிநாட்”களை பைபிள் எப்படி விவரிக்கிறது? (ஆ) குடும்ப வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறது?
17. என்ன நிலைமைகள், அர்மகெதோன் நெருங்கிவிட்டதென்பதைக் குறிக்கும் அடையாளத்தை உண்டுபண்ணுகின்றன?
18. “கடைசிநாட்”களைக் குறித்து என்ன கேள்விகள் எழும்புகின்றன?
19, 20. (அ) “வேதனைகளுக்கு ஆரம்ப”மாக என்ன சம்பவங்களை பைபிள் முன்னறிவிக்கிறது? (ஆ) நம்முடைய தற்போதைய காலப்பகுதியின் இந்தக் “கடைசிநாட்கள்” கி.பி. 1914-ம் ஆண்டில் தொடங்கினவென்று ஏன் சொல்லப்படலாம்?
21. இந்தக் “கடைசிநாட்கள்” எவ்வளவு காலம் நீடித்திருக்கும்? அர்மகெதோன் போர் ஏன் அபாயகரமானதாய் நெருங்கிக்கொண்டிருக்கவேண்டும்?
22. பொல்லாதவர்கள் எப்பொழுது அழிக்கப்படுவர் என்பதைக் குறித்து பைபிளும் கீதையும் என்ன காட்டுகின்றன?
23. எந்தச் சரித்திர சம்பவம் அர்மகெதோனைப் பற்றிய ஒரு முன்காட்சியை அளிக்கிறது?
24, 25. பைபிள்பூர்வ ஜலப்பிரளயத்துக்கும் இந்து பாரம்பரிய ஜலப்பிரளயத்துக்கும் உள்ள ஒப்புமைகள் யாவை?
26. (அ) ஜலப்பிரளயத்துக்கு முன்னால் பூமியில் இருந்துவந்த நிலைமைகளை பைபிள் எப்படி விவரிக்கிறது? (ஆ) சரித்திரப்பூர்வ பெரும் ஜலப்பிரளயத்தையும் கடவுளுடைய அர்மகெதோன் போரையும் குறித்ததில் என்ன சூழ்நிலைமைகள் ஒத்தவையாக இருக்கின்றன?
27. அர்மகெதோன் போரைத் தப்பிப்பிழைக்க நாம் என்ன அறிவூட்டப்படவேண்டும்?
28. ரிக்-வேதத்தில் கடவுள் யார் என்பதைப் பற்றி என்ன கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது?
29. பூர்வ இந்துக்களில் சிலர் கடவுளைப் பற்றி எதை மதித்துணர்ந்தார்கள்?
30-32. (அ) கடவுளுடைய முடிவற்றத் தன்மையை எந்தச் சொற்றொடரைக் கொண்டு S. ராதாகிருஷ்ணன் விவரிக்கிறார்? (ஆ) பைபிள் இந்தச் சொற்றொடரைக்கொண்டு யாரை அடையாளங்காட்டுகிறது?
33. எந்தப் பண்புகள் யெகோவா தேவனுக்குக் குறிப்பிட்டுக் கூறப்பட்டிருக்கின்றன?
34. வானங்களையும் பூமியையும் படைத்தவர் யார்?
35. (அ) நம்முடைய முற்பிதாக்களாகிய, ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தவர்கள் எந்தக் கடவுளுக்குப் பலி செலுத்தினார்கள்? (ஆ) ஆகவே, ரிக்வேதத்திலுள்ள அந்தப் பூர்வ கேள்விக்கு விடை என்ன?
36. (அ) அர்மகெதோன் போரின்போது யார் மாத்திரமே காக்கப்படுவார்கள்? (ஆ) அவர்கள் எப்படி அறிவூட்டப்படுவார்கள்?
37. (அ) “முடிவு” வருவதற்கு முன்பாக என்ன நடைபெறவேண்டும்? (ஆ) இது எப்படி இப்பொழுது நிறைவேற்றப்பட்டு வருகிறது?
38. பாரம்பரியத்தின்படி கலியுகத்தைப் பின்தொடர்ந்து வரப்போவது என்ன?
39. (அ) தப்பிப்பிழைப்பவர்களைப் பற்றிய என்ன காரியம் அந்தப் புதிய ஒழுங்குமுறை ஒரு நல்ல தொடக்கத்தை உடையதாயிருக்க உதவி செய்யும்? (ஆ) உலகமெங்கும் நீதி நிலவியிருப்பதானது என்ன நிலைமைகளை உண்டுபண்ணும்?
40-42. அந்தப் புதிய காலத்தில் பின்வருபவற்றைக் குறித்ததில் என்ன நிலைமைகள் நிலவியிருக்கும்: (அ) உணவு (ஆ) நோயும் மரணமும் (இ) வீட்டு வசதி? (ஈ) வேலை (உ) மூர்க்க மிருகங்கள்?
43, 44. (அ) மரித்த நம்முடைய முன்னோருக்கும் மூதாதையர்களுக்கும் என்ன நடக்கும்? என்ன வழிவகையின் மூலமாய்? (ஆ) இந்த அதிசயமான ஆசீர்வாதங்களில் யார் பங்குகொள்வார்கள்?
45, 46. இந்த வாக்குத்தத்தங்கள் நம்பத்தகுந்தவை என்று நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்?
47. “காலத்தைப்” பற்றிய என்ன காரியம் கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் அந்த நிலையான தன்மையைக் கெடுக்காது?
48. அந்தப் புதிய காரிய ஒழுங்குமுறை எவ்வளவு காலம் நீடித்திருக்குமென்பதை முதல் முக்கியமாய்த் தீர்மானிப்பது எது?
49. எதிர்காலத்துக்கான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை எங்கே மாத்திரமே நாம் கற்றறியக்கூடும்? வேறு எந்தத் தகவலையும் இந்த ஊற்றுமூலம் மாத்திரமே கொடுக்கிறது?
50. கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய அறிவு எதிர்காலத்தைப் பற்றிய எந்த அதிசயமான காட்சியை நமக்குக் கொடுக்கிறது?
51. மெய்யான நீதியும் மனத்திருப்தியும் எப்படி மாத்திரமே மனிதவர்க்கத்தால் அனுபவித்துக்களிக்கப்படும்?
52. இப்பொழுது என்ன செய்வதன் மூலம் யெகோவாவின் அர்மகெதோன் போருக்குரிய அந்த நாளில் நீங்கள் மறைக்கப்படலாம்?
[பக்கம் 14-ன் பெட்டி/படம்]
எல்லாம் ஒரே சந்ததியில்
1914
உலகப் போர்கள்
வன்முறை குற்றச்செயல்கள்
பெரும்படியான பஞ்சங்கள்
கொள்ளை நோய்கள்
பூகோள தூய்மைக்கேடு
இந்த ஒழுங்குமுறையின் முடிவு
[பக்கம் 6-ன் படம்]
அர்மகெதோன், பூமியைத் துடைத்துச் சுத்தமாக்கும் ஒரு பூகோளப் போர்
[பக்கம் 8-ன் படம்]
அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள், மனித குலத்தை அழியாமல் காத்துவைப்பதற்குத் தகுதியுள்ளவர்களாக நம்முடைய சிருஷ்டிகரால் தீர்க்கப்படுவர்
[பக்கம் 13-ன் படம்]
அர்மகெதோன் போரின் அடையாளம் 1914 முதற்கொண்டு காணப்படுகிறது
[பக்கம் 18-ன் படம்]
விஷ்ணு சேஷாவின்மேல் தூங்குவது—இந்து பாரம்பரியத்தில் பாதுகாப்பின் வழிவகை
[பக்கம் 19-ன் படம்]
பைபிள்பூர்வ ஜலப்பிரளயம்—அர்மகெதோனின் முன்காட்சி
[பக்கம் 25-ன் படம்]
உலகமெங்கும் யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்பட்டுவரும் உயிரைக் காக்கும் பிரசங்க வேலை இந்த யுகத்தின் முடிவு நெருங்குவதைக் குறிக்கிறது.