அதிகாரம் 73
இரக்கம் காட்டிய ஒரு சமாரியன்
எருசலேமிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு கிராமமாகிய பெத்தானியாவுக்கு அருகே இயேசு இருக்கிறார். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் வல்லுநராய் இருந்த ஒரு மனிதன் ஒரு கேள்வியுடன் அவரை அணுகுகிறான்: “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான்.
வழக்கறிஞனாய் இருந்த அந்த மனிதன் வெறுமென தகவலுக்காக கேட்காமல், அவரைச் சோதிக்க வேண்டும் என்று விரும்பி அவ்வாறு கேட்கிறான் என்பதை இயேசு கண்டுகொள்கிறார். யூதர்களின் உணர்ச்சிகளை புண்படுத்தும் விதத்தில் இயேசுவை பதிலளிக்கச் செய்ய வேண்டும் என்பது அந்த வழக்கறிஞனின் குறிக்கோளாக ஒருவேளை இருக்கலாம். ஆகையால் இயேசு அந்த வழக்கறிஞன் தன்னை உட்படுத்துமாறு செய்கிறார்: “நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்கிறார்.
அந்த வழக்கறிஞன் அசாதாரணமான உட்பார்வையை பயன்படுத்தி உபாகமம் 6:5, லேவியராகமம் 19:18-ல் உள்ள கடவுளுடைய சட்டங்களை மேற்கோளாக எடுத்து அதற்கு பதில் சொல்கிறான்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [யெகோவாவிடத்தில், NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”
“நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய்” என்று இயேசு பிரதிபலிக்கிறார்.
என்றபோதிலும், அந்த வழக்கறிஞன் திருப்தியடையவில்லை. இயேசுவின் பதில் அவனுக்குப் போதிய அளவுக்கு திட்டவட்டமானதாய் இல்லை. தன்னுடைய சொந்த எண்ணங்கள் சரி என்றும், ஆகையால், மற்றவர்களை நீதியாய் நடத்துகிறான் என்றும் இயேசுவிடமிருந்து உறுதிப்பாட்டை பெற்றுக் கொள்ள விரும்புகிறான். ஆகையால், அவன் கேட்கிறான்: “எனக்குப் பிறன் யார்?”
லேவியராகமம் 19:18-ன் சூழமைவு குறிப்பிடுவதாக தோன்றுகிறபடி, “பிறன்” என்ற பதம் உடன் யூதர்களுக்கு மட்டும் பொருந்துகிறது என்று யூதர்கள் நம்பினர். உண்மையில், பின்னர் அப்போஸ்தலனாகிய பேதுருவும்கூட சொன்னான்: “அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.” ஆகையால் அந்த வழக்கறிஞனும் மேலும் ஒருவேளை இயேசுவின் சீஷர்களும்கூட தங்கள் உடன் யூதர்களை மட்டும் தயவாய் நடத்தினால் தாங்கள் நீதிமான்களென்று நம்புகின்றனர். ஏனென்றால் அவர்களுடைய எண்ணம் யூதரல்லாதவர்கள் உண்மையில் அவர்களுடைய அயலான் அல்ல என்பதாகும்.
தமக்குச் செவிகொடுத்துக் கொண்டிருப்பவர்களை புண்படுத்தாமல், இயேசு எவ்வாறு அவர்களுடைய எண்ணத்தை திருத்தலாம்? ஒருவேளை உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஒரு கதை சொல்கிறார்: “ஒரு மனுஷன் (யூதன்) எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்து கொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்” என்று இயேசு விளக்குகிறார்.
“அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப் போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகினான்.”
அநேக ஆசாரியர்களும், அவர்களுடைய லேவிய ஆலய உதவியாளர்களும் எரிகோவில் வாழ்கின்றனர். இது 900 மீட்டர் கீழே இறங்கும் ஓர் அபாயகரமான பாதையில் 21 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அங்கிருந்து அவர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்தில் சேவிக்கின்றனர். ஆசாரியனும், லேவியனும், இக்கட்டில் இருக்கும் ஓர் உடன் யூதனுக்கு உதவி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, ஒரு சமாரியன் உதவி செய்கிறான். யூதர்கள் சமாரியர்களை அதிகமாக பகைப்பதனால், சமீபத்தில் அவர்கள் இயேசுவை வன்மையான பதங்களால் “ஒரு சமாரியன்” என்றழைப்பதன் மூலம் பழித்துரைத்தனர்.
அந்த யூதனுக்கு உதவி செய்ய சமாரியன் என்ன செய்கிறான்? “கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின் மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டு போய், அவனைப் பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும் போது இரண்டு பணத்தை [இரண்டு டினாரியை, ஏறக்குறைய இரண்டு நாள் கூலியை] எடுத்து, சத்திரக்காரன் கையில் கொடுத்து: “நீ இவனை விசாரித்துக் கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.”
கதையை சொல்லிய பின்பு, இயேசு வழக்கறிஞனை கேட்கிறார்: “இப்படியிருக்க, கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு மூன்று பேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது?”
ஒரு சமாரியனுக்கு எந்தப் புகழையும் கொடுக்க மனதில்லாதவனாய் அந்த வழக்கறிஞன் பதிலளிக்கிறான்: “அவனுக்கு இரக்கஞ் செய்தவனே.”
“நீயும் போய் அந்தப்படியே செய்” என்று இயேசு முடிக்கிறார்.
இயேசு அந்த வழக்கறிஞனிடம் யூதரல்லாதவர்கள்கூட அவருடைய அயலான் என்று நேரடியாக சொல்லியிருந்தால், அந்த மனிதன் இதை ஏற்றுக் கொண்டிருந்திருக்க மாட்டான். அது மட்டுமல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தாரில் அநேகர், இயேசுவோடு கொண்டிருந்த கலந்தாலோசிப்பில் அவன் பக்கமாக ஆகிவிட்டிருப்பர். என்றபோதிலும் உண்மை வாழ்க்கை அடிப்படையாகக் கொண்ட இக்கதை நம்முடைய அயலகத்தார் நம் சொந்த இனத்தார் அல்லது தேசத்தார் உட்பட மற்ற மக்களையும் உட்படுத்துகிறது என்பதை மறுக்கமுடியாத வகையில் தெளிவாக்கியது. இயேசுவின் என்னே ஒரு போதான முறை! லூக்கா 10:25–37; அப்போஸ்தலர் 10:28; யோவான் 4:9; 8:48.
▪ அந்த வழக்கறிஞன் இயேசுவை என்ன கேள்விகள் கேட்கிறான், அவ்வாறு கேட்பதில் தெளிவாகவே அவனுடைய நோக்கம் என்ன?
▪ யூதர்கள் தங்களுடைய அயலான் யார் என்பதாக நம்புகின்றனர், சீஷர்களும்கூட இந்த எண்ணத்தை பகிர்ந்து கொண்டனர் என்று நம்புவதற்கு என்ன காரணம் இருக்கிறது?
▪ அந்த வழக்கறிஞன் மறுத்து விடாதபடி இயேசு எவ்வாறு சரியான எண்ணத்தைத் தெளிவுபடுத்தினார்?