பாடம் 11
பொய் மதத்தை விட்டுவிலகுங்கள்!
நீங்கள் கடவுளுக்கு சேவை செய்வதை சாத்தானும் அவனுடைய பேய்களும் விரும்புவதில்லை. அனைவரையும் கடவுளிடமிருந்து பிரித்துவிட வேண்டும் என்பதே அவர்களுடைய ஆசை. இதற்காக அவர்கள் எப்படி முயற்சி செய்கிறார்கள்? அவர்கள் பயன்படுத்தும் ஒரு வழி பொய் மதம். (2 கொரிந்தியர் 11:13-15) பைபிளிள் சத்தியத்தின்படி போதிக்காத மதமே பொய் மதம். பொய் மதத்தை கள்ள நோட்டுக்கு ஒப்பிடலாம். பார்ப்பதற்கு உண்மையான நோட்டு மாதிரியே தோன்றும். ஆனால் அது ஒரு காசுக்குக்கூட மதிப்பு பெறாது. அந்த நோட்டை வைத்திருப்பது பெரும் தொல்லைகளை உண்டாக்கும்.
மதத்தின் பொய்புரட்டுகள் சத்தியத்தின் கடவுளாகிய யெகோவாவை ஒருபோதும் பிரியப்படுத்தாது. இயேசு பூமியில் இருந்தபோது, அவரை கொன்றுபோட விரும்பிய ஒரு மத வகுப்பார் இருந்தார்கள். தாங்கள் வழிபடும் முறையே சரியானது என அவர்கள் நினைத்தார்கள். “ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன்” என்று சொன்னார்கள். இயேசு அதை ஏற்றுக்கொண்டாரா? இல்லை! மாறாக, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்” என்று சொன்னார். (யோவான் 8:41, 44) அது போலவே, இன்றும் அநேக ஜனங்கள் கடவுளைத்தான் வழிபடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் சாத்தானையும் அவனுடைய பேய்களையுமே வழிபடுகிறார்கள்!—1 கொரிந்தியர் 10:20.
கெட்ட மரம் கெட்ட கனிகளை தருவதுபோல, பொய் மதமும் கெட்ட செயல்களை செய்பவர்களையே உருவாக்குகிறது. இந்த உலகம் பல பிரச்சினைகளால் நிறைந்திருக்கிறது, அதற்கு கெட்ட ஜனங்களின் செயல்களே காரணம். ஒழுக்கக்கேடு, சண்டை, திருட்டு, ஒடுக்குதல், கொலை, கற்பழிப்பு ஆகியவை எங்கும் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்களும் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால் அவர்களுடைய மதம் நல்ல செயல்களை செய்ய அவர்களை உற்சாகப்படுத்துவதில்லை. கெட்ட செயல்களை செய்வதை நிறுத்தவில்லை என்றால் அவர்கள் கடவுளுடைய நண்பராக முடியாது.—மத்தேயு 7:17, 18.
விக்கிரகங்களிடம் ஜெபிப்பதற்கு பொய் மதம் போதிக்கிறது. விக்கிரகங்களிடம் ஜெபம் செய்யக்கூடாது என கடவுள் சொல்கிறார். இது நியாயம்தான். உங்களிடம் பேசாமல் உங்கள் படத்தை மட்டும் பார்த்து பேசுபவரை நீங்கள் விரும்புவீர்களா? அவர் உங்களுடைய உண்மையான நண்பராக இருக்க முடியுமா? நிச்சயமாகவே இருக்க முடியாது. உயிரற்ற சிலையையோ படத்தையோ பார்த்து அல்ல, ஆனால் ஜனங்கள் தம்மிடம் பேசும்படி யெகோவா விரும்புகிறார்.—யாத்திராகமம் 20:4, 5.
போரில் மற்றவர்களை கொலை செய்வதில் தவறில்லை என பொய் மதம் போதிக்கிறது. கடவுளுடைய நண்பர்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவார்கள் என இயேசு சொன்னார். நமக்கு அன்பானவர்களை நாம் கொலை செய்ய மாட்டோம். (யோவான் 13:35) கெட்ட ஜனங்களை கொலை செய்வதும் தவறுதான். இயேசுவின் விரோதிகள் அவரை கைது செய்ய வந்தபோது, தம்மை பாதுகாக்க சீஷர்கள் எதிர்த்து போரிட அவர் அனுமதிக்கவில்லை.—மத்தேயு 26:51, 52.
கெட்டவர்கள் எரிநரகத்தில் வாதிக்கப்படுவார்கள் என பொய் மதம் போதிக்கிறது. ஆனால் பாவம் மரணத்திற்கு வழிநடத்துகிறது என்றுதான் பைபிள் போதிக்கிறது. (ரோமர் 6:23) யெகோவா அன்புள்ள கடவுள். அன்புள்ள கடவுள் நித்தியமாக வாதிப்பாரா? கண்டிப்பாக வாதிக்க மாட்டார்! யெகோவா ஏற்றுக்கொள்கிற ஒரேவொரு மதமே பரதீஸில் இருக்கும். (வெளிப்படுத்துதல் 15:4) சாத்தானுடைய பொய் போதனைகளை அடிப்படையாக கொண்ட மதங்கள் யாவும் ஒழிந்துவிடும்.