உங்கள் சமுதாயத்திற்கு நற்செய்தி தரும் நடைமுறையான பயன்கள்
“கிறிஸ்தவ நெறிமுறைகள் நடைமுறைக்கு ஒத்துவராது. இன்றைய சிக்கலான சமுதாயத்திற்கு அவை சரிப்பட்டு வராது.” இதுபோன்ற கருத்தைத்தான் இன்றைய உலகில் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் இந்துமத தலைவர் மோகன்தாஸ் கே. காந்திக்கும் இந்தியாவின் முன்னாள் பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கும் இடையே நிகழ்ந்ததாக கூறப்படும் ஓர் உரையாடலில் மிகவும் வித்தியாசமான ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பற்றி காந்தியின் கருத்தை இர்வின் பிரபு கேட்டார். காந்தி ஒரு பைபிளை எடுத்து மத்தேயு ஐந்தாம் அதிகாரத்துக்குத் திருப்பி இவ்வாறு சொன்னார்: “உங்களுடைய தேசமும் என்னுடைய தேசமும் மலைப்பிரசங்கத்தில் கிறிஸ்து கற்பித்த போதனைகளின்படி வாழ்ந்தால், நம்முடைய தேசங்களின் பிரச்சினைகளை மட்டுமல்ல, இந்த முழு உலகத்தின் பிரச்சினைகளையும் நாம் தீர்த்திருப்போம்.”
ஆன்மீகத்தை நாடுவதையும், சாந்தகுணமுள்ளவர்களாக, சமாதானமுள்ளவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, நீதியை நேசிப்பவர்களாக இருப்பதையும் பற்றி அந்தப் பிரசங்கம் சொல்கிறது. கொலை செய்வதை மட்டுமல்லாமல், மற்றவர்களிடம் கோபப்படுவதையும், வேசித்தனத்தை மட்டுமல்ல, ஒழுக்கக்கேடான எண்ணங்களையும் அது கண்டனம் செய்கிறது. குடும்பங்களை முறித்து பிள்ளைகளைப் பலியாக்கும் பொறுப்பற்ற விவாகரத்தைக் கண்டிக்கிறது. அது நமக்குச் சொல்கிறது: ‘உங்களைப் பகைக்கிறவர்களையும் சிநேகியுங்கள், தேவையிலிருப்பவர்களுக்கு கொடுங்கள், மற்றவர்களை இரக்கமின்றி நியாயந்தீர்க்காதீர்கள், உங்களை நடத்த விரும்பும் விதத்தில் மற்றவர்களை நடத்துங்கள்.’ இந்த எல்லா ஆலோசனைகளையும் பின்பற்றினால், மிகுந்த நன்மைகள் விளையும். உங்களுடைய சமுதாயத்தில் எவ்வளவு அதிக மக்கள் அவற்றை கடைப்பிடிக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக உங்களுடைய சமுதாயம் மேம்படும்!
இந்த விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களை உந்துவிக்கின்றனர். திருமணத்தை மதிக்கும்படி பைபிள் அவர்களுக்கு கற்பிக்கிறது. அவர்களுடைய பிள்ளைகள் சரியான நெறிமுறைகளில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். குடும்பத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. ஒன்றுபட்ட குடும்பங்கள் உங்கள் சமுதாயத்திற்கும், உங்கள் தேசத்திற்கும்கூட ஒரு வரப்பிரசாதம். குடும்ப உறவுகள் பலவீனமடைந்து, ஒழுக்கக்கேடு பெருகியதால் உலக வல்லரசுகள் அழிந்துபோனதைப் பற்றிய உதாரணங்கள் வரலாற்றில் மலிந்து கிடக்கின்றன. கிறிஸ்தவ நெறிமுறைகளின்படி வாழ எந்தளவுக்கு தனிநபர்களும் குடும்பங்களும் யெகோவாவின் சாட்சிகளால் உந்துவிக்கப்படுகிறார்களோ அந்தளவுக்கு தீய செயல்களும் ஒழுக்கக்கேடும் குற்றச்செயலும் உங்கள் சமுதாயத்தில் குறைவாகவே இருக்கும்.
சமுதாயங்களையும் தேசங்களையும் தொற்றியிருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று இனப் பகைமை. இதற்கு மாறாக அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு சொன்னார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” மேலும் பவுல் இவ்வாறு எழுதினார்: “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” (அப்போஸ்தலர் 10:34, 35; கலாத்தியர் 3:28) யெகோவாவின் சாட்சிகள் இதை ஏற்றுக்கொள்கின்றனர். எல்லா இனத்தவரும் நிறத்தவரும் தங்களுடைய உலக தலைமை அலுவலகத்தில், கிளை அலுவலகங்களில், சபைகளில் ஒருமித்து வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் சில மரபினர் மோதலின்றி ஒன்றுசேர்ந்து வாழ்கிறதில்லை. ஆனால் அங்கே நடைபெறும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளில், பல்வேறு மரபினர் முழு ஒற்றுமையிலும் அன்பான கூட்டுறவிலும் ஒன்றுசேர்ந்து சாப்பிடுகிறார்கள், உறங்குகிறார்கள், வணங்குகிறார்கள். அரசாங்க அதிகாரிகள் இதை பார்க்கும்போது ஆச்சரியப்படுகிறார்கள். மெய் கிறிஸ்தவம் ஐக்கியப்படுத்தும் சக்தி படைத்தது என்பதற்கு ஓர் உதாரணத்தை 1958, ஆகஸ்ட் 2, நியூ யார்க் அம்ஸ்டர்டாம் நியூஸ் குறிப்பிட்டது. நியூ யார்க் நகரில் 2,50,000-க்கும் அதிகமான சாட்சிகள் முன்பு குறிப்பிடப்பட்ட சர்வதேச மாநாட்டிற்கு கூடிவந்திருந்தார்கள், அதைப் பார்த்த அந்தப் பத்திரிகை இவ்வாறு எழுதியது.
“எங்கு பார்த்தாலும், பலதரப்பட்ட பின்னணியைச் சேர்ந்த, உலகின் பல பாகங்களிலிருந்து வந்திருந்த கறுப்பர்களும் வெள்ளையர்களும் கீழை நாட்டவர்களும் சந்தோஷமாகவும் சகஜமாகவும் பழகினார்கள். . . . வணக்கத்திற்காக 120 நாடுகளிலிருந்து வந்திருந்த சாட்சிகள் சமாதானமாக ஒன்றுசேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள், வணங்கியிருக்கிறார்கள்; இதை எவ்வளவு எளிதாக செய்ய முடியும் என்பதை அமெரிக்கர்களுக்கு காண்பித்திருக்கிறார்கள். . . . மக்கள் எவ்வாறு ஒன்றுசேர்ந்து வேலை செய்யவும் வாழவும் முடியும் என்பதற்கு இந்த மாநாடு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.”
இன்றைய நவீன உலகிற்கு கிறிஸ்தவ நெறிமுறைகள் நடைமுறையானவை அல்ல என அநேகர் சொல்லலாம். ஆனால் வேறு எதுதான் பலன் தந்திருக்கிறது அல்லது பலன் தரும்? கிறிஸ்தவ நெறிமுறைகளை உங்களுடைய சமுதாயத்தில் இப்பொழுது பின்பற்றினால், அவை உண்மையிலேயே பலன்தரும். மனிதகுலத்தின் மீது கடவுளுடைய ராஜ்யம் ஆட்சி செய்யும்போது, எல்லா ‘தேசங்களையும் கோத்திரங்களையும் மக்களையும்’ ஒன்றுசேர்க்கும் பாலமாக இந்நெறிமுறைகள் அமையும்.—வெளிப்படுத்துதல் 7:9, 10, NW.
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
எல்லா இனத்தவரும் நிறத்தவரும் ஒருமித்து வேலை செய்கிறார்கள்
[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]
கிறிஸ்தவமே நடைமுறையானது, வேறு எதுதான் பலன் தந்திருக்கிறது?