கடவுளுடைய நியமங்கள் உங்களை வழிநடத்தட்டும்
‘யெகோவா பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதிக்கிறார்.’—ஏசாயா 48:17.
1. படைப்பாளர் மனிதர்களை எவ்வாறு வழிநடத்துகிறார்?
இப்பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் இரகசியங்களை தெரிந்துகொள்ள அறிவியல் அறிஞர்கள் அல்லும் பகலும் உழைக்கின்றனர். நம்மைச் சுற்றியுள்ள அண்டத்தில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேரளவான சக்தியைக் கண்டு ஆச்சரியத்தில் வாய் பிளக்கின்றனர். நம்முடைய சூரியன்—நடுத்தர அளவுள்ள நட்சத்திரம்—“ஒவ்வொரு நொடியும், 10,000 கோடி ஹைட்ரஜன் வெடிகுண்டுகளுக்கு” சமமான சக்தியை உற்பத்தி செய்கிறது. இத்தனை பிரமாண்டமான விண்வெளி படைப்புகளை எல்லையில்லா வல்லமை படைத்த படைப்பாளர் கட்டுப்படுத்தி வழிநடத்துகிறார். (யோபு 38:32; ஏசாயா 40:26) சுதந்திரம், தார்மீக சக்தி, பகுத்தறியும் திறமை, ஆன்மீக திறன் ஆகியவற்றை பெற்றிருக்கும் மனிதர்களாகிய நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? நம்மை வழிநடத்த நம்மை உண்டாக்கினவர் என்ன செய்திருக்கிறார்? நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியோடு, பரிபூரணமான சட்டங்கள், மிக உயர்ந்த நியமங்கள் ஆகியவற்றால் அவர் நம்மை அன்பாக வழிநடத்துகிறார்.—2 சாமுவேல் 22:31; ரோமர் 2:14, 15.
2, 3. எப்படிப்பட்ட கீழ்ப்படிதலில் கடவுள் சந்தோஷத்தைக் காண்கிறார்?
2 புத்திக்கூர்மையுள்ள படைப்புகள், விருப்பத்தோடு அவருக்குக் கீழ்ப்படியும்போது அவர் சந்தோஷப்படுகிறார். (நீதிமொழிகள் 27:11) யோசிக்க திறனற்ற இயந்திர மனிதர்களைப் போல அவருக்குக் கீழ்ப்படியும்படி நம்மை புரோகிராம் செய்வதற்கு பதிலாக யெகோவா நமக்கு தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார், ஆகவே எது சரியோ அதையே செய்ய நாம் அறிவுப்பூர்வமாக தீர்மானிக்கிறோம்.—எபிரெயர் 5:14.
3 தம் தகப்பனை அப்படியே பரிபூரணமாக பின்பற்றிய இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று [“அடிமைகளென்று,” NW] சொல்லுகிறதில்லை.” (யோவான் 15:14, 15) பண்டைய காலங்களில், எஜமானரின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர அடிமைக்கு வேறு வழியே கிடையாது. ஆனால் நட்பு என்பது மனம் கவரும் குணங்களைப் பார்த்துதான் உருவாகிறது. நாம் யெகோவாவின் நண்பர்களாக இருக்க முடியும். (யாக்கோபு 2:23) இந்த நட்பு பரஸ்பர அன்பினால் இன்னும் அதிக பலமடைகிறது. “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்” என இயேசு சொன்னபோது, கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கும் அன்புக்கும் சம்பந்தமிருப்பதாக கூறினார். (யோவான் 14:23) யெகோவா நம்மை நேசிப்பதாலும் பத்திரமாக வழிநடத்த விரும்புவதாலும் அவருடைய நியமங்களுக்கு இசைவாக வாழும்படி நம்மை அழைக்கிறார்.
கடவுளின் நியமங்கள்
4. நியமங்களை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?
4 நியமங்கள் என்றால் என்ன? நியமம் என்பது “பொதுவான அல்லது அடிப்படை உண்மை: பரந்த மற்றும் அடிப்படை சட்டம், கோட்பாடு, அல்லது மற்ற சட்டங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் அடிப்படையாய் அமைவது” என்று விளக்கப்படுகிறது. (உவெப்ஸ்டர்ஸ் தர்ட் நியூ இன்டர்நேஷனல் டிக்ஷ்னரி) பைபிளை கவனமாக படிக்கையில், வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைமைகளுக்கும் அம்சங்களுக்கும் பொருந்துகிற அடிப்படை நியமங்களை நம்முடைய பரலோக தகப்பன் தந்திருப்பது தெரிகிறது. நம்முடைய நித்திய நலனை மனதில் வைத்தே இவற்றை தந்திருக்கிறார். இது ஞானியாகிய சாலொமோன் எழுதிய விஷயத்தோடு பொருத்தமாயுள்ளது: “என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.” (நீதிமொழிகள் 4:10, 11) யெகோவா நமக்குத் தந்திருக்கும் நியமங்கள், அவரோடும் சகமனிதர்களோடும் நமக்கிருக்கும் உறவையும், நம்முடைய வணக்கத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கின்றன. (சங்கீதம் 1:1) அந்த அடிப்படை நியமங்கள் சிலவற்றை நாம் இப்போது சிந்திக்கலாம்.
5. சில அடிப்படை நியமங்களுக்கு உதாரணங்கள் கொடுங்கள்.
5 யெகோவாவோடு நமக்கிருக்கும் உறவைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:37) அதோடு, சகமனிதருடன் பழகுவதன் சம்பந்தமாக நியமங்களை தந்திருக்கிறார். இதற்கு ஓர் உதாரணம், “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்ற பொன்விதியாகும். (மத்தேயு 7:12; கலாத்தியர் 6:10; தீத்து 3:2) வணக்கத்தின் சம்பந்தமாக, “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலை . . . விட்டுவிடாமல்” இருக்க வேண்டும் என நமக்கு அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறது. (எபிரெயர் 10:24, 25) நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அம்சங்களுக்குக் கவனம் செலுத்துகிறவராய் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 10:31) இன்னும் எத்தனை எத்தனையோ நியமங்களை கடவுளுடைய வார்த்தையில் காணலாம்.
6. நியமங்கள் எவ்வாறு சட்டங்களிலிருந்து வேறுபடுகின்றன?
6 நியமங்கள் நிஜமான, அடிப்படை உண்மைகளாகும்; ஞானமுள்ள கிறிஸ்தவர்கள் அவற்றை நேசிக்க கற்றுக்கொள்கிறார்கள். சாலொமோன் இவ்வாறு எழுதுமாறு யெகோவா ஏவினார்: “என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.” (நீதிமொழிகள் 4:20-22) நியமங்கள் எவ்வாறு சட்டங்களிலிருந்து வேறுபடுகின்றன? நியமங்களே சட்டங்களுக்கு அடிப்படையாகும். சட்டங்கள் திட்டவட்டமானவை, அவை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு அல்லது சூழ்நிலைமைக்கு பொருந்துபவை. ஆனால் நியமங்களுக்கு கால வரையறை கிடையாது. (சங்கீதம் 119:111) கடவுளுடைய நியமங்கள் காலத்திற்கு பொருந்தாதவையாக போய்விடுவதில்லை அல்லது காலாவதியாவதில்லை. ஏசாயா தீர்க்கதரிசியின் ஏவப்பட்ட வார்த்தைகள் இதை உண்மையென நிரூபிக்கின்றன: “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.”—ஏசாயா 40:8.
நியமங்களின் அடிப்படையில் சிந்தித்து செயல்படுங்கள்
7. நியமங்களின் அடிப்படையில் சிந்தித்து செயல்பட கடவுளுடைய வார்த்தை நம்மை எவ்வாறு ஊக்குவிக்கிறது?
7 நியமங்களின் அடிப்படையில் சிந்தித்து செயல்படும்படி நம்மை ‘தேவனுடைய வசனம்’ திரும்பத் திரும்ப உற்சாகப்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்தின் சுருக்கத்தைக் கூறும்படி இயேசுவிடம் கேட்டபோது அவர் இரண்டே இரண்டு குறிப்புகளை வலியுறுத்தினார்: ஒன்று யெகோவாவிடம் அன்பு காட்டுவது, மற்றொன்று அயலாரிடம் அன்பு காட்டுவது. (மத்தேயு 22:37-40) இதை சொல்லும்போது இயேசு, மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் அடிப்படை நியமங்களைப் பற்றி முன்னர் கூறப்பட்டதன் சுருக்கத்தையே மேற்கோள் காட்டினார் எனலாம். “நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” என உபாகமம் 6:4, 5-ல் கூறப்பட்டது. லேவியராகமம் 19:18-ல் காணப்படும் கடவுளுடைய சட்டமும்கூட இயேசுவின் மனதில் இருந்தது. சாலொமோன் ராஜா தெளிவாகவும், நயமாகவும், வலிமையோடும் பிரசங்கி புத்தகத்தை முடிக்கையில் கடவுளுடைய பல சட்டங்களை சுருக்கமாக தொகுத்துரைத்தார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.”—பிரசங்கி 12:13, 14; மீகா 6:8.
8. அடிப்படை பைபிள் நியமங்களை முழுமையாக புரிந்துகொள்வது ஏன் பாதுகாப்பு அளிக்கிறது?
8 அடிப்படை நியமங்களை முழுமையாக புரிந்துகொள்வது, அதிக திட்டவட்டமான முக்கிய கட்டளைகளை பகுத்தறியவும் கீழ்ப்படியவும் நமக்கு உதவும். மேலுமாக, அடிப்படை நியமங்களை நாம் முழுமையாக புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம்மால் ஞானமான தீர்மானங்களை செய்ய முடியாது, நம்முடைய விசுவாசமும் எளிதில் ஆட்டங்கண்டுவிடும். (எபேசியர் 4:14) அப்படிப்பட்ட நியமங்களை நம்முடைய மனதிலும் இருதயத்திலும் நாம் ஆழமாக பதிய வைத்துக்கொண்டால், தீர்மானங்கள் செய்கையில் அவற்றை உடனடியாக பயன்படுத்துவோம். புரிந்துகொள்ளுதலோடு அவற்றை பயன்படுத்தும்போது வெற்றி நமக்கே.—யோசுவா 1:8; நீதிமொழிகள் 4:1-9.
9. பைபிள் நியமங்களைப் பகுத்துணர்ந்து பொருத்துவது ஏன் எப்போதும் சுலபமல்ல?
9 பைபிள் நியமங்களைப் பகுத்துணர்ந்து அவற்றை பின்பற்றுவது ஒரு சட்ட தொகுப்பை பின்பற்றுவது போல அத்தனை சுலபமானதல்ல. நாம் அபூரணராக இருப்பதால், நியமங்களின் அடிப்படையில் சிந்திப்பதற்கு தேவையான முயற்சி எடுப்பதை தட்டிக் கழித்துவிடலாம். ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய கட்டத்தில் அல்லது என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கையில் இதைப் பற்றி திட்டவட்டமான சட்டம் நமக்கு இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நாம் யோசிக்கலாம். சில சமயங்களில் முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரர்—ஒருவேளை சபை மூப்பர்—அந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என நமக்குத் திட்டவட்டமாக சொல்லும்படி எதிர்பார்க்கலாம். ஆனால் பைபிளோ பைபிள் பிரசுரங்களோ அப்படியொரு திட்டவட்டமான சட்டத்தை கொடுக்காதிருக்கலாம். அப்படியே ஒரு சட்டமிருந்தாலும் அது எல்லா சந்தர்ப்பங்களுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாமல் போகலாம். இயேசுவிடம் ஒருவன் பின்வருமாறு கேட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்: “போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிட வேண்டும்.” உடன் பிறந்தவர்களுக்கிடையில் எழும் சண்டை சச்சரவுகளை தீர்ப்பதற்கு உடனடியாக ஒரு சட்டத்தைக் கொடுப்பதற்கு பதிலாக, இயேசு பொதுவான ஒரு நியமத்தை அவனுக்குச் சொன்னார்: “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.” இப்படியாக அப்போதும் இப்போதும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு வழிகாட்டும் குறிப்பை இயேசு அளித்தார்.—லூக்கா 12:13-15.
10. நியமங்களுக்கு இசைவாக நடப்பது எவ்வாறு நம் இருதயத்தின் நோக்கங்களை வெளிப்படுத்தும்?
10 ஒரு சிலர் தண்டனைக்குப் பயந்து விருப்பமில்லாமல் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அத்தகைய மனப்பான்மை நியமங்களை மதித்து நடப்பவர்களுக்கு இருக்காது. நியமங்களின் இயல்பே, அவற்றிற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களை இருதயப்பூர்வமாக கீழ்ப்படியும்படி தூண்டுவதுதான். சொல்லப்போனால், பெரும்பாலான நியமங்களைப் பொருத்தவரை, அவற்றிற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு உடனடியாக தண்டனை எதுவும் கிடைப்பதில்லை. எனவே, நாம் யெகோவாவுக்கு ஏன் கீழ்ப்படிகிறோம், உண்மையில் நம் இருதயத்தின் நோக்கமென்ன என்பதை வெளிப்படுத்துவதற்கு இது நமக்கு வாய்ப்பளிக்கிறது. போத்திபாரின் மனைவி ஒழுக்கயீனமான காரியத்தில் ஈடுபடுவதற்கு விடுத்த அழைப்புகளை யோசேப்பு ஏற்க மறுத்தது இதற்கு ஓர் உதாரணமாகும். அந்தச் சமயத்தில் விபசாரத்தை கண்டிக்கும் எந்த சட்டத்தையும் எழுத்துவடிவில் அப்போது யெகோவா கொடுக்கவில்லை, மாற்றானின் மனைவியோடு உறவாடினால் கடவுள் என்ன தண்டனை அளிப்பார் என்று சொல்லப்படவில்லை. ஆனால் கடவுளால் நிறுவப்பட்ட மண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்ற நியமங்களை யோசேப்பு தெளிவாக புரிந்துகொண்டிருந்தார். (ஆதியாகமம் 2:24; 12:18-20) இந்த நியமங்கள் அவர்மீது எந்தளவுக்கு பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை அவர் சொன்ன பதிலிலிருந்து நாம் அறிகிறோம்: “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி”?—ஆதியாகமம் 39:9.
11. என்ன விஷயங்களில் கிறிஸ்தவர்கள் யெகோவாவின் நியமங்களால் வழிநடத்தப்பட விரும்புகிறார்கள்?
11 நண்பர்கள், பொழுதுபோக்கு, இசை, புத்தகங்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பதில் இன்று கிறிஸ்தவர்கள் யெகோவாவின் நியமங்களால் வழிநடத்தப்படும்படி விரும்புகிறார்கள். (1 கொரிந்தியர் 15:33; பிலிப்பியர் 4:8) யெகோவாவையும் அவருடைய தராதரங்களையும் பற்றிய அறிவிலும் புரிந்துகொள்ளுதலிலும் போற்றுதலிலும் நாம் வளரும்போது, எந்தச் சூழ்நிலைமைகளை எதிர்ப்பட்டாலும் மிகவும் அந்தரங்கமான விஷயங்களிலும்கூட கடவுளுடைய நியமங்களைப் பின்பற்றுவதற்கு நம்முடைய ஒழுக்க உணர்வாகிய மனசாட்சி உதவும். பைபிள் நியமங்களுக்கு இசைவாக வழிநடத்தப்படுகையில், கடவுளுடைய சட்டங்களின்படி நடவாமல் தப்பித்துக்கொள்ள அவற்றில் ஏதேனும் ஓட்டைகள் இருக்கின்றனவா என்று நாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்; ஒரு சட்டத்தை மீறாமலேயே எந்தளவுக்கு செல்ல முடியும் என முயன்று பார்க்கிறவர்களை நாம் பின்பற்றவும் மாட்டோம். இப்படி யோசிப்பதால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதோடு அது தீங்கிழைக்கும் என்பதையும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம்.—யாக்கோபு 1:22-25.
12. கடவுளுடைய நியமங்களால் வழிநடத்தப்படுவதில் முக்கியமான காரியம் என்ன?
12 ஒரு விஷயத்தின் பேரில் யெகோவாவின் நோக்குநிலையை தெரிந்துகொள்ள விரும்புவதுதான் அவரது நியமங்களைப் பின்பற்றுவதற்கு தேவையான ஒன்று என்பதை முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். “கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்” என்று சங்கீதக்காரன் அறிவுறுத்துகிறார். (சங்கீதம் 97:10) கடவுள் தீமையானவையாக கருதும் சில காரியங்களை பட்டியலிடுகையில் நீதிமொழிகள் 6:16-19 இவ்வாறு கூறுகிறது: “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.” இதுபோன்ற அடிப்படை காரியங்களை யெகோவா சிந்திப்பதைப் போல சிந்திப்பதே நம் வாழ்வில் முக்கியமாக இருக்கும்போது எப்போதும் நியமங்களுக்கு இசைய வாழ்வதே நம் பழக்கமாகிவிடும்.—எரேமியா 22:16.
நல்ல உள்நோக்கம் அவசியம்
13. எப்படி சிந்திக்கும்படி மலைப் பிரசங்கத்தில் இயேசு வலியுறுத்தினார்?
13 பைபிள் நியமங்களை அறிந்து அதன்படி வாழ்வது, பெயரளவுக்கு செய்யப்படும் வெறுமையான வணக்கத்தின் கண்ணியிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. நியமங்களை பின்பற்றுவதற்கும் சட்டங்களுக்குக் கண்டிப்போடு கீழ்ப்படிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மலைப் பிரசங்கத்தில் இயேசு இதை தெளிவாக காட்டினார். (மத்தேயு 5:17-48) இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் யூதர்கள், ஆகவே அவர்களுடைய வாழ்க்கையை மோசேயின் நியாயப்பிரமாணம் கட்டுப்படுத்தியதை நினைவில் வைக்க வேண்டும். ஆனால் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உண்மையில் தவறாக புரிந்துகொண்டிருந்தார்கள். நியாயப்பிரமாணத்தின் சாராம்சத்திற்கு அல்ல ஆனால் அதன் வார்த்தைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவர்களுடைய பாரம்பரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடவுளுடைய உபதேசங்களுக்கு மேலாக அவற்றை வைத்தார்கள். (மத்தேயு 12:9-12; 15:1-9) இதனால், நியமங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்க பொதுவாக மக்கள் கற்பிக்கப்படவில்லை.
14. தாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் நியமங்களின் அடிப்படையில் சிந்திக்க இயேசு எவ்வாறு உதவினார்?
14 இதற்கு நேர் எதிர்மாறாக, இயேசு மலைப் பிரசங்கத்தில், ஒழுக்கம் சம்பந்தப்பட்ட ஐந்து விஷயங்களின் பேரில் நியமங்களைக் கொடுத்தார்: கோபம், திருமணமும் விவாகரத்தும், வாக்குறுதிகள், பழிவாங்குதல், அன்பும் பகையும். இந்த ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு நியமத்தைப் பின்பற்றுவது எவ்வளவு பிரயோஜனமுள்ளது என்பதை இயேசு காண்பித்தார். இவ்வாறு, தம்மை பின்பற்றுகிறவர்களின் ஒழுக்க தராதரங்களை இயேசு முன்னேற்றுவித்தார். உதாரணமாக, விபசாரம் என்ற விஷயத்தில் நம்முடைய செயல்களை மாத்திரமல்ல நம்முடைய யோசனைகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தும் ஒரு நியமத்தைக் கொடுத்தார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.”—மத்தேயு 5:28.
15. சட்டதிட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனப்போக்கை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
15 யெகோவா கொடுத்த நியமங்களின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பதை இந்த உதாரணம் விளக்குகிறது. வெளித் தோற்றத்திற்கு சடங்காச்சார செயல்களை செய்து கடவுளுடைய தயவை சம்பாதிக்க நாம் நிச்சயமாகவே முயலக்கூடாது. இது எவ்வளவு தவறானது என்பதை கடவுளுடைய இரக்கத்தையும் அன்பையும் சுட்டிக்காட்டுவதன் மூலம் இயேசு வெளிப்படுத்தினார். (மத்தேயு 12:7; லூக்கா 6:1-11) நாம் பைபிள் நியமங்களையே பின்பற்ற வேண்டும்; அவற்றை மிஞ்சும் விரிவான, கண்டிப்பான சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டு அவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். வணக்கத்தில் வெளித் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்பின் நியமத்திற்கும் தெய்வீக கீழ்ப்படிதலுக்குமே நாம் அதிக அக்கறை காட்டுவோம்.—லூக்கா 11:42.
சந்தோஷமான பலன்கள்
16. சில பைபிள் சட்டங்களுக்கு அடிப்படையாய் உள்ள நியமங்களுக்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
16 யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருக்க நாம் முயற்சி செய்கையில், அவருடைய முக்கியமான சட்டங்கள், நியமங்களின் அடிப்படையில் அமைந்தவை என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும். உதாரணமாக, கிறிஸ்தவர்கள் விக்கிரகாராதனையை, பாலியல் ஒழுக்கக்கேட்டை, இரத்தத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். (அப்போஸ்தலர் 15:28, 29) இந்த விஷயங்களில் கிறிஸ்தவர்களின் நிலைநிற்கைக்கு அடிப்படை என்ன? கடவுள் நம்முடைய தனிப்பட்ட பக்தியைப் பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்; நம்முடைய மணத் துணைக்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்; யெகோவா உயிரைக் கொடுத்தவர். (ஆதியாகமம் 2:24; யாத்திராகமம் 20:5; சங்கீதம் 36:9) அவற்றில் உட்பட்டிருக்கும் இந்த அடிப்படை நியமங்களைப் புரிந்துகொண்டுவிட்டால், அதோடு சம்பந்தப்பட்ட சட்டங்களை ஏற்றுக்கொள்வதும் பின்பற்றுவதும் நமக்கு சுலபமாகிவிடுகிறது.
17. பைபிள் நியமங்களை புரிந்துகொண்டு பின்பற்றுகையில் என்ன பலன்கள் கிடைக்கலாம்?
17 உட்பட்டிருக்கும் அடிப்படை நியமங்களைப் பகுத்துணர்ந்து அவற்றை பின்பற்றும்போது, அவை நம்முடைய நன்மைக்கானவை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். கடவுளுடைய ஜனங்கள் ஆன்மீக நன்மைகளை பெறுகையில் பெரும்பாலும் அவற்றோடு பிற நன்மைகளையும் அனுபவித்து மகிழ்கிறார்கள். உதாரணமாக, புகைபிடிக்காதிருப்பவர்கள், நெறிதவறாமல் வாழ்கிறவர்கள், இரத்தத்தின் புனிதத்தன்மையை மதிக்கிறவர்கள் சில நோய்களிலிருந்து தப்பிக்கொள்கிறார்கள். அதேவிதமாகவே, கடவுளுடைய சத்தியத்திற்கு இசைவாக வாழ்வது பொருளாதார, சமுதாய அல்லது குடும்ப ரீதியிலும் நமக்கு நன்மைகளைத் தருகிறது. இவ்வாறு காணக்கூடிய இந்த நன்மைகள், யெகோவாவின் தராதரங்கள் மதிப்புள்ளவை, நடைமுறை வாழ்க்கைக்கு பிரயோஜனமானவை என்பதை நிரூபிக்கின்றன. ஆனால் இதுபோன்று நடைமுறையில் பயனுள்ள நன்மைகள் கிடைப்பது மட்டுமே கடவுளுடைய நியமங்களை பின்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இல்லை. உண்மை கிறிஸ்தவர்கள், யெகோவாவை நேசிப்பதாலும் வணக்கத்தை பெற அவர் தகுந்தவர் என்பதாலும் அதுவே சரியான காரியம் என்பதாலும் அவருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 4:11.
18. கிறிஸ்தவர்களாக நாம் வெற்றி காண விரும்பினால், எது நம்முடைய வாழ்க்கையை வழிநடத்த வேண்டும்?
18 பைபிள் நியமங்கள் நம் வாழ்க்கையை வழிநடத்த நாம் அனுமதிக்கும்போது மிகவும் மேன்மையான வாழ்க்கை முறையை அவை அளிக்கின்றன. கடவுளுடைய வழியில் நடக்க இதுவே மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கலாம். அதிமுக்கியமாக நம்முடைய வாழ்க்கை முறை யெகோவாவை கனப்படுத்துவதாக இருக்கிறது. யெகோவா உண்மையிலே அன்புள்ள கடவுள், நமக்கு நன்மையானதையே விரும்புகிறவர் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். பைபிள் நியமங்களுக்கு ஏற்ப தீர்மானங்களைச் செய்து, யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கையில், நாம் அவரிடம் இன்னுமதிக நெருக்கத்தை உணருகிறோம். அப்போது நம் பரலோக தந்தையோடுள்ள நம் அன்பான உறவு பலப்படுகிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நியமம் என்றால் என்ன?
• நியமங்கள் எவ்வாறு சட்டங்களிலிருந்து வித்தியாசப்படுகின்றன?
• நியமங்களின் அடிப்படையில் சிந்திப்பதும் செயல்படுவதும் நமக்கு ஏன் பயனுள்ளது?
-[பக்கம் 20-ன் பெட்டி]
வில்சன் கானாவில் வாழும் கிறிஸ்தவர். அவர் இன்னும் சில தினங்களில் வேலையிலிருந்து நீக்கப்படுவார் என்ற நோட்டீஸை பெற்றார். அன்று கடைசி நாளாக வேலைக்கு வந்திருந்தார். கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருக்கு சொந்தமான காரை கழுவும் வேலை அவருக்கு கொடுக்கப்பட்டது. காரில் பணம் இருந்தது, அன்றோடு அவர் வேலையை இழக்கப்போவதால், கடவுளே பார்த்து இந்தப் பணத்தை அவருக்குத் தந்திருப்பதாக அவருடைய மேலதிகாரி சொன்னார். ஆனால், நேர்மையாக இருக்க வேண்டும் என்ற பைபிள் நியமத்தை பின்பற்றுகிற வில்சன் அந்தப் பணத்தை டைரக்டரிடம் திரும்ப கொடுத்துவிட்டார். டைரக்டருக்கு ஒரே ஆச்சரியம், அவருடைய இதயத்தில் வில்சன் இடம் பிடித்துவிட்டார். உடனடியாக டைரக்டர் அவருக்கு நிரந்தரமாக வேலை போட்டு கொடுத்ததோடு கம்பெனியில் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக பதவி உயர்வும் அளித்தார்.—எபேசியர் 4:28.
[பக்கம் 21-ன் பெட்டி]
ரூக்கீயா அல்பேனியா நாட்டை சேர்ந்தவர், 60 வயதுக்கு மேல் ஆகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சண்டையால் தன் அண்ணனோடு 17 வருடங்களுக்கும் மேலாக பேசாமலே இருந்தார். அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தார். உண்மை கிறிஸ்தவர்கள் மனதுக்குள் பகையை வைத்திராமல் மற்றவர்களோடு சமாதானமாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டார். இரவு முழுவதும் ஜெபம் செய்துவிட்டு அவருடைய அண்ணன் வீட்டுக்குச் செல்லும்போது இருதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. அண்ணன் மகள் கதவை திறந்தாள். ஆச்சரியத்தோடு ரூக்கீயாவைப் பார்த்து, “யார் மண்டையை போட்டுவிட்டார், இங்கே உங்களுக்குகென்ன வேலை?” என்று கேட்டாள். ரூக்கீயா தன் அண்ணனை பார்க்க வந்திருப்பதாக சொன்னார். பைபிள் நியமங்களையும் யெகோவாவையும் பற்றி கற்றுக்கொண்டதால், தன் அண்ணனோடு சமாதானம் பண்ணிக்கொள்ள தூண்டப்பட்டதாக அவர் அமைதியாக விளக்கினார். ஆனந்த கண்ணீரோடு ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு அவர்கள் மீண்டும் ஒன்றுகூடிய அந்த விசேஷமான சம்பவத்தைக் கொண்டாடினார்கள்.—ரோமர் 12:17, 18.
[பக்கம் 23-ன் படக்குறிப்பு]
[பக்கம் 23-ன் படக்குறிப்பு]
[பக்கம் 23-ன் படக்குறிப்பு]
[பக்கம் 23-ன் படக்குறிப்பு]
“அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்[னார்].”—மத்தேயு 5:1, 2