கடவுள் தரும் நெறிகள் உங்கள் நன்மைக்கு
விலங்கினங்கள் இயல்புணர்ச்சியால் இயங்குவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அநேக இயந்திரங்கள் கட்டளைகளுக்கு கட்டுப்படும்படி வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் மனிதர்களோ நெறிகளால் வழிநடத்தப்படும்படி படைக்கப்பட்டுள்ளனர். இதை நீங்கள் எவ்வாறு உறுதியாக நம்பலாம்? சரி, நீதியான நெறிகள் அனைத்திற்கும் காரணகர்த்தாவாகிய யெகோவா முதன்முதல் மனிதர்களை படைத்தபோது என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்று சொன்னார். படைப்பாளர் ஆவியாக இருக்கிறார்; நம்மைப் போல அவருக்கு மாம்ச உடல் கிடையாது. ஆகவே நாம் அவருடைய ‘சாயலில்’ படைக்கப்பட்டிருப்பது, நாம் அவருடைய சிறந்த பண்புகளை ஓரளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிக்க முடியும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. நெறிகளுக்கு இசைவாக, அதாவது தனி மனித ஒழுக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட விதி என தாங்கள் நினைப்பதற்கு இசைவாக, தங்களுடைய வாழ்க்கையை வழிநடத்தும் திறமை மனிதர்களுக்கு இருக்கிறது. இந்த நெறிகளில் பலவற்றை யெகோவா தம்முடைய வார்த்தையில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.—ஆதியாகமம் 1:26; யோவான் 4:24; 17:17.
‘ஆனால் பைபிளில் நூற்றுக்கணக்கான நெறிகள் இருக்கிறதே. அவற்றையெல்லாம் அறிந்துகொள்வது என்னால் முடியாத காரியம்’ என ஒருவர் சொல்லலாம். உண்மைதான். ஆனால் இதை சற்று சிந்தித்துப் பாருங்கள்: கடவுள் தந்த நெறிகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருக்கிறபோதிலும், அவற்றில் சில மற்றவற்றைவிட மிகவும் முக்கியமானவை. அதை நீங்கள் மத்தேயு 22:37-39-ல் காணலாம், மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகள் மற்றும் அவற்றிற்கொத்த நெறிகளில் சில மிகவும் முக்கியமானவை என்பதை இயேசு காட்டினார்.
எவையெல்லாம் மிக முக்கியமான நெறிகள்? யெகோவாவுடன் நம்முடைய உறவை நேரடியாக பாதிப்பவை எல்லாம் பைபிளின் முக்கியமான நெறிகள். இவற்றிற்கு நாம் செவிசாய்த்தால், படைப்பாளரே நம்முடைய ஒழுக்கநெறி திசைமானியை கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பார். அதைத் தவிர, மற்றவர்களோடு நம்முடைய உறவை பாதிக்கும் நெறிகளும் இருக்கின்றன. இவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது ‘மீயிஸ’த்தை, அல்லது அது வேறெந்த முறையில் அழைக்கப்பட்டாலும்சரி, தடுத்து நிறுத்துவதற்கு நமக்கு உதவும்.
பைபிளில் உள்ள மிக முக்கியமான சத்தியங்களில் ஒன்றை முதலில் நாம் பார்க்கலாம், அந்த சத்தியம் என்ன, அது நம்மை எவ்வாறு பாதிக்கிறது?
“பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்”
யெகோவாவே மகத்தான சிருஷ்டிகர், சர்வ வல்லவர் என்பதை பரிசுத்த வேதாகமம் தெளிவாக கூறுகிறது. அவரை ஒருபோதும் எவற்றோடும் ஒப்பிட முடியாது, அவருக்கு பதிலாக வேறொருவரை மாற்றீடு செய்யவும் முடியாது. இதுவே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான சத்தியம்.—ஆதியாகமம் 17:1; பிரசங்கி 12:1; NW.
யெகோவாவைப் பற்றி சங்கீத புத்தகத்தின் எழுத்தாளர்களில் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “[நீர்] ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.” பூர்வகாலத்தில் வாழ்ந்த ராஜாவாகிய தாவீது இவ்வாறு சொன்னார்: “[யெகோவாவே] ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.” பிரபலமான தீர்க்கதரிசியாகிய எரேமியா இவ்வாறு எழுதுவதற்குத் தூண்டப்பட்டார்: “[யெகோவாவே,] உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.”—சங்கீதம் 83:17; 1 நாளாகமம் 29:11; எரேமியா 10:6.
கடவுளைப் பற்றிய இந்த உண்மைகளை அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி பின்பற்ற வேண்டும்?
நம்முடைய வாழ்க்கையில் யாருக்கு உண்மையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்—உயிரளித்தவராகிய நமது சிருஷ்டிகருக்கே—என்பது தெளிவாக தெரிகிறது. அப்படியானால், நம்மீது கவனத்தை ஈர்ப்பதற்கு துடிக்கும் எந்தவொரு ஆசையையும்—மற்றவர்களைவிட சிலரிடத்தில் அதிக செல்வாக்கு செலுத்துகிற ஓர் ஆசையை—கட்டுப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் அல்லவா? “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்”வதே ஞானமுள்ள வழிகாட்டு நெறி. (1 கொரிந்தியர் 10:31) இதன் சம்பந்தமாக தீர்க்கதரிசியாகிய தானியேல் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார்.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கண்ட கனவு ஒன்று அவரை மிகவும் அலைக்கழித்தது, அதனால் அதற்குரிய அர்த்தத்தை சொல்லும்படி அவர் கட்டளை பிறப்பித்தார் என சரித்திர பதிவு நமக்கு சொல்கிறது. இதற்குரிய அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதற்கு எல்லாரும் திணறிக்கொண்டிருக்கையில், தானியேலோ ராஜா அறிந்துகொள்ள விரும்பியதை துல்லியமாக அவருக்குச் சொன்னார். இதற்குரிய புகழை தானியேல் தனக்கு எடுத்துக்கொண்டாரா? இல்லை, ‘மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவனுக்கே’ அதற்குரிய புகழை சமர்ப்பித்தார். ‘இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது . . . உயிரோடிருக்கிற எல்லாரைப் பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல’ என தானியேல் கூறினார். தானியேல் நெறிப்படி வாழ்ந்த ஒரு மனிதர். கடவுளுடைய பார்வையில் “மிகவும் பிரியமானவர்” என தானியேல் புத்தகத்தில் அவர் மூன்று முறை வர்ணிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.—தானியேல் 2:28, 30; 9:23; 10:11, 19, NW.
தானியேலின் முன்மாதிரியைப் பின்பற்றும்போது நீங்களும் பயனடைவீர்கள். தானியேலுடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதில் முக்கிய காரணியாக இருப்பது உள்நோக்கமே. நீங்கள் செய்யும் காரியத்திற்காக யாரை கௌரவிக்க வேண்டும்? உங்களுடைய சூழ்நிலை என்னவாக இருந்தாலும், யெகோவாவே உன்னத பேரரசர் என்ற மிகவும் இன்றியமையாத இந்த பைபிள் நெறிக்கு இசைவாக செயல்படும் திறமை உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் அப்படி செய்தால் அவருடைய பார்வையில் ‘மிகவும் பிரியமானவராக’ ஆவீர்கள்.
மானிட உறவுகள் சம்பந்தமாக நம்மை வழிநடத்தக்கூடிய இரண்டு நெறிகளை இப்பொழுது நாம் ஆராயலாம். இன்றைய உலகில் ஒருவர் தனக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு பரவி வருவதால், வாழ்க்கையில் இந்த அம்சம் பெரும் சவாலாக இருக்கிறது.
“மனத்தாழ்மையினாலே”
தங்களை முதலிடத்தில் வைக்கிறவர்கள் திருப்தியை கண்டடைவது அபூர்வமே. பெரும்பாலானோர் மேன்மேலும் மேம்பட்ட வாழ்க்கையையே அடையத் துடிக்கின்றனர். அதுவும் அதை இப்பொழுதே அடையத் துடிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை மனத்தாழ்மை என்பது பலவீனத்தின் அறிகுறியாக தெரிகிறது. பொறுமை என்பது மற்றவர்கள் மட்டுமே காண்பிக்க வேண்டிய ஒன்று என அவர்கள் நினைக்கின்றனர். பிரபலம் அடைவதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்ய துணிகின்றனர். இப்படிப்பட்ட நடத்தைக்கு உங்களிடம் ஏதாவது பரிகாரம் இருப்பதாக நினைக்கிறீர்களா?
கடவுளுடைய ஊழியர்கள் இப்படிப்பட்ட மனப்பான்மை கொண்ட ஆட்களை அன்றாடம் எதிர்ப்படுகின்றனர். ஆனால் அது தங்களை பாதிக்க அனுமதிக்கக் கூடாது. “தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் [“யெகோவாவால்,” NW] புகழப்படுகிறவனே உத்தமன்” என்ற நெறியை முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.—2 கொரிந்தியர் 10:18.
பிலிப்பியர் 2:3, 4-ல் கொடுக்கப்பட்டுள்ள நெறியை பின்பற்றுவது உதவியாக இருக்கும். “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” என அந்த வசனம் உங்களை உற்சாகப்படுத்துகிறது. இவ்வாறு, நீங்கள் “தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்கு”வீர்கள்.
பூர்வகால எபிரெயர்களுக்கு நியாயாதிபதியாக இருந்தவர்தான் கிதியோன்; இவர் தன்னைப் பற்றி சரியான மனப்பான்மையை வைத்திருந்தவர், தன்னுடைய மதிப்பை சரியாக எடைபோட்டவர். அவர் இஸ்ரவேலின் தலைவர் பதவியை நாடிச் செல்லவில்லை. ஆனால் அந்த ஸ்தானத்திற்கு நியமிக்கப்பட்டபோது, அதற்குத் தான் தகுதியற்றவன் என சுட்டிக்காட்டினார். “மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” என்று சொன்னார்.—நியாயாதிபதிகள் 6:12-16.
மேலும், கிதியோனுக்கு யெகோவா வெற்றி தேடித் தந்த பிறகு, எப்ராயீம் ஆட்கள் அவரோடு வாக்குவாதம் பண்ண ஆரம்பித்தார்கள். அப்போது கிதியோன் அதற்கு எப்படி பிரதிபலித்தார்? வெற்றி பெற்றுவிட்டதால் தலைகனம் பிடித்தவராக மாறிவிட்டாரா? இல்லை, “நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம்” என்று சாந்தத்தோடு பேசுவதன் மூலம் பேரழிவை தவிர்த்தார். கிதியோன் தாழ்ந்த சிந்தையுடையவராக விளங்கினார்.—நியாயாதிபதிகள் 8:1-3.
கிதியோனைப் பற்றிய இந்தச் சம்பவம் பல காலங்களுக்கு முன்பு நிகழ்ந்தது என்பது உண்மைதான். இருந்தாலும், அந்த விவரப்பதிவை சிந்தித்துப் பார்ப்பதில் அதிக பயன் இருக்கிறது. இன்று பொதுவாக காணப்படும் மனப்பான்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மனப்பான்மையை கிதியோன் காண்பித்ததையும், அவர் அதற்கு இசைவாக வாழ்ந்து பயனடைந்ததையும் நீங்கள் காணலாம்.
ஒருவர் தனக்கே முக்கியத்துவம் செலுத்துகிற மனப்பான்மை காட்டுத்தீ போல பரவி வருவதால், நம்முடைய சுயமதிப்பைக் குறித்து நாம் எப்படி எண்ணுகிறோம் என்பதையும் பாதிக்கலாம். ஆனால் பைபிள் நெறிகள் அப்படிப்பட்ட பாதிப்பை சரிப்படுத்த உதவுகின்றன; எப்படியெனில், படைப்பாளரோடும் மற்றவர்களோடும் ஒப்பிடுகையில் நம்முடைய உண்மையான மதிப்பு என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள நமக்கு கற்பிக்கின்றன.
பைபிள் நெறிகளுக்கு செவிசாய்ப்பதன் மூலம் ‘மீயிஸம்’ என்ற இந்த உலகத்தின் போக்கை உதறித் தள்ளுகிறோம். நாம் இனிமேலும் இப்படிப்பட்ட உணர்ச்சிகளாலோ குணங்களாலோ அலைக்கழிக்கப்படுவதில்லை. நாம் எந்தளவுக்கு நீதியான தராதரங்களைக் கற்றுக்கொள்கிறோமோ அந்தளவுக்கு அவற்றின் காரணகர்த்தாவோடு அதிக நெருக்கமானவர்களாக ஆகிறோம். ஆம், பைபிளை வாசிக்கும்போது கடவுள் தரும் நெறிகளுக்கு விசேஷ கவனம் செலுத்துவது மிகுந்த பயனளிக்கும்.—பெட்டியைக் காண்க.
முக்கியமாக இயல்புணர்ச்சிக்கு மாத்திரமே கட்டுப்படும் மிருகங்களைப் போல் அல்லாமல் மனிதர்களை யெகோவா மேம்பட்டவர்களாக படைத்திருக்கிறார். கடவுளுடைய சித்தத்தைப் பின்பற்றுவது அவருடைய நெறிகளை வாழ்க்கையில் பின்பற்றுவதை உட்படுத்துகிறது. இவ்வாறு, நம்முடைய ஒழுக்கநெறி திசைமானியை நாம் நல்ல நிலையில் வைத்துக்கொள்ள முடியும், இந்த திசைமானியே கடவுள் ஸ்தாபிக்கப்போகும் புதிய உலகிற்குள் நம்மை வழிநடத்திச் செல்லும். “நீதி வாசமாயிருக்கும்” ஓர் உலகளாவிய புதிய ஒழுங்குமுறை விரைவில் வரப்போவதை எதிர்நோக்கியிருப்பதற்குரிய காரணத்தை பைபிள் நமக்குத் தருகிறது.—2 பேதுரு 3:13.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
இதோ, முத்தான சில பைபிள் நெறிகள்
குடும்பத்தில்:
“ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.”—1 கொரிந்தியர் 10:24.
“அன்பு . . . தன்னலம் நாடாது.”—1 கொரிந்தியர் 13:4, 5, பொ.மொ.
“உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்.”—எபேசியர் 5:33.
“மனைவிகளே, . . . உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.”—கொலோசெயர் 3:18.
“உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே.”—நீதிமொழிகள் 23:22.
பள்ளியில், வேலை செய்யுமிடத்தில், அல்லது வியாபார ஸ்தலத்தில்:
“கள்ளத் தராசு கர்த்தருக்கு அருவருப்பானது. . . . பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல.”—நீதிமொழிகள் 11:1, 18; பொ.மொ.
“திருடர் இனித் திருடாமல் இருக்கட்டும். . . . தாங்களே தங்கள் கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.”—எபேசியர் 4:28, பொ.மொ.
‘ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.’—2 தெசலோனிக்கேயர் 3:10.
‘நீங்கள் எதைச் செய்தாலும், யெகோவாவுக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.’—கொலோசெயர் 3:23.
‘நாங்கள் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோம்.’—எபிரெயர் 13:18.
செல்வத்தைப் பற்றிய மனநிலை:
“பணம் சம்பாதிக்க துடிக்கிறவன் மாசற்றவனாக நிலைத்திருக்க மாட்டான்.”—நீதிமொழிகள் 28:20, NW.
“பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை.”—பிரசங்கி 5:10.
சுயமரியாதையை எடைபோடுதல்:
“தற்புகழை நாடுவதும் புகழல்ல.”—நீதிமொழிகள் 25:27.
“உன்னை உன்னுடைய வாயல்ல, மற்றவர்களுடைய வாய் புகழட்டும்.”—நீதிமொழிகள் 27:2, பொ.மொ.
‘நான் சொல்லுகிறதாவது: உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் இருக்கக்கடவன்.’—ரோமர் 12:3.
“ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.”—கலாத்தியர் 6:3.
[பக்கம் 5-ன் படம்]
தானியேல் கடவுளுக்குரிய புகழை அவருக்கே சமர்ப்பித்தார்
[பக்கம் 7-ன் படம்]
கடவுள் தரும் நெறிகளுக்கு ஏற்ப பிறரை நடத்துவது இனிய உறவுகளுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிநடத்துகிறது
[பக்கம் 7-ன் படத்திற்கான நன்றி]
U.S. Fish & Wildlife Service, Washington, D.C./Robert Bridges