எப்படி பதிலளிக்க வேண்டுமென அறிதல்
சில கேள்விகள் பனிப்பாறைகளைப் போன்றவை. பனிப்பாறையின் பெரும்பகுதி தண்ணீருக்கு அடியில்தான் மறைந்திருக்கிறது. அதேபோல் கேள்விக்கு அடிப்படையாக அமைந்துள்ள விஷயமே பெரும்பாலும் கேள்வியைவிட முக்கியமானது.
கேள்வி கேட்பவர் பதிலைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினாலும், எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்; எவ்வளவு விரிவாக, எந்தக் கோணத்தில் பதிலளிக்க வேண்டும் என பகுத்தறிவது இதில் உட்பட்டிருக்கிறது. (யோவா. 16:12) இயேசு தம் அப்போஸ்தலர்களுக்கு சுட்டிக்காட்டியபடி, சிலர் தங்களுக்கு தெரிந்துகொள்ள உரிமையில்லாத விஷயத்தை அல்லது தங்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கப்போகாத விஷயத்தை சில சமயங்களில் கேட்கலாம்.—அப். 1:6, 7.
வேதவசனம் நமக்கு இப்படி ஆலோசனை வழங்குகிறது: “உங்கள் பேச்சு எப்போதும் இனிதாகவும், உப்பால் சாரமேறினதாகவும் இருக்கட்டும். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் எப்படி பதிலளிக்க வேண்டுமென அறிந்துகொள்வீர்கள்.” (கொலோ. 4:6, NW) ஆகவே, பதிலளிப்பதற்கு முன், என்ன சொல்லப் போகிறோம் என்பதை மட்டுமல்ல எப்படி சொல்லப் போகிறோம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கேள்வி கேட்பவரின் கண்ணோட்டத்தை கண்டுணர்தல்
சதுசேயர்கள், பலமுறை மணம் செய்த பெண்ணின் உயிர்த்தெழுதலைக் குறித்து ஒரு கேள்வியைக் கேட்டு இயேசுவை சிக்க வைக்க முயன்றனர். இருந்தாலும் அவர்கள் உண்மையில் உயிர்த்தெழுதலை நம்பாததை இயேசு அறிந்திருந்தார். ஆகவே அந்தக் கேள்விக்கு அடிப்படை காரணமாகிய அவர்களது தவறான கண்ணோட்டத்தை சரிசெய்யும் விதத்தில் அதற்கு பதிலளித்தார். அவர்களுக்குப் பழக்கமான வேதப்பூர்வ பதிவை பயன்படுத்தி, மிகத் திறமையாக நியாயங்காட்டிப் பேசி, அதுவரை அவர்கள் கவனம் செலுத்தியிராத ஒன்றை இயேசு சுட்டிக்காட்டினார். அதாவது, இறந்தவர்களை கடவுள் நிச்சயம் உயிர்த்தெழுப்புவார் என்பதற்கான தெளிவான அத்தாட்சியை சுட்டிக்காட்டினார். அவரது பதிலைக் கேட்டு விரோதிகள் அந்தளவு வியந்ததால், அதற்குப் பின்பு வேறெந்த கேள்வியையும் கேட்க துணியவில்லை.—லூக். 20:27-40.
எப்படி பதிலளிக்க வேண்டுமென தெரிந்துகொள்வதற்கு, கேள்வி கேட்போரின் எண்ணங்களையும் அக்கறைகளையும் அதேவிதமாக நீங்கள் கண்டுணர வேண்டும். உதாரணத்திற்கு, உங்களுடன் படிப்பவர் அல்லது வேலைசெய்பவர் நீங்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை என கேட்கலாம். அவர் ஏன் கேட்கிறார்? உண்மையிலேயே காரணத்தை அறிய விரும்புகிறாரா அல்லது ஜாலியாக பொழுதை போக்க உங்களுக்கு அனுமதி இருக்கிறதா என்று மட்டும் அறிய விரும்புகிறாரா? இவற்றை தெரிந்துகொள்ள, எதனால் இப்படி கேட்கிறார் என நீங்கள் கேட்கலாம். பிறகு அவரது பதிலுக்கு ஏற்றவாறு நீங்கள் பதிலளிக்கலாம். பைபிள் அறிவுரையை பின்பற்றுவது, மக்களுக்கு விரக்தியளிப்பதாகவும் சுமையாகவும் ஆகிவிட்டிருக்கும் அந்தப் பண்டிகையின் சில அம்சங்களிலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கிறது என்பதை காட்டவும் அவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒருவேளை யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி மாணவர்களுக்கு முன் பேசுவதற்கு நீங்கள் அழைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் பேசி முடித்தவுடன் அவர்கள் கேள்விகளைக் கேட்கலாம். அவர்கள் உண்மையான ஆர்வத்துடன் நேரடியான கேள்விகளைக் கேட்டால், நேரடியான எளிய பதில்களைத் தருவது சிறந்தது. ஆனால் கேள்விகளில் சமுதாய தப்பெண்ணங்கள் வெளிப்பட்டால், பதில் சொல்வதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் தெளிவுபடுத்துவது அதிக நன்மையளிக்கும்; இப்பிரச்சினைகளின் பேரிலான பிரபல கருத்துக்களுக்கு அடிப்படையாக உள்ள காரணங்களைப் பற்றியும் யெகோவாவின் சாட்சிகள் ஏன் பைபிள் தராதரங்களைப் பின்பற்ற விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியும் சுருக்கமாக விளக்கலாம். அப்படிப்பட்ட கேள்விகளை தொல்லையாக கருதாமல்—தொல்லைதரும் விதமாக கேட்கப்பட்டாலும்—கேள்வி கேட்போரின் அக்கறைக்குரிய விஷயங்களாக கருதுவது பயனளிக்கும். அப்போது, நீங்கள் தரும் பதில் கேட்பவர்களின் கண்ணோட்டத்தை பரந்ததாக்கும், உண்மையான தகவலை வழங்கும், நம் நம்பிக்கைகளுக்கான வேதப்பூர்வ அடிப்படையை விளக்கும்.
மாநாட்டில் கலந்துகொள்வதற்கு லீவு தர மறுக்கும் முதலாளியிடம் எப்படி பேசுவீர்கள்? முதலில், அவரது கண்ணோட்டத்திலிருந்து காரியங்களை பாருங்கள். இன்னொரு சமயத்தில் கூடுதலான நேரம் வேலை செய்வதாக சொல்வது உதவியாக இருக்குமா? நம் மாநாடுகளில் வழங்கப்படும் அறிவுரை, நேர்மையான நம்பத்தக்க பணியாட்களாக இருக்க நமக்கு உதவுவதை விளக்கினால் அவர் மனம் இளகுமா? அவருக்கு எவை முக்கியமாக தோன்றுகின்றனவோ அவற்றை கருத்தில் கொள்வதாக நீங்கள் காட்டும்போது, உங்கள் வாழ்க்கையில் முக்கியமாக தோன்றுபவற்றிற்கு அவரும் ஒருவேளை சலுகை காட்டலாம். ஆனால் நேர்மையற்ற ஒன்றை செய்யுமாறு அவர் உங்களிடம் சொன்னால்? கண்டிப்பாக முடியாது என தெள்ளத்தெளிவாக சொல்லி, வேதவசனங்களிலிருந்து அது சம்பந்தப்பட்ட கருத்தை எடுத்துக்காட்டுவது உங்கள் நிலைநிற்கையை தெரியப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், அவருக்காக பொய் சொல்ல அல்லது திருட முன்வரும் நபர் அவரிடமே பொய் சொல்ல அல்லது திருட அதிக காலம் எடுக்காது என முதலில் அவரிடம் நியாயங்காட்டி பேசுவது இன்னுமதிக நன்மையளிக்கும் அல்லவா?
ஒருவேளை, பள்ளியில் வேதப்பூர்வமற்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ள விருப்பமில்லாத மாணவராக நீங்கள் இருக்கலாம். ஆசிரியர் உங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்ளாதவராக இருக்கலாம், வகுப்பில் ஒழுங்கை காப்பதும் அவரது கடமையாக இருக்கலாம் என்பவற்றை நினைவில் வையுங்கள். இப்போது உங்கள் முன் உள்ள சவால்கள்: (1) ஆசிரியரின் அக்கறைக்குரிய விஷயத்தை கவனத்தில் வைப்பது, (2) உங்கள் நிலைநிற்கையை மரியாதையுடன் விளக்குவது, (3) யெகோவாவிற்கு பிரியமானதென நீங்கள் அறிந்திருப்பதில் உறுதியாக இருப்பது. சிறந்த பயனைப் பெற, உங்கள் நம்பிக்கையை எளிய வார்த்தைகளில் நேரடியாக சொல்வது போதாது. (நீதி. 15:28) உங்களுக்கு சிறுவயது என்றால், என்ன சொல்வதென்று தயாரிப்பதற்கு உங்கள் அப்பாவோ அம்மாவோ உதவுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சிலசமயங்களில், அதிகாரத்திலுள்ள ஒருவர் உங்கள்மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டை நீங்கள் தவறென நிரூபிக்க வேண்டியிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட சட்டத்திற்குக் கீழ்ப்படிவது, உங்கள் கிறிஸ்தவ நடுநிலைமை, அல்லது தேசாபிமான கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு ஒரு போலீஸ் அதிகாரி, அரசாங்க அதிகாரி, அல்லது நீதிபதி உங்களுக்கு உத்தரவிடலாம். நீங்கள் எப்படி பதிலளிக்க வேண்டும்? “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” பதிலளிக்க வேண்டுமென பைபிள் ஆலோசனை தருகிறது. (1 பே. 3:15, NW) மேலும், என்ன காரணத்தால் இந்த பிரச்சினைகள் அவர்களுக்கு அக்கறைக்குரியவையாக இருக்கின்றன என உங்களையே கேட்டுக்கொண்டு, அந்த காரணத்தை மரியாதையோடு ஒத்துக்கொள்ளுங்கள். பிறகு என்ன செய்ய வேண்டும்? அப்போஸ்தலனாகிய பவுல் ரோம சட்ட உரிமைகளை சுட்டிக்காட்டி பேசினார், ஆகவே உங்கள் விஷயத்திற்கு பொருந்தும் சட்ட உரிமைகளை நீங்களும் சுட்டிக்காட்டலாம். (அப். 22:25-29) ஆரம்பகால கிறிஸ்தவர்களும் உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகளும் எடுத்த நிலைநிற்கை பற்றிய உண்மைகளை சொல்வது ஒருவேளை அதிகாரியின் கண்ணோட்டத்தை பரந்ததாக்கலாம். அல்லது, கடவுளுடைய அதிகாரத்தை மதித்துணருவது எவ்வாறு மனித சட்டங்களுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் இன்னும் முழுமையாக கீழ்ப்படிய மக்களைத் தூண்டுகிறது என நீங்கள் சுட்டிக்காட்டலாம். (ரோ. 13:1-14) இப்படிப்பட்ட தகவலையெல்லாம் அளித்த பிறகு, உங்கள் நிலைநிற்கைக்கான வேதப்பூர்வ காரணங்களைச் சொன்னால் அது நியாயமானதாக ஏற்றுக்கொள்ளப்படலாம்.
கேள்வி கேட்பவர் வேதவசனங்களை கருதும் விதம்
எப்படி பதிலளிப்பதென தீர்மானிக்கையில், கேள்வி கேட்பவர் பைபிளை மதிக்கிறாரா இல்லையா என்பதை நீங்கள் நினைவில் வைப்பது அவசியம். உயிர்த்தெழுதலைப் பற்றி சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது இயேசு இதைத்தான் செய்தார். மோசேயின் புத்தகங்களை மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அறிந்த இயேசு, ஐந்தாகமத்தில் அடங்கியிருந்த பதிவை நியாயங்காட்டி விளக்கினார்; “அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் . . . காண்பித்திருக்கிறார்” என சொல்லியே துவங்கினார். (லூக். 20:37) கேட்பவருக்குத் தெரிந்த வசனங்களை அவர் ஏற்றுக்கொள்ளும் பைபிள் பகுதிகளிலிருந்து எடுத்துக் கூறுவது பிரயோஜனமளிப்பதை நீங்களும் காண்பீர்கள்.
கேட்பவர், பைபிளை ஏற்றுக்கொள்ளாதவர் என்றால் என்ன செய்வது? அப்போஸ்தலனாகிய பவுல் மார்ஸ் மேடையில் கொடுத்த பேச்சில் என்ன செய்தார் என்பதை அப்போஸ்தலர் 17:22-31-ல் கவனியுங்கள். பைபிளிலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டாமலே வேதப்பூர்வ சத்தியங்களை அவர் எடுத்துச் சொன்னார். தேவைப்படும்போது நீங்களும் அப்படியே செய்யலாம். சில இடங்களில், ஒரு நபரோடு இப்படி பல முறை கலந்துரையாடிய பிறகுதான் பைபிளிலிருந்து நேரடியாக மேற்கோள் காட்ட முடியும். பைபிளை அறிமுகப்படுத்தும்போது, அது கடவுளுடைய வார்த்தை என எடுத்தவுடனேயே உறுதியாக சொல்லிவிடுவதற்கு பதிலாக, அதற்கு கவனம் செலுத்துவது ஏன் தகுதியானது என்பதற்கான காரணங்கள் சிலவற்றை முதலில் சொல்வது புத்திசாலித்தனமானது. என்றாலும், கடவுளுடைய நோக்கத்தைக் குறித்து தெளிவான அத்தாட்சி அளிப்பதும், பைபிள் சொல்வதை அந்நபரே காலப்போக்கில் காணும்படி செய்வதும்தான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். நாம் சொந்தமாக சொல்லும் எதையும்விட பைபிளே இருதயத்தைத் தூண்ட வல்லது.—எபி. 4:12.
“எப்போதும் இனிதாக”
யெகோவாவே இனியவராயிருக்க, அவரது ஊழியர்களின் பேச்சு “எப்போதும் இனிதாகவும், உப்பால் சாரமேறினதாகவும்” இருக்க வேண்டுமென சொல்லப்படுவது எவ்வளவு பொருத்தமானது! (கொலோ. 4:6; யாத். 34:6; NW) அப்படியென்றால் நாம் கனிவோடு பேசுவது அவசியம்; கேட்பவர் அந்தக் கனிவிற்கு தகுதியற்றவர் என தோன்றினாலும் அவ்வாறு பேச வேண்டும். நம் பேச்சு சுவையானதாக இருக்க வேண்டும், கடுமையாகவோ சாதுரியமில்லாமலோ இருக்கக் கூடாது.
அநேகர் பயங்கரமான அழுத்தத்தின்கீழ் இருக்கிறார்கள், தினமும் மோசமான வார்த்தைகளால் ஏசப்படுகிறார்கள். ஆகவே நாம் இவர்களை சந்திக்கும்போது இவர்கள் நம்மிடம் எரிந்து விழலாம். நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? “கனிவான மறுமொழி கடுஞ் சினத்தையும் ஆற்றிவிடும்” என பைபிள் சொல்கிறது. இப்படிப்பட்ட பதில், கொதித்து எழுபவரையும் தணிந்துபோகச் செய்யும். (நீதி. 15:1, பொ.மொ.; 25:15) அனுதினமும் கடுகடுப்பான சூழலில் காலம்தள்ளும் மக்களிடம் அன்பாக பேசி அவர்களை நேசத்தோடு நடத்தும்போது நம்மிடம் சுண்டியிழுக்கப்படுவார்கள்; இதனால் நாம் சொல்லும் நற்செய்தியை கேட்கும்படியும் தூண்டப்படுவார்கள்.
சத்தியத்தை மதிக்காத நபர்களோடு வாதாடுவதில் நமக்கு இஷ்டம் இல்லை. மாறாக, விருப்பமுள்ளவர்களிடம் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவதே நம் ஆவல். நாம் என்ன சூழ்நிலையை எதிர்ப்பட்டாலும், கனிவோடும் கடவுளுடைய மதிப்புமிக்க வாக்குறுதிகள் நம்பத்தக்கவை என்ற உறுதியோடும் பதிலளிக்க வேண்டும் என்பதை நினைவில் வைக்கிறோம்.—1 தெ. 1:5.
தனிப்பட்ட தீர்மானங்களும் மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களும்
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்வதென பைபிள் மாணாக்கரோ உடன் கிறிஸ்தவரோ உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? அவர்கள் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் செய்யும் தீர்மானங்களுக்கு அவரவரே பொறுப்பை ஏற்க வேண்டும். (கலா. 6:5) “விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு” அப்போஸ்தலனாகிய பவுல் தான் பிரசங்கித்தவர்களை உற்சாகப்படுத்தியதாக விளக்கினார். (ரோ. 16:25) அவரை நாம் பின்பற்றுவது சாலச் சிறந்தது. பைபிள் படிப்பு நடத்துபவரை அல்லது வேறொருவரை பிரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தீர்மானங்கள் எடுக்கும் நபர் மனிதரைத்தான் சேவிக்கிறார், விசுவாசத்தினால் வாழ்வதில்லை. (கலா. 1:10) ஆகவே எளிய, நேரடியான பதில் கேட்பவருக்கு சிறந்த பயனளிக்காது.
அப்படியென்றால், பைபிள் வழிகாட்டுதலுக்கு ஏற்றபடி எப்படி பதிலளிப்பது? பைபிளிலுள்ள பொருத்தமான நியமங்களையும் உதாரணங்களையும் நீங்கள் கேட்பவரின் கவனத்திற்குக் கொண்டுவரலாம். சில சந்தர்ப்பங்களில், இந்த நியமங்களையும் உதாரணங்களையும் அவரே கண்டுபிடிப்பதற்கு எப்படி ஆராய்ச்சி செய்வது என அவருக்கு காட்டலாம். நியமங்களையும் உதாரணங்களின் மதிப்பையும் அப்போதைய சூழ்நிலைக்கு பொருத்தாமலேயே கலந்தாலோசிக்கலாம். ஞானமான தீர்மானம் எடுக்க உதவும் குறிப்பு ஏதேனும் தெரிகிறதா என அவரிடம் கேளுங்கள். யெகோவாவிற்கு எது பிரியமாயிருக்கும் என்பதை இந்த நியமங்களையும் உதாரணங்களையும் மனதில் வைத்து சிந்தித்துப் பார்க்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். இவ்வாறு, “நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி” செய்யும்படி நீங்கள் அவருக்கு உதவுகிறீர்கள்.—எபி. 5:14, பொ.மொ.
சபைக் கூட்டங்களில் பதில் சொல்வது
கிறிஸ்தவ சபைக் கூட்டங்களில் நம் விசுவாசத்தை அனைவர் முன்பாகவும் அறிவிப்பதற்கு அடிக்கடி வாய்ப்புகள் கிடைக்கின்றன. கேள்விகளுக்கு பதிலளிப்பது அவற்றில் ஒன்று. நாம் எப்படி பதிலளிக்க வேண்டும்? யெகோவாவை துதிக்கும் அல்லது போற்றிப் புகழும் ஆவலோடு செய்ய வேண்டும். இதைத்தான் “சபைகளிலே” இருக்கையில் சங்கீதக்காரனாகிய தாவீது செய்தார். (சங். 26:12) அப்போஸ்தலனாகிய பவுல் கூறியபடி உடன் விசுவாசிகளை “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும்” தூண்டும் விதத்தில் பதிலளிக்க வேண்டும். (எபி. 10:23-25) சிந்திக்கவிருக்கும் தகவல்களை முன்கூட்டியே படிப்பது இதைச் செய்ய நமக்கு உதவும்.
பதில் சொல்லும்படி கேட்கப்படும்போது, எளிமையான, தெளிவான, சுருக்கமான குறிப்புகளை சொல்லுங்கள். பாராவிலுள்ள எல்லா குறிப்புகளையும் சொல்லிவிடாதீர்கள்; ஒரு குறிப்பை மட்டும் சொல்லுங்கள். இப்படி பதிலின் ஒரு பகுதியை மட்டுமே நீங்கள் சொல்லும்போது, வேறு குறிப்புகளை சொல்ல மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களை வலியுறுத்துவது மிகவும் பிரயோஜனமளிக்கும். அப்படி செய்யும்போது, வசனத்தின் எந்தப் பகுதி கலந்தாலோசிக்கப்படும் குறிப்புக்கு பொருந்துகிறதோ அதற்கு கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள். பாராவிலிருந்து அப்படியே வாசிப்பதற்கு பதிலாக சொந்த வார்த்தைகளில் பதில் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். மனதிலிருப்பதை சரியாக சொல்ல வராதபோது வருத்தப்படாதீர்கள். பதில் சொல்லும் அனைவருக்குமே இப்படி எப்போதாவது நடப்பதுண்டு.
எப்படி பதிலளிப்பதென தெரிந்திருப்பது, பதிலைத் தெரிந்து வைத்திருப்பதை மட்டுமே குறிப்பதில்லை என்பது தெளிவான விஷயம். அதற்கு விவேகம் தேவை. ஆனால் உங்கள் இருதயத்திலிருந்து பதில் சொல்லும்போதும், அது மற்றவர்களின் இருதயத்தை தொடும்போதும் எப்பேர்ப்பட்ட திருப்தி கிடைக்கிறது!—நீதி. 15:23.