எப்படிப் பதிலளிப்பீர்கள்?
1. ஆட்கள் நம்மிடம் கேள்வி கேட்கையில் இயேசுவின் முன்மாதிரியை ஏன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
1 மக்கள் கேட்ட கேள்விகளுக்கு இயேசு திறம்பட்ட விதத்தில் பதிலளித்தது, இந்நாள் வரையாக அநேகரை மலைக்க வைத்திருக்கிறது. ஊழியத்தில் சந்திக்கும் ஆட்கள் நம்மிடம் பலதரப்பட்ட கேள்விகளைக் கேட்கையில், இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி பதிலளிப்பது சிறந்தது.—1 பே. 2:21.
2. கேள்விக்குத் திறம்பட்ட விதத்தில் பதிலளிக்க எது நமக்கு உதவலாம்?
2 முதலாவது கவனியுங்கள்: ஒருவர் கேள்வி கேட்கும்போது எதற்காக அவர் கேட்கிறார் என்பதை இயேசு சிந்தித்துப் பார்த்தார். சில சமயங்களில், கேள்வி கேட்பவரின் மனதைப் புரிந்துகொள்வதற்காக நாம் சில கேள்விகளைக் கேட்பது அவசியம். உதாரணமாக, நீங்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை என்பதை மனதில் வைத்து, ‘இயேசுவை நீங்கள் நம்புகிறீர்களா?’ என ஒருவர் உங்களிடம் கேட்கலாம். ஆகவே, கேள்வி கேட்பவர் எதை மனதில் வைத்து கேட்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் அவரிடம் திறம்பட்ட விதத்தில் பதிலளிக்க முடியும்.—லூக். 10:25-37.
3. பைபிளிலிருந்து திருப்திகரமான பதில்களைக் கொடுப்பதற்கு உதவியாக நம்மிடம் இருப்பவை யாவை?
3 பைபிளிலிருந்து பதிலளியுங்கள்: பொதுவாக, ஒருவர் கேட்கும் கேள்விக்கு பைபிளிலிருந்து பதிலளிப்பது சிறந்தது. (2 தீ. 3:16, 17; எபி. 4:12) நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலுள்ள “பைபிள் பேச்சுப் பொருள்கள்” ஆகியவை சரியான பதிலைக் கொடுப்பதற்கு உதவியாக இருந்திருக்கின்றன. கேள்வி கேட்பவர் பைபிளை அதிகாரப்பூர்வ புத்தகமாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, அது என்ன சொல்கிறது என்பதைச் சாதுரியமாய் உங்களால் எடுத்துச் சொல்ல முடியும். எக்காலத்திற்கும் பொருந்துகிற பைபிள் ஆலோசனைகளை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்படி அவரை உற்சாகப்படுத்தலாம். இயேசுவைப் பின்பற்றினால், உங்கள் பதில்கள் ‘வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களை’ போல கண்ணியமானவையாக, அருமையானவையாக, மதிப்புமிக்கவையாக இருக்கும்.—நீதி. 25:11.
4. எந்தெந்த சமயங்களில், எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் விடுவது சிறந்தது?
4 எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டுமா? ஒரு கேள்விக்கான பதில் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், “எனக்குப் பதில் தெரியவில்லை, நான் அதைக் குறித்து ஆராய்ச்சி செய்து அடுத்த முறை வந்து பதிலளிக்கிறேன்” என்று சொல்ல நாம் தயங்கக் கூடாது. அவ்வாறு அடக்கத்துடன் சொல்வதோடு அவர்மீது அக்கறை இருப்பதைக் காட்டும்போது, மீண்டும் வரும்படி அவர் உங்களை அழைக்கலாம். கேள்வி கேட்பவர்கள் உங்களோடு விதண்டாவாதம் செய்வதற்காகவே அப்படிக் கேட்கிறார்கள் என்று தெரிந்தால், இயேசுவைப் போலவே நீங்களும் சுருக்கமாகப் பேசி முடித்துவிடுங்கள். (லூக். 20:1-8) சத்தியத்தைப் பற்றி அறிந்துகொள்ள உண்மையிலேயே ஆர்வம் இல்லாத ஒருவர் உங்களை வாக்குவாதத்திற்கு இழுக்க முயன்றால், உரையாடலைச் சாதுரியமாக நிறுத்தி விடுங்கள்; நல்மனமுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள்.—மத். 7:6.
5. கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
5 ‘சத்தியத்திற்குச் சாட்சி கொடுக்க’ யெகோவாவைச் சார்ந்திருப்பது ரொம்பவே முக்கியம் என்பதை இயேசு அறிந்திருந்தார்; நல்லெண்ணத்தோடு கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலளிப்பதும் அதில் உட்பட்டிருந்தது. (யோவா. 18:37) ஆகவே, ‘முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்களுக்கு’ பதிலளிக்கும்போது இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!—அப். 13:48.