உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 4 பக். 93-பக். 96 பாரா. 3
  • சரளம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சரளம்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • சரியான உச்சரிப்போடு சரளமாக, சம்பாஷணை முறையில் பேசுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • ஒவ்வொரு நாளும் நல்ல பேச்சைப் பயன்படுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • ‘பொது வாசிப்பில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்’
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • இயல்பு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 4 பக். 93-பக். 96 பாரா. 3

படிப்பு 4

சரளம்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வார்த்தைகளும் எண்ணங்களும் தங்குதடையின்றி வெளிப்படும் விதமாக வாசியுங்கள், பேசுங்கள். தடுமாறாமல் பேசுவதும், ஒரேயடியாக மெதுவாய் பேசாதிருப்பதுமே சரளம். அப்படி சரளமாக பேசுகையில், வார்த்தைகளோ கருத்துக்களோ சட்டென நினைவுக்கு வராமல் திக்கித்திணற அல்லது தட்டுத்தடுமாற மாட்டீர்கள்.

ஏன் முக்கியம்?

பேச்சாளர் சரளமாக பேசவில்லை என்றால் கேட்போரின் மனம் அலைபாய ஆரம்பிக்கலாம்; தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்படலாம். பேச்சிற்கு தூண்டுதலளிக்கும் சக்தி இல்லாமல் போகலாம்.

நீங்கள் சத்தமாக வாசிக்கும்போது சில பதங்களில் தடுமாறுகிறீர்களா? அல்லது பேச்சு கொடுப்பதற்காக சபையார் முன் சென்றவுடன், வார்த்தைகளே வெளிவராமல் திணறுகிறீர்களா? அப்படியென்றால் சரளமாக பேசுவதில் உங்களுக்கு பிரச்சினை இருக்கலாம். சரளமாக வாசிப்பவர்களுக்கு அல்லது பேசுபவர்களுக்கு வார்த்தைகளும் எண்ணங்களும் தங்குதடையின்றி சுலபமாக வெளிப்படும். ஆனால் இடைவிடாமல் பேசுவதை, மிக வேகமாக பேசுவதை, அல்லது யோசிக்காமல் பேசுவதை இது அர்த்தப்படுத்தாது. அவர்களது பேச்சு இனிமையாகவும் சுவையாகவும் இருக்கும். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சரளத்திற்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது.

சரளம் குறைவுபடுவதற்கு அநேக காரணங்கள் இருக்கலாம். பின்வரும் அம்சங்கள் எவற்றிற்காவது நீங்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டுமா? (1) மற்றவர்கள் முன் வாசிக்கையில், பழக்கமில்லாத சில வார்த்தைகள் தயக்கத்தை ஏற்படுத்தலாம். (2) பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி வாசிப்பது அல்லது பேசுவது தடுமாற வைக்கலாம். (3) தயாரிக்காதது பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம். (4) கூட்டத்தாருக்கு முன் பேசும்போது சரளம் குறைவுபடுவதற்கு பொதுவான காரணம், தகவலை தர்க்கரீதியாக வரிசைப்படுத்த தவறுவதே. (5) சொல்வளம் இல்லையென்றால் வார்த்தைகளுக்காக மனம் தேடி அலையும், பேச்சு தட்டுத்தடுமாறும். (6) அளவுக்கு அதிகமான வார்த்தைகளை வலியுறுத்தினால் சரளம் குன்றும். (7) இலக்கண விதிமுறைகளை அறியாதிருப்பதும் பிரச்சினைக்கு காரணமாகலாம்.

நீங்கள் சரளமாக பேசவில்லையென்றால் ராஜ்ய மன்றத்திற்கு வந்திருப்போர் எழுந்து சென்றுவிட மாட்டார்கள், ஆனால் அவர்கள் மனம் வேறெங்கோ சென்றுவிடலாம். இதன் காரணமாக, உங்கள் பேச்சின் பெரும் பகுதி பயனளிக்காமல் போகலாம்.

மறுபட்சத்தில், வலிமையோடும் சரளமாகவும் கொடுக்க வேண்டிய பேச்சை, அதிகார தோரணையிலோ சபையாரை தர்மசங்கடப்படுத்தும் விதத்திலோ கொடுக்காதபடி கவனமாக இருக்க வேண்டும். கலாச்சார பின்னணி வித்தியாசப்படுவதன் காரணமாக நீங்கள் பேசும் விதம் மற்றவர்களுக்கு விவேகமற்றதாக அல்லது நேர்மையற்றதாக தொனித்தால் உங்கள் குறிக்கோள் கைகூடாது. அப்போஸ்தலனாகிய பவுல் அனுபவம் வாய்ந்த பேச்சாளராக இருந்தாலும், தேவையில்லாமல் தனக்கே கவனத்தை ஈர்ப்பதற்கு பதிலாக “பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும்” கொரிந்தியர்களை அணுகியது குறிப்பிடத்தக்கது.​—⁠1 கொ. 2:⁠3.

தவிர்க்க வேண்டிய பழக்கங்கள். அநேகர் பேசும்போது “..ஹ்ம்..” “..அ..ங்..” போன்றவற்றை அடிக்கடி சொல்வார்கள். மற்றவர்கள் “மேலுமாக,” “பார்த்தீர்கள் என்றால்,” “ஆகவே” போன்ற பதங்களை சொல்லியே ஒரு விஷயத்தை ஆரம்பிப்பார்கள்; அல்லது எதற்கெடுத்தாலும் “பார்க்கக்கூடியவர்களாக,” “செய்யக்கூடியவர்களாக” என “கூடிய”-வை சேர்த்துக்கொள்வார்கள். எவ்வளவு அடிக்கடி இதுபோன்ற வார்த்தைகளை சொல்கிறீர்கள் என உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். எவரிடமாவது முதலில் பேசிக் காண்பியுங்கள்; நீங்கள் ஒவ்வொரு முறை இந்தப் பதங்களை சொல்லும்போதும் அதை அவர் திரும்ப சொல்லுமாறு கேளுங்கள். அப்போது, எத்தனை முறை உபயோகிக்கிறீர்கள் என்பதைக் கேட்டு நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

சிலர் வாசிக்கும்போதும் பேசும்போதும் அடிக்கடி பின்னுக்கு சென்று சொன்னதையே திரும்ப சொல்வார்கள். அதாவது ஒரு வாக்கியத்தை ஆரம்பிப்பார்கள், பிறகு நடுவே தட்டுத்தடுமாறி, இரண்டு மூன்று வார்த்தைகள் பின் சென்று சொன்னதையே மறுபடியும் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

இன்னும் சிலர் வேகமாகத்தான் பேசுவார்கள், ஆனால் ஒரு கருத்தை சொல்ல ஆரம்பித்து அவ்வாக்கியத்தின் நடுவிலேயே வேறொரு கருத்திற்கு தாவிவிடுவார்கள். வார்த்தைகள் தடங்கலின்றி வெளிவந்தாலும், கருத்துக்கள் திடீர் திடீரென மாறுவதால் சரளம் குன்றிவிடுகிறது.

முன்னேறுவது எப்படி. சரியான வார்த்தை கிடைக்காமல் திணறுவது உங்கள் பிரச்சினை என்றால், உங்கள் சொல்வளத்தை கூட்டுவதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டும். காவற்கோபுரம், விழித்தெழு!, அல்லது மற்ற பிரசுரங்களை வாசிக்கும்போது, பழக்கமில்லாத வார்த்தைகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். இவற்றின் அர்த்தத்தை உங்கள் அகராதியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்; இவற்றில் சிலவற்றை உங்கள் மன அகராதியிலும் சேர்த்துக்கொள்ளுங்கள். எடுத்துப் பார்க்க அகராதி இல்லையென்றால், மொழியை நன்கு அறிந்தவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

சத்தமாக வாசிப்பதை பழக்கமாக்கிக் கொள்வது முன்னேற உதவும். கஷ்டமான வார்த்தைகளை குறித்துக்கொண்டு, இவற்றை பலமுறை சத்தமாக சொல்லிப் பழகுங்கள்.

சரளமாக வாசிப்பதற்கு, வார்த்தைகள் எவ்வாறு ஒன்றுசேர்ந்து வாக்கியமாகின்றன என்பதை புரிந்துகொள்வது அவசியம். எழுத்தாளரின் எண்ணத்தை தெரிவிப்பதற்கு பொதுவாக வார்த்தைகளை தனித்தனியாக அல்லாமல் சேர்த்து சேர்த்தே வாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட சொற்றொடர்களுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். உதவியாயிருக்குமானால் அவற்றை குறித்துக்கொள்ளுங்கள். வார்த்தைகளை சரியாக வாசிப்பது மட்டுமல்ல, கருத்துக்களை தெளிவாக தெரிவிப்பதும் உங்கள் குறிக்கோள். ஒரு வாக்கியத்தை பகுத்தறிந்த பிறகு அடுத்ததற்கு செல்லுங்கள்; இப்படியே முழு பாராவையும் படியுங்கள். கருத்துக்களின் கோர்வையை அறிந்துகொள்ளுங்கள். பிறகு சத்தமாக வாசித்துப் பழகுங்கள். தடுமாறாமலும் தவறான இடங்களில் நிறுத்தாமலும் வாசிக்க வரும்வரை திரும்பத் திரும்ப அந்தப் பாராவையே வாசியுங்கள். அதன்பின் அடுத்த பாராக்களுக்கு செல்லுங்கள்.

அடுத்ததாக, உங்கள் வேகத்தை அதிகரியுங்கள். ஒரு வாக்கியத்தில் வார்த்தைகள் எவ்வாறெல்லாம் இணைந்து செயலாற்றுகின்றன என்பதை புரிந்துகொண்டால், வார்த்தைகளை தனித்தனியாக பார்க்காமல் கோர்வையாக பார்ப்பீர்கள்; அடுத்ததாக என்ன சொல்லப்படும் என்பதையும் எதிர்பார்க்க ஆரம்பிப்பீர்கள். இதனால் உங்கள் வாசிப்புத் திறனில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.

திட்டமிடாமல் எதையாவது எடுத்து வாசிப்பதை பழக்கமாக்கிக்கொள்வது பயன்தரும் பயிற்சியாக இருக்கும். உதாரணத்திற்கு, முன்கூட்டியே தயாரிக்காமல் தினவசனத்தையும் அதன் குறிப்புகளையும் சத்தமாக வாசியுங்கள்; இதைத் தவறாமல் செய்யுங்கள். தனித்தனியான வார்த்தைகளை பார்க்காமல் முழுமையான கருத்துக்களை தெரிவிக்கும் சொற்றொடர்களை பார்க்க உங்கள் கண்களை பயிற்றுவியுங்கள்.

சரளமாக உரையாடுவதற்கு, யோசித்துவிட்டு பேச வேண்டும். அனுதினமும் இதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். என்ன கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் எந்த வரிசையில் தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் தீர்மானியுங்கள்; பிறகு பேச ஆரம்பியுங்கள். வேகமாக பேசாதீர்கள். இடையில் நிறுத்தாமல் அல்லது வேறொரு கருத்திற்கு தாவிவிடாமல் முழுமையாக சொல்லி முடிக்க முயற்சி செய்யுங்கள். சிறிய, எளிய வாக்கியங்களை பயன்படுத்துவது உதவியாக இருக்கும்.

என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக அறிந்திருக்கும்போது வார்த்தைகள் இயல்பாக வெளிவரும். பொதுவாக, சொல்ல விரும்பும் வார்த்தைகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப்போனால், பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக, கருத்து உங்கள் மனதில் தெளிவாக இருக்கிறதா என்று மட்டும் நிச்சயப்படுத்திக்கொண்டு, பிறகு பேசும்போது வார்த்தைகளைக் குறித்து சிந்திப்பது நல்லது. அப்படி செய்து, மனதை வார்த்தைகளின் மீதல்லாமல் கருத்தின் மீது ஊன்ற வைக்கையில், வார்த்தைகள் சுலபமாக வரும்; உங்கள் எண்ணங்களும் இருதயத்திலிருந்து வெளிப்படும். ஆனால் எப்போது கருத்துக்களை விட்டுவிட்டு வார்த்தைகளை யோசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அப்போது உங்கள் பேச்சு தடுமாற ஆரம்பிக்கும். திறம்பட பேசுவதற்கும் வாசிப்பதற்கும் தேவையான முக்கிய பண்பாகிய சரளத்தை பயிற்சியால் பெற முடியும்.

இஸ்ரவேல் தேசத்திற்கு முன்பாகவும் எகிப்திய பார்வோனுக்கு முன்பாகவும் பேச யெகோவாவின் பிரதிநிதியாக மோசே நியமிக்கப்பட்டபோது அவர் தகுதியற்றவராக உணர்ந்தார். ஏன்? அவருக்கு சரளமாக பேச வரவில்லை; ஒருவேளை அவருக்கு பேச்சுக் குறைபாடு ஏதேனும் இருந்திருக்கலாம். (யாத். 4:10; 6:12; NW) மோசே நியமிப்பை ஏற்றுக்கொள்ள தயங்கினார், ஆனால் அவர் கொடுத்த எந்தக் காரணத்தையும் கடவுள் ஏற்கவில்லை. மோசேயின் சார்பாக பேசுவதற்கு யெகோவா ஆரோனை அவருடன் அனுப்பி வைத்தார், அதேசமயம் மோசேக்கும் பேசுவதற்கு உதவி செய்தார். மோசே தனிப்பட்டவர்களிடமும் சிறு தொகுதியினரிடமும் மட்டுமல்ல, முழு தேசத்தினரிடமே அநேக முறை பேசினார், அதுவும் திறம்பட பேசினார். (உபா. 1:1-4; 5:1; 29:2; 31:1, 2, 30; 33:1) யெகோவாவின்மீது நம்பிக்கை வைத்து, உங்கள் பங்கில் செய்ய வேண்டியதை முழுமூச்சுடன் செய்தால், நீங்களும் கடவுளை கனப்படுத்தும் விதத்தில் பேச்சாற்றலை பயன்படுத்தலாம்.

திக்குவதை சமாளித்தல்

திக்குவதற்கு அநேக காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு பயனளித்திருக்கும் சிகிச்சைகள் மற்றவர்களுக்கு அதிக பயனளிக்காமல் போகலாம். ஆனால் வெற்றிகரமாக சமாளித்து சந்தோஷத்தைக் காண, விடாமுயற்சி முக்கியம்.

கூட்டத்தில் பதில் சொல்ல வேண்டுமென்ற நினைப்பே பயத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்துகிறதா? உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (பிலி. 4:6, 7) யெகோவாவை மகிமைப்படுத்துவதன் பேரிலும் மற்றவர்களுக்கு உதவுவதன் பேரிலும் உங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்துங்கள். குறைபாடு அடியோடு நீங்கிவிட வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள், ஆனால் அதை சமாளிக்க எவ்வாறு உதவி கிடைக்கிறது என்பதற்கு கவனம் செலுத்துங்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் உங்கள் சகோதரர்களின் உற்சாகத்தையும் பெறும்போது, இன்னுமதிகமாய் முயல விரும்புவீர்கள்.

தேவராஜ்ய ஊழியப் பள்ளி, கூட்டத்தினருக்கு முன்பாக பேசும் அனுபவத்தைப் பெற உங்களுக்கு வாய்ப்பளிக்கும். நீங்கள் வெற்றி பெற வேண்டுமென விரும்புகிறவர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுமான சிறிய கூட்டத்தினருக்கு முன்பாக எவ்வளவு சிறப்பாக பேசுகிறீர்கள் என்பதைக் கண்டு நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். மற்ற சூழ்நிலைகளில் பேச இது உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.

நீங்கள் ஒரு பேச்சு கொடுக்கப் போகிறீர்கள் என்றால், நன்றாக தயாரியுங்கள். பேச்சில் மூழ்கிவிடுங்கள். தகுந்த உணர்ச்சியோடு பேசுங்கள். தடுமாற ஆரம்பித்தீர்கள் என்றால், முடிந்தவரை குரலையும் செய்கைகளையும் நிதானப்படுத்துங்கள். உங்கள் தாடை தசைகளை தளர்த்துங்கள். சிறு வாக்கியங்களை பயன்படுத்துங்கள். அவ்வப்போது “..ம்,” “..ஹ..ங்,” “..வந்து..” போன்றவற்றை சொல்லாதீர்கள்.

திக்கிப் பேசும் பிரச்சினையுள்ள சிலர், எந்தெந்த வார்த்தைகளெல்லாம் முன்பு தடுமாற்றத்தை ஏற்படுத்தின என்பதை ஞாபகம் வைத்து, அவற்றை தவிர்த்து, அதே அர்த்தத்தைத் தரும் வேறு வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள், தங்களுக்கு மிகக் கஷ்டமாயுள்ள பேச்சொலிகளை குறித்துக்கொண்டு அவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிப் பழகுகின்றனர்.

உரையாடும்போது நீங்கள் திக்குகிறீர்கள் என்றால், பேச்சுத் தொடர்பு கொள்வதற்கான உங்கள் முயற்சியை கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் மறுபடியும் பேச ஆரம்பிக்கும் வரை அடுத்தவரை பேசும்படி கேட்டுக்கொள்ளலாம். தேவைப்பட்டால், சொல்ல நினைப்பதை வெறுமனே எழுதிக் காண்பியுங்கள் அல்லது அச்சுப் பிரதியை காண்பியுங்கள்.

எப்படி பெறுவது

  • பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாசிக்கும்போது புதிய வார்த்தைகளை குறித்துக்கொண்டு, அவற்றின் அர்த்தத்தை தெரிந்து, பிறகு பயன்படுத்துங்கள்.

  • ஒவ்வொரு நாளும் குறைந்தது 5-10 நிமிடங்களுக்கு சத்தமாக வாசித்துப் பழகுங்கள்.

  • வாசிக்கும் நியமிப்புகளை முழுமையாக தயாரியுங்கள். கருத்துக்களை தெரிவிக்கும் சொற்றொடர்களுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். கருத்துக்களின் கோர்வையை அறிந்துகொள்ளுங்கள்.

  • தினசரி உரையாடலின்போது, முதலில் யோசித்துவிட்டு பிறகு பேசவும் வாக்கியங்களை இடையில் நிறுத்தாமல் முழுமையாக சொல்லவும் கற்றுக்கொள்ளுங்கள்.

பயிற்சி: நியாயாதிபதிகள் 7:1-25 வசனங்களை பகுதி பகுதியாக பிரித்து கவனமாக வாசியுங்கள். சொல்லப்பட்டிருப்பது புரிகிறதா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். பழக்கமில்லாத வார்த்தைகளின் அர்த்தத்தை அகராதியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். பெயர்கள் ஒவ்வொன்றையும் சத்தமாக வாசியுங்கள். பிறகு முதல் பகுதியை சத்தமாக வாசியுங்கள்; திருத்தமாக வாசிப்பதற்கு கவனம் செலுத்துங்கள். நன்றாக வாசித்த திருப்தி கிடைக்கும்வரை அதே பகுதியை வாசியுங்கள். பிறகு அடுத்த பகுதிக்கு செல்லுங்கள். இப்படியே முழு அதிகாரத்தையும் வாசியுங்கள். இதை இன்னொரு முறை செய்யுங்கள், ஆனால் சற்று வேகமாக செய்யுங்கள். மீண்டும் ஒருமுறை செய்யுங்கள்; பொருத்தமான இடங்களில் இன்னுமதிக வேகமாக வாசியுங்கள்; ஆனால் தடுமாறும் அளவுக்கு அல்ல.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்